Published : 04 Jul 2015 08:50 AM
Last Updated : 04 Jul 2015 08:50 AM
உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீதி கிடைப்பதில்லை.
2005 பிப்ரவரி மாதம். குளிர்ந்த மாலை நேரத்தில் பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் உத்தரப் பிரதேசத்திலிருந்து வெளியாகும் இந்தி நாளிதழான ‘அமர் உஜாலா’வின் செய்தியாளர் சைமுதீன் நீலு. அப்போது அம்மாநிலச் சிறப்பு போலீஸ் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் சிலர் அவரை ஒரு ஜீப்பில் கடத்தி, நேபாளம் எல்லையில் உள்ள லகீம்புர் கீரியைத் தாண்டி தொலைதூரத்தில் உள்ள வனப் பகுதிக்குக் கொண்டுசென்றனர். அங்கு துப்பாக்கி முனையில் மிரட்டி, அவரிடம் தற்கொலைக் கடிதத்தை எழுதச் சொன்னார்கள். ‘என்கவுன்ட்ட’ரில் கொன்றுவிடப்போவதாகவும் மிரட்டினர்.
சைமுதீனின் சமயோசித புத்தி அவரைக் காப்பாற்றியது. தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பிரஸ் கவுன்சில் ஆகியவற்றிடம் ஏற்கெனவே எச்சரித்திருப்பதாகத் தன்னை மிரட்டிக்கொண்டிருந்த போலீஸாரிடம் கூறினார் சைமுதீன். போலீஸார் உடனடியாகப் பின்வாங்கினர். எனினும், துன்புறுத்தல்கள் அத்துடன் நின்றுவிடவில்லை. வன உயிர்ப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கடத்தல் பொருட்களை வைத்திருந்ததாகப் பொய்யான குற்றச்சாட்டின்பேரில் அவரைக் கைதுசெய்த போலீஸார், ஒன்பது நாட்கள் சிறையில் அடைத்தனர்.
ஊழலின் கோர முகம்
சைமுதீன் குறிவைக்கப்பட்டதன் காரணம் என்ன? உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் ஊழல்கள், அத்துமீறல்கள், சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள், கருத்தடை அறுவைச் சிகிச்சைகளில் நடக்கும் முறைகேடுகள் என்று பல்வேறு விஷயங்கள்குறித்து தொடர்ந்து எழுதிவந்தவர் அவர். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி விரைவில் தலைப்புச் செய்திகளில் அடிப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையமும், பிரஸ் கவுன்ஸிலும் உத்தரப் பிரதேச மாநில அரசைக் குற்றம்சாட்டின. அம்மாநில சட்டப்பேரவையை சைமுதீன் வழக்கு உலுக்கியது. இவ்வளவு இருந்தும், குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் மீது சுமத்தப்பட்ட வழக்கு தொடர்பான வழக்குகள்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனவே தவிர, அவருக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை நடத்தப்படவில்லை.
அதன் பின்னர், 2010-ல் மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு சைமுதீனுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. “மாநில நிர்வாகமும் போலீஸ் உயரதிகாரிகளும் நடந்துகொண்ட விதம், அவர் சந்தித்த பிரச்சினைகள் தொடர்பான விஷயங்களை மலினப்படுத்துவதாகவும், சம்பந்தப்பட்ட போலீஸாரைக் காப்பாற்றும் விதமாகவும் இருந்தது” என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டது.
தொடரும் அச்சுறுத்தல்கள்
கடந்த வாரம் சைமுதீனிடம் பேசினேன். அந்தச் சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவருக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. அவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய போலீஸார் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கைகூடத் தாக்கல் செய்யப்படவில்லை. அரசு அவருக்குத் தருவதாக உறுதியளித்த ரூ. 5 லட்சம் இன்னும் அவருக்குத் தரப்படவில்லை. 2006 முதல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு ஒரே ஆண்டில் விலக்கிக்கொள்ளப்பட்டது. தனக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனும் அவரது கோரிக்கை கண்டுகொள்ளப்படவேயில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. “தொடர்ந்து அச்சத்தில் இருக்கிறேன். எப்போது நான் கொல்லப்படுவேன் என்று தெரியவில்லை” என்கிறார் சைமுதீன்.
சைமுதீன் மட்டுமல்ல, செய்தியாளர்கள் பலர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சமீபத்திய செய்திகள் பதிவுசெய்கின்றன. உத்தரப் பிரதேசத்தின் சித்திரகூட் மாவட்டத்தில் மணல் மாஃபியாக்களால் தொலைக்காட்சி செய்தியாளர் அஷோக் நாம்தேவ் கொடூரமாகத் தாக்கப்பட்டார். கான்பூரில் சூதாட்டம் தொடர்பாகச் செய்தி வெளியிட்ட தீபக் மிஸ்ரா மோட்டார் பைக்கில் வந்த கும்பலால் சுடப்பட்டார். அம்மாநிலத்தின் பீலீபீத் நகரில் நில மோசடி தொடர்பாகச் செய்தி வெளியிட்ட ஹைதர் கானை, ஒரு கும்பல் மோட்டார் பைக்கில் கட்டி 100 மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று கொடூரமாகக் கொன்றது. சமீபத்தில் ஷாஜஹான்பூரில் ஜகேந்திர சிங்கும், மத்தியப் பிரதேசத்தில் சந்தீப் கோத்தாரியும் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவங்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றன.
குறையாத குற்றங்கள்
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் அமைப்பான ‘கம்யூனிட்டி ஃபார் ப்ரொட்டெக்ஷன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ்’(நியூயார்க்கிலிருந்து செயல்படும் அமைப்பு இது) வெளியிட்டிருக்கும் ஆண்டறிக்கையின் படி, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களில் தண்டனை விதிக்கப்படாதவர்கள் தொடர்பான பட்டியலில் இந்தியா 13-வது இடத்தில் இருக்கிறது. ஜகேந்திரா வழக்கில் நீதி கிடைக்கப்போவதில்லை என்று பலரும் நினைப்பதற்கு என்ன காரணம் என்பதை மேற்சொன்ன தகவல்கள் உணர்த்தும்.
கடந்த ஆண்டு செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்குகளில் 74% உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்தவை என்கிறது ஒரு செய்தி. இந்த வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: பூஜ்யம்தான்! பிரஸ் கவுன்ஸில் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 25 ஆண்டு களில் 79 பத்திரிகையாளர்கள் பணி நேரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் கடுமையாகப் பாதிக்கப்படுபவர்கள் சுயேச்சை பத்திரிகையாளர்கள். ‘உள்ளூர் பத்திரிகையாளர்கள்’என்று அழைக்கப்படும் இவர்கள் மாவட்டம் அல்லது தாலுகா அளவில் செயல்படுபவர்கள். இவர்களுக்குக் கிடைக்கும் அமைப்பு ரீதியான ஆதரவு மிகக் குறைவு.
சமூக வலைதளங்கள் வந்த பின்னர், இந்தப் பிரச்சினை வேறு வடிவம் எடுத்திருக்கிறது. சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் தொடர்பாகச் செய்தி எழுதுவதற்கு அனுமதிக்கப்படாத நிலையில், செய்தியாளர்கள் தங்கள் வலைப்பூ மற்றும் ஃபேஸ்புக்கில் அந்த விஷயங்கள்குறித்து எழுதுகிறார்கள். இதுபோன்ற பதிவுகள்குறித்த எதிர் வினைகள் உடனடியாகப் பரவுவதால் சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் பிரபலமடைவதுடன், ஆபத்தைச் சந்திக்கவும் நேர்கிறது.
உள்ளூர் பத்திரிகையாளர்களின் நிலை
உள்ளூர் செய்தியாளர்களுக்குச் சம்பளம் குறைவு. பணி உத்தரவாதமும் குறைவு. போதுமான பயிற்சி இல்லாத அவர்களில் பலர் அடிக்கடி வேலையிழக்கிறார்கள். முக்கிய நகரங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் இவர்களைச் சுரண்டுவதும் நடக்கிறது. அடிக்கடி பத்திரிகை பணி சாராத பணிகள் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை நேர்மையற்ற பணிகள்.
உண்மையான பத்திரிகையாளர்களுக்கு நடுவே போலிப் பத்திரிகையாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். இவர்களில் பலர் ஊழல், உணர்வுகளைத் தூண்டுதல், தவறான செய்திகள், மிரட்டல் போன்றவற்றில் ஈடுபடுவதுதான் துரதிர்ஷ்டம். அலகாபாதில் எனக்குத் தெரிந்த மூத்த குற்றப் பிரிவுச் செய்தியாளர்களில் சிலருக்கு சிவப்பு விளக்குப் பகுதித் தொழிலில் பங்குண்டு. மணல் மாஃபியாவுக்குப் பெயர் பெற்ற சோன்பாத்ராவில், பத்திரிகையாளர்கள் சிலர் பெயரில் நிலங்கள் உண்டு. சக பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களும் உண்டு.
சமீபத்தில் நடந்த சம்பவங்கள் பத்திரிகையாளர்களின் பாதுகாப்புகுறித்த விவாதங்களைக் கிளப்பிவிட்டிருக் கின்றன. எனினும், ஆவேசமான குரல்கள் எழுந்ததைத் தாண்டி எதுவும் நடக்கவில்லை. பத்திரிகையாளர்களுக்கு ‘தேசிய பாதுகாப்புத் திட்டம்’ கொண்டுவர வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள். சிலர் ஊடக அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறார்கள். இதுபோன்ற பத்திரிகையாளர்களுக்கு உதவ ‘ஹெல்ப்லைன்’சேவையை ஏற்படுத்துவதற்கு உத்தரப் பிரதேச அரசு உத்தேசித்திருக்கிறது. உண்மையில், ஜனநாயக நாட்டில் நடவடிக்கைகள் தேவைப்படுவதே எந்த அளவுக்கு மதிப்பீடுகள் சீரழிந்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
அரசு உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அடங்கிய குழுவை உத்தரப் பிரதேச அரசு கடந்த ஆண்டு அமைத்தது. ஆனால், இதன் உறுப்பினர்கள் இதுவரை ஒருமுறைகூடச் சந்தித்துப் பேசவில்லை. போலீஸ் பாதுகாப்பு கோருபவர்களில், அரசியல் தொடர்பு கொண்டவர்களைத் தவிர, பெரும்பாலானோருக்கு அது வழங்கப்படுவதில்லை. குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படாத நிலையில், ஊழல் முறைகேடுகள் அதிகரிக்கும்போது நேர்மையான, சுதந்திரமான பத்திரிகையாளர்கள்கூட ஊக்கமிழந்துவிடுகிறார்கள். பாதிக்கப்படும் சக பத்திரிகையாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் பத்திரிகையாளர் சமூகம், தங்களுக்குள் இருக்கும் இதுபோன்ற பிரச்சினைகளையும் களைய முன்வர வேண்டும்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT