Published : 18 Jun 2015 09:03 AM
Last Updated : 18 Jun 2015 09:03 AM
யமுனா, செங்கம்மா, அலங்காரம் என்று தி.ஜா. படைத்த பெண் தெய்வங்கள்தான் எத்தனை!
தி.ஜா. என்று பிரியமாக அழைக்கப்படும் தி. ஜானகிராமனை நினைத்தாலே மாலைப் பொழுதில் காவிரியாற்றில் சிலுசிலுவென்று ஓடும் நீரில் காலை மட்டும் வைத்துக்கொண்டு படிக்கரையில் உட்கார்ந்திருக்கும் சுகமான உணர்வுதான் ஏற்படும். அவரே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும்போது, வாழ்க்கை என்ற நதியின் கரையில் அமர்ந்துகொண்டு வேடிக்கைபார்க்கும் மகா ரசிகன் என்று எங்கோ சொன்னதாக நினைவு. தனது வாசகர்களுக்கு தி.ஜா. அளவுக்குத் தமிழில் வாசிப்பு இன்பம் கொடுத்தவர்கள் மிகவும் குறைவு. வாசிப்பு இன்பம், நெகிழ்ச்சி இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் சாதித்தவர் அவர் என்பதுதான் விசேஷம்.
‘மோக முள்’ நாவலைப் படித்துவிட்டு, தி.ஜா-வின் கும்பகோணத்தையும் யமுனாவையும் தேடி கும்பகோணம் செல்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிச் செல்பவர்களுக்கு இன்றைய கும்பகோணம் ஏமாற்றத்தைத் தந்தாலும் அந்த வாசகர்கள் தங்கள் உள்ளத்தில் ஒரு கும்பகோணத்தை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள். அந்த கும்பகோணத்தின் தெருக்களில் பேருந்து வரும்போது அவர்களுடைய பாபுக்கள் புழுதிக்குப் பயந்து ஓரமாக ஒதுங்குவார்கள். அவர்களுடைய யமுனா தெய்வீகத் திமிருடன் உள்ளத்தின் வீதிகளில் வலம்வந்துகொண்டிருப்பாள்.
யமுனா உபாசனை
தி.ஜா-வின் வாசகர்கள் எல்லாப் பெண்களிடமும் யமுனாவைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் ஒரு வகையில் தங்களை பாபுவுடன் அடையாளம் கண்டுகொள்பவர்கள். திறமைகள் இருந்தும் அவற்றை மேலே எடுத்துச்செல்ல முடியாத அல்லாட்டம், மனதை அலைக்கழிக்கும் சபலம், வேறுபல நிறைகுறைகள். இதெல்லாம் பாபுவுக்கு நெருக்கமானவர்களாக உணரவைக்கின்றன. தங்களின் மன அழுக்கை வெளுக்கும் தூய ஒளியாகத்தான் யமுனாவை இந்த பாபுக்கள் உணர்கிறார்கள். ஆகவேதான், எல்லாப் பெண்களிடமும் யமுனாவைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
பெண்ணை இப்படித் தெய்வமாக ஆக்கிப் பார்ப்பதும் ஒரு வகையில் ஆணாதிக்கத்தனம்தான் என்ற குற்றச்சாட்டு தி.ஜா-வின் மேல் வைக்கப்படுவது உண்டு. லா.ச.ரா. சௌந்தர்ய உபாசகர் என்றால், தி.ஜா. சக்தி உபாசகர். அவரை ஆன்மிக ஒளியில்தான் அணுக முடியுமே தவிர, தர்க்கத்தின் வழியே அல்ல. தி.ஜா-வின் மற்ற நாவல்கள், சிறுகதைகளில் வரும் ஆண்களும் பெண்களை இதயத்தில் வைத்துதான் பூஜிக்கிறார்கள். அறிவியல் முறைப்படி பார்த்தால் ஆணிடமோ பெண்ணிடமோ பூஜிக்கத் தகுந்தது ஏதும் இல்லைதான். ஆனால், பூஜிக்க வேண்டியவளாக ஆண் மனதில் பெண் இருப்பதும் படைப்பின் விநோதங்களில் ஒன்றுதானே. இணை விழைச்சுக்கான கவர்ச்சி என்ற பெயரில் இதையும்கூட அறிவியல் விளக்கக்கூடும். ஆனால், ஆண் மனது பெரும்பாலும் பெண்ணைப் புதிராகவும் தெய்வீக ஒளியுடனும்தான் பார்க்கிறது. அந்த மனப்பான்மையின் கலை வெளிப்பாடுகள்தான் தி.ஜா-வின் காலத்தால் அழியாத நாயகிகள்.
ஒரு ஆணின் மனது ஒரு பெண்ணின் மீது அன்பு, காமம், வக்கிரம், தெய்வீக உணர்வு உள்ளிட்ட எத்தனையோ உணர்வுகளைக் கொள்ளும். இதில் வக்கிரத்தையும் காமத்தையும் எரிக்கும் நெய்தான் தெய்வீகம். ஆகவே, பெண்ணைத் தெய்வமாக்கி அவளை அடிமைப்படுத்துகிறார் தி.ஜா. என்று சொல்வதில் அர்த்தமில்லை. வக்கிரத்தை அழிக்க நினைக்கும் ஒரு மனப் போராட்டத்தின் வெளித்தெரியாத விளைவுதான் பெண்ணைத் தெய்வமாக பூஜிப்பது.
யமுனாவைத் தெய்வீகமாக்குவது கற்பனாதீதமாகத் தோன்றலாம். ஆனால், பச்சை யதார்த்தத்தைப் பற்றிக்கொண்டிருந்தால் கலைகள், கவிதைகள், படைப்புகளெல்லாம் எப்படித் தோன்றியிருந்திருக்கும்? உண்மையில், பச்சை யதார்த்தம் என்று ஒன்றும் இல்லை என்பதை நவீன அறிவியலின் குவாண்டம் கோட்பாடு சொல்கிறது. நாம் பார்த்தால் நிலவு இருக்கிறது, பார்க்காவிட்டால் நிலவு என்பது கிடையாது. நிலவை ஒருவர் நிலவாகப் பார்க்கலாம், இன்னொருவர் அழகான பெண்ணாகப் பார்க்கலாம். இப்படிப் பல்வேறுபட்ட பார்வைகளின் தொகுப்புதான் நிலவு. உலகம், வாழ்க்கை எல்லாமே வெவ்வேறு தரப்பு விளக்கங்களின் வெவ்வேறு வடிவங்கள்தான். ஆகவே, பெண்ணை தெய்வீகமாகப் பார்ப்பதும் ஒரு விளக்கம்தான்.
அழுக்கைக் கரைக்கும் செங்கம்மா
நம்முடைய சம காலத்திய படைப்பு என்பதிலிருந்து சற்று விலகி நின்று பார்த்தால், தமிழ் இலக்கியப் பெரும் பரப்பின் காவியப் பெண்களில் மோகமுள்ளின் யமுனாவும் ஒருவர் என்ற உணர்வு ஏற்படக்கூடும். தி.ஜா-வின் வெவ்வேறு படைப்புகளில் யமுனாவின் தெய்வாம்சம் வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு பாத்திரங்களாக வெளிப்படுகிறது. உண்மையில், யமுனாவை விடத் துடிப்பு மிக்க பெண் தெய்வம் என்றால் ‘உயிர்த்தேன்’ நாவலில் வரும் செங்கம்மாதான். யமுனா, பிராமணத் தந்தைக்கும் மராட்டிய வழிவந்த தாய்க்கும் பிறந்தவள். செங்கம்மா, கிராமத்துப் பெண் தெய்வம். வழக்கமாக, கிராமத்தில் உக்கிரமான பெண் தெய்வங்கள்தான் இருக்கும். செங்கம்மாவோ மிகவும் சாந்தமான, வெகுளித்தனமான பெண் தெய்வம். எல்லோருடைய அழுக்குகளையும் தன்னுடைய அப்பழுக்கற்ற குணத்தால் கரைத்துவிடக்கூடியவள். உச்சபட்ச அழுக்கைக் கரைக்கும் இடத்தில் நாவல் நிறைகிறது.
யமுனாவைப் போல மூர்க்கமாக ஆட்டிப்படைப்பவள் அல்ல செங்கம்மா. ஊதுபத்திப் புகைபோல மனதை ஊடுருவி, மனதின் துர்நாற்றங்களை அகற்றிவிடுபவள். யமுனாவை விட யதார்த்தமாகவும் வெகுளித்தனமாகவும் இருப்பவள். அந்த வெகுளித்தனத்தாலேயே தெய்வ நிலையை அடைகிறாள். தி.ஜா-வின் முழுமை பெற்ற படைப்பு ‘உயிர்த்தேன்’என்று அசோகமித்திரன் சொல்லியிருக்கிறார்.
தன் சிம்மாசனத்தைச் சுமக்கும் அம்மா
யமுனா, செங்கம்மாவின் வரிசையில் ‘அம்மா வந்தாள்’ இந்து. அவளிடம் தெய்வீகக் குணங்களை அதிக அளவில் தி.ஜா. காணவில்லையென்றாலும், அழகினால் தெய்வீக அம்சம் கொண்டவள் ஆகிறாள் இந்து. புறாக்கள் போல் விம்மி நடக்கும் பாதங்களைக் கொண்டவள் இந்து. பெண்களை வர்ணிப்பதில் தி.ஜா-வுக்கு ஈடுஇணையே கிடையாது. தி.ஜா. அளவுக்கு அமைதியான உக்கிரத்தோடு காமத்தை எழுதியவர் வேறு யார்?
‘அம்மா வந்தாள்’ நாவலில் அப்புவின் அம்மா அலங்காரம் யமுனாவுக்கு ஈடான பாத்திரம். அலங்காரத்துக்கு இன்னொருவர் தொடர்பு இருக்கிறது என்று தெரிந்தும் அவள் தெய்வப் பிறவியல்லவா, அவளை நாம் எப்படி எடைபோடுவது என்று இருக்கும் அப்புவின் அப்பா பாத்திரம் தமிழில் ஒரு விநோதம். அப்பழுக்கற்ற இந்த அழகை அப்பப்பா நம்மாலெல்லாம் அடக்கியாள முடியாது என்று துடித்துப்போகிறார் அவர். அப்புவுக்கு இந்த உண்மை தெரியும்போது துடித்துப்போனாலும் அவனுக்கும் தன்னுடைய அம்மாவிடம் களங்கம் ஏதும் காண முடியவில்லை. மானுட அளவுகோல்களைத் தெய்வப் பிறவிகளிடம் பொருத்திப் பார்ப்பதா? அம்மா, சாதாரணமானவளா? தன்னுடைய சிம்மாசனத்தைத் தானே சுமப்பவளல்லவா?
வேண்டுதலும் சாபமும்
எனினும், தெய்வத்தையே அவமானம் கொள்ள வைக்கும் இரண்டு பெண் தெய்வங்களை ‘கோபுர விளக்கு’ என்ற கதையில் படைத்திருப்பார் தி.ஜா. வாழ்ந்துகெட்ட குடும்பத்தைச் சேர்ந்த தருமு தன்னுடைய வீட்டில் உள்ள பத்து உயிர்களைக் காப்பாற்ற பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். ஒருநாள், துர்க்கையம்மன் கோயிலில் இப்படி வேண்டிக்கொள்கிறாள்: “ஈச்வரி! இரண்டு நாளாக வயிறு காயறது. இன்னிக்காவது கண்ணைத் திறந்து பார்க்கணும். தாராள மனசுள்ளவனா… ஒருத்தனைக் கொண்டுவிட்டுத் தொலைச்சா என்னவாம்…?”
கதாசிரியர் அதைக் கேட்டுவிடுகிறார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண் இறந்துபோய் விடும்போது கதாசிரியரின் மனைவி இப்படிச் சொல்லி அழுகிறாள்: “அந்தப் பொண்ணு ஊத்தின எண்ணெய்க்காவது மனம் இரங்கப்படாதா அந்த சாமி. இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டிண்டு உக்கார்ந்திருக்கே! துர்க்கைக்கு முன்னாடி நின்னுண்டு அழுததுன்னேளே. பொம்மனாட்டி கண்ணுல ஜலம் விட்டா உருப்படுமா அந்தத் தெய்வம்?”
எப்பேர்ப்பட்ட வேண்டுதல்! எப்பேர்ப்பட்ட சாபம்! வேண்டுதலாலும் சாபத்தாலும் உக்கிரமான பெண் தெய்வங்களாக ஆனவர்கள் அவர்கள்.
இன்னும் எத்தனையோ பெண் தெய்வங்கள். ‘சிலிர்ப்பு’ கதையில் கல்கத்தாவுக்கு வீட்டு வேலைக்குச் செல்லும் பத்து வயதுப் பெண். ‘தவம்’கதையில் ஆண்டுக்குப் பத்து வயது கூடும் தாசி. ‘சண்பகப் பூ’கதையில் வரும் ‘ரத்தப் பூ’. ஆண்களுக்கும் இந்தத் தெய்வீகத் தன்மையைக் கொடுத்துப் பெண்ணாக ஆக்கிவிடுபவர் தி.ஜா.
தி.ஜா. என்ற மகத்தான சக்தி உபாசகர், காலத்தையும் மரணத்தையும் வெல்ல ஆசைப்பட்டுப் படைத்தவைதான் அவருடைய பெண் தெய்வங்கள். எல்லோருடைய காதலையும் தூண்டிக்கொண்டு, அளவற்ற கருணையை வழங்கிக்கொண்டிருக்கும் பெண் தெய்வங்கள் அவை. பாத்திரங்கள் என்ற நிலையைத் தாண்டி வழிபாட்டுக்குரிய சொரூபங்களாக ஆகிவிட்ட பெண் தெய்வங்கள்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
இன்று தி. ஜானகிராமன் பிறந்த நாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT