Published : 09 Jul 2015 08:56 AM
Last Updated : 09 Jul 2015 08:56 AM
‘ஒபாமா-கேர்’ மருத்துவக் காப்பீட்டு மானியத் திட்டம் தொடர்பான விசாரணை முடிந்து, அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அளிப்பதற்கு முன்னால் இருக்கையின் நுனிக்கே வந்துவி்ட்டேனா? இல்லை; அறையின் குறுக்கிலும் நெடுக்கிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தேன்; உட்காரக்கூட முடியாத அளவுக்குப் பதற்றமாக இருந்தேன்; லட்சக் கணக்கானவர்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்க முடியாதபடிக்கு நீதிமன்றம் எதையாவது கூறிவிடுமோ, ஆயிரக் கணக்கானவர்களுக்கு மிகுந்த பணச் செலவு ஏற்பட்டு ஓட்டாண்டிகளாகும் அளவுக்கு எதையாவது சொல்லிவிடுமோ, ஆயிரக் கணக்கானவர்கள் சிகிச்சை பெற முடியாமல் தங்களுடைய ஆயுள் முடிவதற்கு முன்னாலேயே மேலுலகு செல்லுமளவுக்குத் தீர்ப்பு இருந்துவிடுமோ என்று அஞ்சினேன்.
ஆனால், தீர்ப்பு அப்படியெல்லாம் வந்துவிடவில்லை. சட்டபூர்வமாக இந்தத் திட்டத்தை நாசப்படுத்தும் முயற்சிகளும் இணையதளங்கள் வாயிலாக இந்தத் திட்டத்துக்கு எழுந்த கண்டனங்களும் இப்போது பழங்கதையாகிவிட்டன. சுகாதாரச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் கவனம் செலுத்த முடியும். ஒரே சமயத்தில் அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவையையும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ இன்சூரன்ஸையும் அளிக்கக் கொண்டுவரப்பட்டது ‘ஒபாமா-கேர்’ திட்டம். குறைந்த வருவாய்ப் பிரிவினரை அதிக எண்ணிக்கையில் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதே அரசின் லட்சியம். இந்தத் திட்டம் அமலுக்கு வந்து ஓராண்டு பூர்த்தியாகிவிட்டது. இரண்டாவது ஆண்டில் இது எப்படி அமலாகிறது?
இதன் ஆதரவாளர்களால் உணரப்பட்டதைவிட நன்றாகவே அமலாகிக்கொண்டிருக்கிறது. இந்தச் சட்டத்தின் அடிப்படையான நோக்கத்திலிருந்து ஆரம்பிப்போம்; இதுவரை மருத்துவ இன்சூரன்ஸ் காப்பு பெறாதவர்களைக்கூட இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதே இதன் நோக்கம். ‘இதனால் பலன் பெறுவோர் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிடக் குறைந்துவிடும்’ என்று இந்தத் திட்டத்தை எதிர்த்தவர்கள் சொன்னார்கள். உண்மை என்னவென்றால், 1.5 கோடிப் பேர் புதிதாக மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்துக்குள் வந்தார்கள்.
ஓரளவுக்குத்தான் பலனா?
இன்னும் பல லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் வராதபோது இது ஓரளவுக்குத்தான் பலன் தரும் திட்டம் என்ற விமர்சனம் சரிதானா? இல்லை, இந்தத் திட்டத்தின் கீழ் பல லட்சம் பேர் வராமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள் வசிக்கும் மாகாண அரசுகள், ஃபெடரல் அரசு (மத்திய அரசு) கொண்டுவந்த திட்டத்தின் கீழ் சேர்ந்துகொள்ள அவர்களுக்கு அனுமதி மறுத்ததால்தான். அத்துடன் அந்தச் சட்டமே எல்லோரையும் அதன் வரம்புக்குள் கொண்டுவருவதற்காகக் கொண்டுவரப்பட்டது அல்ல. உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் குடியேறியோருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் வழங்க அது கொண்டுவரப்படவில்லை. அனைவருக்கும் இன்சூரன்ஸ் என்று அறிவிக்காததால், சில பிரிவினர் அதன் பலனைப் பெற முடியாமல் தனியே நிற்பது தவிர்க்க முடியாதது. மசாசூசெட்ஸ் மாகாணத்தில் கடந்த 10 ஆண்டு களாக அனைவருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் அமலில் இருக்கிறது. ஆனால், அதன் மக்கள்தொகையில் முதுமையை எட்டாத வயதினரில் 5% பேர் அத்திட்டத்தின் கீழ் வராமல் விடுபட்டுப்போகின்றனர்.
இதையே ஒரு அடையாளமாக வைத்து, ‘ஒபாமா-கேர்’ மூலம் பலன் அடைவோர் எவ்வளவு என்று பார்க்கலாம். அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட முதலாவது ஆண்டில் அதன் வரம்பின் கீழ் வராதோரின் எண்ணிக்கை 16% ஆக இருந்தது. இரண்டாவது ஆண்டில் அது 7.5% ஆகக் குறைந்துவிட்டது. அதாவது, இரண்டாவது ஆண்டிலேயே நாம் 80% பேருக்குப் பயன்களை வழங்கிவிட்டோம்.
எந்த அளவுக்குப் பயன்?
இத்திட்டம் எந்த அளவுக்குப் பலன் அளித்திருக்கிறது. மிகவும் மலிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்கள், பல நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது என்று நழுவிவிடும். இதனால் அந்தத் திட்டத்தின் வரம்பில் வராத நோய்கள் ஏற்பட்டால் பாலிசிதாரர் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்துகொள்ள வேண்டும். ஆனால் ‘ஒபாமா-கேர்’ திட்டமானது, இன்சூரன்ஸே செய்யாத நிலைமையைவிட மேலானது. ஒன்றிரண்டு நோய்களுக்கு மட்டும் இன்சூரன்ஸ் தரும் திட்டங்கள் சட்ட விரோதம் என்று அரசு அறிவித்திருக் கிறது. அப்படியும் அதையொட்டிய சில திட்டங்கள் இப்போதும் அமலில் இருக்கின்றன. அதைவிட ‘ஒபாமா-கேர்’ திட்டம் பலனுள்ளது. புதிய திட்டம் காரணமாக நோய்வாய்ப்படும் பலருக்கு ஏற்படும் நிதி நெருக்கடி குறைந்திருக்கிறது. பெரும் பாலானோர் புதிய திட்டம் குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.
செலவுகள் எப்படி?
இந்தத் திட்டத்தில் சேருவோருக்கு ஏற்படக்கூடிய செலவுகள் எப்படியிருந்தன? 2013-ல் இந்தத் திட்டம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது பலரும் எச்சரித்தனர். இந்தத் திட்டம் காரணமாக இனி அமெரிக்காவில் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வதற்கான செலவு பலமடங்கு அதிகரித்துவிடும் என்று. ஆனால், நடந்தது என்னவோ வேறு; பல்வேறு நிறுவனங்களும் மருத்துவக் காப்பீட்டுக்கான சந்தா தொகையைக் குறைக்கத் தொடங்கின. இந்த ஆண்டு சரி, 2015-ல் எல்லா நிறுவனங்களும் சந்தாவை அதிகரித்துவிடும் என்று 2014-ல் எதிர்ப்பாளர்கள் அறிவித்தனர். 2015-ல் உயர்ந்தது, ஆனால் அது வெறும் 2% அளவுக்குத்தான். இப்போதும் அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. 2016-ல் ஏறத்தான் போகிறது என்று எச்சரிக்கிறார்கள். உண்மைதான், ஏறும் - ஆனால் மிதமாகத்தான் அந்தச் சுமை இருக்கும். அதாவது, இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான பிரீமியம், எதிர்பார்க்கும் அளவைவிடக் குறைவாக, மிதமாகத்தான் உயரும்.
அத்துடன் ஒட்டுமொத்தமாக சுகாதாரத்துக்காகச் செலவிடும் தொகை கணிசமாகக் குறைந்திருக்கிறது. மருத்துவத்துக்கு ஆகும் செலவு கட்டுப்படுத்தப்பட்டது ஒரு காரணம், மருத்துவ சேவையை அதிகம்பேருக்கு அளித்தது மற்றொரு காரணம்.
பொருளாதாரப் பக்க விளைவுகள் என்ன?
‘ஒபாமா-கேர்’ திட்டம் அமலாக வாக்களித்தால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலர் எச்சரித்தனர். ஆனால், அரசு திரட்டிய தரவுகளை ஆராய்ந்தபோது, இத்திட்ட அமலால் எந்தத் துறையிலும் பெருமளவு வேலைவாய்ப்பு குறைந்ததாகத் தெரியவில்லை. மாறாக, மாதந்தோறும் சராசரியாக 2,40,000 வேலைவாய்ப்புகள் பெருகின. 1990-களிலிருந்து பார்க்கும்போது இந்த அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகியிருக்கவில்லை.
இறுதியாக, இந்தச் சுகாதார சீர்திருத்த நடவடிக்கையால் அமெரிக்க வரவு-செலவு திட்டத்தில் பற்றாக்குறை பல மடங்காக உயர்ந்துவிடும் என்று எச்சரித்தார்களே அது என்னவாயிற்று? உண்மையில் பற்றாக்குறை குறையத்தான் ஆரம்பித்தது. ‘ஒபாமா-கேர்’ திட்டத்தை ரத்து செய்தால்தான் பற்றாக்குறை அதிகரிக்குமே தவிர, அமல்படுத்தினால் அல்ல என்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் தொடர்பான அலுவலகம் சமீபத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.
இந்த அம்சங்களையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது, எதிராளிகள் எவ்வளவோ எச்சரித்தும், கூடாது என்று முட்டி மோதிப் பார்த்தும் ஏழை - எளியவர்களுக்கும் சுகாதார இன்சூரன்ஸை விரிவுபடுத்தும் ‘ஒபாமா-கேர்’ திட்டமானது எல்லா வகைகளிலும் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை களையே செய்திருக்கிறது. அது தன்னுடைய இலக்கைப் பூர்த்திசெய்துவிட்டது. அதற்கான செலவு எதிர்பார்த்தபடி அதிகரிக்காமல் கட்டுக்குள்ளேயே இருந்தது. அதைவிட, கோடிக் கணக்கான அமெரிக்கர்களுக்குத் தரமான மருத்துவ வசதிகளும் நிம்மதியும் கிடைக்க உதவியிருக்கிறது.
விஷம் கக்கியது ஏன்?
கோடிக் கணக்கான மக்களுக்கு நன்மையை அளித்த ஒரு சட்டத்துக்கு ஏன் அரசியல்ரீதியாக இந்த அளவுக்கு விஷம் கக்கினார்கள் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படலாம்! வலதுசாரிக் கட்டுப்பெட்டிகளான குடியரசுக் கட்சிக் காரர்கள் ஒரே ஒரு விஷயத்துக்குத்தான் அஞ்சினார்கள்; அது என்னவென்றால், ‘அரசாங்கம் நேரடியாக நடவடிக்கை எடுத்தால், அது மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத் திவிடும் என்பது மக்களுக்குப் புரிந்துவிடும்’ என்பதற்காகத்தான்.
இதே காரணத்துக்காகத்தான் 1993-ல் கிளிண்டனின் சுகாதாரத் திட்டத்தை அழிக்க முற்பட்டார்கள்; அதையே ஒபாமாவின் திட்டத்துக்கும் செய்ய முற்பட்டார்கள். ஆனால், அந்த முயற்சி தோற்றுப்போய், திட்டம் பிழைத்துக்கொண்டது. இப்போது திட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கட்டுப்பெட்டிகளுக்கு இனி ‘உறங்கா இரவுகள்’ காத்திருக்கின்றன. அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியை நினைத்தாலே நெஞ்சுக்குள் இனிக்கிறது!
© ‘நியூயார்க் டைம்ஸ்’ தமிழில் சுருக்கமாக: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT