Published : 16 Oct 2019 08:31 AM
Last Updated : 16 Oct 2019 08:31 AM
க.சே.ரமணி பிரபா தேவி
பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவதால் உருவாகும் மிகச் சிறிய துணுக்குகள், செயற்கை நார்கள், பிளாஸ்டிக் மணிகள், மருத்துவ நுண் பிளாஸ்டிக் உபகரணங்கள் போன்ற மைக்ரோ பிளாஸ்டிக்கானது கடல் நீர், நிலம் தொடங்கி காற்றில்கூட வியாபித்திருக்கின்றன. அதிகபட்சமாக 5 மிமீ அளவில் (அரிசியின் அளவு) தொடங்கி கண்ணுக்கே புலப்படாத நுண்ணிய துகள்களாகவும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருக்கின்றன. இவற்றை உட்கொள்ளும் மீன்கள் போன்ற கடல் உயிரிகளால் உணவுச் சங்கிலி மூலம் மனிதர்களின் உடலிலும் பிளாஸ்டிக் சென்றுசேர்கிறது.
மேலை நாடுகளில் பிளாஸ்டிக் புழக்கம் அதிகரித்திருந்த காலகட்டத்தில், கடல்வாழ் உயிரிகள் ஆர்வலரான எட் கார்பென்ட்டர், வடக்கு அட்லாண்டோ கடற்கரைப் பகுதியில் உள்ள சர்காஸோ நதியில் வித்தியாசமான சில மாற்றங்களைக் கவனித்தார். நதியில் இருந்த பழுப்பு நிறப் பாசிகளின் மீது சிறுசிறு துணுக்குகள் படிந்திருந்தன. அவற்றைச் சோதனைக்கு உட்படுத்தியவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவை அனைத்துமே பிளாஸ்டிக்குகள். பிறகு, கரையிலிருந்து 550 மைல்கள் தொலைவில் அட்லாண்டிக் கடலின் மத்தியிலும் இவற்றைக் கண்டெடுத்தார். கடலில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பல நூறு சிறிய துண்டுகளாக மாறியிருந்தன.
பிளாஸ்டிக்கை உண்ணும் விலங்குகள்
பிளாஸ்டிக்கின் சிறிய துணுக்குகளைக் கடல்வாழ் உயிரினங்கள் இரையாக நினைத்து உட்கொண்டுவிடுகின்றன. உடல் உறுப்புகள் சேதமாதல், சுவாசக் கோளாறு, உணவுச் சங்கிலி பாதிப்பு என அவை எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம். அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியே கடுமையான பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றன. மரணம் வரை இது நீள்கிறது.
2008-ல் மார்க்கஸ் எரிக்ஸனால் மீன்கள் உட்கொள்ளும் பிளாஸ்டிக் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. வடக்கு பசிபிக் கடல் பகுதியில் இருந்த மீனின் உடலுக்குள் 18 துணுக்குகள் இருந்ததைப் படம் பிடித்தார் எரிக்ஸன். இது பெரும் அதிர்வலையை உருவாக்கியது. சிறிய பிளாஸ்டிக் துணுக்குகளால் உயிரிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நம்பிக்கையை 2008-ல் மார்க் பிரவுனி மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் குலைத்துப்போட்டன. அதைத் தொடர்ந்து, மைக்ரோ பிளாஸ்டிக்குகள் தொடர்பாக உருவான விழிப்புணர்வு, மைக்ரோ பிளாஸ்டிக்குகளால் உருவாகும் ஆபத்துகளை உணரத் தொடங்கியதும் தீவிரமாகப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கண்ணுக்குப் புலப்படாத இந்தச் சின்னஞ்சிறு துணுக்குகள் சுற்றுச்சூழலில் எங்கெங்கும் நிறைந்திருப்பதாகவும், கோடிக்கணக்கான பிளாஸ்டிக் துணுக்குகள் காற்றில் உழன்றுகொண்டிருப்பதாகவும் ஆராய்ச்சி யாளர்கள் சொல்கிறார்கள்.
நீளும் ஆபத்து
உணவுப் பொருட்களின் வழியாக, குடிக்கும் நீரின் வழியாக, சுவாசிக்கும் காற்றின் வழியாக என எல்லா வழிகளிலிருந்தும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மனிதர்களை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருக்கின்றன. மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மேலும் சிதைந்து நானோ பிளாஸ்டிக்குகளாக மாறி, அது மேலும் கேடுவிளைவிக்கும் அச்சுறுத்தலாக நம்மைத் தாக்கக் காத்திருக்கின்றன. நாம் சுவாசிக்கும் நானோ பிளாஸ்டிக்குகளால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இவை நம் உரையாடலுக்குள்ளேயே வரவில்லை.
கண்ணுக்கு ஸ்தூலமாகப் புலப்படும் திடக் கழிவுகளை மேலாண்மை செய்வதிலேயே நாம் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், கண்ணுக்குப் புலப்படாத மைக்ரோ பிளாஸ்டிக்குகளா நம் அரசின் கவனத்துக்கு வரப்போகிறது?
(தொடர்வோம்...)
- க.சே.ரமணி பிரபா தேவி,
தொடர்புக்கு:
ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT