Last Updated : 03 Jul, 2015 10:34 AM

 

Published : 03 Jul 2015 10:34 AM
Last Updated : 03 Jul 2015 10:34 AM

தேசத்தை மாற்றுமா ‘டிஜிட்டல் இந்தியா’?

நம்பிக்கை தரும் திட்டமாக இருந்தாலும், செயல்படுத்தப்படும் விதத்தில்தான் வெற்றிபெறும்.

இந்தியாவை நவீனமயமாக்குவதில், பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பது நாம் அறிந்ததுதான். நாட்டில் பாலின விகித மாறுபாட்டைக் களைவதற்காக, பெண் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தங்கள் மகள்களுடன் எடுத்த ‘செல்பி’யை அனுப்புமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளும் அளவுக்குத் தொழில்நுட்ப விஷயங்களில் அவருக்கு ஆர்வம் இருக்கிறது. இந்த நிலையில், புதன்கிழமை ‘டிஜிட்டல் இந்தியா’ எனும் திட்டத்தை அவர் தொடங்கிவைத்திருக்கிறார்.

இந்தியாவின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கின்றன. பிரம்மாண்டமான திட்டமாக வர்ணிக்கப்படும் இத்திட்டம், உண்மையில் எந்த அளவுக்குப் பயன்தரும்?

முன்னோடியான எஸ்டோனியா

அரசு நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்கும் விஷயத்தில் உலக நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. இவ்விஷயத்தில் உலகத்துக்கே வழிகாட்டும் நாடாக இருப்பது ஐரோப்பாவில் இருக்கும் சின்னஞ்சிறு நாடான எஸ்டோனியா. உலகின் முதல் டிஜிட்டல் தேசம் என்று பாராட்டப்படும் நாடு இது. இந்நாட்டில் வருமான வரித் தாக்கல் செய்வது முதல், மருத்துவ உதவி பெறுவது வரை அனைத்தையும் அரசின் ஒற்றை இணையதளம் மூலம் ஆன்லைனிலேயே செய்துகொள்ள முடியும்.

நீண்ட வரிசையில் காத்திருந்து அலுத்துக்கொள்ளத் தேவையில்லை. இவ்வளவு ஏன், தேர்தலில் வாக்களிப்பதைக்கூட ஒரு மவுஸ் கிளிக்கில் செய்யலாம். 1997-ல் இதற்கான முயற்சியைத் தொடங்கிய எஸ்டோனியா, இன்று முழுமுதல் டிஜிட்டல் நாடாக இருக்கிறது. எஸ்டோனியா மட்டும் அல்ல, ஆசிய நாடான தென் கொரியா போன்ற நாடுகளும் டிஜிட்டல் மயமாக்கலில் தற்போது முன்னிலையில் இருக்கின்றன.

டிஜிட்டல்மயமான நாடுகளில் நவீன வசதிகளுடன் சிவில் நிர்வாகம் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டன. ஆக, உலகம் டிஜிட்டல்மயமாகிக்கொண்டிருக்கிறது. ‘மென்பொருள் தேசம்’ என அறியப்படும் இந்தியாவில் டிஜிட்டல் சேவை முயற்சிகள் பல ஏற்கெனவே இருந்தாலும், முழு அளவிலான டிஜிட்டலுக்கு அரசு மாறுவதற்கான ஒருங்கிணைந்த திட்டமாக ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைக் கருதலாம்.

என்னென்ன அம்சங்கள்?

அரசு சேவைகளை டிஜிட்டல்மயமாக்கி, மக்களுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதை இந்தத் திட்டம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மின் நிர்வாகம் என்று அழைக்கப்படும் டிஜிட்டல் சேவைகளை மையமாகக் கொண்ட செயல்பாடுகளைக் கொண்டுவந்து அரசு சேவைகளை மேம்படுத்துவது, அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள் பங்களிப்பை அதிகமாக்க வழி செய்வது, வளர்ச்சியை ஊக்குவித்து, வேலை வாய்ப்பைப் பெருக்குவது போன்றவை இதன் நோக்கங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் வசதியை அளிப்பது, குறிப்பாகக் கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் வசதியைக் கொண்டுசெல்வது என்றெல்லாம் பேசப்படுகிறது. அரசு அலுவலகங்களில் காகிதமில்லாச் சேவைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கை அறிவிப்பை வைத்துப் பார்க்கும்போது, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் தாமதமாகவேனும் மேற்கொள்ளப்பட்டுள்ள சரியான முயற்சி என்றே சொல்லத் தோன்றுகிறது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னணி வர்த்தக நிறுவனங்கள் ரூ. 4.5 லட்சம் கோடி அளவிலான முதலீட்டைச் செய்ய முன்வந்திருப்பதாகக் கூறியிருக்கும் நிலையில், மக்களின் வாழ்வில் இத்திட்டம் கொண்டுவரக்கூடிய மாற்றங்கள்குறித்து ஆய்வுசெய்வது அவசியம். சான்றிதழ் மற்றும் முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பதற்கான ‘டிஜிட்டல் லாக்கர்’ உள்ளிட்ட 10 அம்சங்கள் இந்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கின்றன.

