Published : 30 Oct 2019 08:20 AM
Last Updated : 30 Oct 2019 08:20 AM
முகம்மது ரியாஸ்
கேரள உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு கல்லூரி நிர்வாகம் அதன் விடுதியில் மாணவிகள் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவருகிறது. அதில் ஒரு மாணவி, ‘செல்போன் பயன்படுத்துவது என் அடிப்படை உரிமை’ என நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குப் பணிய மறுக்கிறார். விளைவாக, விடுதியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.
கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார். இரண்டு மாதத்தில் தீர்ப்பு வருகிறது: ‘செல்போன், இணையம் தனிமனித உரிமை. அதில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை’ என்று. அந்த மாணவி மீண்டும் விடுதி செல்கிறார். இம்முறை சட்ட பலத்துடன்.
இந்த நிகழ்வு இரண்டு விஷயங்களைச் சொல்கிறது. ஒன்று, கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் ஒரு மாணவியின் துணிச்சல்; அவரின் அரசியல் உணர்வு. மற்றொன்று, ஒரு மாணவியை நீதிமன்றம் நோக்கித் தள்ளும் நிலையில் உள்ள நம் கல்வி அமைப்பு. 19 வயதான ஃபாஹிமா ஷிரின் இப்போது இரண்டாமாண்டு ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...
கல்லூரிகளில் செல்போன்களுக்குத் தடை விதிப்பது மிகச் சாதாரண விஷயமாகப் பார்க்கப்பட்டுவருகிறது. நீங்கள் எப்படி இந்த விவகாரத்தை நீதிமன்றம் வரை எடுத்துச்செல்லத் துணிந்தீர்கள்?
எந்த ஒரு கருவியும் அது பயன்படுத்தப்படும் வகையிலேயே அர்த்தம் பெறுகிறது; செல்போனை எவ்வளவோ நல்ல விஷயங்களுக்கு, கற்றலுக்குப் பயன்படுத்த முடியும். ஆகவே, எனக்கு இந்தக் கட்டுப்பாட்டின் நோக்கமே மிகவும் பிற்போக்கானதாகப் பட்டது. தவிர, பெண்கள் செல்போன்களால் கெட்டுப்போய்விடுவார்கள் என்பதன் அடிப்படையில் மாணவிகள் விடுதிக்கு மட்டும் கொண்டுவரப்பட்ட இந்தக் கட்டுப்பாடு பாலினப் பாகுபாட்டையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஆகையால் இதைத் தீவிரமாக எதிர்த்து நிற்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
சக மாணவிகள் உங்களுக்கு ஆதரவுதந்தார்களா?
வெவ்வேறு வாழ்க்கைப் பார்வை கொண்ட சூழலில், அனைவரிடமிருந்தும் ஒரே பார்வையை எதிர்பார்ப்பதற்கில்லை. சிலர் அவர்களுடைய பெற்றோருக்குப் பயந்து விடுதிக் கட்டுப்பாட்டுக்குப் பணிந்தனர். சிலர் அதைத் தனிமனித உரிமை சார்ந்த பிரச்சினையாகவே கருதவில்லை. சிலருக்கு அது பிரச்சினையாக இருந்தாலும் நிர்வாகத்தை எதிர்த்துச் செயல்படத் தயங்கினர். இருந்தபோதிலும் என்னுடைய போராட்டத்துக்குக் கிட்டத்தட்ட அனைத்து மாணவிகளும் தார்மீக ஆதரவு அளித்தார்கள்.
ஆசிரியர்கள் உங்களை எப்படி நடத்தினார்கள்?
சில ஆசிரியர்கள் என்னுடைய போராட்டத்தை அவசியமான ஒன்றாகவே கருதினார்கள். அதேசமயம் நிர்வாகத் தரப்புக்கு எதிராக அவர்களால் செயல்பட முடியாது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் எனக்கு நேரடியாக ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், அந்தச் சம்பவம் தொடர்பாக எந்தத் தொந்தரவும் தர மாட்டோம் என்று உறுதி அளித்தார்கள்.
இந்த இரண்டு மாத காலத்தில் உங்கள் மனவோட்டம் எவ்வாறு இருந்தது?
என் வீட்டிலிருந்து கல்லூரி 80 கிமீ தொலைவில் இருக்கிறது. கல்லூரி சென்று வீடு திரும்ப தினமும் 5 மணி நேரம் பயணம். இதனால், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டேன். இந்த இரண்டு மாதங்களிலும் வகுப்புகளுக்கு வருவதுதான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. அந்தப் பயணங்களின்போது சில சமயம் தனித்து விடப்பட்டவளாக உணர்ந்தேன். ஆனால், ஒருபோதும் போராட்ட முடிவு குறித்து வருந்தவில்லை. கல்லூரியின் சர்வாதிகாரப் போக்குக்குப் பணிந்து செல்வதைவிடப் போராட்ட அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருந்தேன்.
ஒருவேளை, நீங்கள் இந்த வழக்கில் தோல்வி அடைந்திருந்தால் அல்லது வழக்குத் தீர்ப்பு தாமதமாக வந்திருந்தால் அதை நீங்கள் எவ்விதம் எதிர்கொண்டிருப்பீர்கள்?
இந்த வழக்கில் வெல்வேன் என்று உறுதியாக நம்பினேன். நவீன காலத்திய நீதிமன்றம் இந்தத் தீர்ப்பைத்தான் வழங்க முடியும். ஆனால், என்னுடைய கவலை நம்முடைய நீதித் துறைக்கே உரிய தாமதம் இதிலும் நீடித்தால், விடுதிக்குச் செல்வது தாமதமாகுமே என்பதில்தான் இருந்தது. ஆனால், இந்த வழக்கில் தோற்றிருந்தாலும் நான் வருந்தியிருக்க மாட்டேன். என்னளவில் இந்த முயற்சியே முக்கியமானது.
நீதிமன்றம் தொடர்பான விவரங்களை எப்படி அறிந்தீர்கள்? நீதிமன்ற அனுபவம் எப்படி இருந்தது?
முதலில் என்னுடைய நண்பன்தான் இந்தப் பிரச்சினையை நீதிமன்றம் கொண்டுசெல்லலாம் என்று கூறினான். அதன் பிறகு இதுபோலான வழக்குகள் வேறெங்கும் தொடரப்பட்டுள்ளனவா என்று இணையத்தில் தேட ஆரம்பித்தேன். எல்சிஎஸ்ஆர் எனப்படும் மாணவர்களுக்கான சட்ட உதவி அமைப்பு பற்றித் தெரியவந்தது.
அது சட்ட மாணவர்களாலும் வழக்கறிஞர்களாலும் நடத்தப்படும் லாப நோக்கற்ற சட்ட சேவை அமைப்பு. ‘யுவர் லாயர் ஃபிரண்ட்’ என்ற அவர்களது ஃபேஸ்புக் பக்கம் வழியாக அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர்களாலேயே இந்தப் பிரச்சினை நீதிமன்றம் எடுத்துச்செல்லப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நான் நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை இல்லாத வகையில் எங்கள் வழக்கறிஞர் லெகித் டி கோட்டக்கல் இந்தச் சிறப்பு மிக்க தீர்ப்பைப் பெற்றுத்தந்தார்.
இந்த விஷயத்தில் உங்கள் பெற்றோரின் நிலைப்பாடு என்ன? உங்கள் குடும்பச் சூழல் எத்தகையது?
என் பெற்றோர் இந்த உலகம் மாறிவருவதைப் புரிந்துகொண்டவர்கள். தங்கள் கனவுகளைப் பிள்ளைகள் மீது திணிப்பவர்களாக அவர்கள் இல்லை. அவரவர் கருத்துகளைத் சுதந்திரமாக வெளிப்படுத்தும் வகையில் உரையாடலுக்கான சூழல் எங்கள் வீட்டில் உண்டு. என் வாழ்க்கை குறித்த முடிவை நானே எடுக்கும் சுதந்திரம் எங்கள் வீட்டில் உண்டு.
புத்தக வாசிப்பு அந்தச் சுதந்திரச் சிந்தனையை மேலும் வளர்த்தது. விடுதியில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடு குறித்து என் தந்தையிடம் கூறியபோது, ‘ஷிரின் ஒருபோதும் அதிகாரத்துக்குப் பணியாதே. பணிவதன் மூலம் கிடைக்கும் சலுகைகளைவிட அதை எதிர்ப்பதால் வரும் இன்னல்களே சிறந்தவை’ என்று கூறினார். உறவினர்கள் என் முடிவை எதிர்த்த சமயத்தில் என் பெற்றோரே எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
ஒரு மாணவியாக இந்தியக் கல்விச் சூழல் குறித்து உங்கள் கருத்து என்ன?
இந்தியக் கல்விக் கட்டமைப்பு அதிகார பீடமாகச் செயல்பட்டுவருகிறது. அதிகாரத்தைப் பயன்படுத்தியே மாணவர்களை வழிப்படுத்தும் போக்குகளை நிர்வாகத்தினர் மேற்கொண்டுவருகின்றனர். அரசியல் உணர்வு என்ற ஒன்றையே இன்றைய கல்வி முறை முற்றிலும் அழித்தொழித்துவருகிறது. இந்தச் சூழல் ஆரோக்கியமற்ற ஒன்று. வெறும் குமாஸ்தாக்களை உருவாக்கும் இயந்திரமாக இந்தியக் கல்விச் சூழல் மாறிக்கொண்டிருப்பதில் பெற்றோர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. ஆனால், மாணவர்கள் - நாளைய தலைமுறையினர் இதை மாற்ற முற்படத்தான் வேண்டும்!
- முகம்மது ரியாஸ்,
தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT