Published : 25 Jul 2015 10:06 AM
Last Updated : 25 Jul 2015 10:06 AM

பாலாறு: ஆங்கிலேயர்கள் கட்டிய பிரம்மாண்ட அணை

பாலாற்றில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தால், தண்ணீரை முறையாக தேக்கி வைக்க முடியாமல் வீணாகக் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, மழைக் காலங்களில் கிடைத்த உபரி நீரை பிரித்து பாசன ஏரிகளுக்கு திருப்பிவிடும் நவீன திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அப்படி உருவானதுதான் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலாற்று அணைக்கட்டு.

23 ஆயிரம் ஏக்கர் பாசனம்

ஆற்காடு நகருக்கு கிழக்கே 7 கி.மீ. தொலைவில் இருக்கும் பாலாற்றில் 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அணை கட்டுமானப் பணியை தொடங்கினர். அணையின் நீளம் 799 மீட்டர். 4,825.2 கன அடி வெள்ள நீரை தேக்கும் அளவுக்கு திறனுடையது. 1858-ல் கட்டுமான பணி முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது.

பாலாற்றின் உபரி நீர் காவேரிப்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கால்வாய் பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதை மேம்படுத்தும் விதமாக கால்வாய் அமைந்துள்ள இடத்தில் இருந்து சற்று தொலைவில் ஆற்றின் போக்கில் பாலாற்றின் உபரி நீரை வேகமாக காவேரிப்பாக்கம் ஏரியை நிரப்பும் வகையில் ஆங்கிலேயர்கள் இந்த அணையை வடிவமைத்தனர்.

அணையின் தெற்கில் கிடைக்கின்ற உபரி நீரை இரண்டாக பிரித்து காஞ்சிபுரம் மாவட்டம் தூசி வழியாக பாலாற்றின் கிளை நதியான செய்யாறு ஆற்றுடன் இணைத்தனர். மற்றொரு சிறிய கால்வாய் வழியாக சக்கரமல்லூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைத்தனர். அணை கட்டுமான பணி முடிந்த பிறகு பாசன பரப்பளவு அதிகரிக்கப்பட்டது. இந்த அணைக்கட்டால் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 14,309 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.

அதேபோல, ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மற்றொரு அணை பொன்னை அணக்கட்டு. ஆந்திர மாநிலத்தில் இருந்து ஓடி வரும் நீவா நதி பாலாற்றின் முக்கிய கிளை நதிகளில் ஒன்றாகும். நீவா நதியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்க 1855-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையிலும் இடது, வலது என கால்வாய்களால் 8,815 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

வறண்டது கவுன்டன்யா நதி

தமிழக - ஆந்திர எல்லையில் கவுன்டன்யா வனப்பகுதி உள்ளது. இங்குள்ள மலைகளில் இருந்து கிடைக்கும் நீர், கவுன்டயா நதியாக தமிழக எல்லையான மோர்தானா கிராமம் அருகே நுழைகிறது. ஜங்காலப்பல்லி, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, குடியாத்தம், ஒலகாசி வழியாக பள்ளி கொண்டா அருகே பாலாற்றில் கலக்கும்.

ஆந்திர வனப்பகுதியில் கிடைக்கும் மழை நீரை தேக்கி வைக்க மோர்தானா கிராமத்தில் 2001-ம் ஆண்டு திமுக அரசால் மோர்தானா அணை கட்டப்பட்டது. இதன் மொத்த கொள்ளவு 261.36 மில்லியன் கனஅடி. நிலையான நீர் இருப்பு 31.225 மில்லியன் கனஅடி. இந்த அணை கட்டியபிறகு கடந்த 15 ஆண்டுகளில் 3 முறை மட்டும் முழு கொள்ளவை எட்டியுள்ளது.

ஆந்திரத்தின் தடுப்பணை

கவுன்டன்யா நதியின் குறுக்கே மோர்தானா அணை கட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய ஆந்திர மாநில அரசு, தனது வனப்பகுதிக்கு உட்பட்ட இடத்தில் புதிய தடுப்பணைகளைக் கட்டியது. இதனால் மழைக் காலங்களில் மோர்தானா அணைக்கு வந்த தண் ணீரின் அளவும் குறைந்துவிட்டது. கவுன்டன்யா நதியில் ஆண்டுதோறும் ஏற்பட்ட வெள்ளமும் நின்றுவிட்டது.

கவுன்டன்யா நதியில் கடைசியாக 1991-ல் வெள்ளம் கரைபுரண்டோடியது. தொடர்ந்து 3 நாட்கள் பெய்த மழையால் கவுன்டன்யா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 15 அடி உயரமுள்ள, காமராஜர் பாலத்தை தொட்டுக்கொண்டு ஓடிய வெள்ளம் மக்கள் பார்த்த அதிசய காட்சியாக அமைந்தது.

பூண்டியை இணைக்கும் பாலாறு

வேலூர் மாவட்டத்தில் உள்ள மிக பழமையான, பிரம்மாண்ட ஏரிகளில் காவேரிப்பாக்கம் முக்கியமானது. மூன்றாம் நந்திவர்மன் பல்லவன் ஆட்சிக் காலத்தில்

(கி.பி. 710-750) இந்த ஏரி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பாலாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் கால்வாய் வழியாக உபரி நீர் எடுத்துச் செல்லப்பட்டு காவேரிப்பாக்கம் ஏரியில் சேர்க்கும்.

மழைக்கால தண்ணீரும், பாலாற்று வெள்ள நீரும் சேர்ந்து ஏரியை நிரப்புகிறது. கடைவாசலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்ட மகேந்திர

வாடி ஏரியில் நிரம்பிய பின்னர், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம் வழியாக குசஸ்தலை ஆறாக ஓடி பூண்டி ஏரியில் சேருகிறது. காவேரிப்பாக்கம் ஏரியின் செழுமையான வண்டல் மண் நிலத்தை வளமாக்கியது. தற்போது ஏரியின் 54 மதகுகளும் காட்சிப் பொருளாக நிற்கின்றன. எந்த நோக்கத்துக்காக அணைகள், ஏரிகள் உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறவே இல்லை.

பாலாறு பயணிக்கும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x