Published : 23 Jul 2019 10:32 AM
Last Updated : 23 Jul 2019 10:32 AM

புதிய கல்விக் கொள்கை வரைவு: இலக்கும் பாதையும் சரிதானா?  

கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு சமர்ப்பித்திருக்கும் புதிய கல்விக் கொள்கையின் வரைவு கல்வியாளர்கள் வட்டங்களில் மட்டுமின்றி அரசியல் வெளியிலும் கடும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. கல்வித் துறையில் இக்கொள்கை கொண்டுவரவிருக்கும் மாற்றங்களின் சாதக, பாதகங்களையும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் பற்றி தமிழகக் கல்வியாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் கருத்துகள் இவை...

எல்லாப் பிரிவினருக்குமான கல்விக் கொள்கை

பேராசிரியர் ப.கனகசபாபதி

மேல்நாட்டுக்கோட்பாடுகளை அப்படியே தழுவாமல், நம் நாட்டுக்கு ஏற்ப, அதிக பயன்தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது புதிய கல்விக் கொள்கை. நிறைய சிறப்பம்சங்கள் இருந்தாலும் அதில் நான் முக்கியமானதெனக் கருதுபவை இவை.
முதல் முறையாக பள்ளிக்கல்வி, உயர்கல்வி என்று தனித்துப் பார்க்காமல் ஒருங்கிணைந்த கொள்கையாக இது உருவாகியிருக்கிறது. சாலையோரத்தில் தங்கிக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிரந்தர முகவரியற்றவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், மாற்றுப் பாலினத்தவர் என எல்லாப் பிரிவினரையும் கருத்தில்கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு மாணவனிடம் ஒரு விஷயத்தைச் சொன்னால், மேலதிக விவரங்களை அவனே தேடிப்படிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, அதிகபட்சமாகத் தொழில்நுட்பத்தைப் பயன்டுத்திச் சொல்லித்தரும் வகையில் கல்விமுறை மாற்றப்படுகிறது.

பல ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரியில் வேலை கிடைத்ததும் அப்படியே தேங்கிவிடுகிறார்கள் என்பதால், இந்தக் கல்வித் திட்டம் ஆசிரியர் பயிற்சி மற்றும் தொடர் கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆராய்ச்சிகளுக்கு நிதி தருவதற்கென பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய சமூக அறிவியல் ஆய்வு மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், இந்திய அறிவியல் துறை என்று எண்ணற்ற அமைப்புகள் இருந்தாலும் அதில் பெரிய தேக்கமிருப்பதால், ஆராய்ச்சிக்கென தனியாகத் தேசிய ஆராய்ச்சிக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொறுப்பு என்ன, மாநில அரசின் பொறுப்புகள் என்ன, கல்வி நிறுவனங்களின் வேலைகள் என்ன என்பவை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. 

பழங்குடியின மொழிகள் உட்பட அனைத்து இந்திய மொழிகளுக்கும் சம மதிப்பு வழங்கப்படும் என்றும், கூடுதல் மொழி கற்க வழிவகை செய்யப்படும் என்றும், தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் சொல்கிறது இந்தப் புதிய கல்விக் கொள்கை. அகில இந்திய அளவில் கல்விக்கென குழு அமைக்கப்படுகிறது. பிரதமர் தலைமையில் அமையும் இந்தக் குழுவின் உறுப்பினர்களாகக் கல்வியாளர்கள், மாநில முதல்வர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல மாநிலங்களும் முதல்வர் தலைமையில் மாநிலக் குழு அமைக்கலாம். பொறுப்புகளும் செயல்திட்டங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன.

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மட்டும் இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகத் தவறான பிரச்சாரம் நடைபெறுகிறது. 2015 ஜனவரியில் புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு வெளியிடப்பட்டு, நாடு முழுவதும் கருத்து கேட்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு புதிய வரைவு வெளியிடப்பட்டுள்ளது. அதன் மீது கருத்து தெரிவிக்க இம்மாத இறுதி வரையில் நேரம் உள்ளது. எனது கருத்துகள் பலவும் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், எதையுமே படிக்காமல் வெறுப்புக் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பது ஏற்புடையதல்ல. இந்தக் கல்விக் கொள்கையானது வெறுப்பாளர்கள் சொல்வதுபோல வெறுமனே ஏழெட்டு பேர் மட்டுமே உருவாக்கியது அல்ல. நாடு முழுவதிலும் கருத்து கேட்டதால்தான், மாற்றுப் பாலினத்தவர், பழங்குடியினர் உட்பட அனைவரின் பிரச்சினைகளையும் அறிந்து அதற்கேற்ப கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.

சமத்துவத்துக்கு எதிரான கல்விக் கொள்கை

பேராசிரியர் அருணன்

‘உயர்கல்வியைப் பொறுத்தவரை இந்தக் கொள்கையின் பிரதான இலக்கு அது சிறுசிறு கூறுகளாகச் சிதறிக்கிடப்பதை முடிவுக்குக் கொண்டுவருவது. அதற்காக ஒவ்வொன்றும் 5,000 அல்லது அதற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பெரிய, பல்துறை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை நிறுவுவது’ என்கிறது இந்தப் புதிய கல்விக் கொள்கை. இதன் நடைமுறை அர்த்தம் சிறிய கல்லூரிகளை மூடுவது என்பதுதான். போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்காமல் அவற்றுக்கு மூடுவிழா நடத்துவது பற்றிப் பேசுகிறது.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று போராடுகிறோம் நாம். ஆனால், இந்த வரைவோ பிஏ, எம்ஏவில் சேரவும்கூட நீட் மாதிரியான தேர்வைப் பரிந்துரைக்கிறது. ‘கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை நடத்துவதற்காகத் தேசிய தேர்வு முகமை வலுப்படுத்தப்படும். 2020 முதலே இது நடப்புக்கு வரும்’ என்கிறது இந்தக் கொள்கை. அதாவது, பன்னிரண்டாம் வகுப்பில் தேறினால் மட்டும் போதாது, இன்னொரு தேர்விலும் தேறினால்தான் கல்லூரியில் இடம் என்கிறது.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக அதைக் குறைக்கும் நோக்கத்தை இது கொண்டிருக்கிறது. தரத்தின் பெயரால் மாணவர்களுக்கு மட்டுமல்ல , ஆசிரியர்களுக்கும் அநீதி நேரும் ஆபத்துள்ளது. ‘பேராசிரியர்களது நியமனம், பணிக்காலம், பதவி உயர்வு மற்றும் இழப்பீடு அதிகரிப்பு எல்லாம் தரத்தின் அடிப்படையில் இருக்கும்’ என்கிறது. தரம் முக்கியம்தான் என்றாலும், தரத்தின் பெயரால் சமூகநீதியைப் பலியிட்டுவிடக் கூடாது. இந்த வரைவானது அரசியல் சாசனம் வகுத்துள்ள இடஒதுக்கீடு பற்றி ஏதும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய ஆய்வு அமைப்புக்கு ஆண்டு மான்யமாக ரூ.20,000 கோடி தரப்படும் என்கிறது இந்த வரைவு. அதே மூச்சில், ‘இந்த நிதியைப் பெற தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்பு இருக்கும்’ என்கிறது. அரசு தரும் நிதியில் ஏன் தனியாருக்குச் சமமான வாய்ப்பு தர வேண்டும்? பொதுமக்கள் பணத்தில் கல்வியில் தனியார்மயத்தை வளர்க்கும் வேலை இது. பெரிதினும் பெரிது என்று உயர்கல்வி நிறுவனங்களை வணிகமயமாக்கும் போக்கு இந்தக் கொள்கையின் அடிநாதமாக உள்ளது. 
‘புராதன நூல்கள், 64 கலைகள் பற்றிய ஞானமே கல்வி என்று விவரித்துள்ளன. இந்தப் பல கலைகள் பற்றிய ஞானம் எனும் கோட்பாடு மீண்டும் இந்தியக் கல்வியில் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று முழங்குகிறது இந்த வரைவு. பல கலைகளையும் கற்க வேண்டும் என்பது சரிதான். ஆனால், ‘ஆய கலைகள் 64’ என்று பழைய காலத்துக்குத் திரும்புவது இந்த அறிவியல் யுகத்துக்கு ஒத்துவராது. இந்தப் புதிய கல்விக் கொள்கை அரதப் பழசான சிந்தனையையே அழுத்தமாக முன்வைக்கிறது.

ஒரு கல்விக் கொள்கையின் நோக்கமானது சமமான, தரமான உயர்கல்விக்கான வாய்ப்பை சகலருக்கும் தருவதாக இருக்க வேண்டும். அதற்காக நகர்ப்புற-கிராமப்புற வேறுபாடின்றி, பணக்காரன்-ஏழை வித்தியாசமின்றி, சாதி-மதப் பாகுபாடின்றி அனைவரையும் நோக்கி அது செல்வதாக இருக்க வேண்டும். ஆனால், இந்தக் கொள்கையோ ‘பெரிய, பல்துறை உயர்கல்வி நிறுவனங்கள்’ என்ற பெயரில் சாமானியர்களுக்கு முன்பிருந்த வாய்ப்பையும் கெடுப்பதாக உள்ளது. சமத்துவத்துக்கு எதிராக உள்ளது.

ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்

இரா.ஸ்ரீநிவாசன்
மாநிலச் செயலாளர்,
பாரதிய ஜனதா கட்சி

இந்த கல்விக் கொள்கை வரைவானது பல்வேறு விஷயங்களை மிகவும் விரிவாக அலசுகிறது. பள்ளிக் கல்வி தொடங்கி முதுமுனைவர் பட்டம் வரைக்கும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரியக் கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டும், சுதந்திர இந்தியாவின் எழுபது ஆண்டு கால அனுபவங்களைக் கொண்டும் ஒரு புதிய கல்விமுறையை நோக்கிச் செல்வதுதான் இந்த வரைவின் நோக்கம். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தைக் கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றுவது, பிரதம அமைச்சரைத் தலைவராகக் கொண்ட தேசிய கல்வி ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட முக்கியமான ஆலோசனைகளை இந்த வரைவு சொல்லியிருக்கிறது.

தற்போதுள்ள சட்டப்படி, 6 வயது முதல் 14 வயது வரைக்கும்தான் இலவசக் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்கிறது. தற்போதைய வரைவானது 3 வயது முதல் 18 வயது வரை கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்கிறது. இதுவொரு புரட்சிகரமான திட்டம்தானே!
கல்விக் கொள்கை வரைவில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ‘லிபரல் எஜுகேஷன்’ என்ற வார்த்தையை இந்த வரைவில் நிறைய பயன்படுத்தியிருக்கிறார்கள். பள்ளிப் படிப்பின்போதே அறிவியல் மாணவர், கலை மாணவர் என்று பிரிக்காமல் அறிவியல் படிப்பவர்கள் கலைப் பாடங்களை விருப்பப் பாடமாகப் படிக்கவும், கலைப் பிரிவு மாணவர்கள் அறிவியல் பாடங்களை விருப்பப் பாடமாகப் படிக்கவும் வாய்ப்பளிக்கிற தாராளமான ஒரு கல்வித் திட்டத்தை இந்த வரைவு முன்வைக்கிறது. இசை, நடனம், விளையாட்டு என்று எல்லா வகையான திறமைகளுக்கும் இடமளிக்கிற வகையில் இந்த வரைவு அமைந்துள்ளது.

மொழி விஷயத்தில், இந்த வரைவு மும்மொழிக்கொள்கையை ஆதரிக்கிறது. தமிழ்நாட்டில் இந்தி படிக்கச் சொல்கிறது என்று நாம் கோபப்படுகிறோம். ஆனால், இதே வரைவில் உத்தர பிரதேசம், பிஹாரில் உள்ள மாணவர்கள் ஒரு தென்னிந்திய மொழியைப் படிக்க வேண்டும் என்றும் இந்த வரைவில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். இது ஒரு கற்பனையான வாதம்தான். தமிழ்நாடு அரசு வட மாநில அரசுகளுடன் பேசி, ‘தமிழை மூன்றாவது மொழியாகச் சேருங்கள், நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழாசிரியர்களை அனுப்பிவைக்கிறோம்’ என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடலாம். உத்தர பிரதேசத்திலும் பிஹாரிலும் தமிழ் சொல்லிக்கொடுப்பதற்காக இங்கிருந்து தமிழாசிரியர்களை அனுப்பிவைக்க முடியும். தமிழ்நாட்டைத் தாண்டி தமிழ் செல்வதற்கான வாய்ப்பை இந்த வரைவு வழங்குகிறது.
ஆங்கிலம் என்பது உலகமொழி என்கிற அந்தஸ்தெல்லாம் எழுபது எண்பதுகளிலேயே குறைய ஆரம்பித்துவிட்டது. அதனால்தான், இந்திய மொழிகள் அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்தக் கல்விக் கொள்கை சொல்கிறது. 

இந்தியர்கள் இரண்டு பேர் சந்தித்தால் இந்திய மொழிகளில் பேசுங்கள் என்று இந்தக் கல்விக் கொள்கை சொல்கிறது. ஐந்தாம் வகுப்பு வரைக்கும் தாய்மொழியில் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும், முடிந்தால் எட்டாம் வகுப்பு வரையில் தாய்மொழிக் கல்வி இருக்க வேண்டும் என்று இந்தக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது. இது தமிழுக்கு ஆதரவான விஷயம்தானே? தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் ஒருவர் பிஹெச்டி வரைக்கும் படிக்கலாம் என்ற நிலை இருக்கிறதே? புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் அதன் பிறகு இந்நிலை தொடராது. தமிழ்நாட்டு மாணவன் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் வரும்.

அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு இலவசக் கல்வி எப்படி?

ஜி.ராமகிருஷ்ணன்
தலைமைக் குழு உறுப்பினர்,
மார்க்ஸிஸ்ட் கட்சி

குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை மூட வேண்டுமென்று ஏற்கெனவே மாநில அரசுகளுக்கு மத்திய நிதி ஆயோக் அறிவுறுத்தியது. இப்போது கஸ்தூரி ரங்கன் குழு முன்வைத்திருக்கும் புதிய கல்விக் கொள்கை வரைவு இந்தத் திட்டத்தை அமலாக்குவதாக இருக்கிறது. ‘அரைத்த மாவையே அரைப்பதற்குப் பதிலாகப் புதிய சிந்தனையுடன் கல்விக் கொள்கையை உருவாக்கியிருப்பதாக’ கஸ்தூரி ரங்கன் குறிப்பிட்டிருக்கிறார். அது புதிய சிந்தனை அல்ல; மத்திய அரசு முன்னெடுக்கும் புதிய தாராளவாதக் கொள்கை.

‘2030-க்குள் 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, இலவச, கட்டாய பள்ளிக்கல்வி அளிக்க வேண்டும்’ என அறிக்கை கூறுகிறது.இந்த நோக்கம் உன்னதமானது. ஆனால், இதை நடைமுறைப்படுத்த சரியான திட்டம் அறிக்கையில் இல்லை. சுதந்திர இந்தியாவில் தலைசிறந்த கல்வியாளரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அளித்த அறிக்கையில் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி எனப் பரிந்துரைத்தார். அதை அமலாக்குவதென அப்போதைய அரசு ஏற்றுக்கொண்டது. இதுவரையில் இந்த இலக்கு எட்டப்படவில்லை. இன்று வணிகப் பொருளாகக் கல்வி மாறி 50 விழுக்காட்டுக்கு மேல் தனியார் கைக்குச் சென்றுவிட்டது.

“ஓராசிரியர் மட்டுமே கொண்ட 5 முதல் 8 வரையிலான எண்ணிக்கையில் மாணவர்களோடு இயங்கும் பள்ளிகள் உள்ளன. இதை வைத்துக்கொண்டு என்ன மாதிரியை நாம் கட்டமைக்க முடியும்?” என்று கேட்கிறார் கஸ்தூரி ரங்கன். இதற்குத் தீர்வாக அறிக்கையில் அவர் முன்வைக்கும்போது 20-க்கும் குறைவான குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை ‘பொருளாதார சாத்தியம் இல்லாத பள்ளிகள்’ என வகைப்படுத்தி அவற்றை மூடிவிடலாம் என்கிறார் அவர். இதற்கு மாற்றாக, பல கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கல்வி வளாகம் ஏற்படுத்தி அங்கே குழந்தைகளைப் படிக்க வைக்கலாம் என ஆலோசனை கூறுகிறார். அருகமைப் பள்ளி - ஆரம்பப் பள்ளி என்றால் ஒரு கி.மீ தொலைவில், உயர்நிலைப் பள்ளி என்றால் 3 கி.மீ. தொலைவுக்குள் - என்பதை வலியுறுத்தும் கல்வி உரிமைச் சட்டம் காவுகொடுக்கப்படுகிறது.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வுக்குழு அறிக்கையின்படி நாட்டில் உள்ள 40% அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 30-க்கும் குறைவாக உள்ளது. வரைவு அறிக்கையின் பரிந்துரைப்படி பார்த்தால் லட்சத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளிகளை மூட வேண்டியிருக்கும். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 20-க்கும் குறைவாக மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 320 உள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால் சராசரியாக மாநிலம் முழுவதும் 9 ஆயிரம் பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இம்முடிவு ஒரு பகுதி மாணவர்களைத் தனியார் பள்ளிகளை நோக்கித் தள்ளும். இன்னொரு பகுதி மாணவர்களின் கல்வி தடைபடும். அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, இலவசக் கல்வியை எப்படி அளிக்க முடியும்? ‘எல்லாம் தனியார்மயம்’ என்ற நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு வடிவம்தான் இந்த கல்விக் கொள்கை.

நடப்பிலுள்ள நிலைமைகளை மாற்றுவது பற்றி கவலையோடு பரிசீலிக்கும் எவரும் புதிய சிந்தனைகள் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அந்தச் சிந்தனை நிதி ஆயோக் சொல்கிற, தனியார்மயத்தை ஊக்குவிக்கிற ஒன்றாக இருக்க முடியாது. அனைவருக்கும் அரசே தரமான, இலவச, கட்டாயக் கல்வி வழங்குவதற்கு ஏற்ற கல்விக் கொள்கை தேவை. கல்வியைத் தனியார்மயமாக்கும் கொள்கை முடிவு (நிதி ஆயோக் 2016) எடுத்துவிட்டு, அதற்கேற்றார்போல் அறிக்கை தயாரித்துக்கொடுப்பது செருப்புக்கேற்றார்போல் காலை வெட்டுவதாகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x