Published : 05 Jun 2015 09:43 AM
Last Updated : 05 Jun 2015 09:43 AM
வீராணம் ஏரிக்கு நீராதாரமாக விளங்குவது பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்யும் மழைநீரும், காவிரித் தண்ணீரும்தான்.
புதிய வீராணம் திட்டத்தின் அம்சங்கள்
வீராணத்திலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக ஏரியின் உயரம் 45.5 அடியிலிருந்து 47.5 அடியாக உயர்த்தப்பட்டது. இதனால் ஏரியின் கொள்ளளவு 0.93 டிஎம்சி-யிலிருந்து 1.455 டிஎம்சியாக உயர்ந்தது.
சென்னைக்கு வினாடிக்கு 77 கன அடி வீதம் தண்ணீர் திறப்பதன் மூலம், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்குக் கிடைக்கும்.
வீராணம் ஏரியின் வடக்கு எல்லையில் சேத்தியாதோப்பு என்ற இடத்தில் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் வடகூத்து என்ற இடத்தில் அமைந்துள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 1,755 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட பெரிய இரும்புக் குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. அங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீர், 8 கி.மீ. தொலைவில் நெய்வேலி அருகே அமைந்துள்ள காடாம்புளியூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இடம் இது. அதாவது, கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு 3 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டி உள்ளது. அங்கிருந்து புவி ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி 200 கி.மீ. தொலைவில், சென்னையில் உள்ள போரூர் நீர் பங்கீட்டு நிலையத்தை வீராணம் ஏரித் தண்ணீர் வந்தடைகிறது. இது, கடல் மட்டத்திலிருந்து 14 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து சென்னையின் பிற இடங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
வீராணம் திட்ட குழாய்கள் வடலூர், நெய்வேலி, பண்ருட்டி, திண்டிவனம், மதுராந்தகம் வழியாக சென்னை வரை அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழாய்கள் கடல் மட்டத்துக்கேற்ப சில இடங்களில் தரைக்கு மேலாகவும், சில இடங்களில் தரைக்கு உள்ளே பதிக்கப்பட்டும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆழ்துளைக் கிணறுகளின் பங்கு
வீராணம் திட்டம், அந்த ஏரியின் தண்ணீரை மட்டும் நம்பி ஏற்படுத்தப்பட்டதல்ல. இந்தத் திட்டத்தின் மற்றொரு பகுதியாக ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சேகரிக்கப்படும் தண்ணீரையும் சென்னைக்கு எடுத்து வருகின்றன புதிய வீராணம் திட்டக் குழாய்கள். சேத்தியாதோப்பில் இருந்து பண்ருட்டி வரை 30 கி.மீ. தொலைவுக்கு 45 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள், வீராணம் திட்ட குழாயை ஒட்டியவாறே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரே நேரத்தில் 30 கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும். இந்தத் தண்ணீரும் வடகூத்து சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு எடுத்து வரப்படுகிறது. இவ்வாறு, ஒரு நாளில் அதிகபட்சம் 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அந்தத் தண்ணீர்தான் வீராணம் குழாய்கள் வழியாக திட்டம் தொடங்கி முதல் ஒன்றரை மாதங்கள் சென்னைக்கு வழங்கப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் முதல் முதலாக 2004, செப்டம்பர் 20-ம் தேதிதான் சென்னையை வந்தடைந்தது.
ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே தேவை என்பதால், அந்தந்த நாளின் தேவைக்கேற்ப எந்த நீராதாரத்தைப் பயன்படுத்தலாம் என்று சென்னைக் குடிநீர் வாரியம் முடிவு செய்கிறது. இதனால், வீராணம் ஏரியில் ஏதேனும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும்கூட சென்னைக்கு குடிநீர் வரத்து தடைபடாது.
தண்ணீரில் மூழ்கும் பயிர்கள்
வீராணம் ஏரியின் உயரம் 2 அடி உயர்த்தப்பட்டதால், மேல்பகுதியில் கரைகளும் உயர்ந்து மழைக் காலங்களில் ஏரியின் மேல் பகுதியிலிருந்து ஓடிவரும் மழைநீர், ஏரிக்குள் செல்ல வழியின்றி, ஏரியின் சுற்றுப் பகுதிகளில் உள்ள வயல்களில் 100 மீ. தொலைவுக்கு சூழ்ந்துவிடுகிறது. இதனால், விளை நிலங்களில் விதைக்கப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிடுகின்றன. மேலும், ஏரியின் நீர்மட்டத்தைவிட வயல் பகுதி தாழ்வாக இருப்பதால் மழை இல்லாத பிற நாட்களிலும் தண்ணீர் கசிந்து பயிர்கள் நாசமாகின்றன. இதனால், பழஞ்சநல்லூர், அறந்தாங்கி, அகரபுத்தூர், சித்தமல்லி, வானமாதேவி, மணவெளி, உடையூர், சோழதரம், வட்டத்தூர் உள்ளிட்ட 20-க்கும் அதிகமான கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசனம் பாதிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், 7 ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித் துறை அதிகாரிகள், ‘வயல்களில் தேவையான மண்ணைக் கொட்டி நிலப் பரப்பை ஒரு அடி உயர்த்தலாம்’ என்று யோசனை கூறினர். இதற்காகத் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவு அறிக்கை ஏனோ இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறது.
கடலில் கலக்கும் 3 டிஎம்சி தண்ணீர்
சரியான திட்டமிடல் இல்லாததால் மழைக் காலங்களில் ஆண்டுக்கு 1 டிஎம்சி முதல் 3 டிஎம்சி தண்ணீர் வரை வீராணத்திலிருந்து வீணாக கடலுக்கு வழியனுப்பப்படுகிறது. கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆண்டுக்கு சராசரியாக 1,300 மில்லி மீட்டர் மழைப் பொழிவு உள்ளது. இதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை தேக்கிவைக்க போதிய கட்டமைப்புகள் இல்லாததாலும் மழைநீரில் பாதிக்கும்மேல் கடலுக்குப் போய்விடுகிறது.
நிலத்தடி நீரை உறிஞ்சும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தற்போது அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இதற்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனமே முக்கியக் காரணம். இந்த நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நாளொன்றுக்கு சுமார் 43.2 கேலன் (45 நாட்கள் எடுக்கப்பட்டால் ஒரு டிஎம்சி கணக்காகிறது) வீதம் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டாலும், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதை ஈடுகட்ட வீராணம் உள்ளிட்ட கடலூர் மாவட்ட ஏரிகள் அனைத்தையும் நெய்வேலி நிலக்கரி நிறுவனமே தூர்வாரி கொடுக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.
இதேபோல், பொன்னேரியையும் தூர்வாரி மழைநீரை முழுக் கொள்ளளவுக்குத் தேக்கி, தேவையானபோது அங்கிருந்து வீராணத்துக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.
பயணிப்போம்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT