Published : 23 Jul 2015 12:51 PM
Last Updated : 23 Jul 2015 12:51 PM

பாலாறு: தஞ்சைக்கு நிகராக செழித்தோங்கிய வடாற்காடு

கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் 126 கி.மீ. தொலைவு காட்டாறு போலவே பாலாறு பயணிக்கிறது. தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள மலையடிவாரத்தை கடந்து நாட்றம்பள்ளி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது பாலாறு.

தமிழ்நாட்டில் மட்டுமே சமதளத்தில் பாலாறு பரந்து விரிகிறது. இங்கு தொடங்கி 222 கி.மீ தூரம் பயணிக்கும் பாலாறு வயலூர் வரை பயணிக்கிறது. கோடை காலத்திலும் ஆற்றில் வெள்ளம் வராவிட்டாலும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு உரிய ஜீவநதியாக இருந்துள்ளது. ஆண்டு முழுவதும் விவசாயம் செழித்ததால் என்னவோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு அடுத்த நெல் உற்பத்தி செய்த மாவட்டம் என்ற பெருமை அப்போதைய வடாற்காடு (வேலூர், திருவண்ணாமலை) மாவட்டத்துக்கு உண்டு. பாலாற்றங்கரையில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஊற்றுக் கால்வாய் இருந்தது. ஆற்றின் கரையில் வெட்டினாலே ஏற்படும் ஊற்று நீரிலே விவசாயம் செழித்திருக்கிறது.

அதேபோல, பாலாற்று பெரு வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க அம்பலூரில் கோயில் கொண்ட சக்தி, புல்லூரில் கடப்ப நாச்சியம்மனாக குடிகொண்டார். கடப்ப நாச்சியம்மனே அம்பலூர், புல்லூர் மக்களையும் பெரு வெள்ளத்தில் இருந்து தடுத்தாட் கொண்டார் என்ற ஐதீகம் நிலவுகிறது. கடப்ப நாச்சியம்மனே பிற்காலத்தில் கனக நாச்சியம்மனாக பெயர் மாறியதாகவும் கூறப்படுகிறது.

புனித கொடையாஞ்சி

வாணியம்பாடி நகருக்கு சற்று அருகில் இருக்கிறது கொடையாஞ்சி என்ற அழகிய கிராமம். ஒரு சமயம் தென் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை அந்தணர் ஒருவர் மறைந்த தனது தாய் தந்தையின் அஸ்தியுடன் கங்கைக்கு பயணமானார். செல்லும் வழியில் கொடையாஞ்சியை கடந்தபோது, பாலாற்றில் ஓடிய வெள்ளத்தில் குளித்துவிட்டு திரும்பினார். அப்போது, பாலாற்று தண்ணீர் அஸ்திக் கலசத்தின் மீது விழுந்தது. அடுத்த நொடியில் அஸ்தி கலசம் மல்லிகைப் பூவாய் மணம் வீசியது. ஆச்சர்யத்துடன் தொடர்ந்து பயணத்தை தொடர்ந்தபோது, மல்லிகைப் பூ மீண்டும் சாம்பலானது. அப்போது, ‘கொடை யாஞ்சியில் ஓடும் பாலாறு காசியில் ஓடும் கங்கையைவிட ஒரு படி புகழ் வாய்ந்தது’ என்ற அசரீரி ஒலி ஏழை அந்தணன் காதில் விழுந்தது. கொடை யாஞ்சிக்கு திரும்பியவர், தாய், தந்தையின் அஸ்தியை கரைத்து ஊர் திரும்பினார் என்பது புராண தகவல்.

அழிவை நோக்கிய விவசாயம்

பாலாற்றில் வெள்ளம் வந்தால் அருகில் உள்ள ஏரிகள் அதற்கு அடுத்த டுத்த நிலையில் உள்ள ஏரிகள் பாசன வசதி பெறும். மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடும் பாலாற்றின் இரண்டு கரைகளான வடக்கு மற்றும் தெற்கில் மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீர் ஓடைகளாய் பாலாறு வந்தடையும். பாலாற்றின் வளத்துக்கு அதன் கிளை நதிகளான பத்தலப் பல்லியில் இருந்து ஓடிவரும் மலட்டாறு, ஒடுகத்தூர் அருகே உருவாகும் அகரம் ஆறு. கவுன்டன்யா நதி, கொல்லப்பல்லி கொட்டாறு, பேயாறு எனப்படும் மலை கானாறு, நீவா எனப்படும் பொன்னை ஆறு, ராஜாதோப்பு கானாறு என மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கிடைக்கும் மழை நீரைக் கொண்டு வந்து பாலாற்றுக்கு பலம் சேர்க்கின்றன.

இதன் காரணமாகவே விவசாயம் செழித்த வேலூர் மாவட்டம், ரசாயனம் மற்றும் தோல் கழிவால் நிலத்தடி நீர், மண் வளத்தையும் வேகமாக பாதித் தது. தஞ்சைக்கு நிகரான நெல் உற்பத்தி யும் குறைந்தது. 2005-ம் ஆண்டு கணக்குப்படி 52 ஆயிரம் ஹெக்டராக இருந்த விவசாய பரப்பு 2012-ம் ஆண் டில் 37 ஆயிரம் ஹெக்டராக சுருங்கியது.

பாலாற்றுப் படுகை முழுவதும் தென்னை மரங்களால் பசுமையாக காட்சி யளிக்கும். மாநில அளவில் தென்னை உற்பத்தியில் முதல் மூன்று இடத்தில் இருந்த வேலூர் மாவட்டம் இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. பருத்த தேங்காயின் அளவு குறைந்துவிட்டது. இளநீரின் சுவை உப்பாக மாறிவிட்டது. தென்னை வளர்த்தால் லாபமில்லை என்பதால் மரங்களை வெட்டி செங்கல் சூளைகளின் அடுப்புகளுக்கு விவசாயிகள் அனுப்பிவைக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 60 கி.மீ. தொலைவுக்கு ஒரு சர்க்கரை ஆலை வீதம் 3 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. கரும்பு ஆலைகளில் வெல்லம் தயாரித்த விவ சாயிகள், சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றுமதி செய்தனர். பணப்பயிராக இருந்த கரும்பை இன்று பயிரிடு வதை பெரும்பாலான விவசாயிகள் நிறுத்திவிட்டார்கள். கரும்பு அறுவடை செய்தால் ஏற்படும் நஷ்டத்தைவிட தீயிட்டு அழிப்பதை லாபமாக நினைக்கின்றனர். மாவட்டத்தில் இருக்கும் 3 சர்க்கரை ஆலைகள் முழு அறவைத் திறனை எட்ட முடியாமல் பக்கத்து மாவட்ட விவசாயிகளை நம்பியிருக்கிறார்கள்.

அரிதான ஆற்காடு கிச்சிலி சம்பா

ஒவ்வொரு ரக நெல்லும் ஒரு தரமும் சுவையும் தனிச் சிறப்பும் இருக்கும். அப்படி புகழ்பெற்ற நெல் ரகங்களில் ஒன்று ஆற்காடு கிச்சிலி சம்பா. ஆற்காடு நவாப்புகளால் போற்றப்பட்ட இந்த நெல் ரகம் பயிரிடுவது இன்று அரிதாகிவிட்டது. ஜீரண சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமுள்ள ஆற்காடு கிச்சிலி சம்பா பயிர் குறைந் ததற்கு வறண்டு போன பாலாறும் ஒரு காரணம்.

வாணியம்பாடி பெருவெள்ளம்

புராண வரலாற்றில் பாலாற்றில் மூன்று பெருவெள்ளம் ஏற்பட்டதாக காஞ்சி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் என மூன்று யுகங்களில் ஷீரம் நதியாகவும், சரஸ்வதி நதியாகவும், பாலாறாகவும் பெருவெள்ளம் ஓடியுள்ளது.

பாலாற்றில் 1874, 1884, 1898-ம் ஆண்டில் வெள்ளம் ஏற்பட்டாலும், வரலாற்றில் துயரமான சம்பவம் 1903-ம் ஆண்டு நிகழ்ந்தது. இந்த ஆண்டின் அப்போதைய வாணியம்பாடி நகரின் மக்கள் தொகை 15,800 என்பது ஆங்கிலேயர்களின் கணக்கு. அந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி அதிகாலை, விடாமல் பெய்துகொண்டிருந்தது மழை. பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதியான சிக்பெல்லாபூர், கோலார் மாவட்டத்தில் ஒரேயடியாய் கொட்டித்தீர்த்தது கனமழை.

மிகப்பெரிய பேத்தமங்கலா ஏரியின் பலமிக்க கரைகள் கன மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்தன. கட்டுப்படுத்த முடியாத வேகத்துடன் தமிழகத்துக்குள் நுழைந்து கொடையாஞ்சி கிராமம் அருகே திடுமென வாணியம்பாடி நகரத்தை சுற்றிவளைத்தது வெள்ளம். வீட்டில் தூங்கியவர்கள் அப்படியே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரே இரவில் வீடுகளையும், உறவுகளையும், வாழ்வாதாரத்தையும் மக்கள் இழந்தனர். வாணியம்பாடி பெரு வெள்ளத்தில் 200 பேர் இறந்ததாக 1903-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த நாளிதழ்கள் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டன.

அந்த செய்தியில், ‘இந்திய வைஸ்ராய் கர்சன் பிரபுவிடம் இருந்து அவசர தந்தி லண்டனுக்கு சென்றுள்ளது. மெட்ராஸில் இருந்து கிடைத்த தகவல்படி, சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட பாலாற்றில் நவம்பர் 12-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடியின் பாதி நகரம் அழிந்தது. 200 பேர் இறந்தனர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை இன்றும் வாணியம்பாடி நகரில் பார்க்க முடியும். கொடையாஞ்சியில் பிரிந்து வாணியம்பாடி நகரத்தை மூன்றாக பிரித்து ஓடும் பாலாறு, மீண்டும் வளையாம்பட்டில் இணைந்து செல்கிறது. பெருவெள்ளத்தின் சாட்சியாக வாணியம்பாடி சந்தை மேட்டில் ஆங்கிலேயர்கள் வைத்துள்ள நினைவுத்தூண், இறந்துபோன 200 உயிர்களையும் வெள்ள அளவின் குறியீட்டையும் நினைவூட்டுகிறது.



பாலாறு பயணிக்கும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x