‘டிஜிட்டல் லாக்கர்’ வசதி பொதுமக்களுக்குக் காகித வடிவில் சான்றிதழ்களைக் கொண்டுசெல்லும் தேவையைக் குறைத்து, அரசு சேவைகளை விரைவாகப் பெற வழிசெய்யும். அரசு அலுவலகங்களைப் பொறுத்தவரை காகிதப் பயன்பாட்டைக் குறைத்து நேரத்தை மிச்சமாக்கும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட இந்தப் பாதுகாப்புப் பெட்டக வசதி பல விதங்களில் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.

பிறப்புச் சான்றிதழ் முதல் மதிப்பெண் சான்றிதழ் வரை எல்லா முக்கிய ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவில் இயக்கும் வசதி பல சுமைகளைக் குறைக்கும். பல தனியார் இணைய நிறுவனங்கள் டிஜிட்டல் சேமிப்பு வசதியை வழங்கும் நிலையில், அரசு சேவைகளுக்காகப் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் பாதுகாப்புப் பெட்டகம் அவசியமானதே. 2.5

லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அகண்ட அலை வரிசை இணைய வசதி அளித்து, அவற்றை அதிவேக டிஜிட்டல் நெடுஞ்சாலையில் இணைக்கும் ‘பாரத் நெட்’ திட்டம், அரசு மின் நிர்வாகத்துக்கான மைகவ் செயலி, கல்வி ஊக்கத் தொகைக்கான வலைவாசல் (போர்ட்டல்), வை-ஃபை மையங்கள் ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

நடைமுறையில் சாத்தியமா?

எனினும், இத்திட்டத்தின் சவாலான அம்சங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதில்தான் இதன் வெற்றி இருக்கிறது. உதாரணத்துக்கு ‘பாரத் நெட்’ திட்டம் உலகிலேயே மிகப்பெரிய கிராமப்புற அகண்ட அலைவரிசை இணைய வசதியாக அமையும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவில் மின்சார வசதி இன்னும் எட்டிப்பார்க்காத குக்கிராமங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும் நிலையில், கிராமப்புறங்களுக்கு இணைய வசதியைக் கொண்டுசெல்வது மிகப் பெரும் சவாலாக இருக்கும். இதற்குப் பெரும் முதலீடும் அதைவிட அதிகமான முனைப்பும் தேவைப்படும்.

இதுபோன்ற பிரம்மாண்டமான திட்டங்களை அறிமுகம் செய்தால் மட்டும் போதாது. அவை சரியாகப் பயன்படுத்தப்படும் சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக, அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டத்தின்படி லட்சக் கணக்கானோருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. ஆனால், இந்தக் கணக்குகளில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகப் பேச்சு எழுந்திருக்கிறது.

ஏழைகள் வங்கிச் சேவை பெற வேண்டும் எனும் நோக்கம் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அவர்கள் வங்கிச் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்திப் பலன்பெற வழி செய்வதில்தான் திட்டத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் பல அம்சங்களுக்கும் இது பொருந்தும்.

அரசு செய்ய வேண்டியவை

‘டிஜிட்டல் இந்தியா’முயற்சிக்குப் பெரும் அளவிலான உள்கட்டமைப்பு வசதி தேவை. இதை உறுதி செய்வதற்கான வழிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் டிஜிட்டல் சேவை பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதலும் தேவை. மக்களிடம் இந்தச் சேவைகளைக் கொண்டுசெல்ல முழுஅளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மிகமிக முக்கியமாக, டிஜிட்டல் சேவைபற்றிப் பேசும்போது டிஜிட்டல் பாதுகாப்புகுறித்து மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் தேவை.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சேவைகளில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டும் அபாயம் அதிகம் உள்ளது. இதை எதிர்கொள்ள சைபர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுகுறித்து பெயரளவில்தான் பேசப்படுகிறதே தவிர, ஹேக்கிங் போன்ற தாக்குதலைச் சமாளிக்கத் தேவையான நிபுணத்துவம் மற்றும் பயிற்சி அரசு அமைப்புகளில் இல்லை என்றே சொல்ல வேண்டும். எனவே, சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நிபுணத்துவம் மற்றும் அதற்கான வலுமிக்க உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும்.

அதே போல அரசு நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்கேற்பு மிக முக்கியம். தற்சமயம் இது பெயரளவிலான முயற்சியாக இருப்பதால், இதனால் எந்தப் பயனும் இல்லை. நிர்வாகம் தொடர்பான மக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கான செயலி (ஆப்ஸ்) மூலம் தெரிவிக்கப்படும் கருத்துகளும் ஆலோசனைகளும், அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் செயல்பாட்டில் பிரதிபலிப்பது அவசியம்.

இந்தியாவைப் பொறுத்தவரை உற்பத்தியைப் பெருக்குவது, சிறு மற்றும் குறுந்தொழில்களை மேம்படுத்துவது மற்றும் புறக்கணிக்கப்பட்ட விவசாயத் துறைக்குப் புத்துயிர் அளிப்பது போன்றவைதான் அடிப்படியான தேவைகள். எனவே, இதுபோன்ற தேவைகளை நிறைவேற்றும் விஷயத்தில் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் பயன்படும் அளவுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு உதவும் திட்டமாக இத்திட்டம் அமையும்.

- சைபர்சிம்மன்,
பத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர்.
தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x