Published : 31 Jul 2015 09:04 AM
Last Updated : 31 Jul 2015 09:04 AM
இளைய சமுதாயத்தின் வலிமையைப் புரிந்துகொண்டவர் அப்துல் கலாம்
கலாமின் இறுதி ஊர்வலம் நடந்த இன்று ஏறக்குறைய 150 கி.மீ. தூரம் பயணித்தேன். என் பயணத்தில் பெரு நகரமும், இடை நகரங்களும், மிகச் சின்னஞ்சிறிய கிராமங்களும் அடக்கம். பண்டிகைகளுக்குப் பொது விடுமுறை விடப்பட்டாலும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மக்கள் இனமாகி விட்டோம் நாம். ஆனால், இன்று மக்கள் திரள் திரளாக இங்குமங்கும் நடமாடுவதைப் பார்க்க முடிந்தது. ஊரில் இருந்த ஒவ்வொரு தெருவிலும் சிறிதும் பெரிதுமான புகைப்படங்களில் சிரித்துக்கொண்டிருக்கும் கலாமுக்கு மாலை போட்டு அஞ்சலிகள் நடந்துகொண்டிருந்தன.
அவரவருக்குத் தெரிந்த வழியிலேயே அந்த அஞ்சலிகளும் இருந்தன. அவர் இஸ்லாமியர் என்பதற்கான அடையாளம் அவரின் அஞ்சலியில் எங்கும் காண முடியவில்லை. மெழுகுவத்தி ஏற்றி வைத்திருந்தார்கள். அவர் நெற்றியில் மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. சூடம் பொருத்தி வைக்கப்பட்டிருந்தது. போகிற வருகிறவர்கள் அருகில் வந்து கலாமுக்கு பூ போட்டு அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இந்த அஞ்சலிக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்துகொண்டிருந்தது பள்ளிப் பிள்ளைகளும், கல்லூரி மாணவர்களுமே. ஒவ்வொரு இடத்திலும் மாணவர்கள் திரளாக, சிறு குழுக்களாக நின்றிருந்தார்கள். இக்கூட்டம் தன்னிச்சையாக சேர்ந்த கூட்டம். இவ்வேற்பாடுகள் எந்தக் கட்சியும், இயக்கமும் முன்னின்று செய்யத் தூண்டாமால் தானாக நடந்தவை.
பின்புலம் இல்லாதவர்
கலாமுக்கு எந்த அரசியல் கட்சியும் பின்புலமாக இல்லை. அவரும் தன்னை எந்த இயக்கத்தோடும் பிணைத்துக்கொண்டது கிடையாது. அரசியல் கட்சியின் மிகப்பெரிய தலைவரும் அல்ல. பிறகு எப்படி அவருக்கு இப்படி ஒரு மக்கள் செல்வாக்கு? பொதுவாக, மக்கள், விஞ்ஞானிகளைக் கவனிப்பதும் அவரைப் பற்றி அறிந்து வைத்திருப்பதும் சமீபகால ஊடகங்களினால்தான். அவர் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து, நாட்டின் முதல் குடிமகன் அந்தஸ்து பெற்ற குடியரசுத் தலைவர் என்பதாலா? இவையெல்லாம் அவர் மணிமகுடத்தில் ஒளிரும் சில பல கற்கள்தான். மணிமகுடமாய் இருந்தது அவர் மாணவர்கள் மேல் வைத்த நம்பிக்கைதான்.
குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த தலைவராக நேருவைச் சொல்கிறார்கள். அவரும்கூட குழந்தைகளின்மேல் அன்பு செய்தார். அந்த அன்பின் வெளிப்பாடாக குழந்தைகளைச் சந்திப்பதைத் தன்னுடைய பயணத் திட்டங்களில் ஒன்றாகக் கொண்டார். ஆனால், கலாம் மாணவர்களையும் இளைஞர்களையும் மிகவும் நம்பினார். இந்த சமூகத்தில் மாற்றமும் வளர்ச்சியும் வரும் என்றால், அது இளைஞர்களால் மட்டுமே சாத்தியம் என்பதை உறுதியாக நம்பினார். அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரைச் சந்திக்க வந்த தலைவர்களையும், பொதுமக்களையும் விட மாணவர்களே அதிகம் இருந்தார்கள். நாட்டினுடைய எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கை வைத்து இளைஞர்களிடம் பேசும்போது, முதலில் அவர்கள் வியப்பது, தங்களை நம்புகிறார்களே என்ற செய்தியைத்தான். எங்கு சென்றாலும் மாணவர் களைச் சென்று சந்தித்துப் பேச வேண்டும் என்ற பேரவா கொண்டிருந்த கலாமின் இறுதிப் பேச்சு, ஐஐஎம் மாணவர்கள் மத்தியிலேயே நிகழ்ந்தது என்பது யதேச்சையாக நடந்த நிகழ்வென்றாலும் அது அவர் ஆழ் மனதின் கனவாக இருந்ததை வெளிக்காட்டிய நிகழ்வே.
புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்
கலாமுக்காக ஒன்றுதிரண்ட மாணவர்கள் துயரம் பொங்கும் முகத்துடன் கடைவீதிகளில் அலைந்துகொண்டிருப்பதை அரசியல் தலைவர்களும், சமூக இயக்கங்களும் கொஞ்சம் கூர்ந்து பார்க்கும்போது, அவர்களுக்குச் சில உண்மைகள் புரியவரலாம். நம் சமூகத்தின் செயல்திட்டங்களில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடமில்லை. அவர்களை முதிரா வயதினராகவே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நல்லது கெட்டது அவர்களுக்கும் தெரியும், அவர்களாலும் புரிந்துகொள்ள முடியும், செயல்படுத்த முடியும் என்பதை நம் பழகிய மனம் ஏற்க மறுக்கிறது. நம் சமூக இயக்கங்களில் இளைஞர்களுக்கான நிகழ்ச்சி நிரல்கள் இல்லை. கட்சிகளின் கொள்கைகளில் மாணவர்களுக்கான தனித்த கொள்கைகள் இல்லை. அவர்களின் செயல்பாடுகள் மாணவர்களை நீக்கியே காலம்தோறும் இருந்துவருகிறது.
ஒருங்கிணைப்பு அவசியம்
ஆனால், மாறிவரும் சமூகத்தின் பிரதிநிதிகளான இளைஞர்களே தாம் வாழப்போகும் சமூகத்தின் முகத்தை வடிவமைக்கத் தகுதியானவர்கள். அவர்களே தங்களின் வாழுமுலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டியவர்கள். அந்த உரிமையைப் பெரியவர்கள், அனுபவசாலிகள் என்ற முன்னுரிமையில் நாம் பறித்துக்கொண்டுள்ளோம். நம்முடைய மிகப் பெரிய நெருக்கடிகளிலும் நம் இளைஞர்களைப் பார்வையாளர்களாக வைத்திருப்பதை நாம் விரும்பி ஏற்கிறோம். அவர்கள் பங்குதாரர்களாக மாறும்போது நம்முடைய பழகிய, கிழிந்த முகங்கள் இன்னும் கிழிந்துபோகுமோ என அச்சமுறுகிறோம்.
அந்த அச்சமற்று கலாம் குழந்தைகளை அணுகியதால்தான் குழந்தைகளுக்கு அவரைப் பிடித்திருக்கிறது. அவர் கூறிய கனவுகளும், கற்பனை களும் எல்லா இளைஞர்களுக்கும் ஏற்புடையதா இல்லையா என்பவையெல்லாம் தனி விவாதங்கள். அவர் தங்களுக்காக அக்கறை கொண்டார், தங்களால் முடியும் என நம்பிக்கை கொண்டார், தங்களை நாடி வருகிறார் என்ற எண்ணம்தான் ஒவ்வொரு தெருவிலும் இன்று கலாமின் புகைப்படத்துக்கு முன் இளைஞர்களைத் திரட்டியிருக்கிறது. திரண்டிருக்கிற எல்லோரும் கலாம் சொன்ன கனவுகளை நனவாக்கிவிடுவார்களா என்றால் அதுவும் கேள்விக்குறியே. ஆனால், இந்த ஒருங்கிணைப்பு அவசியம். ஒரு விஷயத்துக்காக இளைஞர்கள் ஒன்று சேர முடியும், சமூக நடவடிக்கைகளில் பங்கெடுக்க முடியும் என்பது அவசியம்.
இளைஞர்களின் சக்தி
உலகின் சக்தி மிக்க 30 தலைவர்களில் 10-வது இடத்தில் இருப்பவர் ஹாங்காங்கைச் சேர்ந்த இளைஞர் ஜோஷ்வா வோங். சீனா என்னும் வல்லரசைக் கண்ணில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் இந்த இளைஞரின் பின்னால் நிற்கும் ஹாங்காங் நாட்டு இளைஞர்கள் தங்களுக்கான கல்வி, தங்கள் மண் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்கிறார்கள், தங்களை ஆள்பவரைத் தாங்களே தேர்வு செய்ய வேண்டும், சீனா தலையிடக் கூடாது என்கிறார்கள். இந்த 18 வயது இளைஞரின் சக்தியையும் எழுச்சியும் பார்த்து சீனா மிரண்டிருக்கிறது. இந்த இளைஞர்களின் சக்தியை எப்படி ஒடுக்குவது என்பதே சீனாவின் முதன்மையான தலைவலி.
ஜோஷ்வா வோங்குகள் ஒரு நள்ளிரவில் உருவாவ தில்லை. கலாம் சேர்த்த மாணவர் திரளைப் போல் பல தலைவர்கள் சுயநலமில்லாமல் இளைஞர்களை ஒன்று திரட்டும்போதே இதற்கான கதவுகள் திறக்கும். இளைஞர்கள் பலதையும் அறிய முதலில் வீதிகளுக்கு வர வேண்டும். அவர்களின் பெரும் சக்தியையும் பேரறிவையும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு சமூகத்துக்கும் இருக்கிறது. அப்படி ஒருங்கிணைப்பது சாத்தியம் என்பதை கலாமின் இறுதி நாள் நமக்கு உணர்த்தியுள்ளது.
அ. வெண்ணிலா,
‘எரியத் துவங்கும் கடல்’ முதலான நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: vandhainila@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT