Published : 07 Jul 2015 11:05 AM
Last Updated : 07 Jul 2015 11:05 AM
உலகின் மிகச்சிறந்த அணையை பென்னிகுவிக் தலைமையிலான குழு வெற்றிகரமாக கட்டி முடித்தது ஆங்கிலேய அரசையே திகைக்கச் செய்தது. பொறியியல் துறையின் சாதனையாகக் கருதப்படும் இந்த அணையிலிருந்து, சென்னை மாகாண ஆளுநர் வென்லாக் பிரபு 1895 அக்டோபர் 10-ம் தேதி மாலை 6 மணிக்கு தண்ணீரை திறந்துவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தேனி, நெல்லை பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அணை பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2,420 மி.மீ. மழையும், சுரங்கப் பாதை அமைந்துள்ள தேக்கடி பகுதியில் 1,952 மி.மீ. மழைப் பொழிவும் இருக்கிறது. நீர்பிடிப்பு பகுதி 240.80 சதுர மைல். சுரங்கப் பாதை வழியாக வெளியேறும் தண்ணீர், கூடலூரில் வைகையின் துணை நதியான வைரவன் ஆற்றில் விடப்படும். இந்த தண்ணீர் சுருளி ஆற்றுடன் கலந்து, தேனி அருகே வைகை ஆற்றில் நேரடியாக கலக்கிறது. அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. அணை கட்டி முடிக்கப்பட்ட பின் 1901-ம் ஆண்டு முதல் 1940-ம் ஆண்டுவரை 30 முறை அணையின் முழு கொள்ளளவான 152 அடியை எட்டியுள்ளது.
செழிப்பான கம்பம் பகுதி
பெரியாறு அணை நீர் கூடலூர் அருகேயுள்ள மைத்தலை மன்னாடி கால்வாய் (வாய்க்கால்), வைரவன் கால்வாய், குள்ளப்பகவுண்டன்பட்டி பேயத்தேவன் கால்வாய் உட்பட பல கால்வாய்கள் மூலம் 14,707 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இத்துடன் தற்போது உத்தமபாளையம் பரவு வாய்க்காலை இரண்டாகப் பிரித்து பி.டி.ஆர். வாய்க்கால், தந்தை பெரியார் வாய்க்கால் உருவாக்கப்பட்டுள்ளன. வாய்க்காலின் முடிவில் தண்ணீர் அந்தந்த பகுதியில் உள்ள குளத்துக்குப் போய் சேருகிறது. இதன்மூலம் 5,146 ஏக்கர் பாசன வசதி பெற்று செழிப்படைகிறது.
மாவட்டங்களுக்கு தண்ணீர் பிரிப்பு
பெரியாறு அணை தண்ணீரை தேக்கிவைத்து தேவைப்படும்போது வழங்கும் வசதி இல்லாத குறையை தீர்க்க வைகை அணை கட்டப்பட்டு 1959-ல் திறக்கப்பட்டது. இங்கு பெரியாறு அணை, வைகை ஆற்று தண்ணீர் தேக்கப்பட்டது. வைகை தண்ணீர் கொள்ளளவு பழைய ஆயக்கட்டுக்கு 2:3:7 என்ற விகிதத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.
நிலக்கோட்டை அருகேயுள்ள பேரணை எனும் தடுப்பணை மூலம் தண்ணீர் 3 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. மேலூர் பகுதிக்கு 58.1 கி.மீ. தூரம் பெரியாறு பிரதான கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
பாசன வசதி பெறும் 2.13 லட்சம் ஏக்கர்
திருமங்கலம் பகுதிக்கு 36 கி.மீ. தூரத்துக்கான கால்வாய் 1958-ல் வெட்டப்பட்டது. நேராக வைகை ஆற்றில் விடப்படும் நீர், மதுரை அருகேயுள்ள விரகனூர் நீர் பகிர்மான அணையின் மூலம் பெறப்படும் நீர் மூலம் 27,529 ஏக்கர் கூடுதல் பாசன வசதி பெற்றது. விரகனூர் அணை முதல் பார்த்திபனூர் அணை வரையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள 87 கண்மாய்களில் 2,912 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்பட்டு 40,743 ஏக்கர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
பார்த்திபனூர் அணையிலிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரையிலான ராமநாதபுரம் மாவட்டத்தில் 67,837 ஏக்கர் பாசனத்துக்காக 241 கண்மாய்களில் 6,978 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படுகிறது.
பெரியாறு, வைகை அணை நீர் மூலம் சோழவந்தான் பெரியாறு பிரதான கால்வாயில் 45,041 ஏக்கர், மேலூர் பெரியாறு பிரதான கால்வாயில் 85,563 ஏக்கர், மேலூர் விரிவாக்கப் பகுதியில் 38,248 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயில் 19,439 ஏக்கர் என மொத்தம் 2.13 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
பொருளாதார நிலையில் மேம்பாடு
பெரியாறு அணை கட்டுவதற்கு முன், இப்பகுதியில் கடும் பஞ்சம் நிலவி வந்தது. உணவு கிடைக்காமல் பல்லாயிரம் பேர் மடிந்தனர். நிலங்களை விற்று, வேறு பகுதிக்கு மக்கள் குடியேறினர். பிழைக்க வழியின்றி கொலை, கொள்ளை, வழிப்பறியில் பலர் இறங்கினர். இதை சமாளிக்க வழி தெரியாமல் திணறிய ஆங்கிலேய அரசுக்கு கிடைத்த கருவிதான் பெரியாறு அணை.
இந்த அணை பயன்பாட்டுக்கு வந்தபின் 2.13 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற்றன. பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் 80 லட்சம் மக்கள் வரை தினசரி பயன்பெறுகின்றனர். பல ஆயிரம் சதுர கி.மீட்டரில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள், பஞ்சத்தால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை விவசாயிகளாகவும், விவசா யத் தொழிலாளர்களாகவும், நில உரிமையாளர்களாகவும் மாற்றியது பெரியாறு அணை நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை.
இந்த அணை நீரால், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வேளாண் உற்பத்தி நடைபெறுகிறது. இதை சார்ந்த உபதொழில்களும் ஏராளமாக பெருகிவிட்டன. பஞ்சம், பட்டினியால் அவதிப்பட்ட இப்பகுதியில் ஏற்பட்ட பசுமை புரட்சியால் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது.
திறப்பு விழாவில் பென்னிகுவிக்குடன் பங்கேற்ற மக்கள்.
பொன் விளையும் பூமி
கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத் தலைவர் எம்.தர்வேஸ் மைதீன் கூறியது: பெரியாறு அணை இல்லையென்றால் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு இப்பகுதி பாதிப்பை சந்தித்திருக்கும். இப்பகுதி பொன் விளையும் பூமியாக காட்சி தருவதும், மக்களின் வாழ்க்கைத் தரம், நிலமதிப்பு, நிரந்தர வருமானம், தொழில் என அனைத்துமே இந்த அணையால் வந்ததுதான். இந்த அணையும், இதை கட்டிய பென்னிகுவிக்கும் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று என்றார்.
எம். தர்வேஸ்மைதீன்.
முல்லை மலரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT