Published : 22 Jul 2019 10:05 AM
Last Updated : 22 Jul 2019 10:05 AM
புவி
சுதந்திர இந்தியாவின் முதலாவது தேசிய கல்விக் கொள்கை கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரையின்படி, 1968-ல் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மும்மொழித் திட்டத்தை முன்மொழிந்ததன் காரணமாகக் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது அக்கொள்கை. 1986-ல் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையானது கல்வி பெறுவதற்கான வாய்ப்பில் உள்ள பாகுபாடுகளைக் களைந்து அனைவரும் கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்குவதே நோக்கம் என அறிவித்தது. பெண்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்ட பிரிவினர் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் நோக்கில் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. திறந்தநிலைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-ம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையில் 1992-ல் பிரதமர் நரசிம்ம ராவ் சில திருத்தங்களை மேற்கொண்டார். 2005-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் குறைந்தபட்ச பொதுவேலைத் திட்டத்தின் கீழ் புதிய தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றினார்.
2001-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் ‘சர்வ சிக்ஷ அபியான்’ இயக்கம் தொடங்கப்பட்டபோது பாஜகவும் தன் பங்குக்கு தேசிய கல்விக் கொள்கையை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மோடியின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான் தேசிய கல்விக் கொள்கைக்கான குழு நியமிக்கப்பட்டது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஜூன்
2017-ல் அமைக்கப்பட்ட கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தனது அறிக்கையை மே 31, 2019 அன்று அளித்தது. தற்போதைய கல்வி முறை எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளான அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு, பாரபட்சம் இல்லாத சமத்துவ நிலை, தரமான கல்வி, கல்வித் துறையின் செலவுகள் மற்றும் அதன் பொறுப்புகள் ஆகியவற்றுக்கான தீர்வுகளை இவ்வரைவு முன்மொழிகிறது.
வரைவுக் கொள்கையானது பள்ளிக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலான அனைத்து நிலைகளிலும் சீர்திருத்தங்களைச் செய்யக் கோருகிறது. மழலையர் கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவும் தற்போதைய தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் செய்யவும், ஆசிரியர் பயிற்சியை வலுப்படுத்தவும், கல்வித் துறையை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளை மறுசீரமைக்கவும் முற்படுகிறது. தேசிய கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தவும், கல்வித் துறைக்கு அரசு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவும், கல்வித் துறையில் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளை வலுப்படுத்தவும் தொழிற்கல்வி மற்றும் வயதுவந்தோர் கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவும் முயல்கிறது.
மழலையர் கல்வி
தற்போது பின்பற்றப்பட்டுவரும் மழலையர் கல்வியில் குழந்தைகளின் வளர்ச்சி நிலைக்கேற்ற பாடத்திட்டங்கள் இல்லாத நிலை உள்ளது. தகுதியும் பயிற்சியும் பெற்ற ஆசிரியர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். கற்பிக்கும் நிலையும் தரம் குறைந்ததாகவே உள்ளது. அங்கன்வாடி மற்றும் தனியார் மழலையர் பள்ளிகளின் வாயிலாகத் தற்போது கற்பிக்கப்பட்டுவரும் மழலையர் கல்வியைக் குறித்து இதுவரையில் கல்விக் கொள்கை தீவிர கவனம் எடுத்துக்கொள்ளவில்லை. மழலையர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் வரைவு கல்விக் கொள்கையானது 3 வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. மேலும், 3 வயது தொடங்கி 8 வயது வரைக்குமான கல்வி முறையையும் பரிந்துரைத்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டம்
தற்போது நடைமுறையில் இருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009, 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அளித்துவருகிறது. வரைவு கல்விக் கொள்கையானது கல்வி உரிமைச் சட்டத்தின் வரம்பை விரிவுபடுத்தி மழலையர் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் உள்ளடக்கப் பரிந்துரைக்கிறது. 3 முதல் 18 வரையுள்ள அனைத்து குழந்தைகளையும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிறது. மேலும், கல்வி உரிமைச் சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ள முழுத் தேர்ச்சிக்கான சட்டத் திருத்தங்களை மீண்டும் பரீசிலிக்கவும் கோருகிறது.
கல்வியமைப்பில் மாற்றம்
மாணவர்களின் வளர்ந்துவரும் தேவைகளுக்கேற்ப பள்ளிக் கல்வியின் அமைப்பில் மாற்றங்களைச் செய்யவும் வரைவு கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. 5-3-3-4 என்ற புதிய கல்வியமைப்பைப் பரிந்துரைக்கிறது.
1) ஐந்தாண்டு அடிப்படைக் கல்வி (மூன்றாண்டு மழலையர் கல்வியும் முதல், இரண்டாவது வகுப்புகளும்),
2) மூன்றாண்டு ஆயத்தக் கல்வி (மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை), 3) நடுநிலைக் கல்வி (ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை), 4) நான்காண்டு உயர்நிலைக் கல்வி (ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை).
பொருள் உணராமல் தகவல்களை மனனம் செய்வதாகவே தற்போதைய கல்வி முறை இருப்பதாக விமர்சிக்கும் வரைவு கல்விக் கொள்கை, அதற்குப் பதிலாகப் பாடத் திட்டங்களின் சுமையைக் குறைத்தும் அடிப்படைப் பாடங்களை விவாதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் சூழலை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
தற்போதைய தேர்வு முறையானது ஒரு சில பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்கத் தூண்டுவதாகவும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அளிக்கக்கூடியதாகவும் இருந்துவருகிறது. மாணவர்களின் பள்ளிக் கல்வியைத் தொடர் மதிப்பீடு செய்யும்வகையில், 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் மாநில அளவிலான மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்தப் பரிந்துரைக்கிறது. தேர்வு வாரியங்களின் தேர்வு முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, வாரியத் தேர்வுகள் பாடங்களின் அடிப்படைக் கருத்துகளையும் உயர் கல்விக்கான திறனையும் சோதித்துப் பார்ப்பதாக மட்டுமே அமைய வேண்டும், மாணவர்களுக்குத் தங்களது விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்கிறது வரைவு கல்விக் கொள்கை.
பள்ளி வளாகம்
மிகவும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிக்கூடங்களை நடத்துவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில்கொண்டு அதற்கு மாற்றாகப் பள்ளி வளாக அமைப்பை இவ்வரைவு பரிந்துரைக்கிறது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் கற்பிக்கப்படும் உயர்நிலைப் பள்ளியொன்று பள்ளி வளாகத்தின் மையமாகக் கொள்ளப்படும். அதைச் சுற்றிலும் உள்ள பள்ளிகளில் மழலையர் கல்வியிலிருந்து 8-ம் வகுப்பு வரையில் கற்பிக்கப்படும். அங்கன்வாடிகள், தொழிற்கல்வி நிலையங்கள் மற்றும் வயதுவந்தோர் கல்வி மையங்களை உள்ளடக்கியதாகப் பள்ளி வளாகங்கள் அமையும். பகுதியளவு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளாக இயங்கும் பள்ளி வளாக அமைப்பு, பயிற்சி பெற்ற ஆசிரியர்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.
ஆசிரியர் மேலாண்மை
தகுதியுள்ள ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை அதிகரித்திருப்பதையும், ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத மற்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவதையும் குறிப்பிடும் வரைவு கல்விக் கொள்கையானது ஒவ்வொரு ஆசிரியரும் குறிப்பிட்ட பள்ளி வளாகத்தில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முதல் ஏழாண்டுகள் வரையிலும் பணியாற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்கிறது. கற்பிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் நேரங்களில் மதிய உணவு தயாரித்தல், தடுப்பூசி முகாம்களை நடத்துதல் போன்ற கற்பித்தல் அல்லாத பணிகளில் அவர்கள் ஈடுபடுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது. ஆசிரியர் பயிற்சியில் தற்போதுள்ள பி.எட் படிப்புக்குப் பதிலாக ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட். படிப்பைப் பரிந்துரைக்கிறது. உயர்தரமான பாடங்களையும் ஆசிரியப் பயிற்சியையும் உள்ளடக்கியதாக இந்தப் படிப்பு அமையும். மேலும், ஒவ்வொரு பாடத்துக்கும் ஒருங்கிணைந்த தொடர் ஆசிரியப் பயிற்சியும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 50 மணி நேரமாவது ஒருங்கிணைந்த தொடர் ஆசிரியப் பயிற்சியை நிறைவுசெய்ய வேண்டும்.
புதிய ஒழுங்குமுறை அமைப்பு
கல்விக் கொள்கை உருவாக்கம், பள்ளிக்கூட செயல்பாடுகள் மற்றும் பாடத்திட்ட மேம்பாடு ஆகிய பணிகளைச் சாராமல் பள்ளிகளை நிர்வகிப்பதற்கென்றே மாநிலம்தோறும் பள்ளி ஒழுங்குமுறை ஆணையங்களை உருவாக்க வேண்டும். மாநில கல்வித் துறையானது அதற்கான விதிமுறைகளை உருவாக்கவும் கண்காணிக்கவும் செய்யும்.
உயர் கல்வி
உயர் கல்வித் துறை பற்றிய அனைத்திந்தியக் கணக்கெடுப்பின்படி, உயர் கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை 2017-18-ம் ஆண்டில் 25.8% உள்ளது. உயர் கல்வியில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லாததே, உயர் கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குக் காரணம் என்று முடிவெடுத்துள்ளது தேசிய கல்விக் கொள்கைக்கான குழு. 2035-ம் ஆண்டுக்குள் உயர் கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த வேண்டும் என்ற இலக்கைத் தீர்மானித்துள்ளது.
தற்போதுள்ள உயர் கல்வி அமைப்புகள், பல்வேறுபட்ட ஒழுங்குமுறை அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், உயர் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறது. ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலைக்கும், மையப்படுத்தப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரத்துக்கும் இது இட்டுச்செல்கிறது. எனவே, நடைமுறையில் இருக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்குப் பதிலாக தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று வரைவு கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. அதன்படி, அகில இந்திய தொழிற்கல்வி கவுன்சில், பார் கவுன்சில் ஆப் இந்தியா போன்ற தொழில்சார் அமைப்புகளின் அதிகார எல்லைகள் தொழில் நெறிமுறைகளை உருவாக்குவது என்ற அளவில் மட்டுப்படுத்தப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட்டு உயர் கல்வி நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கும் அமைப்பாக மட்டுமே அது இயங்கும்.
தற்போது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலானது (என்ஏசிசி) பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் இயங்கிவருகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவிலிருந்து என்ஏசிசியைத் தனி அமைப்பாகப் பிரித்து அதற்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று வரைவு கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. என்ஏசிசியானது தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இயங்கும். அதன் கீழ் இயங்கும் மற்ற அங்கீகார அமைப்புகளுக்கு உயர் கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பதற்கான உரிமத்தை ஐந்தாண்டுகள் அல்லது ஏழாண்டுகளுக்கு ஒருமுறை அளிக்கும். தற்போதுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் 2030-ம் ஆண்டுக்குள் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தைப் பெற வேண்டியது கட்டாயம்.
உடனடி அனுமதி
தற்போது உயர் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ சட்டமியற்ற வேண்டியது கட்டாயமாக உள்ளது. அதற்குப் பதிலாக தேசிய உயர் கல்வி ஒழுங்கு ஆணையத்தின் அனுமதி பெற்று உடனடியாகப் புதிய நிறுவனங்களைத் தொடங்க வரைவு பரிந்துரைக்கிறது. அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் மூன்று வகையாகப் பிரிக்கப்பட வேண்டும். 1) ஆராய்ச்சி மற்றும் கல்வி இரண்டுக்கும் சம முக்கியத்துவம் வழங்கும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், 2) கற்பித்தலுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கும் கல்வி பல்கலைக்கழகங்கள், 3) இளநிலை அளவில் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்லூரிகள். அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் கல்வி, நிர்வாகம், நிதி ஆகியவற்றில் படிப்படியாகத் தன்னாட்சி பெற்றவையாக மாற வேண்டும் என்கிறது வரைவு தேசிய கல்விக் கொள்கை.
தேசிய ஆராய்ச்சி அமைப்பு
இந்தியாவில் ஆராய்ச்சிக்காகச் செலவிடப்படும் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.69% தான். ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை, காப்புரிமைகள், ஆய்வுக் கட்டுரை வெளியீடுகள் என அனைத்திலும் இந்தியா பின்தங்கியிருக்கிறது. இந்தியாவில் தரமான ஆராய்ச்சிகளை வளர்த்தெடுக்கவும் அவற்றுக்கு நிதியுதவி அளித்து வழிகாட்டவும் தேசிய ஆராய்ச்சி அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அவ்வமைப்பு தன்னாட்சி கொண்ட அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் வரைவு பரிந்துரைக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், சமூக அறிவியல், மானிடவியல் ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டதாக இந்த அமைப்பு செயல்படும். இந்த அமைப்புக்கு ஆண்டொன்றுக்கு ரூ.20,000 கோடி மானியமாக அளிக்கப்படும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்தொகையின் மதிபபு 0.1% ஆக இருக்கும்.
நான்காண்டு பட்டப் படிப்பு
இளங்கலை பட்டப் படிப்புகளில் பல துறைகளை ஒருசேரப் பயிலும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். அனைவருக்கும் பொதுவான ஒரே பாடத்திட்டமும், ஒன்று அல்லது இரண்டு விருப்பப் பாடங்களும் கொண்டதாகப் புதிய பாடத்திட்டம் அமையும். கலைப் பாடங்களுக்கான இளநிலைப் படிப்பு நான்காண்டுகளைக் கொண்டதாக இருக்கும். அடுத்த ஐந்தாண்டுகளில், நான்காண்டு இளங்கலைப் படிப்புகளுக்கான ஐந்து மாதிரி கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். உயர் கல்வி ஆசிரியர்கள், தொடர் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு, தொடர் ஆசிரியப் பணி மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். மாணவர்-ஆசிரியர் வீதத்தை 30:1 ஆகக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாடத்திட்டங்களை உருவாக்குவதில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
ராஷ்டிரிய சிக்ஷ ஆயோக்
தற்போது கல்வித் துறையானது வெவ்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளுடன் தொடர்புடையதாக இருப்பதற்கு மாற்றாக, கல்வித் துறைக்கென்று தனி அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும். ராஷ்டிரிய சிக்ஷ ஆயோக் என்று அழைக்கப்படும் அந்த அமைப்புக்கு பிரதமர் தலைவராக இருப்பார். இந்த அமைப்பு கல்வித் துறைளின் வளர்ச்சி, செயல்பாடு, மதிப்பீடு, திருத்தங்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கும். என்சிஇஆர்டி, தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறை ஆணையம், தேசிய ஆராய்ச்சி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகளை இந்த அமைப்பு நெறிப்படுத்த வேண்டும்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மாற்றி கல்வித் துறை அமைச்சகம் என்று பெயரிட வேண்டும். 2017-18-ல் கல்வித் துறைக்காக செலவிடப்பட்ட தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7% மட்டுமே. 1968, 1986 ஆண்டுகளின் தேசிய கல்விக் கொள்கைகளைப் போல இந்த தேசிய கொள்கை வரைவும் கல்வித் துறைக்கு 6% ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. அதன் முதற்கட்டமாகத் தற்போது கல்விக்கான செலவில் அரசின் பங்காக இருக்கும் 10% அடுத்த பத்தாண்டுகளில் 20% ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
கல்வித் தகவல் களஞ்சியம்
கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஒரே இணையதளத்தில் கிடைக்கும் வகையில் கல்வித் தகவல் களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும்.
தாய்மொழியில் கல்வி
புரியாத மொழிகளில் நடத்தப்படும் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் பள்ளிக்கூடங்களில் பெரும்பாலான மாணவர்கள் சிரமப்படுவதை வரைவு கல்விக் கொள்கை சுட்டிக்காட்டுகிறது. எனவே, ஐந்தாம் வகுப்பு வரையில் வீட்டுமொழி அல்லது தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியே கற்பிக்கும் மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. வாய்ப்பிருந்தால், எட்டாம் வகுப்பு வரையிலும் அதுவே கற்பிக்கும் மொழியாக இருக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
மும்மொழிக் கொள்கை
முதலாவது தேசிய கல்விக் கொள்கை, இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர்த்து நவீன இந்திய மொழி ஒன்றையும் கற்றுக்கொள்ளும் மும்மொழித் திட்டத்தைப் பரிந்துரைத்தது. இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்திய மொழி, ஆங்கிலம் தவிர இந்தி உள்ளிட்ட மும்மொழித் திட்டத்தைப் பரிந்துரைத்தது. இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவும் அதே மும்மொழித் திட்டத்தையே பரிந்துரைக்கிறது என்றாலும், அத்திட்டத்தை சூழலுக்கேற்ப நெகிழ்வான வகையில் நடைமுறைப்படுத்தப் பரிந்துரைக்கிறது. அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் உள்ளூர் மொழிக்கு மட்டுமல்லாது கூடுதலாக மூன்று இந்திய மொழிகளுக்கும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் இந்த வரைவு பரிந்துரைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT