Published : 08 Jun 2015 08:46 AM
Last Updated : 08 Jun 2015 08:46 AM

உணவுச் சூழல் என்றோர் அதிசயம்!

சில நுண்ணுயிரிகள் வெந்நீர் ஊற்றுகளிலும் எரிமலைக்குள்ளும் கிடைக்கிற கந்தகச் சேர்மங்களைக்கூட உண்டு உயிர்வாழ்கின்றன. 

“கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும்” ஏதோ ஒரு விதத்தில் கடவுள் உணவளித்துவிடுவார் என்று பக்தர்கள் பரவசப்படுகிறார்கள். உலகில் ஒவ்வொரு உயிரினமும் தனது உணவைப் பலவிதமான உத்திகளில் பெற்று உயிர் வாழ்ந்துவிடுகிறது.

தாவரங்கள் பச்சையம் என்ற சேர்மத்தின் உதவியுடன் காற்றிலுள்ள கரியுமிலவாயு, நீர், சூரிய ஒளியின் ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தமது உணவைத் தாமே தயாரித்துக்கொள்கின்றன. பலவகை நுண்ணுயிரிகள் கார்பன் சேர்மங்களைச் சர்க்கரைகளாக மாற்றி உண்கின்றன. வேறு சில நுண்ணுயிரிகள் கார்பன் சேர்மங்களின் உதவியின்றி பிற தனிமங்களை உண்கின்றன. கடலடி வெந்நீர் ஊற்றுகளிலும் எரிமலைக்குள்ளும் கிடைக்கிற கந்தகச் சேர்மங்களைக்கூட உண்கின்றன.

காளான்கள் பச்சையமும் சூரிய ஒளியும் தேவைப்படாத வகையில், தாவரப் பொருட்களிலும் விலங்குக் கழிவுகளிலும் படர்ந்து தமக்கான உணவைப் பெறுகின்றன. விலங்குகளின் குடல்களிலும் பல கோடி ஒட்டுண்ணிக் கிருமிகள் உணவைப்பெற்று உயிர்வாழ்கின்றன. ரொட்டி, பழங்கள் போன்றவற்றில் தோன்றும் பூஞ்சைகளுக்குக் கனிமங்களும் சர்க்கரைகளும் பயோட்டின் போன்ற வைட்டமின்களும் உணவாகின்றன.

அவற்றை விட உயர்ந்த பரிணாமப் படியிலுள்ள தாவரங்களுக்குப் பல வகையான அமினோ அமிலங்களும், புரதங்களும், கொழுப்புகளும் தேவை. தரையிலிருந்து கனிமங்களை உறிஞ்சி அவை தமக்கான ஊட்டச் சத்துகளைப் பெற ஏதுவாக அவற்றில் பலவிதமான நொதிகள் உற்பத்தியாகின்றன.

உணவுச் சுழல்

உணவுச் சுழல் என்கிற அமைப்பில் பூஞ்சைகளும் கிருமி களும் தாவரங்களும் ஒன்றையொன்று உணவாக்கிக் கொள்கின்றன. அவையெல்லாம் இறந்தபின் பூமியில் புதைந்து மக்கி தாவரங்களுக்கு ஊட்டச் சத்துகளை வழங்குகின்றன. தாவரங்கள் விலங்குகளுக்கும், பறவை களுக்கும் உணவாகின்றன. விலங்குகளும் பறவைகளும் மனிதர்களும் ஒருவருக்கொருவர் உணவாகின்றனர். இயற்கை எதையும் வீணாகவிடுவதில்லை. ஒன்றை மற்றொன்றாக மாற்றித் தனிமங்களையும் சேர்மங்களையும் மறு சுழற்சி செய்துகொண்டேயிருக்கிறது. மாணிக்கவாசகர், ‘புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்’ என்று சொல்வது வேதிகளும் சேர்மங்களும் பல்வேறு விதமாகக் கூட்டு சேர்ந்து பல்வேறு உயிரினங்களாகப் பரிணமித்ததைத்தான் உள்ளுணர்வால் உணர்ந்து உரைத்தாரோ என எண்ணத் தோன்றுகிறது.

தாவரங்கள் கரியமில வாயுவையும் நீரையும் மாவுப்பொருளாக மாற்றி உணவாகக் கொள்ள உதவுகிற நொதிகள் மனிதரிலும் விலங்குகளிலும் இல்லை. எனவே, அவை தாவரங்களையும் விலங்குகளையும் ஆயத்த உணவுபோல உண்ண வேண்டியுள்ளது. அதை ஜீரணித்து திசுக்களாகவும் ஆற்றலாகவும் மாற்றி உடலுக்கு வலுவும் உருவமும் உண்டாகும்படி செய்யக்கூடிய நொதிகளும் ஹார்மோன்களுமே விலங்குகளின் உடலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. செரிமானம் என்பது மிகவும் குறைந்த செயலுறு திறனுள்ள நிகழ்வு. பத்து கிலோ உணவை உட்கொண்டால் ஒரு கிலோ ஊட்டச்சத்துதான் விலங்கின் உடலில் உருவாகிறது. மீதமெல்லாம் மலமாக வெளியேற்றப்படுகிறது.

உண்ணும் உணவைப் பொறுத்து ஜீரண மண்டலத்தின் அமைப்பும் மாறுகிறது. வௌவால், மலைப்பாம்பு போன்றவற்றுக்கு மலக்குடலே கிடையாது. அவை விழுங்கியதில் ஜீரணமானது போக மிச்சமிருப்பதை வாய் வழியாகவே வெளியேற்றிவிடுகின்றன.

ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் உணவான இலைகளிலும் தழைகளிலும் வைக்கோலிலும் புற்களிலும் செல்லுலோஸ் அதிகம். அதை ஜீரணிக்க உதவும் நொதிகள் அவ்விலங்குகளின் வயிற்றில் உற்பத்தியாகின்றன. மனிதர்களுக்கும் ஊனுண்ணி விலங்குகளுக்கும் வேறுவிதமான நொதிகளும் செரிமானத் திரவங்களும் உற்பத்தியாகின்றன.

ஆதார உணவு

தாவரங்கள்தான் உலக உயிரினங்களின் ஆதார உணவு. உலகிலுள்ள உயிரினங்களின் மொத்த நிறையைவிடத் தாவரங்களின் மொத்த நிறை பன்மடங்கு அதிகம். அத்துடன் அவை வெகுவேகமாக வளரவும் இனப்பெருக்கம் செய்யவும் கூடியவை. பூமிப்பரப்பில் விழும் சூரிய ஆற்றலில் ஆயிரத்தில் ஒரு பங்கை மட்டுமே தாவரங்கள் உட்கவர்ந்து ஆண்டுதோறும் 15 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடி டன்கள் வரை கார்பன் சேர்மங்களை உற்பத்தி செய்து, மற்ற விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவளிக்கின்றன. அந்த உயிரினங்கள் வேறு உயிரினங்களுக்கு உணவாகின்றன.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் பலவிதமான சுவைகளை உடைய உணவை உண்ண வேண்டுமென ஆதி மனிதர்களே அனுபவ அடிப்படையில் அறிந்துகொண்டார்கள். கார்பன் சேர்ம உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என்ற மூன்று வகையான ஊட்டச் சத்துகள் இருப்பதாக வில்லியம் ப்ரௌட் என்ற ஆங்கிலேயே மருத்துவர் கண்டுபிடித்தார். 19-ம் நூற்றாண்டில் அவற்றின் பணிகள் கண்டறியப்பட்டன.

உடல் வளர்ச்சிக்குப் புரதம் இன்றியமையாதது. பருப்புகள், மாமிசம், மீன் ஆகியவை புரதச்சத்து மிக்கவை. சில நாடுகளில் பூச்சிகளும் எறும்புகளும் புழுக்களும் புரத உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

1930-ல் வில்லியம் கம்மின் ரோஸ் என்ற அமெரிக்க ஆய்வர் உணவில் லைசீன், டிரிப்டோபான், ஹிஸ்டிடீன், பினைலெனனீன், லியூசின், ஐசோலியூசின், திரியோனின், மெதியோனின், வாலீன், ஆர்கினைன் என்ற பத்து அமினோ அமிலங்களில் இருப்பது அவசியம் என்று கண்டுபிடித்தார். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பலவிதமான நோய்களுக்குக் காரணம் வைட்டமின்கள் என்று பெயரிடப்பட்ட சேர்மங்களின் பற்றாக்குறையே எனக் கண்டறியப்பட்டது. பலவிதமான வைட்டமின்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு ஏ, பி, சி, டி, இ, கே எனப் பெயர்கள் சூட்டப்பட்டன. இயற்கையான வைட்டமின்களுடன், செயற்கையானவையும் உருவாக்கப் பட்டுள்ளன.

இரும்பைக் கரைக்கும் ஜீரண அமிலங்கள்

பரிணாம மாற்றத்தின்போது விலங்குகளின் ஜீரண அமைப்புகளும் உருமாறியுள்ளன. சைபீரியாவில் ஒரு குகையில் நியான்டர்தால் மனிதர்களின் மலம் கிடைத்தது. அவற்றில் ஓர் அடி நீளமுள்ள எலும்புத் துண்டுகளும் இருந்தன. அவர்கள் பெரிய பெரிய மாமிசத் துண்டுகளை அவசர அவசரமாக அப்படியே எலும்புடன் சேர்த்து விழுங்கியிருக்க வேண்டும். அந்த எலும்புகள் எப்படி வயிற்றையும் குடல்களையும் கடந்து ஆசனவாயின் மூலம் வெளிப்பட்டன என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அக்காலத்தில் மனிதர்களின் வயிற்றில் இருந்த ஜீரணத் திரவங்கள் பெரும் வீரிய அமிலங்களாக இருந்திருக்க வேண்டும். மனிதர்கள் தீயில் மென்மையாக்கி உண்ணக் கற்றுக்கொண்ட பிறகு, அந்த அமிலங்களின் வீரியம் படிப்படியாகக் குறைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இப்போதுகூடக் காட்டில் வாழும் புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் ஜீரண அமிலங்கள் இரும்புத் துண்டுகளைக் கூடக் கரைக்கும் அளவுக்கு வீரியமாக உள்ளன.

அளவாகவும் மிதமாகவும் உண்டால் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழலாம் எனக் கிரேக்க அறிஞர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். விலங்குகள் உடல் நலம் குன்றினால் உணவு கொள்வதில்லை. பட்டினியிருப்பதன் பயனை, ‘லங்கணம் பரம ஔஷதம்’ என்ற பழமொழி வெளிப்படுத்துகிறது. உபவாசமிருப்பது மதச் சடங்குகளில் ஒன்றாகவே ஆக்கப்பட்டுள்ளது.

- கே.என்.ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x