Published : 14 Jul 2015 09:49 AM
Last Updated : 14 Jul 2015 09:49 AM
எழுவர் விடுதலை மீதான தீர்ப்பு மனித உரிமைகளோடு, மாநிலங்களின் உரிமைகள் சார்ந்ததாகவும் அமையப் போகிறது. குற்றம் - குற்றவாளி - தண்டனை என்ற முக்கோண உறவு மனித உரிமைகளின் வெளிச்சத்தில் பார்க்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் இன்றைய சூழலில், இதற்கு நேர் தொடர்புடைய ஒரு வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட முழு ஆயத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
ஒரு குற்றம் நிகழ்ந்து, அது மெய்ப்பிக்கப்பட்டு, குற்றவாளிக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் தண்டனை அனுபவித்து மீண்டு வருவதில் மூன்று கட்டங்கள் உள்ளன:
1. குற்றத் தீர்ப்பு (Conviction). அதாவது, குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை மெய்ப்பித்தல். அவர்தான் குற்றவாளி எனத் தீர்மானித்தல்.
2. தண்டனைத் தீர்ப்பு (Sentence). தண்டனை என்ன? அதன் அளவு என்ன என்று தீர்மானித்தல்.
3. தண்டனைக் குறைப்பு (Remission). குற்றவாளிக்குத் தண்டனைக் குறைப்பு அல்லது தண்டனைக் கழிவு தந்து வெளியே விடுதல்.
இந்த மூன்று கட்டங்களையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டால், முதல் கட்டத்தில் குற்றத்தைப் பார்க்க வேண்டும். இரண்டாம் கட்டத்தில் குற்றத்தையும் குற்றம் புரிந்த மனிதனையும் பார்க்க வேண்டும். மூன்றாம் கட்டத்தில் குற்றத்தை மறந்துவிட்டு குற்றம் புரிந்த மனிதனை மட்டும் பார்க்க வேண்டும். குற்றத்தைத் தடுத்தல், குற்றவாளியைத் தண்டித்தல், அதன் வழி அவருள் அடங்கிய மனிதத்தை மீட்டல் என்ற மூன்று நோக்கங்களையும் சீர்திருத்தக் குற்றவியல் வலியுறுத்துகிறது. இது பல முற்போக்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைப் பார்வை
குற்றத் தீர்ப்பின்போது குற்றத்தின் தன்மை, அது நிகழ்ந்த விதம் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். யார் செய்திருப்பினும் குற்றம் குற்றமே என்பதுதான் குற்றத் தீர்ப்பின் அடிப்படை. தண்டனைத் தீர்ப்பின்போது, அதாவது என்ன தண்டனை, கொலைத் தண்டனையா, சிறைத் தண்டனையா, எவ்வளவு காலச் சிறைத் தண்டனை என்றெல்லாம் தீர்மானிக்கும்போது குற்றத்தின் தன்மை, குற்றவாளியின் நிலை இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தண்டனைக் குறைப்பின்போது, அதாவது சிறைத் தண்டனை பெற்ற ஒருவரை தண்டனைக் குறைப்பு அல்லது தண்டனைக் கழிவு தந்து விடுதலை செய்யலாமா என்று கருதிப் பார்க்கும்போது, குற்றத்தின் தன்மைபற்றிப் பேசிக்கொண்டிராமல், குற்றம் புரிந்தவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், வருங்காலத்தில் அவர் சமூகத்தில் மறுவாழ்வு பெறும் தகுதியையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த மனித உரிமைப் பார்வை, குற்றங்களை நியாயப்படுத்துவதோ, குற்றவாளிகளைத் தண்ட னையிலிருந்து பாதுகாப்பதோ அல்ல என்பது தெளிவு. குற்றங்களை ஒழிப்பதன் பெயரால் குற்றவாளிகளையே ஒழித்துவிடக் கூடாது, அவர்களின் மனிதத்தையே அழித்துவிடக் கூடாது என்பது மட்டுமே மனித உரிமையின் மன்றாட்டு.
தண்டனையின் நோக்கம் எது?
தண்டனையின் நோக்கம் குற்றத்தை ஒழிப்பதா; குற்றவாளி களை ஒழிப்பதா? உச்ச நீதிமன்றம் நாளை தன்முன் வரும் வழக்கில் விடை காண வேண்டிய வினாக்களின் உட்கரு இதுதான். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு எப்படி வந்தது? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கிளை வழக்காக வந்தது என்பதே இந்த வழக்கின் பின் மறைந்துள்ள அரசியல் ஆவேச உணர்ச்சிகளைப் புலப்படுத்தும். பேரறி வாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண் டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைப்பதை எதிர்த்து, இந்திய அரசு தொடுத்த மீளாய்வு வழக்கைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான ஆயம், ஆயுள் தண்டனை என்றால் ஆயுட்காலச் சிறைதான் என்றபோதிலும், மாநில அரசு இவர்களைக் குற்ற நடைமுறைச் சட்டத்தின் தண்டனைக் குறைப்பு விதிகளைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டியது.
இதையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 பிப்ரவரி 19-ம் நாள் சட்டப் பேரவையில் ஓர் அறிவிப்பு செய்தார்: ‘‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பெற்று கடந்த 23 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் பேரறி வாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் விடுதலை செய்வதெனத் தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளது. உரிய சட்ட விதிகளின்படி இந்த முடிவு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். மூன்று நாளைக்குள் டெல்லியிலிருந்து மறுமொழி வரவில்லை என்றால், நாமே அவர்களை விடுதலை செய்வோம்’’ என்றார் முதல்வர்.
இந்திய அரசு, தமிழக அரசுக்கு எவ்வித மறுமொழியும் அனுப்பாமல் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பிப்ரவரி 20 அன்று தமிழக அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து விட்டது.
இந்திய அரசு தொடுத்த வழக்கோடு தமிழ்நாட்டுக் காங்கி ரஸார் சிலரும் சேர்ந்துகொண்டு புதுப்புது சிக்கல்களைக் கிளப்பினர்: ‘‘தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைத்த பின், மீண்டும் ஒரு முறை தண்டனைக் குறைப்பு வழங்க முடியுமா? குற்ற நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான விதிகளின்படி இப்படிச் செய்ய முடியும் என்றால், இந்தக் குற்ற நடைமுறைச் சட்ட விதிகளே செல்ல மாட்டா’’ என்றுகூட அவர்கள் வாதிட்டனர். இப்படிப்பட்ட வாதங்களுக்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லையென்றாலும், முன்னாள் பிரதமர் மீது அவர்கள் வைத்துள்ள தீவிரப் பற்றுதலின் வெளிப்பாடு என்று எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ள வேண்டியதே.
விடையளிக்க வேண்டிய வினாக்கள்
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட முழு ஆயம் இந்த வழக்கை நாளை விசாரிக்கவுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்தியா முழுக்க நூற்றுக் கணக்கான ஆயுள் சிறைக் கைதிகளின் முன்-விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் எல்லா மாநில அரசுகளும் விடையளிக்க வேண்டிய சில வினாக்களை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 72 வழங்கும் அதிகாரத் தைப் பயன்படுத்தி இந்திய அரசோ, உறுப்பு 161 வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசோ ஒரு முறை தண்டனைக் குறைப்பு வழங்கிய பின், குற்ற நடைமுறைச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி மாநில அரசு மீண்டும் ஒரு முறை தண்டனைக் குறைப்பு வழங்க முடியுமா? அதாவது, தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைத்த பின், ஆயுள் முழுக்கச் சிறையில் அடைத்து வைக்காமல் முன்-விடுதலை செய்ய இப்போதுள்ள சட்ட வழிவகைகள் நீடிக்கலாமா, கூடாதா? ஆயுள் தண்டனைக் கைதியை முன்-விடுதலை செய்வதற்கான வழிவகைகள் ஒருசில வழக்குகளில் மட்டும் பொருந்தாதபடி செய்யலாமா? அதாவது, என்ன நடந்தாலும் அந்த ஆயுள் கைதிகளைச் சாகும் வரை சிறையில் அடைத்து வைக்கலாமா? இப்படி ஒரு தனிவகைத் தண்டனையை நீதிமன்றமே வழங்கலாமா? கொலை செய்ததாகத் தண்டிக்கப்பட்டவருக்கு, கொலையுண்டவரின் குடும்பத்தினர் தரப்புக் கருத்தைக் கேட்காமலே தண்டனைக் குறைப்பு வழங்கலாமா?
நாம் தொடக்கத்தில் குறிப்பிட்ட குற்றம் - குற்றவாளி - தண்டனை தொடர்பான சீர்திருத்தக் குற்றவியலின் நோக்கில் இவ்வினாக்களுக்கு விடை காண்பது கடினமன்று. குற்றவாளி எவ்வளவுதான் திருந்தினாலும், மறுவாழ்வுக்கு எவ்வளவுதான் தகுதி பெற்றாலும், அவரை சாகும் வரை சிறையில் வைத்திருக்கும் தண்டனை ஒன்று இருக்கக் கூடுமென்றால், அது கொலைத் தண்டனையிலும் கொடிது. இதைப் பட்டறிவின் துணைகொண்டே என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும்.
வினாக்களுக்கான விடைகள்
இந்த வினாக்கள் ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பானவை மட்டுமல்ல, சிறைப்பட்ட அனைவரின் மனித உரிமைகள் தொடர்பானவை. சிறைத் தண்டனையின் நோக்கங்கள் தொடர்பானவை. மாநில அரசுக்குள்ள அதிகாரங்கள் தொடர்பானவை. இந்த வினாக்களுக்கு இது வரை விடை காணப்படவில்லை என்று நினைக்க வேண்டாம். இப்போதுள்ள சட்டங்களிலேயே போதிய விளக்கங்கள் உள்ளன. போதவில்லை என்றால், சிறை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. குறிப்பிடத்தக்க ஒன்று,
வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையிலான நீதிபதிகள் ஆயம் 1980-ல் மாருராம் வழக்கில் வழங்கிய தீர்ப்பு.
ராஜீவ் வழக்குக் கைதிகளைப் பொறுத்தவரை, குற்ற நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான விதிகளின்படி, மாநில அரசுக்குள்ள தண்டனைக் கழிவு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரங்களே இந்தப் பூசலின் புயல் மையம். குறிப்பாகச் சொன்னால், பிரிவு 435 மாநில அரசுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பதே அடிப்படை வினா. குறிப்பிட்ட சில வழக்குகளில் மாநில அரசு, மத்திய அரசைக் கலந்துகொண்ட பிறகே செயல்பட வேண்டும் என்று இந்தப் பிரிவு 435 சொல்கிறது. இதன் இரு உட்பிரிவுகள் இருவகையான வழக்குகளைக் குறிப்பிடுகின்றன. முதல் உட்பிரிவு [435(1)] மூன்று கூறுகளைக் கொண்டது. இவற்றுள் முதல் கூறுதான் [(435(1)(அ)] இங்கு நம் கருத்துக்குரியது. தண்டனைக் கழிவு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்குவதற்கு 432, 433 ஆகிய பிரிவுகள் வழங்கும் அதிகாரத்தை மாநில அரசு பயன்படுத்துவதானால், மத்தியக் காவல்துறை நிறுவனம் ஒன்றினால் புலனாய்வு செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசுடன் கலந்தாய்வு செய்யாமல் பயன்படுத்தலாகாது.
காலங்கடத்தும் இந்திய அரசு
ராஜீவ் கொலை வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பு புலனாய்வு செய்தது என்பதால், எழுவர் விடுதலைக்கு இவ்விதி பொருந்தும் என்பதில் ஐயமில்லை. அதனால்தான் தமிழக முதல்வர் அந்த எழுவரையும் விடுதலை செய்யும் முடிவை உடனே செயல்படுத்தாமல் இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார். மூன்று நாள் கெடு விதிக்கலாமா என்று கேட்பவர்களுண்டு. விதித்தால் என்ன? மூன்று நாள் போதாது என்று மத்திய அரசு கருதியிருந்தால், மாநில அரசுக்குத் தெரிவித்துக் கூடுதல் அவகாசம் பெற்றிருக்கலாமே! செய்தி தெரிவிப்பதை மட்டுமே கலந்தாய்வாக மதிக்க இயலாது என்றால், திறமான கலந்தாய்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசே எடுத்துரைக்கலாமே! இது கலந்தாய்வின் தொடக்கம்தான் என்பதைத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திலேயே சொல்லிவிட்டது. மாநில அரசு எழுதும் மடல்களைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு மறுமொழியே இல்லாமல் காலங்கடத்துவதற்குப் பெயர்தான் திறமான கலந்தாய்வோ?
ஜெயலலிதாவின் சரியான முடிவு
எழுவர் விடுதலை தொடர்பில் முதல்வர் ஜெயலலிதா செய்தது சட்டப்படியும் அறநெறிப்படியும் சரி. கலந்தாய்வு என்ற கட்டுப்பாட்டைக் காரணங்காட்டி, இந்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே விடுதலை செய்ய முடியும் என்று காங்கிரஸ் அன்பர்கள் சொல்வது விபரீத அபத்தம்! கலந்தாய்வு (consultation) வேறு, ஒப்புதல் (concurrence) வேறு என்பதைத் தெரிந்துகொள்ளப் பெரிய சட்ட அறிவு ஏதும் தேவை இல்லை. எளிய ஆங்கில-தமிழ் அகராதியே போதும். கலந்தாய்வு என்று சட்டமியற்றியவர்களின் நோக்கம், இது தொடர்பில் மாநில உரிமையைப் பாதுகாப்பதே என்பது தெளிவு. இது நாளை உச்ச நீதிமன்றத்தில் தெளிந்துரைக்கப்படும் என்று நம்புகிறோம்.
தர்க்கமன்று.. குதர்க்கம்
கலந்தாய்வு வேறு, ஒப்புதல் வேறு என்பதற்கு குறிப்பிட்ட சட்டப் பிரிவிலேயே அகச்சான்று உள்ளது. பிரிவு 432, உட்பிரிவு (2) இந்த வேறுபாட்டைத் தெளிவாக உணர்த்துகிறது. எவ்வாறான வழக்குகளில் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு ஆணை, மத்திய அரசின் தண்டனைக் குறைப்பு ஆணை இல்லாமல் நடைமுறைக்கு வராது என்று இந்த உட்பிரிவு தெளிவுபடுத்துகிறது. அதாவது, மத்திய அரசின் ஆட்சியதிகாரத்துக்கு உட்பட்ட பொருட்பாடுகள் தொடர்பான வழக்குகளில் மாநில அரசு மட்டும் தண்டனைக் குறைப்பு வழங்கினால் போதாது, மத்திய அரசும் வழங்கினால்தான் அது செயல்வடிவம் பெறும். அதாவது, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு தண்டனைக் குறைப்புச் செய்ய முடியாது. கலந்தாய்வு என்றாலே ஒப்புதல்தான் என்றால், இந்த இருவேறு உட்பிரிவுகளே தேவைப்பட்டிருக்க மாட்டா. இரண்டும் சேர்ந்து ஒரே பிரிவாக இருந்திருக்கும்.
முதல் உட்பிரிவு கலந்தாய்வு கோருகிறது, இரண்டாம் உட்பிரிவு ஒப்புதல் கோருகிறது. அதாவது மத்திய காவல்துறை நிறுவனம் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுடன் கலந்தாய்வு தேவை. மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட குற்றங்களில் மத்திய அரசின் ஒப்புதல் தேவை. ராஜீவ் கொலை வழக்கு முதல் வகையைச் சேர்ந்தது என்பதால், கலந்தாய்வே போதுமானது. இது முதல் வகையைச் சேர்ந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், கலந்தாய்வு என்றாலும், இந்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே விடுதலை செய்ய முடியும் என்று விவாதிப்பது தர்க்கமன்று, குதர்க்கம். மனித உரிமைகள் மகத்தானவை. இதை இந்தியாவின் தலைமை நீதிமன்றம் நாளைக்கு உறுதிசெய்யும் என்று நம்புவோம்!
தியாகு, ‘தமிழ்த் தேசம்’ ஆசிரியர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர்.
தொடர்புக்கு: thozharthiagu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT