Published : 09 Jul 2015 09:19 AM
Last Updated : 09 Jul 2015 09:19 AM

முல்லை பெரியாறு 120: 3 கட்டங்களாக பலப்படுத்தப்பட்டு புதிதாக மாறிய பெரியாறு அணை

எந்த அணைக்கும் வாழ்நாள் இவ்வளவு என எந்த காலக்கெடுவும் இல்லை. அதன் கட்டுமானத்தை முறையாகப் பராமரித்தால் காலத்தை வென்று நிற்கும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை எந்தப் பாதிப்பும் இல்லாமல் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் அணைகள் 150-க்கும் மேல் உள்ளன. பெரியாறு அணையில் நீர்க் கசிவின் அளவை குறைக்க 1930-32ம் ஆண்டுகளில் 80 துளைகளிட்டு 40 டன் சிமென்ட் கரைசல் உயர் அழுத்தத்துடன் செலுத்தப்பட்டது. 1933-ல் அணையின் வெளிப்புறத்தில் மெல்லிய எஃகு வலையை அமைத்து அதில் சிமென்ட் காரைக் கலவையைப் பலத்துடன் செலுத்தி ஒட்ட வைக்கப்பட்டது. 1960-ல் 502 டன் சிமென்ட் கரைசல் உயர் அழுத்தத்துடன் செலுத்தப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் கேரளத்தின் தலையீடு, வேண்டுகோள் என எதுவும் இல்லாத நிலையிலேயே, நன்றாகப் பராமரிக்கும் நோக்கில் தமிழகத்தால் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 1924, 1933, 1940, 1961, 1977-ம் ஆண்டுகளில் அணையின் நீர்மட்டம் 152 அடியாக எட்டியபோதும் அணை மிக உறுதியாக இருந்தது. கேரளத்தின் நெருக்கடியால் 136 அடியாக நீர்மட்டம் 1979-ம் ஆண்டில் குறைக்கப்பட்டது. மீண்டும் 152 அடியாக நீரைத் தேக்க மத்திய நீர்வள ஆணையம் கூறியபடி 3 கட்டங்களாக அணையைப் பலப்படுத்தும் பணிகள் 1980 மே 27-ம் ேததி தொடங்கின.

கான்கிரீட் தொப்பி அமைத்தல்

அணையின் மேல்பகுதியில் அதிக எடையுள்ள சிமென்ட் கான்கிரீட்டினால் தொப்பி போன்று மேல்மூடி அமைப்பதே முதல் கட்டம். கனமான கான்கிரீட் அணை சுவரின் மொத்த நீளமான 1200 அடி முழுமைக்கும் 21 அடி அகலம், 3 அடி தடிமனில் வலுவான தளம் அமைக்கப்பட்டது. இதனால் அணையின் எடை 12 ஆயிரம் டன் அதிகரித்தது. இதன்மூலம் எந்த நிலையிலும் நீர் அழுத்தத்தால் அணையின் அடிப்பகுதி பாதிக்கப்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இரும்புக் கம்பியால் நங்கூரம்

இரும்புக் கம்பி நங்கூரம் என்பது முன்தகைவுறு கற்காரை (Prestressed Concrete) என்ற நவீன தொழில்நுட்பத்தை அடிப்ப டையாகக் கொண்டது. அணையின் முன்பக்கச் சுவரில் 5 அடி தள்ளி அணையின் மேல்மட்டத்தில் இருந்து 4 அங்குலச் சுற்றளவில், அணையின் கீழே அடித்தளப் பாறையில் 30 அடி ஆழம்வரை செங்குத்தாகத் துளையிடப்பட்டது. இந்தத் துளைக்குள் 7 மில்லிமீட்டர் சுற்றளவுடைய 34 உறுதியூட்டும் கம்பிகள் ஒரே கட்டாகச் செலுத்தப்பட்டன. 95 இடங்களில் நங்கூரமாக நிறுத்தப்பட்ட இக்கம்பிகள் 120 டன் அழுத்தத்தில் அணையை அடித்தளத்துடன் இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். நங்கூரத்தால் அணை எந்த நில அதிர்வுகளையும் தாங்கும் வலிமை பெற்றுள்ளது.

கான்கிரீட் துணை அணை

அணையின் பின்புறத்தை ஒட்டி கான்கிரீட்டால் முட்டுச்சுவர்போல் துணை அணை அமைப்பதே 3-வது கட்டப் பணியாகும். பழைய அணையும், புதிய அணையும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு ஒரே கட்டுமானமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

32 அடி அகலத்தில் 1,200 அடி நீளத்துக்குத் துணை அணை அமைக்க 3.60 லட்சம் டன் கான்கிரீட் கலவை பயன்படுத்தப்பட்டது. நீர்க் கசிவைப் பதிவு செய்ய 2 சுரங்க வழிகள் அமைக்கப்பட்டன. கூடுதலாக அமைக்கப்பட்ட 3 ஷட்டர்களையும் சேர்த்து தற்போது 1.22 லட்சம் கனஅடி நீரை வெளியேற்றலாம். பலப்படுத்தும் பணிக்குப் பின்னர் மேற்கொண்ட ஆய்வில் அணையில் அதிகபட்ச நீர்க் கசிவு விநாடிக்கு 45 லிட்டர் மட்டுமே இருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவு விநாடிக்கு 250 லிட்டர் என்பதால் அணை மிகப் பலமாக இருப்பது உறுதியானது.

உச்ச நீதிமன்றம் சென்ற வழக்கு

பலப்படுத்தும் பணி முடிந்த பின் பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அணை நீர்மட்டத்தை 136 அடிக்குமேல் உயர்த்த முடியவில்லை. இரு மாநில உயர் நீதிமன்றங்களிலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதிலும் முன்னேற்றம் இல்லாததால், தமிழக அரசு 1998-ல் வழக்கை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது.

‘பாதியில் வெளியேறினார் கருணாநிதி’

பெரியாறு அணையின் கண்காணிப்பாளராக 1972-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற பொறியாளர் பி.ஆர்.சுந்தராஜன் கூறியது:

2000-ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கேரள முதல்வராக இருந்த ஈ.கே.நாயனார் மற்றும் இரு மாநில அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கேரள அரசு சார்பில் அச்சடிக்கப்பட்ட ஒரு காகிதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதில் 142 அடியாக நீரைத் தேக்க வேண்டாம். 136 அடியாகத் தேக்கிக் கொள்ளலாம் என அவர்களுக்குச் சாதகமாக எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்துப் பார்த்ததும் கருணாநிதி கோபப்பட்டு எழுந்திருக்க முயற்சி செய்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த ஆற்காடு வீராசாமி அவரை சமாதானம் செய்து அமர வைத்தார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை, இதனால் கருணாநிதி எழுந்து தனது அறைக்குச் சென்றுவிட்டார். கேரள செய்தியாளர்கள் கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை எப்படி இருந்தது எனக் கேட்டபோது, ‘வரவேற்பு பிரமாதம். நாங்கள் எதிர்பார்த்தது ஏமாற்றம்’ எனப் பதிலளித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்’ என்றார்.

முல்லை மலரும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x