Published : 21 Oct 2019 07:13 AM
Last Updated : 21 Oct 2019 07:13 AM
க.சே.ரமணி பிரபா தேவி
ஒரு பசு மாட்டின் இரைப்பையிலிருந்து சுமார் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய செய்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உட்கொண்டுவந்த பிளாஸ்டிக் கழிவுகள் அதன் இரைப்பைக்குள் தேங்கியிருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள். இது ஒரு சமீபத்திய உதாரணம். இதுபோல ஆயிரமாயிரம் செய்திகளைக் கடந்துவந்ததன் விளைவாகவே பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
அதேவேளையில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் இதுதொடர்பாக என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா?
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவரும், சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளருமான சங்கரன் நிறைய விஷயங்கள் பேசினார். இது தவிர, பெயர் கூற விரும்பாத சில்லறை விற்பனையாளர்கள் பலரும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். பிளாஸ்டிக் பயன்பாட்டையும் அதன் மீதான தடையையும் இவர்கள் பார்க்கும் விதத்தைப் பார்ப்போம்...
உற்பத்தி, பேக்கிங், சந்தைப்படுத்துதல், விற்பனை, நுகர்வோர் மற்றும் கழிவு மேலாண்மை என இந்த ஆறு கட்டங்களைக் கடந்தே சூழலைப் பாதிக்கும் படிநிலைக்கு பிளாஸ்டிக் வந்துசேர்கிறது. பிளாஸ்டிக் எங்கும் வியாபித் திருக்கும் சூழலில், அதிரடியாக உற்பத்தியை நிறுத்துவது முறையாகாது என்றும், கழிவு மேலாண்மையைச் சரியாகக் கடைப்பிடிப்பதன் மூலம்தான் இதற்கான தீர்வை எட்ட முடியும் என்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி மையங்களும், 12 ஆயிரம் பதிவுசெய்யப்படாத சிறு உற்பத்தி மையங்களும் இயங்கிவருகின்றன. இவை பிளாஸ்டிக் கவர்களை மட்டுமே தயாரிப்பதில்லை; வாளி, நாற்காலி, ஜன்னல், கார் உதிரிபாகங்கள், பொம்மைகள் எனப் பலதரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்திசெய்கின்றன.
“பிளாஸ்டிக் தடையால் பெரு நிறுவனங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என்கிறார்கள். இங்கே ஒரு முரணான விஷயம். சிறு உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியில் வெறும் 20%-ஐ மட்டும்தான் பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகிக்கிறார்கள். மீதியெல்லாம் நிறுவனங்களுக்குத்தான் செல்கின்றன. ஆக, பிளாஸ்டிக்குக்குத் தடை விதிக்கும் நமது அரசு, நிறுவனங்களின் உற்பத்தியையும், நிறுவனங்களுக்குச் சென்றுசேரும் உற்பத்தியையும் எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறது என்றொரு கேள்வி இங்கே எழுகிறது.
அடிப்படையில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களும் கழிவு மேலாண்மையையே பிரதானமாக முன்வைத்துப் பேசுகிறார்கள். எனவே, மறுசுழற்சி நிறுவனங்களுக்கும் ஒரு முறை போய்வந்தேன். சென்னையில் மட்டும் சுமார் 300 மறுசுழற்சியாளர்கள் இருக்கிறார்களாம். விதவிதமான பிளாஸ்டிக் கழிவுகளை இங்கே மறுசுழற்சிக்கு உள்ளாக்குகிறார்கள். மறுசுழற்சி மூலம் உற்பத்திசெய்யப்படும் பிளாஸ்டிக்குகளின் தரம் 10% குறைவு என்பதால், சற்று குறைவான விலைக்கு இவை விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வகை பிளாஸ்டிக்குகள் ஆந்திரா, பிஹார், வங்க மாநிலங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிளாஸ்டிக்கையும் ஏழெட்டு முறை மறுசுழற்சி செய்ய முடியும் என்கிறார்கள்.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி 2016-ன் படி, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று மாநகராட்சி தரம் பிரிக்க வேண்டும். அதன் பிறகு, முறையாக அவற்றை மறுசுழற்சி செய்ய வேண்டும். ஆனால், அது சரிவர நடப்பதில்லை. குப்பையைக் காசு கொடுத்து வாங்க இந்த மறுசுழற்சி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ரூ.10 வரை தரத் தயாராக உள்ளார்கள். ஆனால், அரசுத் தரப்பில் தரம் பிரித்தல் முறையாக நடப்பதில்லை என்பதுதான் பிரச்சினை.
மறுசுழற்சி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகாமல் இருப்பதற்கு அரசு வலியுறுத்தும் கொள்கையும் ஒரு காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படும் இடங்களில், நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. ஆனால், சுமார் ரூ.5 லட்சம் முதலீட்டில் தொழில் தொடங்கும் அவர்கள், ரூ.25 லட்சம் முதலீட்டுக்கு எங்கே போவது என்கிறார்கள். அரசே பொது நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக்கொடுத்தால், கழிவு மேலாண்மை சிறப்பாக நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உருவாகக்கூடும்.
(தொடர்வோம்...)
- க.சே.ரமணி பிரபா தேவி,
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT