Published : 24 Jul 2015 12:38 PM
Last Updated : 24 Jul 2015 12:38 PM
இந்திய அளவில் 2014-15-ம் நிதியாண்டில் தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்று மதி மூலம் 6.6 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகம் நடந்துள்ளது. இது 2013-14-ம் நிதி ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம். இந்திய தோல் ஏற்றுமதி தொடர்ந்து வளரும் என்பது கணிப்பு.
வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை நகரங்களில் இருந்து மட்டும் ஆண்டுக்கு தோராயமாக ரூ.15 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலை மூலம் வேலூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைகின்றனர்.
75 ஆண்டுகளை கடந்த தோல் வர்த்தகம்
1960-ம் ஆண்டுகளில் ஆம்பூர், வாணியம்பாடி நகரில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் தோல் தொழிலை அறிமுகம் செய்தனர். பாலாற்றில் கிடைத்த வளமான தண்ணீர், இயற்கை மூலப்பொருட்கள் மூலம் கால் நடைகளின் தோலை சுத்தம் செய்தனர். ஆரம்ப காலத்தில் செமி பினிஷ்டு லெதர் என்ற சுத்தப்படுத்திய தோலை ஏற்றுமதி செய்தனர்.
ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகிய நேரத்தில் முழுமையாக பதப்படுத்திய தோல் (புல் பினிஷ்டு லெதர்) உற்பத்தி செய்யும் ஆர் வம் ஏற்பட்டது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தோல் பதப்படுத்தும் இந்த நகரங்கள் இருந்ததால் ஏற்றுமதி வாய்ப்புகளால் வேகமாக வளரத் தொடங்கியது.
தோல் வர்த்தகத்தில் உலகளாவிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் இயற்கை முறையில் இருந்து குரோமியம் அதிகமுள்ள ரசாயனங்களைப் பயன்படுத்தி தோல் பதனிட தொடங்கினர்.
1 கிலோ தோலுக்கு 35 லிட்டர் தண்ணீர்
பல்வேறு கட்டங்களில் தோல் பதப்படுத்தப்படுகிறது. சோடியம் குளோரைடு, சோடா, சோடியம் சல்பேட், சல்பியூரிக் ஆசிட், குரோமியம் சல்பேட் என 170 வகையான ரசாயனங்கள் பயன்படுத்துகிறார்கள். 1 கிலோ தோலைப் பதப்படுத்த 35 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ரசாயன முறையில் தோல் பதப்படுத்த ஆரம்பித்த காலத்தில் மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தோல் கழிவுகள் மொத்தமும் பாலாற்றில்தான் திறந்துவிடப்பட்டன. இதன் பாதிப்புகள் என்னவென்று தெரிந்துகொள்வதற்குள் பாலாற்றுப் படுகை தோல் கழிவு மாசு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறியது. நெல், வாழை, கரும்பு, தென்னையின் மகசூல் குறையத் தொடங்கியது.
தோல் பதப்படுத்தும் டேனரியில் இருந்து வெளியேறும் கழிவு 7 முதல் 8 கி.மீ. தொலைவுக்கு நிலத்தடி நீரை பாதிக்கும் தன்மையுடையது என ஆய்வில் தெரியவந்தது. பாலாற்றில் அதிகப்படியாக உறிஞ்சப்பட்ட தண்ணீர், பருவ மழை தட்டுப்பாடு காரணமாக நிலத்தடி நீர் வெகுவாக கீழ்நோக்கிச் சென்றபோது தோல் கழிவும் சேர்ந்தது.
மனிதர்கள் வாழ தகுதியில்லாத நகரம்
தோல் தொழிற்சாலைக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்க 1975-ம் ஆண்டு ராணிப்பேட்டை சிப்காட்டில் தமிழ்நாடு குரோ மேட்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியது. இங்கு, சோடியம் பை குரோமேட், குரோமியம் சல்பேட், சோடியம் சல்பேட் என அபாயகரமான ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டன. தொழிற்சாலை அதிக திறனுடன் இயங்கிய நேரத்தில் தினமும் சுமார் 30 டன் ரசாயன கழிவு வெளியேற்றப்பட்டு ஆலை வளாகத்தில் கொட்டப்பட்டது. தேங்கிய கழிவை அகற்றும் நடைமுறை என்னவென்று தெரியாமலே தொழிற்சாலை இயங்கியது குறிப்பிடத்தக்கது.
நாளடைவில் நஷ்டத்தில் இயங்கிய தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால், ஆலை வளாகத்தில் மலைபோல தேங்கிய 2.27 லட்சம் டன் குரோமிய கழிவை அகற்றுவதற் கான விடை இதுவரை காணப்படவில்லை.
வெட்டவெளியில் கொட்டிய கழிவுகள், மழை காலங்களில் தண்ணீரில் கரைந்து அருகில் உள்ள ஏரிகளிலும், பாலாற்றிலும் கலந்திருந்தது. அடுத்த தலைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குரோமிய கழிவை அகற்றாததால் Blacksmith institute of New York என்று நிறுவனம் 1996-ம் ஆண்டு வெளியிட்ட உலகில் மாசடைந்த நகரங்களின் வரிசையில் ராணிப்பேட்டை நகரத்தையும் அறிவித்தது. ராணிப்பேடை நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீருடன் சிப்காட் மற்றும் அதை சுற்றி யுள்ள தோல் மற்றும் ரசாயன தொழிற் சாலையில் இருந்து அவ்வப்போது வெளி யேற்றப்படும் கழிவுகள் பாலாற்றில் தேங்கியுள்ளன.
வேலூர் மாநகராட்சியில் தினமும் 30 லட்சம் லிட்டர் கொள்ளவு கழிவுநீர் தினமும் பாலாற்றில் கலக்கிறது. வேலூரைப் போல வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை நகராட்சி மற்றும் ஆற்றங்கரையில் இருக்கும் கிராமங்கள் என கணக்கிட்டால் தினமும் சுமார் 70 லட்சம் லிட்டர் அளவுக்கு பாலாற்றில் கழிவு நீர் கலக்கிறது. குடியாத்தம் நகராட்சி கழிவு நீர் கவுன்டன்யா நதியில் கலக்கிறது. கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் நேரடியாக நிலத்தடி நீரை பாதிப்பதுடன் சுகாதாரத்தையும் சீரழித்தது.
செயல்படாத குழு
பாலாற்றில் கலந்துள்ள தோல் கழிவு மாசு மற்றும் தோல் தொழிற்சாலைகளுக்கு எதிராக, வேலூர் குடிமக்கள் மன்றம் சார்பில் 1991-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் குல்தீப் சிங், பைசன் உதீன், வெங்கடசாமி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. பலகட்ட விசாரணைகளுக்குப்பிறகு 1996-ல் அளித்த தீர்ப்பில், பாலாற்றில் ஏற்பட்ட மாசுக்கு தோல் தொழிற்சாலைகளே காரணம் என அறிவித்தனர்.
வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு குழு உறுப்பினர் அசோகன் கூறியதாவது: மாசடைந்த பாலாற்றை மீட்க திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். இதற்கான குழுவை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர். அதன்படி வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் தலை மையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இதுவரை அவை செயல்படவில்லை என்றார். தோல் கழிவுகளால் பாலாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மணல் குரோமியமும் உப்பும் நிறைந்து கெட்டுப்போய் உள்ளது. கட்டுமானத்துக்கு தகுதி இல்லாத அந்த மணலை லாரி லாரியாக அள்ளப்படுவது கூடுதல் அவலம்.
‘‘வேலூர் மாவட்டத்தில் மட்டும் 120 கி.மீ தொலைவுள்ள பாலாற்றுப் படுகையின் பெரும்பகுதியை தோல் கழிவுகள் நாசப்படுத்தி யுள்ளன. பயன்படுத்த தகுதியில்லாத நிலத்தடி நீர் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை பாதித்துள்ளன. 1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை’’ என்கிறார் வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு மைய நிர்வாகி கஜபதி.
பாலாறு பயணிக்கும்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT