Published : 15 Jun 2015 09:33 AM
Last Updated : 15 Jun 2015 09:33 AM
எழுத்தாளர் ச.பாலமுருகனின் சொந்த ஊர் பவானி. பவானி ஆறு மற்றும் பவானி சாகர் அணை குறித்து தனது நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார். “பவானி என்றாலே அதன் பிரமாண்டமான வெள்ளப் பெருக்குதான் நினைவுக்கு வருகிறது. என் இளமைக் காலத்தில் பவானியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாத ஆண்டுகளே கிடையாது. குறிப்பிட்ட மாதங்கள் வந்தாலே கரையோர மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் இடம் பெயர்வார்கள். அப்படியும் பவானி வீடு, காடு, கரைகளை புரட்டிக்கொண்டு போய்விடும்.
பவானி அரசு மருத்துமனையில் என் அம்மாவுக்கு பிரசவம். என் தங்கை பிறந்தாள். அன்று இரவு அம்மாவுக்கு துணையாக பக்கத்தில் நான் படுத்திருக்கிறேன். இரவு திடீரென்று மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. குழந்தையை தலை மீதும் என்னை தோள் மீதும் தூக்கிக்கொண்டு மாரளவு தண்ணீரில் கிட்டத்தட்ட நீந்தி எங்களை கரை சேர்த்தார் அம்மா.
அந்தக் காலகட்டத்தில் எங்கள் வாழ்க்கை ஆற்றுடன் பின்னிப் பிணைந்திருந்தது. பல் துலக்குவது, குளிப்பது, சமையலுக்கு தண்ணீர் எடுப்பது, அரைஞ்சான் மீனைப் பிடிப்பது, ஆற்றில் காசு போட்டு எடுத்து விளையாடுவது, நீச்சல் அடிப்பது என்று எங்களின் ஒவ்வொரு நாளிலும் ஆறு ஓடியது. மாலையானால் அகண்டிருக்கும் ஆற்றங்கரை மணல் வெளியில் மக்கள் குவிவார்கள். தை மாதம் காணும் பொங்கலுக்கு ஊர் கூடி பவானி கரையில் பொங்கல் வைக்கும்.
பவானி அணையில் முதலில் கட்டப்பட்டது மேல் பவானி அணைதான். அதில் மின் உற்பத்தி செய்த பின்புதான் முதல் மின் இணைப்பு கோவைக்கு வந்தது. அப்போது ஆங்கிலேய அதிகாரிகள் விவசாயிகளிடம் மின் மோட்டாரை அறிமுகப்படுத்தி, கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்துக்காட்டினார்கள். தண்ணீர் வேகமாக பீய்ச்சி அடித்ததும் என்னவோ ஏதோ என்று பயந்துப் போனார்கள் விவசாயிகள். அதன் காரணமாகவே யாரும் அதைப் பயன்படுத்த முன்வர வில்லை. காரமடை ரங்கநாதர் கோயில் திருவிழாவில் அதிகாரிகள் மின் மோட்டாரை இயக்கிக் காட்டி விவசாயிகளுக்கு புரிய வைத்தார்கள்.
பவானி சாகர் அணை. | படம்: ஜெ.மனோகரன்
அதன் பின்பு கீழே பவானி சாகர் அணை கட்டப்பட்டது. பவானி ஆறு முதல் முதலாக கீழ் கொங்கு மண்டலத்தில் பாய்ந்தது. ஆறுதான் இந்தப் பகுதியில் சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தியது. அணை கட்டப்படும் முன்பு வரை இங்கே எல்லாமே வானம் பார்த்த பூமிதான். நெல், கரும்பை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அடிக்கடி பஞ்சம், நோய் நொடிகள் வந்து மக்கள் கொத்துக் கொத்தாக செத்துப்போவார்கள். மக்கள் தொகையும் குறைவு. 1901-ல் 1.8 மில்லியனான இருந்த மக்கள் தொகை 1951-ல் 3.2 மில்லியனாகவும், 2001-ல் 6.9 மில்லியனாகவும் பெருகியது. எல்லாம் ஆறு செய்த அற்புதம்.
ஒரு வறிய சமூகத்தை நில உடைமைச் சமூகமாக மாற்றியது பவானி. குற்றங்களை குறைத்தது பவானி. கொங்கு மண்ணின் விருந்தோம்பல் குணத்தை கொடுத்தது பவானி. ஈரோட்டு மஞ்சள் பெருமையைத் தந்தது பவானி.
1970-களில் இறுதியில் பவானி படுகையில் இயந்திரங்கள் மணல் அள்ளுவதை முதன் முதலில் பார்த்தேன். 1980-களில் பவானி தண்ணீர் சாயமும் கருப்புமாக ஓடியதை முதன் முதலில் பார்த்தேன். 1990-களில் நதி சாக்கடையாக மாறியதை முதன்முதலில் பார்த்தேன். 2000-களில் ஒரு தலைமுறைக்கே நீச்சல் தெரியாமல் போனதை முதன் முதலில் உணர்ந்தேன். அழிந்துக்கொண்டிருக்கும் நதியின் முன்பு கையாலாகாத மவுனச்சாட்சியாக நிற்கிறோம் நாங்கள்!
நேரில் வந்த நேரு
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே மோயாறும் பவானியும் இணையும் இடத்தில் ஒரு அணையைக் கட்ட ஆங்கிலேய அரசு திட்டமிட்டிருந்தது. 1834-ல் சர் ஆர்தர் காட்டன் என்பவர் பவானி சாகர் அணையைக் கட்ட ஆய்வுகள் மேற்கொண்டார். ஆனால், அந்தத் திட்டம் 1856-ல் கைவிடப்பட்டது. 1900-களில் தஞ்சை டெல்டா பகுதிகளில் காவிரி நீர் வரத்து குறைந்தபோது மீண்டும் அணையைக் கட்ட கோரிக்கை எழுந்தது. 1905-ம் ஆண்டு ஏ.என்.ஆரோக்கியசாமி என்பவர் மீண்டும் ஆய்வுகளை மேற்கொண்டார். அவர்தான் பவானி ஆற்றில் மேல் பவானி அணை, கீழ் பவானி அணை என்று இரு அணைகளைக் கட்டலாம் என்று குறிப்பிட்டார். 1908-ம் ஆண்டு நீலகிரியில் மேல் பவானி அணை கட்டப்பட்டது. அந்தசமயத்தில் மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அரசாங்கம் பெரும் நிதியை அதற்கு ஒதுக்கியிருந்தது. இதனால், கீழ் பவானி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்பு 1930-களின் இறுதியில் மீண்டும் பேச்சு எழுந்தபோது இரண்டாம் உலகப்போர் தொடங்கிவிட்டது.
1953-ல் பவானி சாகர் அணை கட்டுமானத்தை பார்வையிட வந்த அப்போதைய பிரதமர் நேரு, தமிழக முதல்வர் ராஜாஜி. (கோப்புப் படம்)
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு மீண்டும் இந்தத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு 19.9.1947 அன்று திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ. 9.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
1948-ல் அணைக் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அணைக்காக 3610 சதுர கி.மீ. பரப்பளவு ஆர்ஜிதப்படுத்தப்பட்டது. ஆறு கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அங்கிருந்து சுமார் 870 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டனர். அணையின் வலது, இடது புறங்கள் முறையே 3.62 கி.மீட்டர், 4.82 கி.மீட்டர் தொலைவுக்கு மண்ணால் அணை கட்டப்பட்டது. மீதமுள்ள 1,523 அடிக்கு கல்லணை கட்டப்பட்டது. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மண் அணையும் தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணையும் இதுதான்.
1953-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜியும் பிரதமர் நேருவும் கட்டுமானப் பணிகளை நேரில் வந்து பார்வையிட்டனர். 1955-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டது. அணை மூலம் சத்தி, கோபி, பவானி, ஈரோடு, கரூர் பகுதிகளில் சுமார் 2,07,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
(பாய்வாள் பவானி)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT