Published : 19 May 2014 08:19 AM
Last Updated : 19 May 2014 08:19 AM
மலை ஏறப் போனாலும் மைத்துனர் தயவு தேவை என்பார்கள். இதை நம்பித்தான் தேர்தலில் இறங்கினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
2005-ல் உதயமாகி 2006-ல் தனித்தே சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட தே.மு.தி.க. சுமார் 28 லட்சம் வாக்குகளைப் பெற்று, பிற திராவிடக் கட்சிகளுக்குத் திகில் ஏற்படுத்தியது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் பலரும் தே.மு.தி.க-வை நோக்கிப் படையெடுத்தார்கள். கட்சியும் கடகடவென வளர ஆரம்பித்தது. ஆனால், இவையெல்லாமே கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன் உயிருடன் இருந்தவரைதான். 2009-ல் அவர் மறைவுக்குப் பிறகு, விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி சிக்கிக்கொண்டது.
இரும்பு வேலி
கட்சிக்குள் சுதீஷ் ஆதிக்கம் தொடங்கியதுமே கட்சியில் எல்லாமே வியாபாரமயமாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதேசமயம், கட்சியில் செல்வாக்கான தனிநபர்களை உதாசீனப்படுத்தி ஓரங்கட்டும் படலமும் தொடங்கியது. தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் இவர்களை விஜயகாந்தைச் சுற்றி இரும்பு வேலிபோல் நிறுத்தினார் சுதீஷ்.
இவர்களை மீறி யாரும் விஜயகாந்தை நெருங்க முடியவில்லை. தொண்டர்களுக்கு ஏதாவது என்றால் ஓடிவரும் குணம் தொடக்கத்தில் விஜயகாந்திடம் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அது காணாமல் போனது. “எதற்கெடுத்தாலும் கீழே இறங்கிப்போனால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும்’’ என்று சொல்லி தலைவருக்கும் தொண்டர்களுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியது மூவர் அணி. இதனால், கட்சியின் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்பதே விஜயகாந்துக்குத் தெரியாமல்போனது.
ஒன்றா இரண்டா…
2012-ல் திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ-வுமான சேகரின் அப்பா இறந்துவிட்டார். சென்னையில் இருந்தபோதும் அஞ்சலி செலுத்த விஜயகாந்த் செல்லவில்லை. மறுநாள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம். அப்பாவுக்குக் காரியம் செய்துவிட்டு மொட்டைத் தலையுடன் இருந்த சேகர் சற்று தாமதமாகப் பொதுக் குழுவுக்கு வந்தார். அப்போது, தாமதத்துக்குக் காரணம் கேட்டு, மண்டபத்துக்கு வெளியில் நிறுத்தி அவரை அவமானப்படுத்தினார்கள். இது ஒரு உதாரணம்தான். இப்படிப் பல சமயங்களில் கட்சியின் முன்னணியினர் அவமானத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இதனால், மருங்காபுரி பொன்னுச்சாமி, ஆஸ்டின், கு.ப. கிருஷ்ணன், தாமோதரன் என முக்கியத் தலைவர்கள் பலரும் கட்சியை விட்டுக் கழன்றுகொண்டார்கள். போதாக்குறைக்கு, விஜயகாந்தின் பால்ய நண்பரான சுந்தர்ராஜன் தொடங்கி கடைசியாக பண்ருட்டியார் வரை ஒன்பது எம்.எல்.ஏ-க்கள் விஜயகாந்துக்கு குட்பை சொல்லிவிட்டு அ.தி.மு.க. பக்கம் சாய்ந்தார்கள். இவர்கள் அத்தனை பேருமே புகார் சொன்னது மூவரணியைப் பற்றித்தான்.
ஆனாலும், மூவரணி மீது எந்த நடவடிக்கைக்கும் தயாரில்லை விஜயகாந்த். காரணம், சுதீஷ். தே.மு.தி.க-வுக்கு ஆரம்பத்தில் உற்ற பலமாக இருந்த விஜயகாந்தின் அக்காள் கணவர் டாக்டர் துரைராஜ் உள்ளிட்ட விஜயகாந்தின் உறவுகள் இப்போது கட்சி நடவடிக்கைகளில் இல்லை. ஆனால், சுதீஷ் உள்ளிட்ட பிரேமலதா தரப்பு உறவுகள் சுமார் பத்துப் பேர் கட்சிக்குள் கண்ணுக்குத் தெரியாமல் ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்கிறார்கள்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியை வழிநடத்தியவர் சுதீஷ். அந்தத் தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு எட்டுத் தொகுதிகளை ஒதுக்கத் தயாராக இருந்தது தி.மு.க. ஆனால், தே.மு.தி.க-வைத் தனித்துப் போட்டியிட வைக்க காங்கிரஸிலிருந்து சிலர் சுதீஷிடம் பேரம்பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., 31 லட்சம் வாக்குகளை (8.38%) பெற்றது. 9 பேர் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றார்கள். இதில் விநோதம் என்ன தெரியுமா? அந்த 40 வேட்பாளர்களில் 23 பேர் இப்போது கட்சியிலேயே இல்லை!
நாக்கை மடிப்பது நானே
2011 சட்டமன்றத் தேர்தலில் 10.01% வாக்குகளைப் பெற்று 29 எம்.எல்.ஏ-க்களைத் தனதாக்கிக்கொண்டது தே.மு.தி.க. முதலாவது எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலேயே, “அமைச்சர்கள், அதிகாரிகளோடு எம்.எல்.ஏ-க்கள் யாரும் நட்பு பாராட்டக் கூடாது’’ என எம்.எல்.ஏ-க்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டது. சட்டமன்றத்தில் விஜயகாந்த் மட்டுமே நாக்கை மடிப்பார்; மற்றவர்கள் யாரும் வாயைத் திறந்து பேசக் கூடாது என வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது. கட்சிக்குள் தங்களை மீறி யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது மூவர் அணி.
இந்தத் தேர்தலில் ஒரே சமயத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளோடு கூட்டணி பேரத்தைத் தொடங்கியது தே.மு.தி.க. இறுதியில் பா.ஜ.க. அணியில் ஐக்கியமானார்கள். ஒவ்வொரு வேட்பாளருக்கும் 50 லட்ச ரூபாயைக் கட்சியிலிருந்து கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கூட்டணியில் 14 இடங்களைப் பெற்ற தே.மு.தி.க., வேட்பாளர்கள் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகளை அரங்கேற்றியது. அ.தி.மு.க. தலைமைக்குக் கடிதம் கொடுத்துவிட்டுக் காத்திருந்த மகேஷ்வரனை நாமக்கல் வேட்பாளராக அறிவித்த கூத்தும் அரங்கேறியது. விருதுநகரைச் சேர்ந்த பெங்களூரு தொழிலதிபரைத் திண்டுக்கல்லில் எதற்காக நிறுத்தினார்கள் என்றே தெரியவில்லை.
இவை, எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேர்தலிலும் விஜயகாந்தின் பிரச்சாரம் வாக்காளர்களுக்கு ‘கொஞ்சம் அடிங்க பாஸ்’ என்பதுபோல் பொழுதுபோக்கு அம்சமாகிப்போனது. “அண்ணி சூப்பரா பேசுறாங்கண்ணே.. நீங்களும் எழுதிவெச்சுப் படிக்கலாம்ணே..” என்று சிலர் தைரியமாகச் சொன்னபோது, “யேய்.. எனக்கு எழுதிவெச்செல்லாம் படிக்க வராது. காதுல சொன்னா அதைத் திருப்பிச் சொல்லியே பழகிப்போச்சு’’ என்று சொல்லிவிட்டு, தனது வழக்கமான பாணியிலேயே தேர்தல் களத்தைக் கலங்கடித்தார் கேப்டன்.
14 இடங்களில் போட்டியிட்டு, 11 இடங்களில் காப்புத்தொகையை இழந்திருப்பது இந்தத் தேர்தலில் தே.மு.தி.க-வின் சாதனை. 10.01 சதவீதமாக இருந்த வாக்கு வங்கியை 5.01 சதவீதமாகக் குறைத்திருப்பது விஜயகாந்தின் சாதனை. இந்த அடித்தளத்தை வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை பேர் அ.தி.மு.க. பக்கம் சாயப்போகிறார்களோ?!
- குள. சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@kslmedia.in;
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT