Published : 14 Jul 2015 09:39 AM
Last Updated : 14 Jul 2015 09:39 AM
எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்கப் பெரிதும் உதவப்போகின்றன பாசிகள்
நீரிலும் கடலிலும் விளையும் பாசிகளைப் பற்றியும் சுற்றுச்சூழல் மாசுபடுவதன் காரணமாகப் பாசிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றியும் தீவிரமான ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன. எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு வழங்கி போஷிக்கும் முக்கியமான தோற்றுவாய்களாகப் பாசிகள் விளங்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மண்ணிலும் மூன்றாவது உலக நாடுகளில் ஸ்பைருலினா என்கிற நீலப் பச்சைப்பாசி ஒரு முக்கியமான உணவுத் தோற்றுவாயாக ஆகப்போகிறது. பூமியில் முதன்முதலாகத் தோன்றிய உயிரினங்களில் ஒன்றான இது, எல்லா இடங்களிலும் வளரக்கூடியதும் சிறிதுகூடச் சிக்கலே இல்லாததுமான ஒரு தாவரம். மாட்டு இறைச்சியைவிட 300 மடங்கு அதிக அளவிலும், சோயா பீன்ஸைவிட 20 மடங்கு அதிக அளவிலும் ஸ்பைருலினாவிலிருந்து ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. ‘பி-12’ விட்டமின் இதில் ஏராளமாக உள்ளது. பெரு நகரங்களில் ஆரோக்கிய உணவு என்ற பெயரில் டப்பிகளில் அடைத்து விற்கப்படும் பொருட்களில் அதுவும் இடம்பெறுகிறது.
ஆப்பிரிக்காவிலும் மத்திய அமெரிக் காவிலும் பல்லாயிரம் ஆண்டுக ளுக்கு முன்பிருந்தே நீலப்பச்சைப் பாசிகள் உணவாகக் கொள்ளப் பட்டுவருகின்றன. கால்நடைகளுக்கும் இவை நல்ல தீவனம். ஆரோக்கிய உணவுக் கடைகளில் ஸ்பைருலினா மாத்தி ரையாகவும், பொடியாகவும், பாஸ்டா வாகவும் விற்கப்படுகிறது. உலர வைக் கப்பட்ட பாசியில் முட்டையில் உள்ள தற்குச் சமமான வகையில் 65% உட்கவரப் படக்கூடிய புரதமுள்ளது. இனப்பெருக்க உறுப்புகளையும், இதய ரத்தக்குழல் அமைப்பையும் வலுவூட்டத் தேவையான தெவிட்டாத கொழுப்பு அமிலங்களும் அதில் நிறைய உள்ளன.
செறிவூட்டப்பட்ட ஸ்பைருலினா முட்டைப்பொடியின் மணமும் புதிய வைக்கோலின் மணமும் கலந்த ஒரு கலவையான மணத்தைப் பெற்றிருக்கும். அதைச் சமைத்தால் அதிலுள்ள புரதச் சத்துகளும் விட்டமின்களும் அழிந்து போகும். எனவே, சமைத்த உணவு களிலும் பானங்களிலும் 2% அளவில் ஸ்பைருலினா பொடியைச் சத்துக்கூட்டும் உபரியாகக் கலப்பார்கள்.
உரமாகும் கழிவு
இந்தியா, செனகல், டோகோ போன்ற நாடுகளில் ஸ்பைருலினா சாகுபடி தீவிரமாக உள்ளது. இந்நாடு களில் ஸ்பைருலினா சாகுபடிக்கு மனிதக் கழிவுகள்தான் உரமாகப் பயன்படுத்தப் படுகின்றன. மேலை நாடுகளின் மனிதக் கழிவுகளில் பாசி வளர்ச்சிக்கு உதவுகிற கரிமக் கூட்டுப்பொருட்கள் குறைவு. அத்துடன் அங்கெல்லாம் மனிதக் கழிவுகள் அரு வருப்புடனும் அச்சத்துடனும் பார்க்கப் படுகின்றன. அவற்றை நீண்ட தொலை வுக்குக் குழாய்கள் மூலம் ஊருக்கு வெளியே அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்சென்று, வடிகட்டியும் தெளிய வைத்தும் கிருமி நீக்கம் செய்தும்தான் வயல்களுக்குப் பாய்ச்சுவார்கள். பிரிட்டனின் பண்ணை நிலங்களுக்குச் சாக்கடைச் சகதிக் கழிவு களைப் பயன்படுத்துவதற்குப் பெரும் தயக்கம் காட்டப்படுகிறது.
ஸ்பைருலினா வளர்ப்பதற்கு நல்ல சூரிய ஒளி, கரிமச்சத்துகள், உப்பு, நீர், பை-கார்பனேட்டுகள், கரியுமிலவாயு ஆகியன தேவை. அகலமான, ஆழம் குறைவான தொட்டிகளில் கழிவுநீரை நிரப்பி அதை அடிக்கடி கலக்கிவிட வேண்டும். அது வெயிலில் சூடாக்கப்பட்டு ஜீரணிக்கப்படும்போது 24 மணி நேரத்தில் அதில் பல கரிமக் கூட்டுப்பொருட்களும், கரியுமிலவாயுவும் தோன்றும். மாட்டுச் சாணம் மற்றும் பண்ணைக் கழிவு களைக் கோபார் சாதனத்திலிட்டு எரிவாயுவை உற்பத்திசெய்து பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்திய பின், அதனடியில் தோன்றும் கழிவுக் கரைசலையும் ஸ்பைருலினா வளர்ப்புத் தொட்டிகளில் பயன்படுத்தலாம்.
சாக்கடைக் கழிவுகளையும் மனிதக் கழிவுகளையும் ஒரு தொட்டியில் தேக்கி 55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 10 நாட்களுக்குக் கொதிக்கவிட்டால் அதிலுள்ள நோய்க்கிருமிகள் பெரும் பாலும் அழிந்துவிடும். எஞ்சியவை சூரிய ஒளியாலும், தொட்டியில் ஏராளமாக உருவாகும் ஆக்சிஜனாலும் கொல்லப் படும். அறுவடை செய்யப்பட்ட ஆல்கா பாசியை வெயிலில் காயவைக்கிற போது மிச்சமுள்ள நுண்ணுயிரிகளும் கொல்லப்பட்டு, அது உண்ண ஏற்றதாகி விடுகிறது.
ஒரு ஹெக்டேரில் ஸ்பைருலினாவை வளர்த்தால் ஆண்டுக்கு 50 டன் புரதப் பொருள் கிடைக்கும். இதே விகிதத்தில் கணக்கிடுகிறபோது, கால்நடைகளிலி ருந்து 0.16 டன்னும், அரிசியிலிருந்து 0.2 டன்னும், சோயா மொச்சையிலிருந்து 2.5 டன்களும், கரும்பிலிருந்து 3 டன்களும் தான் புரதப்பொருளாகக் கிடைக்கின்றன.
ஸ்பைருலினா வெப்பப் பிரதேசங்களில் ஒளிச்சேர்க்கை செய்து வளரும். எனவே, கிராமங்களில் பயிரிட ஏற்றது. சூரிய மின்கலங்களின் உதவியால் மோட்டார் களையும் பம்புகளையும் இயக்கி, கழிவு நீரைத் தொட்டிகளில் நிரப்புதல், வெளி யேற்றுதல், கலக்கிவிடுதல் போன்ற பணிகளைச் செய்யலாம். ஸ்பைருலி னாவை அறுவடை செய்யவும், உலர வைக்கவும் கூட அவை உதவும்.
குறைதீர்க்கும் குளோரெல்லா
இதே போல குளோரெல்லா என்ற ஒற்றை செல் ஆல்காவையும் பயிரிட்டுப் பயன்பெறலாம். அது மருந்துகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றின் உற்பத்தியிலும் உணவுப் பொருட்களிலும் பயன்படுகிறது. அதில் 10 வகையான அமினோ அமிலங்கள், பல வகை விட்ட மின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
அதைக் கால்நடைத் தீவனத்துடன் கலந்து வளர்ப்புப் பிராணிகளுக்கு வழங் கினால் அவற்றின் உடல் வளர்ச்சியும் பால் உற்பத்தித் திறனும் அதிகரிக்கின்றன. பிராணிகளின் உடல் எடை தினமும் 15% முதல் 20% வரை அதிகமாகிறது. பசுக்களின் பால் உற்பத்தி ஆண்டுக்கு 64 கிலோகிராம் வரை கூடுதலாகிறது. செம்மறி ஆடுகளின் எடை 20% முதல் 30% வரை அதிகரிக்கிறது. ஒரு ஆட்டிலிருந்து கிடைக்கிற கம்பளி ரோமத்தின் எடை 200 கிராம் முதல் 300 கிராம் வரை அதிகமாகிறது.
பட்டுப்புழுக்களின் தீவனத்தில் குளோ ரெல்லா பொடியைக் கலந்தால், பட்டு நூல் உற்பத்தி 25% முதல் 30% வரை அதிக மாகிறது. தாவர வித்துகளைக் குளோ ரெல்லா கரைசலில் ஊறவைத்த பின் விதைத்தால், தாவரங்களின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது. ரஷ்யா, துருக் மனிஸ்தான் போன்ற நாடுகளில் குளோ ரெல்லா வளர்ப்புக்கென்று தனி ஆலைகள் இயங்குகின்றன. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி குளோரெல்லா கரைசலை அவை உற்பத்திசெய்கின்றன.
தமிழகத்தின் தென்பகுதிக் கரை யோரக் கடல்களில் கடல் பாசி வளர்ப்பு சிறிய அளவில் நடைபெறுகிறது. அதை விரிவுபடுத்தி பரதவர்களுக்குப் பயிற்சி யும் நிதியுதவியும் செய்து கடல் பாசி உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்.
- கே.என். ராமசந்திரன்,
அறிவியல் கட்டுரையாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT