Last Updated : 24 Jul, 2015 10:47 AM

 

Published : 24 Jul 2015 10:47 AM
Last Updated : 24 Jul 2015 10:47 AM

அறிவோம் நம் மொழியை: சட்டச்சட சட்டச்சட டட்டா

ஐம்பூதங்களைக் குறித்த பதிவுகளில் நீர், மழை குறித்த இறுதிப் பகுதி இது. ‘மழை’யைப் பற்றிய பரவசக் கவிதை எழுதிய பாரதியுடன் முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

இடைவிடாமல் அடித்துப் பெய்யும் மழை… இடி மின்னல். ஆறு, வாய்க்கால் எல்லாம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்தப் பிரபஞ்சக் கூத்தைப் பார்க்கும் பாரதி அப்படியே அதைத் தனது கவிதையில் நகலெடுக்கிறார். கவிதையில் காட்சி, ஓசை எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடுகிறார்.

திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட

தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்

சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு

தக்கை யடிக்குது காற்று -தக்கத்

தாம் தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல் - கடல்

வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது

கொட்டி யிடிக்குது மேகம் - கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்

எட்டுத் திசையும் இடிய - மழை

எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

இந்தக் கவிதையை உரக்கச் சொல்லிப்பாருங்கள்… பேய்மழையில் அகப்பட்டுக்கொண்டது போன்ற உணர்வை இந்தக் கவிதையின் சொற்களும் அவற்றின் ஓசையும் தருகின்றன அல்லவா? பெருமரம் ஒன்று சடசடவென்ற ஒலியுடன் பிளந்து விழுந்துகொண்டிருக்கும்போது ஏற்படும் ஒலிபோல் இடியோசை இருக்கும். அந்த ஓசை நம் மனத்தின் அடியாழத்தில் பரவசமும் அச்சமும் கலந்த இனம்புரியாத உணர்வை ஏற்படுத்தும். இது போன்ற எழுச்சிமிக்க உணர்வுகளைக் கவிதையில் வெளிப்படுத்த முயலும்போது சில சமயங்களில் பாரதி மொழியின் எல்லைக்கு வெளியே சென்றுவிடுவார். அப்படி அவர் செல்லும்போது பிறந்தவைதான் ‘சட்டச்சட சட்டச்சட டட்டா’, ‘தக்கத் தீம்தரிகிட’, ‘தக்கத் தாம்தரிகிட’ போன்றவை. மழையைப் பற்றித் தான் என்ன நினைக்கிறேன் என்பதை வாசகருக்குத் தெரிவிப்பதைவிட, தான் என்ன உணர்கிறேன் என்பதை வாசகர் உள்ளத்துக்குக் கடத்துவதில்தான் பாரதிக்கு அக்கறை.

‘புயல் காற்று’ என்ற கவிதையிலும் ‘தூற்றல் கதவு சாளரமெல்லாம்/ தொளைத் தடிக்குது, பள்ளியிலே’ என்று புயலோடு சேர்த்து அடிக்கும் மழையைப் பற்றிச் சொல்லியிருப்பார். ‘தொளைத்தடிக்குது’ என்ற பேச்சு வழக்கு இந்த வரிகளுக்கு மேலும் அழகும் எளிமையும் சேர்க்கிறது.

‘மழை’ கவிதையில் தாளங்கள் கொட்டி முழக்கும் முரட்டுத் தாள வாத்தியமாக மழையை பாரதி ஆக்கியிருக்கிறார் என்றால், வசன கவிதையில் தந்திக் கருவியாக ஆக்கியிருக்கிறார்:

‘மழை பாடுகின்றது.

அது பல கோடி தந்திகளுடையதோர் இசைக் கருவி

வானத்திலிருந்து அமுத - வயிரக்கோல்கள் விழுகின்றன.

பூமிப் பெண் விடாய் தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள்.’

இனி வரும் வாரங்களில் ஐம்பூதங்களில் எஞ்சியுள்ளவை குறித்துப் பார்க்கலாம்.

சிறு விவாதம்:

‘வாழ்ந்தோடுதல்’ என்ற சொல் குறித்த விவாதத்தின் தொடர்ச்சியாகப் பேராசிரியர் ஜி. பாலசுப்பிரமணியன் தெரிவித்திருக்கும் கருத்துக்களிலிருந்து…

“மழை தொடர்பான தங்களது ‘வாழ்ந்தோடுதல்’ சரியான சொல்லாட்சியா என்பது மறு சிந்தனைக்கு உரியது. கீழத்தஞ்சைப் பகுதியில் ‘வாந்தோட’ என்றுதான் கூறுவார்கள். ‘வார்ந்து’ என்பது ‘வாந்து’என்று ஆயிற்று ‘தரை வாந்தோட மழ பேஞ்சிருக்கு’என்பது மன்னைப் பகுதி (மன்னார்குடி) வழக்கு.

வட்டாரச் சொல் அறிவோம்

‘பாலிதீன்’ என்பதற்கு தஞ்சை உள்ளிட்ட வட்டாரங்களில் சவ்வுத்தாள் என்ற பெயர் இருக்கிறது என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். மதுரையைச் சேர்ந்த வாசகர் ப.தமிழ்ச்செல்வம் இன்னொரு சொல்லை அனுப்பியிருக் கிறார். அதுதான் ‘மழைக்காகிதம்’. மறைந்த எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் ‘புயல்’ என்ற சிறுகதையில் ‘மழைத்தாள்’என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x