Published : 06 Jul 2015 09:40 AM
Last Updated : 06 Jul 2015 09:40 AM
முல்லை பெரியாறு அணையை கட்டுவது தொடர்பான ஆய்வு முயற்சிகள் 1795-ம் ஆண்டு முதலே தொடங்கின. மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் வீணாகச் செல்கிறது என்பதை மட்டுமே அறிந்த பலராலும், தற்போது அணை கட்டப்பட்டுள்ள இடம் மிக அடர்ந்த வனப்பகுதி என்பதால் இந்த இடத்தின் அருகில் நெருங்கக்கூட முடியவில்லை.
1862-67 வரை ஆய்வு செய்த கேப்டன் ரியோஸ் முதன்முறையாக ரூ.17.49 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்தார். 1872-ல் ஸ்மித் ரூ.53.99 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயாரித்தார். 1882-ல் பென்னி குவிக் ரூ.64.39 லட்சத்துக்கு திட்ட அறிக்கை தயாரித்து அளித்தார். அனைவரின் தொழில்நுட்ப அறிக்கைகளையும் ஆய்வு செய்த ஆங்கிலேய அரசு பென்னிகுவிக்கின் அறிக்கையே சிறந்தது என்பதால் அதை ஏற்றது. பெரியாறு அணை திட்டத்தின் முதன்மைப் பொறியாளராக 1884 ஏப்ரல் 14-ல் பென்னிகுவிக் நியமிக்கப்பட்டார்.
பணிகள் தொடக்கம்
சென்னை மாகாண கவர்னராக இருந்த கன்னிமராபிரபு மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் மாயோ ஆகியோர் 1887-ம் ஆண்டு பெரியாறு அணை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தனர். ஜெனரேட்டர், இரும்புப் படகு, டர்பைன்கள், மண் அள்ளும் இயந்திரம், நீராவி இழுவை இயந்திரம் உட்பட ஏராளமான இயந்திரங்கள் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 24 கி.மீ. செங்குத்தான கணவாய் பகுதி, இடையில் ஓடிய சிறிய ஆறு, 13 கி.மீ. அடர்ந்த வனத்தை கடந்து இந்த இயந்திரங்களைக் கொண்டு செல்வது பெரும் சவாலாக இருந்தது. மலை அடிவாரத்தில் நீராவி இயந்திரங்களை இயக்கி, இதன் மூலம் இழுப்பு கயிறை பயன்படுத்தி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
அணையை இழுத்துச்சென்ற வெள்ளம்
அப்போது பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த கம்பம், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். 1880-ல் பெரும்பாலான பணி முடியும் நிலையில் காட்டாற்று வெள்ளம் அணையை அடித்துச் சென்றது. 1890, 91, 92-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் அணையின் பல பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தை கட்டுப்படுத்த மணல் மூட்டைகளுடன் உயிரை துச்சமாக மதித்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். கட்டுமானத்தை முழுமையாகவும், பாதியாகவும் வெள்ளம் இழுத்துச்சென்றதும் நிகழ்ந்தது. வெள்ளம் வழிந்தோடும் வகையில் ஒவ்வொரு பத்து அடியாக அணையின் சுவர் எழுப்பப்பட்டது.
சுண்ணாம்பு கலவை
கட்டுமானத்துக்குத் தேவையான கல், மணல் அணை பகுதியிலேயே தாராளமாக கிடைத்தன. 80 ஆயிரம் டன் சுண்ணாம்பு, சுடப்பட்ட ஓடுகளை உடைத்து உருவாக்கப்படும் சுர்க்கி ஆகியன தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டன. பெரிய செக்கில் மாடுகளை வைத்து சுண்ணாம்பை அரைத்து, அதில் கடுக்காய் நீர், கருப்பட்டி கலந்த கலவை உருவாக்கப்பட்டது. கான்கிரீட்டுக்கு இந்தக் கலவைதான் பயன்படுத்தப்பட்டது.
தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் சுரங்கப்பாதை
முன்னும், பின்னும் சுர்க்கி கலவையால் கடினப்பாறை கற்கள் மூலம் சுவரும், நடுவில் சுண்ணாம்பு, சுர்க்கி, பாறை கற்களால் ஆன கான்கிரீட்டால் நிரப்பப்பட்டது. அணையின் மொத்த எடை 32,43,000 கிலோ நியூட்டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இது நீர், அலையால் ஏற்படும் எந்த அழுத்தத்தையும் தாங்கவல்லது.
அணையின் சிறப்பு
அணையைத் திறந்ததும் கால்வாயில் தண்ணீர் பாய்ந்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலை இந்த அணையில் இல்லை. அணையின் நீளம் 1,200 அடி. உயரம் 155 அடி. அஸ்திவார சுவர் வரை உயரம் 158 அடி. அஸ்திவாரத்தின் அகலம் 115.5 அடி. நீர் தேக்க அளவு 152 அடி. நீர் வெளியேற்றும் மதகுகள் 13. தடுப்பணையின் பணி மேற்கு நோக்கி பாயும் பெரியாற்றை தடுப்பது மட்டுமே. நீர்போக்கிகள், உபரி நீர் வெளியேறும் மதகுகள் என பிரதான சுவரில் எதையும் பார்க்க முடியாது. நீர் தேங்கும் இடம், உபரிநீர் வெளியேறும் இடம், தமிழகத்துக்கு நீர் எடுக்கும் சுரங்கப்பகுதி என அனைத்துமே ஒவ்வொரு திசையில் இருக்கும். அணையில் 104 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை எடுக்க முடியாது. அணையில் மண் சேராது. அணை சுவரை அலைகள் மோதாது என பல அதிசயங்களை உள்ளடக்கியது. அணையில் தேங்கும் நீரை 6,100 அடி நீளம், 80 அடி அகலம், 60 அடி ஆழமான கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் எடுக்கும் சுரங்க பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பும் வகையில், மலை பாறையில் 15 அடி அகலம், ஏழரை அடி உயரம், 5,704 அடி நீளத்தில் ஆங்கில எழுத்து ‘D’ வடிவில் குடையப்பட்ட சுரங்கம் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
சொந்த பணத்தை செலவிட்ட பென்னிகுவிக்
அடித்தளம் அமைக்கும் திட்ட மதிப்பீட்டைவிட 5 மடங்கு கூடுதல் செலவானது. இதனால் கட்டுமான பணியை நிறுத்திவிட்டு திரும்பி வரக்கோரி கர்னல் பென்னிகுவிக்குக்கு பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது.
ஆனால் பென்னிகுவிக் இங்கிலாந்திலுள்ள தனது சொத்துகளை விற்று அதில் கிடைத்த பணத்தின் உதவியோடு 8 ஆண்டுகளில் உலகமே வியக்கும் வகையில் கம்பீரமான பெரியாறு அணையை 1895-ம் ஆண்டு கட்டி முடித்தார்.
லோகனின் சாதனை
பெரியாறு அணைக்கு நிகரான சவாலான பணியாக திகழ்ந்தது சுரங்கம் அமைக்கும் பணி. தேக்கடி மலைப்பகுதியிலிருந்து 1.98 கி.மீ. நீர்வழிப்பாதை, 1.79 கி.மீ. மலை குகைப்பாதை அமைக்கும் பணிக்கான பொறுப்பை ஆங்கிலேய பொறியாளர் இ.ஆர்.லோகன் ஏற்றிருந்தார். டர்பைன் மூலம் கடைசல் இயந்திரங்கள் இயக்கப்பட்டு, வெடிமருந்து மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டன. மிகுந்த சிரமங்களுக்கிடையே இப்பணியை லோகன் வெற்றிகரமாக முடித்தார். இவரது உழைப்பு, ஈடுபாடு பென்னிகுவிக்குக்கு அடுத்த நிலையில் இருந்ததால் இன்றும் விவசாயிகள் தங்கள் குழந்தைகளுக்கு லோகன், லோகன்துரை என்ற பெயரை வைத்து போற்றும் பழக்கம் தொடர்கிறது.
பல ஆயிரம் தொழிலாளர் உயிர் தியாகம்
வெள்ளம், குளிர் மற்றும் மலேரியா, காலரா போன்ற கொடிய நோய்களில் பலர் பலியானார்கள். ஆவணங்களில் உள்ள கணக்கின்படி 483 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் உண்மையான கணக்கு 10 ஆயிரத்தை தாண்டும் என்ற தகவலும் உள்ளது. சுரங்க வெடிவிபத்திலும் பலர் இறந்துள்ளனர். ஆங்கிலேயர் தரப்பில் கண்காணிப்பு அதிகாரி டைலர் உட்பட 18 பேர் இறந்துள்ளனர்.
முல்லை மலரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT