Published : 01 Jun 2015 09:57 AM
Last Updated : 01 Jun 2015 09:57 AM
புதுவெளிச்சக் கீற்றாக மலர்ந்திருக்கிறது மோடியின் முதலாண்டு ஆட்சி. இனி, வரப்போகும் நான்காண்டுகளுக்குத் தெளிவான கட்டியம் கூறுகிறது இந்த ஓராண்டு.
மன்மோகன் சிங்கின் பத்தாண்டு ஆட்சியின் முதல் குறைபாடு, யார் ஆட்சியில் இருக்கிறார், யார் கொள்கைகளை வகுக்கிறார், யார் தேசமென்னும் வண்டியின் ஓட்டுநர் என்ற தெளிவு இல்லாமல் இருந்ததுதான். முக்கியமான இலாகாக்கள் எவை எவை தங்களுக்கு வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் பேரம் பேசிப் பிடுங்கிக்கொண்டன. சோனியா காந்தியின் விசுவாசிகள், சீனியர் காங்கிரஸ்காரர்கள் மன்மோகன் சிங்கிடம் பல விஷயங்களைக் கலந்து ஆலோசிக்கவே இல்லை என்று மன்மோகன் சிங்கின் பிரதமர் அலுவலக அதிகாரிகளே எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் ‘தன் இலாகாவின் பிரதமராக’ தன்னைக் கருதிக்கொண்டு, மன்மோகன் சிங்கின் அறிவுரைகளை முற்றாக மறுத்து, தாம் வைத்ததே சட்டம் என்று நடந்துகொண்டனர். குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸ் (ஜி.ஓ.எம்) என்ற சிறு அமைச்சர் குழுக்கள் கேபினெட் மற்றும் பிரதமர் கீழ் உள்ள அதிகாரங்களை ஹைஜாக் செய்துகொண்டன. பல துறைகளில் ஊழல் தலைவிரித்தாடியது. சில துறைகளில் அமைச்சர்கள் பணிக்கே வரவில்லை. இவை அனைத்தும் மோடியின் முதல் மாதத்துக்கு உள்ளாகவே சரிசெய்யப்பட்டுவிட்டன. பிரதமர் தான் தேசத்தை வழிநடத்துபவர் என்பது தெளிவானது. திறமை மிக்கவர்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டனர். இன்று மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், உள்கட்டமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் தத்தம் துறையை எவ்வாறு வெகுவாக முன்னெடுத்துச் சென்றுள்ளனர் என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டும். நிலக்கரி, அலைக்கற்றை ஆகியவற்றில் நடந்த வெளிப்படையான ஏலங்கள், ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாத ஆட்சி என்பதைத் தனித்துக் காட்டுகின்றன.
ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைகளை உருவாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுக் கடமை யாகிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது அரசு.
இந்தியப் பொருளாதார அமைப்புமுறை தன் போக்கை மாற்ற வேண்டியிருக்கிறது. சென்ற ஆட்சியின் பத்தாண்டுகளில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே போனது. கையில் வருமானமே இல்லாமல் நலத்திட்டங்கள் என்ற பெயரில் எல்லாவற்றுக்கும் உரிமைகள் கொடுக்கிறேன், கேரண்டி கொடுக்கிறேன் என்று அரசு கஜானாவைத் திறந்துவிட்டது. பற்றாக்குறை அதிகரிக்க, அரசு வாங்கும் கடன்கள் அதிகரித்தன. இதன் காரணமாகவும் கடுமையான பணவீக்கம் காரணமாகவும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகமாகவே வைத்திருந்தது. இதன் காரணமாகத் தனியார் நிறுவனங்கள் கடன் வாங்கித் தொழில்களை வளர்ப்பது சாத்தியமற்றதாக இருந்தது. மோடியின் ஓராண்டில் பணவீக்கம் கடுமையாகக் குறைந்துள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறை வாக்குறுதி அளித்த அளவுக்குள் இருக்கிறது. இதனால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைப் பல ஆண்டுகள் கழித்துக் குறைத்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த வட்டி விகிதம் மேலும் குறையும்போது குறுங்கடன்கள் பெறும் ஏழைகள், வீட்டு, வாகனக் கடன்கள் பெறும் மத்திய வர்க்கம், தொழிலுக்கான கடன் பெறும் சிறு, பெரு நிறுவனங்கள் என அனைவருமே நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.
மத்திய-மாநில உறவுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சிரீதியாக அரசியலில் கடும் போட்டி இருந்தாலும், எந்த மாநில அரசு வளர்ச்சித் திட்டங்களைக் கோரினாலும் அதற்கான அனுமதியும் நிதியுதவியும் உடனடியாக வழங்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் மோடி. ஸ்மார்ட் சிட்டி திட்டம், சாலைகள், மின் உற்பத்தி போன்ற கட்டமைப்புத் திட்டங்கள் என அனைத்துமே இந்தியா முழுமையிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சீராகப் பிரித்துத் தரப்பட்டுள்ளன. இதற்கு முன் ஒவ்வொரு மாநில அரசும் திட்டக் குழு என்ற அமைப்பின்முன் கையேந்தி நிற்க வேண்டும். திட்டக் குழு கலைக்கப்பட்டு, இப்போது நிதி ஆயோக் என்ற ஆலோசனை கூறும் அமைப்பு மட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நேரு, குஜ்ரால், வாஜ்பாய் முதலியோர் பிரதமராக இருக்கும்போதும் வெளியுறவின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். மோடி அவர்களைப் போலவே உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பிம்பத்தைக் கட்டமைக்க முற்படுகிறார். இதுவரை அவர் சந்தித்துள்ள முக்கியமான நாடுகளின் தலைவர்கள் அனைவரையுமே மோடி வெகுவாகக் கவர்ந்துள்ளார். பாகிஸ்தானுடனான உறவில் மேம்பாடு வருவது சாத்தியமில்லை என்றாலும், வரும் நான்காண்டுகளில் சீனாவுடனான உறவில் மிகப் பெரும் மாற்றம் வரும் என்று தெரிகிறது.
முந்தைய அரசு செய்த நல்ல செயல்கள், மோடி ஆட்சியின் பார்வையுடன் பொருந்திப்போகும்போது அவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஆதார் அட்டை திட்டம், ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குத் திட்டம் வங்கதேசத்துடனான நில மாற்றல் திட்டம் போன்றவை. வளமான தேசத்தை, வலிமையான பாரதத்தை உருவாக்கும் மாபெரும் முயற்சியில் ஓய்வறியாது உழைக்கிறார் மோடி. அதில் ஒரு துளியும் சந்தேகமில்லை!
- பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், விமர்சகர், தொடர்புக்கு: bseshadri@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT