Published : 13 Jun 2015 09:25 AM
Last Updated : 13 Jun 2015 09:25 AM

ராமனும் கிருஷ்ணனும்

கே.எஸ்.கிருஷ்ணன் விஞ்ஞானி மட்டுமல்ல, அதற்கெல்லாம் மேலே ஆகச்சிறந்த முழு மனிதர்!

சுதந்திர இந்தியாவில் பிரதமரின் விஞ்ஞான ஆலோசகராக முதலில் நியமிக்கப்பட்டவர் ஒரு தமிழர். இந்தியா முழுமையும் அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கு அவசியமான கொள்கைளை உருவாக்குவதற்கும் தேசிய பௌதிக (இயற்பியல்) ஆராய்ச்சிக் கூடங்களை அமைப்பதற்கும் பிரதம மந்திரிக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டவர் ‘கரியமாணிக்கம் சீனிவாசன் கிருஷ்ணன்' என்று அழைக்கப்படும் கே.எஸ். கிருஷ்ணன்.

விடுதலை பெற்ற காலகட்டத்தில் பொறியியல் மேலாண்மை, மாபெரும் தொழிற்சாலைகள் அமைப்பது, அறிவியல் கூடங்கள் நிறுவுவது ஆகியவற்றில் பிரதமர் நேரு தீவிரமாகச் செயல்பட்ட காலமது. டாக்டர் கே.எஸ். கிருஷ்ணனின் அறிவியல் பேராற்றலை நேரு தலைமையிலான மத்திய அரசு சரியாகப் பயன்படுத்திக்கொண்டது.

1898-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். தான் வில்லிபுத்தூர் இந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது, அறிவியல் வகுப்பை அழகு தமிழில் புரியும்படி நடத்தி விஞ்ஞானத் துறையில் மோகத்தை ஏற்படுத்தியவர் திருமலைக் கொழுந்துப்பிள்ளை என்று அடிக்கடி தனது பள்ளி ஆசிரியரை ஞாபகப்படுத்திக்கொள்கிறார். அதே வேளையில், தனது மனனப் பயிற்சிக்கு அடிகோலியவர் வைத்தி என்பவர் நடத்திய திண்ணைப் பள்ளிக்கூடம் என்று கூறுகிறார். டாக்டர் கே.எஸ்.கே. தமிழ் மற்றும் சம்ஸ்கிருத இலக்கியங்கள் மீது அலாதிப் பிரியமுள்ளவர். பெரியவாச்சான்பிள்ளையின் உரைநடையில் தன்னை மறந்தவர். கம்பராமாயணத்தில் மிகுந்த தேர்ச்சி உள்ளதை கம்பன் கழக விழாவில் நிரூபித்தவர். திருக்குறளை நேசித்ததோடு மட்டுமல்லாமல் ஆங்கிலப்படுத்தியவர்.

பேர்போன இடைவேளை வகுப்பு

அக்கால சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் கே.எஸ். கிருஷ்ணனின் மதிய உணவு இடைவேளை உரையாடல் வகுப்பு பேர்போனது. தனது கல்லூரி மாணவர்களுக்காகவும், அடுத்த கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்களுக்காகவும் பௌதிகம், இரசாயனம், கணிதம் போன்ற பாடங்களை எளிய முறையில் விளக்குவார்.

உலகமே வியந்து பாராட்டிய ஒளிவிலகல் கண்டுபிடிப்பை ராமன் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பு வரை ‘ராமன்-கிருஷ்ணன் விளைவு' என்றே மேலை நாட்டினர் அறிந்திருந்தனர். சர்.சி.வி. ராமனோடு இணைந்து ஒளிவிலகல் கண்டுபிடிப்பில் பெரிய அளவில் பங்காற்றி மிகச் சிறிய அளவே பாராட்டு பெற்றவர் கே.எஸ். கிருஷ்ணன். ராமன் நோபல் பரிசு பெற்றபின்பு ‘ராமன் விளைவு' என்றே அழைக்கப்பட்டது. ராமன் விளைவு சம்பந்தமாக கிருஷ்ணன் ராமனுடன் இணைந்து 1927-ம் ஆண்டு முதல் 1929 வரை ஒளி விலகல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ‘நேச்சர்’ (Nature) என்ற இதழில் (சுமார் 20 கட்டுரைகள்) தீட்டியுள்ளார்.

நிறப்பிரிகையின் பரவசம்

அக்காலப் பத்திரிகை உலகங்களும் ராமனுக்குக் கிடைத்த அங்கீகாரம் கிருஷ்ணனுக்குக் கிடைக்க வில்லையே என்று பல தகவல்களை வெளியிடலாயின. அதே சமயம் கிருஷ்ணன், தனது குரு பேராசிரியர் இராமனை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் மிகவும் தன்னடக்கத்துடன், “தனது பேராசிரியர் இட்ட பணியை மிகவும் கவனமாக நிறைவேற்றினேன் என்றே குறிப்பிட்டுள்ளார். ராமன் விளைவை நிறப்பிரிகை மூலமான ஒளிச்சிதறலை முதன்முறையாகப் பார்த்துப் பரவசம் அடைந்ததை டைரிக் குறிப்பில் பதிவுசெய்ததைப் பெருமையாக நினைக்கிறேன்” என்று கூறுகிறார்.

“எனது குரு ராமன் சரியான தருணத்தில் என்னிடம் வந்து, கடந்த மூன்று வருடங்களாக கோட்பாட்டு ஆய்வுரீதியில் உனது நேரத்தைச் செலவிட்டது போதும். அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படை விதிகளான கோட்பாட்டுகளிலிருந்து விடுபட்டு செய்முறை பரிசோதனை ஆய்வுகளில் ஈடுபடுவதே நல்லது” என்று கூறி, ராமன் ஆராய்ச்சிக் குழுவில் தன்னைச் சேர்த்துக்கொண்டதைப் பெருமையாக நினைவுகூர்கிறார்.

ராமன் விளைவு கண்டுபிடிப்புக்குப் பிறகு கே.எஸ். கிருஷ்ணன் அடுத்தகட்ட அறிவியல் ஆய்வுகளுக்காகப் பிரிந்துவிட்டார். காந்தப் படிகங்கள் பற்றியும், சின்தெடிக் இயற்பியல் அடிப்படை விதிகள்குறித்தும் ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார். இந்த ஆய்வின் காரணமாக மை பொருளிலிருந்து மருந்துப் பொருட்கள் வரையிலும் வண்ணக் குழம்பிலிருந்து (வார்னிஷ்) பிளாஸ்டிக் சாமான்கள் வரையிலும் பயன்பாட்டு அடிப்படையில் அவர்தம் ஆய்வு அமைந்தது.

கவுரவித்த விருதுகள்

1937-ல் கேம்பிரிட்ஜ் பல்கலையில் டாக்டர் ரூதர்போஃர்டு, லண்டனில் சர் வில்லியம் பிராக் போன்ற அறிவியல் மேதைகள் இவரைச் சொற்பொழிவு ஆற்றுவதற்கு அழைத்தனர். 1940-ம் ஆண்டு லண்டன் ராயல் சொசைட்டியில் சிறப்புத் தோழமை உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கும்போது கிருஷ்ணனின் வயது 42. 1947-ல் தேசிய இயற்பியல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். தேசிய அறிவியல் நிலையத் தலைவர், அணுசக்திக் குழுவின் உறுப்பினர் அணு ஆயுதத்துக்கு எதிராக சமாதான நோக்கில் உருவாகிய பக்வாஸ் இயக்கம் போன்ற பல்வேறு தளங்களில் இவரது பங்களிப்பு இருந்தது. பிரிட்டிஷ் அரசின் ‘நைட்' விருது, இந்திய அரசின் பத்மபூஷண், ரசாயன விஞ்ஞானங்களுக்காக சாந்தி ஸ்வருப் பட்நாகர் விருது, பல வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் பதக்கங்கள் போன்றவையும் இவரைக் கவுரவித்தன.

1948-ம் ஆண்டு அலகாபாத் பல்கலையின் இயற்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, மகாத்மா காந்திக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு அளிப்பதற்கு வேண்டிய முயற்சிகளை யாருக்கும் தெரியாமல் மேற்கொண்டார். காந்திஜி குறித்த செய்திகளை இந்தியாவின் மீது பற்றுக்கொண்ட வெளிநாட்டவரான ஹெராஸ் அலெக்ஸாண்டர் உதவியுடன் தயாரித்து, ராஜாஜியின் ஒப்புதலுக்காக அனுப்பினார். அவ்வாண்டுக்கான சமாதான நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை. ஏனெனில், சமாதான விருது பெறுபவர் உயிருடன் இருக்க வேண்டும். அந்த வருடத்தில்தான் காந்திஜி கோட்ஸேவால் கொல்லப்பட்டார்.

கே.எஸ்.கே உருவாக்கிய தமிழ்ச் சங்கம்

கல்கத்தா தமிழ்ச் சங்கத்தை உருவாக்கியதில் கே.எஸ்.கே-வுக்குப் பெரும் பங்குண்டு. டெல்லி தமிழ்ச் சங்கத்திலும் தொடர்ந்து பங்களித்தார். “அவர் புகழ்வாய்ந்த விஞ்ஞானி மட்டுமல்ல, அதற்கெல்லாம் மேலே உயர்ந்த ஆகச்சிறந்த முழுமையான மனிதர்” என்று குறிப்பிடுகிறார் நேரு.

ராமன் விளைவும் கிருஷ்ணன் வரலாறும்

சென்னை கணிதவியல் நிறுவனப் பேராசிரியர் பாஸ்கரைச் சிறப்பு ஆசிரியராகக் கொண்டு கே.எஸ்.கிருஷ்ணனின் நூற்றாண்டு விழாவையொட்டி ‘கரண்ட் சயின்ஸ்’ சிறப்பிதழ் வெளியிட்டது. அந்த இதழில் சிவ். விசுவநாதன் கே.எஸ். கிருஷ்ணனின் மனிதாபிமானத்தை அலசி நல்லதொரு கட்டுரையைக் குறிப்பிடும்போது, ராமன் விளைவு என்பது அறிவியல் உண்மை. கிருஷ்ணன் வரலாறு என்பது அறிவியலுக்கான சமூக வரலாற்றின் ஒரு பகுதி’என்று குறிப்பிடுகிறார். 1961-ம் ஆண்டு ஜூன் 14-ல் மாரடைப்பால் மறைந்தார் கிருஷ்ணன்.

தலைநகர் டெல்லியில் ஒரு சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கல்கத்தாவில் இன்றும் இவர் நினைவுகூரப்படுகிறார்.

- ரெங்கையா முருகன், ‘அனுபவங்களின் நிழல் பாதை’ என்ற நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: murugan_kani@yahoo.com

கே.எஸ். கிருஷ்ணன் நினைவுதினம் ஜூன் - 14

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x