Published : 23 Sep 2019 08:12 AM
Last Updated : 23 Sep 2019 08:12 AM
வ.ரங்காசாரி
அரசு வங்கிகளில் 6 வங்கிகளை 4 பெரிய வங்கிகளுடன் இணைத்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம், அரசு வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆகக் குறைந்திருக்கிறது. இணைப்பு நடவடிக்கையால் அரசு வங்கிகள் வலுப்பெறும், அவற்றின் நிர்வாகச் செலவுகள் குறையும், புதிய கிளைகள் தொடங்கப்படும், பெரிய அளவிலான வங்கிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அரசின் இந்த முடிவைக் கண்டிக்கும் வங்கி ஊழியர் சங்கங்களோ தனியார் வங்கிகளுக்கு ஆதரவாகவே அரசு வங்கிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன என்று குற்றஞ்சாட்டுகின்றன. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் வங்கிகள் இணைப்பு, வாராக் கடன் பிரச்சினை, வாடிக்கையாளர் சேவை தொடர்பாக உரையாடியதிலிருந்து...
வங்கிகள் இணைப்பால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று அரசு அறிவித்த பிறகு, எதற்காகப் போராட்ட அறிவிப்பு?
வங்கிகள் இணைப்பால் அடுத்து வரும் சில மாதங்களுக்கு இணைப்பு வேலையைத் தவிர, வேறு எந்த அன்றாட நடவடிக்கையிலும் ஈடுபடாமல் வங்கிகள் ஸ்தம்பிக்கின்றன. மென்பொருள் இணைப்பு, மனித வள இணைப்பு என்பதெல்லாம் சவாலாகவே உள்ளன. பணிக் கலாச்சார மாற்றம், இடமாற்றம் என்று ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல பிரச்சினைகள் உண்டு. ஆயினும், தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு பிரதானமாக வாடிக்கையாளர்களின் நலன் கருதியே உள்ளது. அரசு வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டால், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, 2017-ல் ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளும், பாரத் மகிளா வங்கியும் ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்ட பிறகு 2,000-க்கும் மேற்பட்ட கிளைகளும், 250-க்கும் மேற்பட்ட நிர்வாக அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. 6 லட்சம் கிராமங்கள் உள்ள நமது நாட்டில், பொதுத் துறை வங்கிகளின் கிராமப்புறக் கிளைகள் சுமார் 35,000 மட்டுமே. இவற்றை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக வங்கிகள் இணைப்பு மூலமாகக் குறைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.
அரசு வங்கிகளை மேலும் வலுப்படுத்துவதுதானே அரசின் நோக்கம். அதில் என்ன தவறு?
உண்மையில், வங்கித் துறையைத் தனியார்மயமாக்குவதுதான் அரசின் நோக்கம். 1991-க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைவருக்குமே அதுவே கொள்கை. அவ்வாறு தனியார்மயமாக்கல் காலதாமதமாகும் பட்சத்தில், அரசு வங்கிகளை கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பது ஐஎம்எப், உலக வங்கிகளின் கட்டளை. அதை நிறைவேற்றும் வகையிலேயே தற்போது வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு பெரிய வங்கிகளின் மூலமாகவே கார்ப்பரேட்டுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வழங்குவது இனிமேல் எளிதாக இருக்கும். வாராக் கடனைத் தள்ளுபடி செய்யவும் இதுவே வசதியாக இருக்கும். வங்கிகள் பெரிதாகப் பெரிதாக சாதாரண மக்களுக்கான சேவையும், கடனும் அரிதாகும் என்பதே உலக அனுபவம்.
வாராக் கடன்களும் வங்கி இணைப்புக்கு முக்கியக் காரணம் இல்லையா?
வாராக் கடன்கள் வங்கிக் கிளைகளில் உண்டு. ஆனால், அது மிகவும் சொற்பம். ஏழைகள், நடுத்தர மக்கள் சட்டத்துக்குப் பயந்தவர்கள். அவர்கள் வாங்கிய கடனை சரியாகத் திருப்பிச் செலுத்திவிடுகிறார்கள். மொத்த வாராக் கடனில் ரூ.5 கோடியும், அதற்கு மேலும் வழங்கப்படும் கடன்களே மொத்தக் கடனில் 56%. இவர்கள் திருப்பிச் செலுத்தாததால் ஏற்பட்ட வாராக் கடன்தான் 88% என்று ரிசர்வ் வங்கியின் பினான்சியல் ஸ்டெபிலிடி ரிப்போர்ட் கூறுகிறது. இத்தகைய கடன்கள் மண்டல அலுவலகங்கள், தலைமை அலுவலகங்களால் வழங்கப்படுபவை.
வங்கிகள் இணைப்பால் இதற்கு முன்பு கிளைகள் இல்லாத ஊர்களில் புதிய கிளைகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறதே?
புதிய பகுதிகளுக்கு வங்கிச் சேவையை விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் இதுவரை மத்திய அரசிடம் இல்லை. 4 கிளைகளுக்கு ஒரு கிளையைக் கிராமப்புறத்தில் திறக்கப்பட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதியைத் தனியார் வங்கிகள் மதிப்பதே இல்லை. 2015 ஜனவரி மாதம் 2, 3 தேதிகளில் புனேவில் ‘கியான் சங்கம்’ என்ற பெயரில் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களும் நாட்டின் பிரதமரும் நிதியமைச்சரும் கலந்துகொண்ட ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தனியார் துறை வங்கிகளைப் போல் அரசு வங்கிகளும் கிராமப்புறங்களில் கிளைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், சாமானிய மக்களுக்கான முன்னுரிமைக் கடனைக் குறைக்க வேண்டும் என்று கொள்கை வகுக்கப்பட்டது. இதை வகுத்துக்கொடுத்தது மெக்கன்ஸி என்ற வெளிநாட்டு தனியார் கம்பெனி. அந்த அடிப்படையிலேயே வங்கி நிர்வாகங்கள் செயல்படுகின்றன.
விவசாயிகளுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் அரசு வங்கிகளின் கடன் சேவை அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லையே?
தற்போதுள்ள நிலைமையிலேயே சுமார் 50 சதவீத கிராம மக்களுக்கு வங்கிக் கடன் கிடைக்காத காரணத்தால், அவர்கள் கந்துவட்டிக்காரர்களையும் நிலச்சுவான்தாரர்களையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதேநேரத்தில், விவசாயிகளுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் கடன் வழங்குவதில் அரசு வங்கிகள்தான் உச்சத்தில் உள்ளன. தனியார் வங்கிகள் அவற்றின் அருகில்கூட வர முடியாது. ஆனால், அனைத்து மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் கடன் வழங்கப்படுகிறதா என்றால், இல்லை என்றே சொல்லாம். அரசு வங்கிகளில் இத்தகைய கடனை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, பெரும் தொகையிலான கடன்களை வழங்குவதற்கான அழுத்தம் மேலிருந்து கொடுக்கப்படுகிறது. இதற்கான முழுப் பொறுப்பும் மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் வங்கி உயர்மட்ட நிர்வாகத்தையுமே சாரும்.
தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களைக் கவர்வதில் போட்டிபோடுகின்றன. அரசு வங்கிகள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை...
2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, 50 நாட்கள் பெண் ஊழியர்கள் உட்பட வங்கி ஊழியர்கள் நள்ளிரவு வரை பணியாற்றினார்கள். நாட்டின் பிரதமரே இச்சேவையைப் பாராட்டினார். மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அரசு வங்கிகள் இயங்குகின்றன. வாடிக்கையாளர் சேவை அளிப்பதில் ஒவ்வொரு பொதுத் துறை வங்கியும் தனித்தன்மையுடன்தான் செயல்பட்டுவருகிறது. இருப்பு மற்றும் கடனுக்கான வட்டி விகிதமும் வங்கிக்கு வங்கி மாறுபடவே செய்கிறது.
அரசு வங்கி ஊழியர்கள் எல்லா வாடிக்கையாளர்களையும் சமமாக நடத்துவதில்லையே?
இந்தக் கருத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் வங்கி உயர்மட்ட நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம்தான் அதற்குக் காரணம். மேலும், அரசு வங்கிகளையும் தனியார் வங்கிகளைப் போல நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தனியார் வங்கி உயரதிகாரிகள் அரசு வங்கிகளின் தலைமைப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள், பணம் படைத்தவர்களையும் பெரும் தொகையைக் கடனாகப் பெறுபவர்களையும் விசேஷமாக நடத்தும்படி கூறுகிறார்கள். ஸ்டேட் பாங்க் ‘ஹை நெட் வொர்த்’ வாடிக்கையாளர்களை 35,000-லிருந்து 2 லட்சமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில், ஓர் அரசு வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.50,000, நடப்புக் கணக்கில் ரூ.1 லட்சம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை விசேஷமாக நடத்த வேண்டும் என்று பகிரங்கமாக சுற்றறிக்கையே வெளியிட்டுள்ளது. இதெல்லாம்தான் பாகுபாட்டை உருவாக்கும் காரணிகளாக உள்ளன.
வங்கித் தேவைகளை அரசு வங்கிகளால் பூர்த்திசெய்ய முடியாதபோது, தனியார் வங்கிகளை அனுமதிப்பதில் என்ன தவறு?
வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டதற்குப் பிறகுதான் மொத்தக் கடனில் சாமானிய மக்களைக் கை தூக்கிவிடும் வகையில் 40% முன்னுரிமைக் கடன் என்ற விதியே நடைமுறைக்கு வந்தது. அதில் 18% விவசாயத்துக்குக் கட்டாயம் உள்ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விவசாயக் கடன், சிறு தொழில் செய்யக் கடன், கல்விக் கடன், வீடு கட்ட கடன் என்று பல கடன் திட்டங்கள் உள்ளன. ரூ.2 லட்சம் வரையில் சிறு தொழில் செய்யக் கடன், ரூ.3 லட்சம் வரையில் விவசாயக் கடன், ரூ.4 லட்சம் வரையில் கல்விக் கடன் எந்தப் பிணையும் இல்லாமல், சொத்து அடமானம் இல்லாமல் வழங்குவது அரசு வங்கிகள் மட்டும்தான். ஆனால், இதை நீர்த்துப்போகச் செய்ய கடந்த 28 ஆண்டுகளாக மத்திய அரசு முயன்றுவருகிறது. ‘மக்கள் பணம் மக்களுக்கே’ என்ற முழக்கத்தை முன்வைத்து, வங்கி ஊழியர்களின் தொடர்ச்சியான பிரச்சாரங்களும் இயக்கங்களும் போராட்டங்களும்தான் இன்று வரை இத்திட்டதைக் காப்பாற்றிவருகின்றன.
1991-ல் காங்கிரஸ் அரசு, ஐஎம்எப் அறிக்கையை அப்படியே ‘நரசிம்மம் கமிட்டி அறிக்கை’ என்று பெயர் சூட்டி நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. வங்கிகளில் உள்ள அரசின் பங்குகளைத் தனியாருக்கு விற்றது. 10 புதிய தனியார் வங்கிகளை அனுமதித்தது. அதில் குளோபல் டிரஸ்ட் வங்கி என்ற தனியார் வங்கி 10 வருடம்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் கவிழ்ந்தது. அதை ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் என்ற அரசு வங்கியுடன் இணைத்ததால் அரசு வங்கிக்கு ரூ.1,100 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
பாஜக அரசோ, காங்கிரஸ் அரசைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் செயல்படுகிறது. 2014-ல் பாஜக அரசு, பிஜே நாயக் குழுவை அமைத்து ‘எல்லா அரசு வங்கிகளையும் தனியார்மயமாக்க வேண்டும்’ என்று பரிந்துரைக்கச் செய்தது. அந்த அறிக்கையை உடனே நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிட்டது.
2015-க்குப் பிறகு 2 அகில இந்திய அளவிலான தனியார் வங்கிகளையும், 11 பேமண்ட் வங்கிகளையும், 10 சிறு வங்கிகளையும் இக்காலகட்டத்தில் அனுமதித்துள்ளது. இவை சாதாரண மக்களைக் கசக்கிப்பிழிகின்றன. வருடம் 25% கந்துவட்டியில் கடன் வழங்குகின்றன.
வங்கித் துறை தனியார் கைகளுக்குச் சென்றால், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டுவிடும். அரசின் மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது. சாமானிய மக்களுக்குக் குறைந்த வட்டியில் பிணை இல்லாமல் கடன் கிடைக்காது. மக்கள் மீதான சுமை இன்னும் கூடும். வேலைவாய்ப்பு இருக்காது, ஏன் வாடிக்கையாளர்களின் சேமிப்புக்குக்கூடப் பாதுகாப்பு இருக்காது. இந்தியப் பொருளாதாரத்தின் அச்சாணி பெருநிறுவனங்களின் கைகளில் சிக்கிவிடும்.
- வ.ரங்காசாரி,
தொடர்புக்கு: rangachari.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...