Published : 11 Jul 2015 09:25 AM
Last Updated : 11 Jul 2015 09:25 AM

முல்லை பெரியாறு 120: வரலாறு காணாத ஆய்வுகளை சந்தித்த அணை

கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத் திருத்தத்தை ரத்து செய்யவும், பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்கவும் உத்தரவிடக் கோரி, தமிழக அரசு 2006-ம் ஆண்டில் தாக்கல் செய்த வழக்கை, 2009 அக்டோபரில் நீதிபதிகள் டி.கே.ஜெயின், முகுந்தகம் சர்மா, ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல், ஒவ்வொரு மாநிலமும் சட்டம் இயற்றினால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்தனர். 2009 நவம்பர் 10-ம் தேதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு நீதிமன்றம் மாற்றியது.

ஐவர் குழு அமைப்பு

அணையின் பலத்தை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் ஆய்வுசெய்து விரிவான அறிக்கை தரக்கோரி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை 2010 பிப்ரவரியில் நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய நீர்வளத் துறை ஆணைய முன்னாள் செயலர் தத்வே, நீர்வளத் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் மேத்தா, தமிழகம் சார்பில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர்.

அடுத்தடுத்து புதுப்புது பிரச்சினைகளை கேரளா கிளப்பியதால் அணையில் 13 ஆய்வுகள் வரை நடத்தப்பட்டன.

நீர்மூழ்கி வீரர்கள் மூலம் ஆய்வு

டாக்டர் தத்வேயின் தலைமையில் உள்ள மத்திய தொழில்நுட்பக் குழுவினர் உத்தரவின் பேரில், ஒடிசா மாநில தலைமைப் பொறியாளர் ரத்னகர்-தலாய் தலைமையில் 4 நீர்மூழ்கி வீரர்கள் பெரியாறு அணை பகுதியில் தங்கியிருந்து, 3 நாட்கள் நவீன கேமராவுடன் நீருக்குள் மூழ்கி அணையின் அடிப்பகுதியை புகைப்படம் எடுத்து, அணையின் உறுதி குறித்து ஆய்வு செய்தனர்.

இந்திய நிலவியல் ஆய்வு நிலைய ஆய்வாளர் ராஜேந்திர சங்வால் தலைமையிலான குழு அணையின் அருகிலுள்ள பகுதிகளின் புவி அமைப்பு, நில வடிவமைப்பை முழுமையாக ஆய்வு செய்தது.

ஆளில்லா நீர்மூழ்கி வாகனம்

மத்திய மண்ணியல் ஆய்வு நிலைய ஆராய்ச்சியாளர்கள் அலெக்ஸ் வர்கீஸ், பீரேந்திர பிரசாத் தலைமையிலான குழு ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை பயன்படுத்தி ஒரு மாதம் ஆய்வு மேற்கொண்டது. அணையின் அடிப்பகுதியில் விரிசல் உள்ளதா என்றும், அதிர்வுகளை தாங்கும் சக்தி எந்தளவுக்கு இருக்கிறது என்பதையும் முழுமையாக ஆய்வு செய்தனர்.

அதிர்வலை மூலம் ஆய்வு

மத்திய மண்ணியல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் முராரி ரத்னம் அறிவுறுத்தலின்படி, பெரியாறு அணையை கட்ட பயன்படுத்திய சுருக்கி சுண்ணாம்பு, மணல் மாதிரிகளை பல்வேறு இடங்களில் தமிழக, கேரள அதிகாரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சி நிலைய முதன்மை ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் திரிபாதி தலைமையிலான வல்லுநர்கள், பெரியாறு அணையில், அதிர்வலைகள் மூலம் அணையின் பலத்தை கண்டுபிடிக்கும் சோதனையை நடத்தினர்.

அணையின் மத்திய பகுதியான 650-வது அடியில் இந்த சோதனை நடைபெற்றது. முன்புறமாக நீர்மட்டத்துக்கு மேல் 10 அடி உயரத்தில் சுத்தி போன்ற கருவியால் அடித்து, அதனால் அணையின் பின்புறம் ஏற்படும் அதிர்வலைகளை 72 இடங்களில் பதிவுசெய்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

அணையின் அடிப்பகுதியை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.

கேபிள் ஆங்கரிங் பலம் குறித்த சோதனை

தமிழக அரசு கேபிள் ஆங்கரிங் என்ற முறையில், பெரியாறு அணையில் நங்கூரம் அமைத்து பலப்படுத்தியது. இந்த முறை எந்தளவுக்கு பலம் வாய்ந்தது என்பது குறித்து புனேயைச் சேர்ந்த பிஎஸ்சி என்ஜினீயர்ஸ் கம்பெனியின் பொறியாளர்கள் மற்றும் அலு வலர்கள் ஆய்வுசெய்தனர்.

இந்திய நிலவியல் ஆய்வுமைய கண்காணிப்பாளர் ராஜேந்திர சன்வால் தலைமையிலான குழு அணை பகுதியில் மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

மகாராஷ்டிர அரசின் தபோடி பணிமனையின் பொறியாளர் சாங்லி தலைமையிலான குழு அணையில் பல இடங்களில் துளையிட்டு கலவை மாதிரி எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஸ்டியூட் ஆப் ரிமோட் சென்ஸ் இயக்குநர் னிவாசன் தலைமையிலான குழு பெரியாறு அணைப்பகுதி முழுவதையும் செயற்கைக்கோள் மூலம் படம் பிடித்து ஆய்வு நடத்தியது.

உறுதிப்படுத்தப்பட்ட அணையின் பலம்

அணையின் கேலரி பகுதியில் நீர் கசிவு சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.

வேறு எந்த அணையும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்ததாக வரலாறு இல்லை. கேரளா தொடர்ந்து பரப்பும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்க இப்படி 13 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவிலுள்ள தலைசிறந்த அணை வல்லுநர் குழு மூலம் நடத்தப்பட்ட 13 ஆய்வு கள் முடிவின்படியும், அறிக்கைகளின் முடிவின் படியும் அணை பலமாக இருப்பது உறுதியானது. இதை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் மீண்டும் நல்லதொரு தீர்ப்பை அளித்தது.

நீர்க்கசிவு சோதனை

மத்திய நீர்மின் ஆராய்ச்சித்துறை இயக்குநர் டாக்டர் தேசாய், மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சித்துறை அதிகாரி மெகுரா, வித்யார்த்தி ஆகியோர் தலைமையில், பேபி அணையில் 120 அடி ஆழத்தில் கலவை மாதிரி சேகரிக்கப்பட்ட துவாரத்தில், மூன்று இடங்களில் நீர்க்கசிவு சோதனை நடத்தினர்.

அணை பலப்படுத்தப்பட்டபோது அமைக் கப்பட்ட 2 கேலரிகளிலும் விநாடிக்கு எத் தனை லிட்டர் தண்ணீர் கசிகிறது எனத் துல்லியமாக கணக்கிட்டனர். அணை வலுப்படுத்தப்பட்ட நீர்க்கசிவு வெகுவாக குறைந்திருந்தது ஆய்வில் தெரிந்தது.

முல்லை மலரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x