Published : 14 Oct 2019 09:01 AM
Last Updated : 14 Oct 2019 09:01 AM
க.சே.ரமணி பிரபா தேவி
மின்சாரம் இல்லாத மனித வாழ்வைக் கற்பனை செய்ய முடியுமா? அதற்கு இணையாக நமது அன்றாடங்களுள் கலந்து ஊடுருவியிருக்கிறது பிளாஸ்டிக் பயன்பாடு. மலிவான விலை, குறைவான எடை, நீடித்த ஆயுள், பல்துறைப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிளாஸ்டிக் மிகப் பெரும் வணிகமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 கோடி டன் பிளாஸ்டிக்குகள் உருவாக்கப்படுகின்றன. அனுதினமும் சுமார் 100 கோடி கிலோ பிளாஸ்டிக்கை நுகர்கிறோம் நாம்!
130 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆண்டுக்கு 11 கிலோ பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகிறோம். இவ்வளவு பிளாஸ்டிக்கை நுகரும் நாம், மறுசுழற்சிக்கு எவ்வளவு அனுப்புகிறோம் தெரியுமா? எளிமையாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், நாம் பயன்படுத்தும் 200 பைகளில் ஒரு பையை மட்டுமே மறுசுழற்சிக்கு அனுப்புகிறோம்.
துறை வாரி பிளாஸ்டிக் பயன்பாடு
பிளாஸ்டிக் உருவாக்கத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் (35.9%) பேக்கேஜிங் துறையில் பயன்படுத்தப்படுகிறது என்கிறது உலக பொருளாதார மையத்தின் அறிக்கை. அடுத்ததாக, கட்டுமானத் துறையில் 16%, ஜவுளித் துறையில் 14.5% பிளாஸ்டிக் தேவை உள்ளது. நுகர்வோர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் அளவு 10.3%. வாகனத் துறையில் 6.6%, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 4.4% மற்றும் நிறுவனங்களின் இயந்திரத் தேவையில் 0.7% பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ளது.
பருத்தி, கம்பளி போன்ற இயற்கையான நார்ப்பொருட்களை விளைவிக்க மிக அதிக அளவில் விவசாய நிலம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் தேவை. அதற்கு மாற்றாக செயற்கை நார்கள் உற்பத்திசெய்யப்பட்டன. மலிவு விலை, தேவைப்படும் வகையில் இழுத்துக்கொள்ளும் பண்பு போன்றவற்றால் ஜவுளித் துறையில் பிளாஸ்டிக் நார்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.
பாலிதீன் ஆக்கிரமிப்பு
இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் பிளாஸ்டிக்கில் முக்கியமானது, பாலிஎத்திலின் என்கிற பாலித்தீன். 1953-ல் அதிஅடர்த்தி பாலித்தீன்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பிளாஸ்டிக் சந்தை விரியத் தொடங்கியது. பாலித்தீனால் செய்யப்பட்ட பைகள் நுகர்வோர் வணிகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. மளிகைப் பொருட்களை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொடுக்கும் பழக்கம் அமெரிக்காவில் 1979-ல் ஆரம்பித்தது.
அப்போது சில கடைகள் மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக்கொண்டிருந்தன. 1985-ல் பிளாஸ்டிக் பொறியாளர்கள் சமூக மாநாடு நியூஜெர்சியில் நடைபெற்றதுதான் மிக முக்கியமான திருப்பம். அதில்தான் காகிதப் பைகளைவிட பிளாஸ்டிக் பைகளின் விலை குறைவாக இருப்பதாக ஆதாரங்களுடன் விளம்பரம் செய்யப்பட்டது.
1986-லிருந்து 75% சூப்பர் மார்க்கெட்டுகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வழங்க ஆரம்பித்தன. அப்படியே இந்தப் போக்கு மெல்ல மெல்ல இந்தியா உட்பட பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கின.
இந்தியச் சந்தை
இந்திய பிளாஸ்டிக் சந்தையில் சுமார் 25 ஆயிரம் நிறுவனங்கள் இயங்குகின்றன. சுமார் 30 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்தியாவிலேயே அதிகமான பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களைக் கொண்டுள்ள மாநிலம் குஜராத். இங்கு மட்டும் சுமார் 5,000 பிளாஸ்டிக் நிறுவனங்கள் உள்ளன. ஆடைகள் மற்றும் விரிப்புகளுக்காக ஜவுளித் துறைக்கு மட்டும் ஆண்டுதோறும் 7 கோடி டன் பிளாஸ்டிக் தேவைப்படுகிறது. செயற்கை நார்களில் 90% ஆசியாவில்தான் தயாராகின்றன.
ஒப்பீட்டளவில், பிளாஸ்டிக் நுகர்வை நாம் அதிகம் கொண்டிருப்பதால் சர்வதேச அளவில் இந்திய பிளாஸ்டிக் சந்தை அபார வளர்ச்சியடைந்துவருகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் 25 மடங்குக்கும் மேல் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இன்னும் அடுத்த முப்பது ஆண்டுகளில் 50 மடங்காக உயரும் என்று எச்சரிக்கிறார்கள்! விழித்துக்கொள்ள வேண்டும்.
(தொடர்வோம்...)
- க.சே.ரமணி பிரபா தேவி,
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT