Published : 24 Jul 2015 10:25 AM
Last Updated : 24 Jul 2015 10:25 AM

தமிழகத்தில் மது புரண்ட வரலாறு

தமிழகத்தின் முக்கால் நூற்றாண்டு மது வரலாறு இது

பிரிட்டிஷார் காலத்தில் அதிகபட்ச சுதந்திரத்தை அனுபவித்தவர்கள் மதுப் பிரியர்கள்தாம். மதுவை விற்கவோ, அருந்தவோ எந்தத் தடையும் இருக்கவில்லை. மது தனிமனித உரிமை. தவிரவும், ரகசியமாகத் தயாரிக்கிறோம் என்ற பெயரில் தரக்குறைவான மது, மனித உயிருக்கு ஆபத்து என்பது பிரிட்டிஷாரின் நிலைப்பாடு. அது காங்கிரஸுக்கு வேப்பங்காயாகக் கசந்தது.

கள்ளுக் கடைகளை மூடு என்று அரசுக்கு எதிராகப் போராடுவோம் என்று காந்தியிடம் சொன்னார் ராஜாஜி. அதன் மூலம் மக்களையும் திரட்ட முடியும் காங்கிரஸையும் பலப்படுத்த முடியும் என்பது அவருடைய கணிப்பு. ஆனால், ராஜாஜியின் அரசியல் வைரியான சத்தியமூர்த்திக்கோ அந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை.

சத்தியமூர்த்தியின் எதிர்வினை

‘‘குடிகாரர்களே இல்லாத அடிமை நாட்டில் வாழ்வதைவிட, குடிகாரர்கள் வாழும் சுதந்திர நாட்டில் ஒரு பிரஜையாக வாழ விரும்புகிறேன்’’ என்று எதிர்வினை செய்தார் சத்தியமூர்த்தி. இப்படித்தான் மதுவிலக்கு விவகாரத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. ஆனாலும், காந்தியின் மனம் மதுவிலக்கின் மீதே நிலைகொண்டிருந்தது. மனதில் நினைத்ததைச் செயலில் கொண்டுவர 1937-ன் தேர்தல் வெற்றிகள் வாசல் திறந்துவிட்டன.

காங்கிரஸ் ஆளும் அனைத்து மாகாணங்களிலும் மூன்றாண்டுகளில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்றது காங்கிரஸ். சென்னை, பம்பாய், பிஹார், ஐக்கிய மாகாணம் உள்ளிட்ட அரசுகள் சம்மதித்தன. களத்தில் முன்னணியில் நின்றது சென்னை. உபயம்: ராஜாஜி. என்ன ஒன்று. சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது.

மதுவிலக்கில் சென்னைக்கு முதலிடம்

ஆனால், இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாண முதல்வர்கள் பதவி விலகினர். அத்தோடு, மதுவிலக்கு நடவடிக்கையும் பாதை மாறியது. பின்னர், 1946 தேர்தலுக்குப் பிறகு சில மாகாண முதல்வர்கள் மீண்டும் மதுவிலக்கில் ஆர்வம் செலுத்தினர். இப்போதும் சென்னை மாகாணமே முதலில் நின்றது. ஓமந்தூர் ராமசாமியின் உழைப்பால் 1948-ல் சென்னையில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது.

அன்று தொடங்கி, சுமார் கால் நூற்றாண்டு காலத்துக்குத் தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், இதர பிராந்தியங்களில் மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்த முடியாமல் அரசுகள் தடுமாறின. வருவாய் இழப்பு, சட்ட ஒழுங்குச் சிக்கல்கள் என்று பல காரணங்கள். ஆனால், பூரண மதுவிலக்கை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றது காங்கிரஸ். அதற்காக 6 டிசம்பர் 1954-ல் மன் நாராயணன் தலைமையில் மதுவிலக்கு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓராண்டுகால ஆய்வுக்குப் பிறகு, அந்தக் குழு 15 பரிந்துரைகளைக் கொடுத்தது.

ஆனால், அவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாத சூழலில் 1956-ல் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மதுவிலக்கு இணைக்கப்பட்டது. தேசிய அளவில் மதுவிலக்கைக் கொண்டுவரத் தேவையான செயல்திட்டத்தை வகுக்குமாறு திட்ட குழுவைக் கோரியது நேரு அரசு. மதுவின் பயன்பாட்டைக் குறைக்க இன்று பேசப்படும் கடைகளின் எண்ணிக்கைக் குறைப்பு, நேரக் குறைப்பு போன்ற பெரும்பாலான வழிமுறைகளைத் திட்ட குழு பரிந்துரைத்தது. முக்கியமாக, மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாக மத்தியக் குழு ஒன்றை அமைக்கவும் திட்டக் குழு பரிந்துரை செய்தது.

பரிந்துரைகள் வந்த பிறகும், மாநில அரசுகள் அதே பல்லவியைத்தான் பாடின. மதுவிலக்கை அமல்படுத்த முடியவில்லை. ஆனாலும், மத்திய அரசு மதுவிலக்கு விஷயத்தில் மனம் தளரவில்லை. 1963 ஏப்ரலில் பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேக் சந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. அந்தக் குழு 1964 ஏப்ரலில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான பரிந்துரைகளைச் செய்திருந்தது. அவற்றின் அடிப் படையில், தேசிய அளவிலான பூரண மதுவிலக்குக்காக மீண்டும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. 30 ஜனவரி 1970 - காந்தியின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போது நாடு முழுக்க மதுவிலக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால், அந்த இலக்கைப் பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்கவில்லை. பெரும்பாலான மாநிலங்கள் வருவாயைத்தான் காரணமாகக் காட்டின. அந்தச் சமயத்தில், குஜராத்திலும் தமிழகத்திலும் மதுவிலக்கு அமலில் இருந்தது.

அண்ணாவின் உறுதி

தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அண்ணாவும் மதுவிலக்கில் உறுதிகாட்டினார். ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு நிதி நெருக்கடியைக் காரணமாகச் சொல்லி, மதுவிலக்கை ரத்து செய்யத் தீர்மானித்தது கருணாநிதி அரசு. அதனை ராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்றோர் எதிர்த்தனர். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கேட்டு, அண்டை மாநிலங்களில் நடக்கும் மதுவிற்பனையைச் சுட்டிக்காட்டினார் கருணாநிதி.

30 ஆகஸ்ட் 1971 அன்று மதுவிலக்கு தள்ளிவைக்கப் பட்டது. இதுவொரு தற்காலிக நடவடிக்கை என்று சொல்லியிருந்தார் கருணாநிதி. அதுபோலவே, 30 ஜூலை 1973 அன்று கள்ளுக் கடைகளும் 1 செப்டம்பர் 1974 முதல் சாராயக் கடைகளும் மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி மதுவிலக்கு கருணாநிதி ஆட்சிக் காலத்திலேயே மீண்டும் அமலுக்கு வந்துவிட்டது. அது எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும் நீடித்தது. இது பலரும் ‘பேச மறப்பது.’

தாய் மீது ஆணை

என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கை அமல் படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்த எம்.ஜி.ஆருக்கு, அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள். அவற்றை எதிர்கொள்ளப் பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்தார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்தன. இந்தச் சூழலில் மதுவிலக்கை ரத்து செய்த எம்.ஜி.ஆர், 1 மே 1981 அன்று மீண்டும் கள்ளுக் கடைகள், சாராயக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டார்.

கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் ஏலம் விடப்பட்டன. சாராய உற்பத்தியில் தனியார் ஈடுபடுத்தப் பட்டனர். மது தங்குதடையின்றி ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், 1983 ஜூலையில் டாஸ்மாக் நிறுவனத்தைத் தொடங்கினார். மதுவை மொத்தமாக விற்பனை செய்யும் பணிகளை அது செய்தது. பின்னர், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, 1989-ல் மலிவு விலை மதுவை அறிமுகம் செய்தார். அதற்குப் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழவே, பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதனை ரத்து செய்தார்.

அதைத் தொடர்ந்து, மீண்டும் கள்ளச்சாராயச் சாவுகள் நடந்தன. மது ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஏராளமானோர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஒருகட்டத்தில் மீண்டும் சாராய விற்பனைக்கு அனுமதி வழங்கினார் ஜெயலலிதா. அன்று தொடங்கி, மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்து எழுவதும், வருவாய் காரணத்தை மறைமுகமா கவும், கள்ளச்சாராயச் சாவுகளை நேரடியாகவும் சொல்லி, மதுவிலக்கு விஷயத்தில் இருபெரும் திராவிடக் கட்சிகளும் ஒரு குடையில் நிற்கின்றன.

இந்தச் சூழலில் அரசு, 2003 முதல் டாஸ்மாக் வழியாக மதுவை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியது. அரசே மதுவை விற்கும் செயலை அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்களிடமிருந்து பலத்த எதிர்ப்புக் கணைகள். பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மதுவிலக்கைத் தங்கள் பிரதான கோஷமாக வைத் துள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில், மதுவிலக்கு கோரிக்கை மீண்டும் பேருருவம் கொண்டுள்ளது.

அதன் எதிரொலியாக, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவதற்குத் தீவிர நடவடிக்கை கள் எடுக்கப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. நேற்று வரை சிறு கட்சிகள் மட்டுமே பேசிவந்த ஒரு விஷயத்தைத் தற்போது திமுக போன்ற ஆட்சி நிர்வாகத்தை அதிகம் அனுபவித்த கட்சி எடுத்திருப்பது மதுவிலக்கு விஷயத்தில் முக்கியத் திருப்பம்.

அதேசமயம், திமுகவின் மதுவிலக்கு நிலைப்பாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து என்னவிதமான எதிர்வினை வரப்போகிறது என்று தெரியவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதானே செய்வீர்கள், நான் ஆட்சியிலிருக்கும்போதே செய்கிறேன் என்று சொன்னாலும் வியப்பதற்கு விஷயமில்லை!

ஆர். முத்துக்குமார்

`திராவிட இயக்க வரலாறு' முதலான நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு:writermuthukumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x