Published : 15 Jun 2015 09:08 AM
Last Updated : 15 Jun 2015 09:08 AM
இந்திய ராணுவம், மணிப்பூர் மாநில எல்லைகளுக்கு அப்பால் மியான்மரின் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகளைக் கொன்ற செய்தி கடந்த வாரம் முழுவதும் இந்திய ஊடகங்களால் பெரிதும் பேசப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான அரசின் துணிச்சலான நடவடிக்கை இது எனப் பலர் பாராட்டினர். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிடாதபட்சத்தில், இதே நடவடிக்கை பாகிஸ்தானுக்கு எதிராகவும் எடுக்கப்படும் என்றுகூடச் சிலர் பேசிவருகின்றனர்.
ஆனால், இந்தச் சம்பவம்குறித்து மியான்மர் ஊடகம் கப்-சிப்பென்று உள்ளது. மியான்மரில் வெளிவரும் ஆங்கிலம் மற்றும் பர்மா நாளிதழ் களோ, இணையதளங்களோ இப்படியொரு சம்பவம் நடந்ததாகக்கூடக் காட்டிக்கொள்ள வில்லை. மியான்மரின் முன்னணி நாளிதழான ‘மியான்மர் டைம்ஸ்’ இச்செய்தியை முற்றிலு மாகத் தவிர்த்துவிட்டது. ‘தி ஐராவதி' நாளிதழ் அதன் புதுடெல்லி செய்தியாளர் அளித்த செய்தி யாக இதைப் பதிவுசெய்துள்ளது. ஆனால், அந்நாட்டு அரசு மற்றும் உள்ளூர் மக்களின் கருத்தும் உணர்வும் எவ்விதத்திலும் பதிவு செய்யப்படவில்லை. மியான்மரில் நிலவும் பதற்றமான சூழலையும் அண்டை நாட்டினருடன் உருவாகவிருக்கும் சிக்கல்களையும் மறைமுக மாக வெளிப்படுத்திவருகிறது இந்த மவுனம்.
“மியான்மர் எல்லைக்குள்ளேயே நுழைந்து பயங்கரவாதிகளை ஒழித்திருப்பது, இந்தியா மீது பயங்கரவாதிகளை ஏவிவிடும் நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும்” என இந்திய செய்தித் துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரதோட் தெரிவித்ததும் உடனடியாக, “பாகிஸ்தான் ஒன்றும் மியான்மரல்ல, எங்கள் எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்” என்று கூறினார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான். இத்தகைய உடனடி எதிர்வினைகளை பாகிஸ்தான் ஊடகங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக, பாகிஸ்தானின் பிரபல ‘டான்’ பத்திரிகை, “இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் அணு ஆயுதப் போருக்கு இட்டுச்செல்லும்: அமெரிக்க நிபுணர்கள்” எனும் கட்டுரையை கடந்த பிப்ரவரி 28-ல் வெளியிட்டது. இதில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியா தன் ராணுவத் தளவாடங்களை அதிகப்படுத்துமானால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை உயர்த்தும். “இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நிலவும் போட்டியின் காரணமாக கூடிய சீக்கிரம் தெற்கு ஆசியாவின் எந்தப் பகுதியிலும் அணு ஆயுதங்கள் வெடிக்கும்” என சர்வதேச அமைதிக்கான கருத்தரங்கில் எழுப்பப்பட்ட எச்சரிக்கை மணியை ‘டான்’ பதிவுசெய்துள்ளது.
ஆனால், மியான்மர் இன்னமும் ராணுவத் தின் பிடியில் இருக்கும் நிலையில், அது அத்தனை சம்பவங்களுக்கும் மவுன சாட்சியாக மட்டுமே இருக்கிறது. இன்றளவும் மியான்மர் முழுமையான ஜனநாயக நாடல்ல. ஏதோ ஒரு விதத்தில் அது ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பது தான் இத்தகைய மவுனத்துக்கான காரணம் என்கின்றனர், பர்மாவின் முன்னாள் தலைநகரமான ரங்கூனில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள். ஊடகத்துக்கு முழுச் சுதந்திரம் இல்லாத நிலையில், அவை பர்மா ராணுவத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளைப் பேசுவதில்லை. நாடே பற்றி எரியும் பிரச்சினையாக இருந்தால்கூடத் தன் மக்களின் குரலைப் பதிவுசெய்வதற்குப் பதிலாக சர்வதேச ஊடகங்கள் அளிக்கும் செய்தியாக மட்டுமே அவற்றை முன்வைக்கின்றன. பர்மா ராணுவத்தைப் பற்றிப் பேச அவர்களுடைய தலையங்கத்தில் இடமில்லை!
ஐ.பி.என். லைவ் - இந்திய ஊடகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT