Published : 13 May 2014 09:27 AM
Last Updated : 13 May 2014 09:27 AM
சிவாஜி கணேசன் ‘பட்டிக்காடா பட்டணமா?' படத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து ‘‘அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் அடங்காத காளையெல்லாம் அடக்கிக்காட்டியவன் நான்'' என்று ஆவேசமாகக் கூறும்போது திரையரங்கில் விசில் சத்தங்கள் கூடுதலாகக் கேட்கும். வீரபாண்டிய கட்டபொம்மன், தாய்க்குப் பின் தாரம், நெஞ்சம் மறப்பதில்லை படங்களில் ஆரம்பித்து கமல், ரஜினி படங்கள் வரை பல சினிமாக்களில் ஜல்லிக்கட்டுக் காளைகளை அடக்கு கிறவர்களாக நமது கதாநாயகர்கள் தங்கள் வீரத்தைக் காட்டியிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் திரையில் ‘டூப்' போட்டு நிஜமாகவே மாட்டை அடக்கிய வீரர்கள் இன்னும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரிலும், அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும் இருக்கிறார்கள். ‘டூப்’பாக நடித்த அந்த இளைஞர்களை நான் பலமுறை அங்கே பார்த்திருக்கிறேன். அவர்களுடைய உடம்பில் பல பகுதி களிலும் குத்துப்பட்ட காயங்கள் இருக்கும். சிலருக்கு வயிற்றுப் பகுதியிலும், தொடை யிலும் தையல் போடப்பட்ட வடுக்கள் இருக்கும். உயிரிழப்புகளைப் பற்றிய ஆற்றாமையுடன் பலர் அதே மண்ணில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு கள் நிகழ்த்தப்படும்போதும் இம்மாதிரியான பின்விளைவுகளை இங்கு பார்க்க முடியும்.
மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தேனி என்று தமிழ கத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இந்த நிகழ்வு ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு என்று விதவிதமான பெயர்களில் நடக்கின்றது. பழங்காலத்தில் ஏறுதழுவுதல் என்கிற பெயரில் காளைகளை அடக்குகிற மரபை சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. காளைகளை அடக்குகிற மாதிரியான கற்சிற்பங்களை இப்போதும் சிவகங்கை மாவட்டத்தில் பார்க்க முடியும்.
தென் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங் களில் மாடு பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பலரையும் பார்க்க முடியும். மாடு வளர்ப்பதில் பாரம்பரியமான ஈடுபாடு கொண்டவர்களையும் பார்க்க முடியும். இதற்கென்றே தகுந்த போஷாக்குடன் வளர்க்கப்படும் காளைகள் இருக்கின்றன. அவற்றில் பல ரகங்களும் இருக்கின்றன.
பல கிராமங்களில் வேரோடியிருக்கிற ஜல்லிக்கட்டுக்குப் பெயர்போன கிராமம் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்கா நல்லூர் கிராமம். அந்த அளவுக்கு அலங்காநல்லூருக்கும், ஜல்லிக் கட்டுக்கும் நெருக்கம் வந்தது எப்படி? கிராமங்களில் இருக்கும் சிறுதெய்வ வழிபாட்டு மரபுதான் ஜல்லிக்கட்டின் பின்னணியில் இருக்கிறது.
முனியாண்டி சாமி
அலங்காநல்லூரிலுள்ள முனியாண்டி சாமிதான் ஜல்லிக்கட்டு இங்கு நடப்பதற்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அலங்காநல்லூர் பகுதியில் காலரா பரவி மக்களெல்லாம் கொத்துக்கொத்தாக இறந்து போனார்கள். ஊர்க்காரர்கள் தங்கள் காவல் தெய்வமான முனியாண்டியிடம் வந்து கதறியிருக்கிறார்கள். பூசாரிக்கு அருள் வந்து இப்படி அருள்வாக்கு சொன்னாராம் முனியாண்டி: “கிராமத்தில மாடு பிடிக்கிறதை நடத்துங்க. அதைப் பார்க்க வர்றவங்களை நான் பலிவாங்கிடுவேன். எங்கேயோ இருந்து வர்றவனும், கடல் கடந்து வர்றவனும் பலியாவான். உள்ளூர்க்காரங்க காப்பாத்தப்பட்டுடுவாங்க.” அதன் பிறகே ஊரில் ஜல்லிக்கட்டு நடக்க ஆரம்பித் திருக்கிறதாம்.
மாட்டுக் கொம்பில் அந்தக் காலத்துச் சல்லிக்காசுகளை மொத்தமாகக் கட்டி மாடுபிடிக்கிறவர்களுக்கு அது கிடைப் பதால் ‘சல்லிக்கட்டு’ என்று ஆனதாக ஒரு பேச்சும் இங்கிருக்கிறது. தை மாதத்தில் விவசாயத்தின் மூலம் ஊர் சற்று செல்வாக்குடன் இருக்கும் நேரத்தில் பொங்கலுக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறது. இப்போதும் அலங்காநல்லூரில் 5 நாட்கள் நடக்கும் திருவிழா முனியாண்டி சாமி வழிபாட்டுடன்தான் ஆரம்பிக்கிறது. அய் யனாரையும் வணங்குவது நடக்கிறது.
300 ஆண்டுகளுக்கு மேல் இங்கு நடக்கும் திருவிழா நாளடைவில் இந்திய அளவிலும், பிறகு உலக அளவிலும் பிரசித்தி பெற்றதாக மாறியிருக்கிறது. அலங்கா நல்லூரில் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு பிறகு மற்ற பகுதிகளுக்கும் பரவி, தென் தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமாக உருமாறியிருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சிறுதெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் காளைகளை அடக்கு வது மாறியிருக்கிறது.
பலியாவது மனிதர்களா, மாடுகளா?
ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப் படுகின்றன என்கிற குற்றச்சாட்டு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிப்பதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. நேரடியாக ஜல்லிக்கட்டுடன் தொடர்புடைய பல கிராமங்களுக்குச் சென்ற அனுபவத்தை முன்வைத்துச் சொல்வதென்றால் ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப் படுகின்றன என்பதைவிட, அதை அடக்கும் முயற்சியில் இறங்குகிற இளைஞர்கள் காயம் அடைவதும், உயிர் இழப்பதும்தான் மிக அதிகமாக நடந்திருக்கிறது. இவ் வளவுக்கும் ஜல்லிக்கட்டு நடக்கும்போது மருத்துவமனைக்கு வருகிறவர்களை, உயிரிழந்தவர்களைக் கவனித்தாலே இது புலப்படும். இப்படி பல நூற்றுக் கணக்கான தமிழர்களின் உயிர்கள் இதில் பலியாகியிருக்கின்றன. பலர் ஊனப் பட்டிருக்கிறார்கள். வாழ்வை இழந்திருக் கிறார்கள். ஆனால் ஜல்லிக்கட்டுக்குப் பின் நிகழ்வாக எங்கும் மாடுகள் உயிரிழந்ததாகத் தகவல்கள் பதிவாகவில்லை.
பரிசுகளுக்காக அல்ல, ஜல்லிக்கட்டில் இருக்கும் சாகச உணர்வுக்காகவே பெரும் பாலான இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் இறங்குகிறார்கள். பரிசு பெற்ற பலருடைய உடம்பில் இருக்கும் தழும்புகள் இதை அடையாளப்படுத்தும். இப்படி வீரத்தின் பெயரால் பலியாகிற இளைஞர்கள் மீது இருக்கிற அக்கறை காரணமாக ஜல்லிக்கட்டு பிரச்சினையில் உரிய முடிவெடுக்கலாம். அதை விட்டு, மாடு களைத் துன்புறுத்துகிறார்கள் என்ற கோணத் தில் முடிவெடுத்தால், பல இடங்களில் விலங்குகள் தொடர்ந்தும் மோசமாகவும் துன்புறுத்தப்படுவதை எப்படிப் பார்ப்பது?
பாரம்பரியப் பெருமை
மகாராஷ்டிரத்தில் பல கிராமங்களில் மாட்டுவண்டிப் பந்தயங்கள் நடக்கின்றன. நாடு முழுக்கத் தற்போதும் தொடர் கிற குதிரைப் பந்தயத்தின் பின்னணியில் செல்வாக்குள்ள பல பெருந்தலைகள் இருக்கிறார்கள். அங்கு குதிரைகளை இம்சிப்பதைப் பற்றி இதே காருண்யக் குரல்கள் எழுப்பப்படுகின்றனவா என்பதை யும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக் கிறது. யாகங்களில் பல விலங்குகள் உயிருடன் எரிக்கப் பட்டிருப்பதை முன்வைக்கிறது வரலாறு. இதை விடக் கொடுமையாக, தமிழகத்தில் நாம் இப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் சில கோட்டைகளும் அரண்மனைகளும் உருவாவதற்கு முன்னால் சில மனித உயிர்கள் திருஷ்டி பரிகாரத்தைப் போல பலிகொடுக்கப் பட்டிருப்பதும், பலியானவர்களின் குடும்பங் களுக்கு மானியம் வழங்கப்பட்டிருப்பதற் கான ஆதாரங்களும் நமக்கு முன்னால் நிறைந்து கிடக்கின்றன. அதையும் தமிழர் பெருமை என்கிற பெருமிதத்தில் ஆதரிக்க முடியுமா?
வெளியில் சௌகரியமான காலரி இருக்கைகளில் இருந்துகொண்டு ஜல்லிக் கட்டைப் பார்ப்பவர்களுக்கு இது வீரமான வேடிக்கை. மற்றவர்களைப் பலிவாங்கி, காயப்பட, ஊனப்பட அனுமதித்துவிட்டு ‘வீரம்’ என்கிற பெயரில் அதற்கு வக்காலத்து வாங்குகிறார்கள். சுற்றுலாத்துறை, மாநில சாகச நிகழ்வின் அடையாளமாக ஜல்லிக்கட்டைப் பிரபலப் படுத்தி வெளிநாட்டுப் பயணிகளைப் பத்திர மாக காலரிகளில் அமர வைக்கிறது. அவர்களுடைய கேமராக்களுக்கு வசமாக வும், விருதுகளுக்குரிய தீனியாகவும் தமிழ் உயிர்கள் மாடுகளுக்கு முன்னால் வதைபடுகின்றன. மன்னராட்சியிலும் நிலபிரபுத்துவக் காலத்திலும் இந்த வதைகள் ரசனைக்குரியவையாக இருந் திருக்கலாம். அதே மனநிலை இப்போதுமா? ஜல்லிக்கட்டு நிகழ்ந்த பிறகு அருகில் இருக்கிற மருத்துவமனைகளில் குவிகிற உயிர்களைப் பற்றி யார் அக்கறை கொள்ளப்போகிறார்கள்?
அதனால் ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர் களும் எதிர்ப்பவர்களும் இதன் பின்னணியில் உயிரிழக்கும் மனித உயிர்கள் பற்றிய அக்கறையையும், மனிதத்தையும் தங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளட்டும்.
- மணா, பத்திரிகையாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: manaanatpu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT