Published : 26 Jun 2015 09:29 AM
Last Updated : 26 Jun 2015 09:29 AM
பட்டியல் இனத்தவர்களுக்கான துணைத் திட்டங்கள் சரியாகச் சென்றடையாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்திருக்கும் மாநிலம் தமிழகம். எனினும், பட்டியல் இனத்தவர்களுக்கான துணைத் திட்டங்கள் சரியாகச் சென்றடையாத மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகமும் இருக்கிறது எனும் தகவல் சற்று அதிர்ச்சி தருகிறது. அரசு வகுக்கும் பொதுத் திட்டங்களில் தலித் மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சிப் பயன்பாடுகள் விடுபட்டுப்போவதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், 1979-ல் சிறப்பு உட்கூறுத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, தனது நிதித் திட்டத்தில் இந்திய அளவில் 16% ஆகவும், மாநில அளவில் 19% தலித்துக்கான ஆகவும் துணைத் திட்ட நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லாவிட்டாலும் தற்போது எஸ்.சி / எஸ்.டி. துணைத் திட்டமாக ஆண்டுக்கு சுமார் ரூ. 2,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்படுகிறது.
அதேசமயம், 35 ஆண்டுகள் கடந்த பின்னும், பின்தங்கிய மக்களின் பொருளாதார வளர்ச்சியில் இத்திட்டங்கள் தன்னிறைவை ஏற்படுத்திவிடவில்லை. ஒதுக்கப்படும் நிதி பயனாளிகளைச் சரிவரச் சென்றடைவதில்லை என்று இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை ஆண்டுதோறும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி வருகிறது. சமூக - பொருளாதாரத்தில் பின்தங்கிய பட்டியல் இனத்தவரை ஒட்டுமொத்த மற்ற மக்களோடு, சமத்துவமாக ஒன்றிணைக்கும் சிறப்புக் கூறுகள் 70% பின்னடைவில் இருப்பதாக இந்திய அரசின் சமூக நீதித் துறை வெளியிட்டுள்ள 50-வது ஆண்டு அறிக்கை கூறுகிறது. இத்திட்டத்தைச் சரியாக நிறைவேற்றுவது சாத்தியமில்லையா எனும் கேள்விக்கு, ஆக்கபூர்வமான விடையை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் தருகின்றன. பட்டியல் இனத்தவர்களுக்கான துணைத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான தனிச் சட்டத்தை அம்மாநிலங்கள் கொண்டுவந்திருக்கின்றன.
நீடிக்கும் சிக்கல்கள்
ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் அத்தனை அக்கறை காட்டப்படுவதில்லை. திட்டக் குழுவின் நடைமுறைப்படி, திட்டங்கள் தேவைப்படும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே அவற்றை உருவாக்குவதிலும் இன்றைக்குப் பங்கேற்றுள்ளனர். போராடிப் பெற்ற உரிமை அது. ஆனால், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேக்கம் ஏற்படுவது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.
நிலைமை இப்படியே தொடர்ந்தால் இந்திய அரசியல் அமைப்பு வழிகாட்டும் சமூக நீதி என்பது பொருளற்றதாகிவிடும். “இதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றால், அது ஏனைய நிதித் திட்ட நடைமுறைகளைப் போலத் தனிச் சட்டமாக்கப்பட வேண்டும்” என்கிறார் திட்டக் குழு உறுப்பினர் பால்சந்தர் முங்கேக்கர்.
பயிர்க் கடன், வீட்டு மனை வழங்குதல், ஊரக வளர்ச்சித் திட்டத்தில் வழங்கப்படும் தொகுப்பு வீடுகளுக்கு கான்கிரீட் தளம் அமைத்தல், பள்ளிகள் - விடுதிகளைத் தரம் உயர்த்துதல் ஆகிய திட்டங்களையும்
கடந்து, ஒரு மாநிலத்தின் பொதுத் திட்டத்தில் பட்டியல் இன மக்கள் வளர்ச்சியில் விடுபட்டுப்போன இடைவெளியை நிரப்புவது அவசியம். மேலும், அம்மக்களின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவையும் சரிசெய்ய வேண்டும். பட்டியல் இனத்தவரைப் பொருளாதாரரீதியாக முன்னேற்ற வேண்டும் என்பது துணைத் திட்டத்தின் கொள்கைகளில் ஒன்று. எனினும், சிறு தொழில், பெருந்தொழில், நடுத்தரத் தொழில் போன்ற பல்வேறு தொழில்களுக்காகப் பிறருக்கு ரூ. 3 கோடி அளவுக்கு நிதி வழங்கப்படும் நிலையில், பட்டியல் இனத்தவருக்கு ரூ. 50 லட்சம்தான் வழங்கப்படுகிறது. எனவே, தொழில்ரீதியான முன்னேற்றம் என்பது பட்டியல் இனத்தவரைப் பொறுத்தவரை நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.
திசைமாறும் நிதி
40% தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் துணைத் திட்ட நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் 40% தலித் மக்கள் வசிக்காத பகுதிகளிலும் இந்த நிதி செலவழிக்கப்படுகிறது என்பதுதான் முரண். பல மாநிலங்களில் இந்நிலைதான். தாழ்த்தப்பட்ட / பழங்குடி பிரிவினருக்குள்ளேயே மிகவும் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி, நெடுஞ்சாலை, மின்சாரம், குடிநீர், விலையில்லாத் திட்டங்கள் போன்றவற்றுக்குச் செலவழிக்கப்படுவது அம்மக்களை அதிருப்தியில் ஆழ்த்துகிறது. நிதி வழங்குவதற்குக் காலம் தாழ்த்துவது, நிதியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவது போன்ற அநியாயங்களும் நடக்கின்றன. சமூகரீதியான புறக்கணிப்புகளைச் சந்திக்கும் பட்டியல் இன மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த இதுபோன்ற திட்டங்கள் இப்படி வீணடிக்கப்படுவது வேதனை தரும் விஷயம்.
ஒரு அரசுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்றால், அது அவர்களின் துணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தொழில், வேளாண்மை, விளையாட்டு, அறிவியல், கல்வி போன்றவற்றில் முன்னோடியாக விளங்கும் தமிழகம் இச்சட்டத்தைக் கொண்டுவருவதில் முனைப்பு காட்ட வேண்டிய தருணம் இது.
ஆந்திரா - கர்நாடகாவின் அக்கறை
பட்டியல் இனத்தவருக்கான துணைத் திட்டங்களை நிறைவேற்றும் தனிச் சட்டத்தை, 2013-லேயே ஆந்திராவும் கர்நாடகாவும் கொண்டுவந்துவிட்டன. ‘தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கான துணைத் திட்ட நிதி ஆதாரங் களைத் திட்டமிடுதல், ஒதுக்கீடு செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் சட்டம் - 2013’ எனும் பெயரில் இரு
மாநிலங்களும் இச்சட்டத்தை அறிமுகப்படுத்தின. இம்மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் சிறப்பான நடைமுறைகள் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பட்டியல் இன மக்கள் எதிர்நோக்கியுள்ள திட்டங்கள் அனைத்தும் அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக்கப்படும் என்றும் இச்சட்டம் உறுதியளிக்கிறது. ஏற்கெனவே உள்ள பொதுத் திட்டங்கள் அப்படியே செயல்படும் சூழலில், இந்தத் தனிச் சட்டத்தின்கீழ் பட்டியல் இன மக்களின் பொருளாதாரம், கல்வி, மனித வள மேம்பாடு, சமூக அந்தஸ்து, வாழ்வியல் பாதுகாப்பு ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்தப்படும். திட்டங்களைக் காலம் தாழ்த்தாமல் முழுமையாகச் செயல்படுத்தும் துறைகளுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த நிதியாண்டு வருவதற்குள் ஆறு மாதத்துக்கு முன்பாகவே துணைத் திட்டச் செயலாக்க வரைவு அறிக்கைஉருவாக்கப்படும். இத்திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதைக் கண்காணிக்க முதலமைச்சர் தலைமை யில் உள்ள குழுவில் சமூக நலத் துறை, பழங்குடியினர் நலத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, வருவாய்த் துறை,
கிராமப்புற வளர்ச்சி - ஊராட்சி அமைப்புகள், உயர்கல்வித் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அந்தந்த தனித் தொகுதிகளின் சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்குழுவில் இடம் பெறுவார்கள். மாவட்ட - ஊராட்சிகள் அளவிலும் இக்கண் காணிப்புக் குழுக்கள் செயல்படும். இக்குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி இத்திட்டத்தின் செயல்பாடுகள், பயன்பாடுகள்குறித்து ஒளிவுமறைவின்றி மதிப்பீடு செய்யும்.
தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திலும் இச்சட்டத்தின் தேவை பேச்சளவில் வந்துவிட்டது. உண்மையில், எல்லா மாநிலங்களிலும் இதன் தேவை விவாதிக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து இதற்காகக் குரல் எழுப்பிவருகின்றன. இந்தக் கோரிக்கை தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. 2016 தேர்தலையொட்டி, தலித் வாக்குகளைக் கவரும் நோக்கில், தலித் கட்சிகள் உட்படப் பல கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இக்கோரிக்கையைச் சேர்க்கத் தயாராகிவருகின்றன. இதை அதிமுக அரசும் கவனித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சமூக வளர்ச்சியில் காணும் ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், பாகுபாடுகளை ஒழிக்கவும் தீண்டாமை ஒழிப்புச் சட்டமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் எவ்வாறு பயனளிக்கின்றனவோ அதுபோலப் பொருளாதார - அரசியல் வளர்ச்சியில் பட்டியல் இன மக்கள் முன்னேற்றம் அடைய இந்தச் சட்டம் அவசியம். அப்போதுதான் சமூகத்தில் அம்மக்களுக்கான உரிமைகள் காக்கப்படும்.
- அன்புசெல்வம், ஆய்வாளர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: anbuselvam6@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT