Published : 27 Jul 2015 09:35 AM
Last Updated : 27 Jul 2015 09:35 AM
இன்று கவிமணியின் நினைவு நாள்
இந்தியாவின் சிறந்த மார்க்சியவாதியும் கேரளத்தின் முதல்வராகவும் இருந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு ஒருமுறை கவிமணியைச் சந்திக்க புத்தேரிக்குப் போனார். கவிமணி அப்போது நல்ல உடல் நலத்துடன் இருந்தார். இருவரும் மலையாளத்தில் உரையாடினர். நம்பூதிரிபாடிடம் மார்க்சியத்தை ஒரு வரியில் சுருக்கமாகச் சொல்லுங்கள் என்றார் கவிமணி. “தனக்குத் தேவையானதை மட்டும் வைத்துக்கொள்ளுவது மார்க்சியம்” என்று இ.எம்.எஸ். பதிலளித்தார்.
சாய்வு நாற்காலியில் விச்ராந்தியாய்ப் படுத்திருந்த கவிமணி நிமிர்ந்து உட்கார்ந்தார். “ஒரு ஆறு அதலபாதாளத்தில் ஓடுகிறது; ஆற்றைக் கடக்கக் குறுகலான பாலம் உண்டு; அது ஒருவர் நடப்பதற்கு மட்டுமே உரியது. கைப்பிடிச் சுவர் இல்லை. அதில் ஒருவன் ஆற்றைக் கடக்கப் படும் சிரமம் எப்படி இருக்கும்?” என்று கேட்டார். கூர்மையான புத்தியுடைய இ.எம்.எஸ். பதில் பேசவில்லை. வாய்விட்டுச் சிரித்தாராம். அன்று மாலை நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் பேசிய இ.எம்.எஸ். “நாஞ்சில் நாட்டுக்காரர்களின் கிண்டலும் மலையாளிகளின் நகைச்சுவை உணர்வும் கலந்த சம்பாஷணைக்காரர் கவிமணி” என்றாராம். கவிமணியின் சமகாலக் கவிஞர்களில் அவர் மிகவும் மதிக்கப்பட்டதற்கு அவர் சிறந்த சம்பாஷணைக்காரர் என்பதும்கூட என்கிறார் சுந்தர ராமசாமி.
மலரும் மாலையும்
கவிமணி தன் 19-20 வயதில் கவிதை, கட்டுரை எழுத ஆரம்பித்துவிட்டார். ஆரம்பகாலத்தில் கவிமணி எழுதிய கவிதைகள் சிலவும் ஆங்கிலக் கட்டுரைகள் சிலவும் பாதுகாக்கப்படவில்லை. அவர் திருவனந்தபுரத்தில் இருந்தபோது குழந்தைகளுக்காகப் பாடல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் எழுதினார். ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் கவிமணியின் சில பாடல்களை 1932-ல் வெளியிட்டார். 1938-ல் மு. அருணாசலம் வேறு பாடல்களையும் தொகுத்து ‘மலரும் மாலையும்’ எனும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டார். ‘பின் ஆசியஜோதி’(1941), ‘மருமக்கள்வழி மான்மியம்’(1942), ‘உமார்கய்யாம்’(1945), ‘கவிமணியின் உரைமணிகள்’(1952), ‘தேவியின் கீர்த்தனைகள்’ (1953) போன்ற நூல்கள் வந்தன.
கவிமணி குழந்தைக் கவிஞராக அறியப்பட்டாலும், தரமான கவிதை மொழிபெயர்ப்பாளரும்கூட. ‘ஆசியஜோதி’, ‘உமார்கய்யாம் பாடல்கள்’ இவரது மொழிபெயர்ப்பு ஆளுமைக்குச் சான்று.
வரலாற்றாய்வாளர்
கவிமணி வரலாற்றாய்வாளர், கல்வெட்டுகளை நுட்பமாக ஆராய்ந்தவர்; ஆங்கிலத்தில் 16-க்கு மேல் கட்டுரைகள் எழுதியவர். சமகாலச் சிந்தனை உடையவர்; பழம்பெருமை பாராட்டாதவர் என்னும் பல செய்திகள் முழுமையாக வெளிப்படவில்லை.
கவிமணி திருவனந்தபுரத்தில் இருந்தபோது (1901 - 31) முழுநேரக் கல்வெட்டாய்வாளராக இருந்தார். இக்காலத்தில் இவர் எழுதிய 28 தமிழ்க் கட்டுரைகள் நூல்வடிவில் வந்துள்ளன. ‘மலபார் குவார்ட்டர்லி ரிவியூ’, ‘பியூப்பில் வீக்லி’, ‘பியூப்பில்ஸ் ஒபீனியன்’, ‘தி வெஸ்டர்ன் ஸ்டார்’, ‘கேரளா சொசைட்டி பேப்பர்ஸ்’ இதழ்களில் எழுதிய 19 கட்டுரைகள் நூல் வடிவில் வரவில்லை. கவிமணியின் ஆங்கிலக் கட்டுரைகளில் காந்தளூர்சாலை என்ற கட்டுரை சான்றாதாரம், பின்னிணைப்பு வரைபடங்களுடன் சிறுபிரசுரமாய் வந்திருக்கிறது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிவந்த கல்வெட்டு மூல படிவங்களின் விளக்கங்களில் உள்ள தவறுகளைச் சுட்டிய இவரது கட்டுரைகள் முக்கியமானவை.
நாட்டார் வழக்காறுகள்
கவிமணி ஆரம்பகாலத்தில் எழுதியவை பண்டித நடையிலான செய்யுள்களே. பிற்காலத்தில் இவரது நடை சாதாரண வாசகனுக்குப் புரியும்படி ஆனது. இதற்கு இவரது நாட்டார் வழக்காற்றுச் செல்வாக்கும், கல்வெட்டுப் பயிற்சியும் காரணமாக இருக்கலாம்.
கவிமணியின் பாடல்களில் சிந்து, கும்மி ஆகிய நாட்டார் பாடல் வடிவங்கள் பெருமளவில் பயின்றுவருகின்றன. நாட்டார் பாடல் வடிவங்களான தாலாட்டு, ஒப்பாரி, ஆகியனவும் பழமொழிகள், நம்பிக்கைகள் வழக்காறுகள், வாய்மொழிக் கதைகள் ஆகியனவும் விரவிவருகின்றன. கவிமணி, திவான் வெற்றி என்னும் கதைப்பாடல் குறித்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
தமிழ்க் கதைப்பாடல்பற்றி வெளிவந்த முதல் ஆங்கிலக் கட்டுரை இது. ‘மலரும் மாலையும்’ தொகுதியில் உள்ள முத்தந்தா, காக்காய், கோழி.... என எட்டுக்கு மேற்பட்ட தலைப்புகளில் உள்ள பாடல்கள் நாட்டார் பாடல் வடிவம் ஆகும். ‘கேரள சொசைட்டி பேப்பர்ஸ்’ ஆங்கில ஆய்விதழில் இவர் எழுதிய வள்ளியூர் மரபுச் செய்திகள், என்ற கட்டுரை ஐவர்ராசாக்கள் கதைப் பாடல் பற்றியது. 1910 அளவில் இதற்காகக் களஆய்வு செய்திருக்கிறார். இக்காலத்தில் ஓலையில் எழுதப்பட்ட கதைப் பாடல்களை கவிமணி சேகரித்திருக்கிறார். கவிமணியின் ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ தமிழின் முதல் எள்ளல் நூல்.
சமகால நோக்கு
கவிமணி கடைசிக் காலத்தில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியிடம் உரையாடியபோது, “இன்று தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சிக்கெல்லாம் பாரதிதாசன்தான் காரணம்” என்று கூறியிருக்கிறார் (‘சாந்தி’மாத இதழ் 1955).
வால்ட் விட்மனின் ‘புல்லின் இதழ்கள்’ கவிதையை ந.பிச்சமூர்த்தி மொழிபெயர்த்த காலகட்டத்தில் கவிமணி அக்கவிஞனைப் படித்திருக்கிறார். கவிமணியின் ‘மலரும் மாலையும்’ தொகுப்பில் காணப்படும் ‘கவிதை’பற்றிய அவரது கருத்துகளை அவரது கொள்கையாக முழுதும் கொள்ள முடியாது. அவரை நேரடியாகச் சந்தித்து எழுதியவர்களின் கட்டுரைகளிலும், கவிமணியின் கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்படும் செய்திகளிலிருந்து கவிமணி மரபுவழி யாப்பிலக்கணத்தை முறைப்படி கண் மூடி ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது.
பாரதிதான் மகாகவி
மரபையும் இலக்கணத்தையும் மீறிப் பொருளும் உள்ளீடும் உள்ள கவிதைகள் வாழும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. தன்னை மகாகவி எனக் கூறுவதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரது கருத்துப்படி, தமிழில் பாரதி ஒருவர்தான் மகாகவி. தன் காலத்தில் கல்வித் துறை சீரழிவுபற்றிப் பேசியிருக்கிறார். அவரது கணிப்புப்படி கல்வித் துறையில் அரசியலின் நுழைவுதான் சீரழிவுக்குக் காரணம். இந்தி மொழி தேசிய மொழியானதை அவர் வெறுக்கவில்லை.
கவிமணிக்கு மத நம்பிக்கை உண்டு. முந்தை மதத்துக்கும் சமகால மதத்துக்கும் உள்ள நீண்ட வேறுபாட்டை அனுசரித்து நடக்க வேண்டும் என்பது அவரது கொள்கை. எனினும், கவிமணியிடம் சடங்குமீதான பற்று இருந்ததில்லை. மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர். விடுதலைப் போரில் அவருக்குக் கொஞ்சமும் பங்கில்லை. 1944 ஆகஸ்ட் 15-ல் மதுரை அனுப்பானடியில் பாரதியின் நினைவுக் கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பேசியபோது “நான் தேசத்துக்காக ஒரு துரும்பைக்கூடப் போட்டறியேன். தியாகம் என்பது கறுப்பா சிவப்பா எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது” என்றார்.
மொழிப் போராட்டம்
தென்திருவிதாங்கூர் தமிழகத்துடன் சேருவதற்கு நடந்த மொழிப் போராட்டத்தில் இவர் நேரடியாகப் பங்கு கொள்ளவில்லை என்றாலும், போராட்டக்காரர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார். இறப்பதற்குச் சரியாக 45 நாட்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், நேரு மீதான கவிமணியின் விமர்சனம் இது: “நேரு பிரிட்டிஷ் ஆட்சியில் மருமகள் மாதிரி இருந்தார். இப்போது மாமியார் ஆகிவிட்டார். அவர் எல்லா பிரச்சினைகளையும் இமயமலையிலிருந்து பார்க்கிறார்!”
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,
‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT