Last Updated : 10 Jul, 2015 08:51 AM

 

Published : 10 Jul 2015 08:51 AM
Last Updated : 10 Jul 2015 08:51 AM

அறிவோம் நம் மொழியை: வாழ்ந்தோடப் பெய்த மழை

மழை பெய்வதைப் பற்றி விவரிக்கத் தமிழில் பல சொற்களும் தொடர்களும் இருக்கின்றன. மழையைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சொல்வதுபோன்ற நடைச் சித்திரத்தைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இந்தப் பகுதியில் மேலும் சில வழக்குகளைப் பார்க்கலாம்.

நனைவதை வைத்தே மழையை விவரிப்பதும் உண்டு. உடம்பு விரைவில் நனையாதபடி பெய்தால் அதை ‘பொசுங்கத் தூற்றல்’ என்பார்கள். அப்படிப் பெய்யும்போது தரையும் அவ்வளவாக நனையாது. அதைவிட அதிகமாகப் பெய்யும்போது, ‘தரை நனையப் பெய்கிறது’ என்பார்கள். ‘சொட்டச் சொட்ட நனைவது’, ‘தொப்பலாக நனைவது’, ‘தெப்பமாக நனைவது’ என்றெல்லாம் வழக்குகள் உண்டு.

மழை லேசாகப் பெய்வதைத் ‘தூற்றலும் துளியுமாக இருக்கிறது’ என்று சொல்வார்கள். ‘வாரி ஊற்றப் பெய்கிறது’என்றால், கூரை வாரியிலிருந்து கீழே ஊற்றும் அளவுக்கு மழை பெய்கிறது என்று பொருள்.

‘தரை வாழ்ந்தோடப் பெய்திருக்கிறது’ என்று தஞ்சைப் பகுதியில் சொல்வதுண்டு. தரையை நனைத்துப் பிறகு தாழ்வான இடத்துக்கு ஓடும் அளவுக்கு மழை பெய்வதை அப்படிச் சொல்வார்கள். தரைப் புழுதியை நனைத்து, பாவிய தரையாகச் செய்துவிடும் அந்த மழை. ‘வாழ்ந்தோடு’ என்ற சொல் எப்படி உருவானது என்பது தெரியவில்லை. வாசகர்களுக்குத் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளலாம்.

நன்றாகப் பெய்யாமல் ஆனால், எரிச்சலூட்டும் விதத்தில் இடைவிடாது பெய்துகொண்டிருந்தால் ‘நச நசவென்று பெய்கிறது’ என்பார்கள்.

மழைகுறித்த மொழி வழக்குகள் பலவற்றை உழவுசார்ந்த வாழ்க்கையே உருவாக்கியிருக்கிறது. கடுமையாக மழை பெய்வதை ‘வயலில் தண்ணீர் நிற்கப் பெய்கிறது’ என்றும் சொல்வார்கள். ‘வெடிப்பு மறையப் பெய்வது’என்றால் வயலில் மண் ஊறி, கோடை வெடிப்பு மறையும் அளவுக்கு மழை பெய்கிறது என்று பொருள்.

கோடையில் இடி மின்னலுடன் பெய்யும் கோடை மழை ஒரு பாலைவனச் சோலை. மழையை அதிகம் நேசிக்க வைக்கும் தருணம் அது. கடுமையான வெயில் வாட்டிவதைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், வாராது வந்த மாமணி போல் இருப்பது கோடை மழை. நீடித்துப் பெய்யாமல் ஏதோ பேருக்குப் பெய்தது என்றால் தரைச்சூட்டைக் கிளப்பிவிடும் என்பார்கள். ‘சூட்டைக் கிளப்பியதுதான் மிச்சம்’ என்று சலித்துக்கொள்வார்கள். கோடை மழை அடித்துப் பெய்தால் ‘குடங்கொண்டு ஊற்றுகிறது’ என்பார்கள்.

(மழைத் தமிழ் தொடரும்)

வட்டாரச் சொல் அறிவோம்

மாடி வீட்டை ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விதத்தில் சொல்வார்கள். மச்சுவீடு, மெத்தைவீடு என்றெல்லாம் சொல்வார்கள். நாஞ்சில் வட்டாரத்தில் தட்டுவீடு, மட்டுப்பா வீடு என்று சொல்வார்கள். முதல் தளம், இரண்டாம் தளம் என்று சொல்வதில் உள்ள ‘தளம்’ என்ற சொல்லுக்கு இணையாக ‘தட்டு’ என்ற சொல்லை நாஞ்சில் வட்டாரங்களில் பயன்படுத்துவார்கள் என்று ‘நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி’யின் ஆசிரியர் அ.கா. பெருமாள் தெரிவிக்கிறார்.

வாசகர்களே, உங்கள் வட்டாரங்களின் தனிச்சிறப்பு மிக்க சொற்களையும் எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x