Published : 21 Jun 2015 12:00 PM
Last Updated : 21 Jun 2015 12:00 PM
மேற்குத் தொடர்ச்சி மலையில் பரிசுத்தமாக பயணத்தைத் தொடங்கும் பவானி, கூடுதுறையில் பரிதாபமாக காவிரியுடன் சங்கமிக்கிறாள். வழியெல்லாம் வளங்களை வாரி வழங்குகிறாள் பவானி. பதிலுக்கு வன்மத்தை வழங்குகிறோம் நாம்.
சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் பிரிந்தபோது உருவானவை ஆறுகள். பல நூற்றாண்டுகள் தூய்மையாக ஓடிய ஆறுகள், வெறும் அரை நூற்றாண்டுக்குள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன; சீரழிக்கப்பட்டுவிட்டன. இயற்கையைச் சிதைக்கும் வளர்ச்சியின் வீரியத்தை நாம் இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். கடந்த காலங்களிலும் மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்து கொண்டேதான் இருந்தது. ஆனால், அப்போது ஒருபோதும் இயற்கையைச் சிதைத்தது இல்லை.
எழுத்துக்கு வித்திட்ட பவானி ஆற்றங்கரை சமூகம்
புதிய கற்காலத்துக்குப் பிற கான இரும்புக் காலத்திலேயே மனித நாகரிகத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. பவானி நதிக்கரைச் சமூகமும் அப்போது வளர்ச்சி கண்டிருந்தது. அந்தச் சமூகம், அப்போதே மோயாறு வழி யாக பயணித்து குஜராத் வரை வணிகம் செய்துள்ளது. இரும்பு உருக்காலைகளை அமைத்தது அந்தச் சமூகம். அழகான ஆபரணங் களை தயாரித்தது அந்தச் சமூகம். இதற்கான தரவுகளை நமது பவானி பயணத்திலேயே காண முடிந்தது. பவானி ஆற்றங் கரைகளில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமாரிடம் இதுகுறித்து பேசினோம்.
- யதீஸ்குமார்
“பவானியின் ஆற்றங்கரைகளில் 1847 முதல் 1914 வரை கான்கிரேவ், வில்லியம் ஃப்ரேஸர், சாண்ட்ஃபோர்டு, லாங்ஹர்ஸ்ட் ஆகியோர் ஆய்வுகளை மேற் கொண்டனர். 1960, 1961-களில் ஸ்ரீனிவாச தேசிகன் ஆய்வு மேற் கொண்டார். 2004- 2006 ஆண்டு களில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.ராஜன் வழிகாட்டுதலில் நான் ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆய்வுகளில் இரும்புக் காலம் எனப்படும் கி.மு. 15 முதல் கி.மு. 5-ம் நூற்றாண்டு வரை, பவானி நதிக்கரையில் வாழ்ந்த மக்களின் சமூக, கலாச்சார, பொருளாதார தகவல்களை அறிய முடிந்தது.
அங்கு நூற்றுக்கும் அதிகமான இடங்களில் ஏராளமான மண்பாண் டங்கள் கிடைத்தன. அவற்றில் வில், அம்பு, நட்சத்திரம், சூரியன், கோடுகள் ஆகிய குறியீடுகள் இருந்தன. அந்தக் குறியீடுகளை அந்த மக்கள் கருத்துப் பரிமாற்றத்துக்கு பயன் படுத்தியுள்ளனர். எழுத்து தோன்று வதற்கான அடிப்படையாக அமைந் தது இது. கொடுமணல், பொருந்தல் போன்ற பகுதிகளில், தமிழ் பிராமி எழுத்துகளுடன் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
சூதுபவள மணிகள்
இரும்பை உருக்கியதும் இதே சமூகம்தான்
சிறுமுகை, அன்னதாசம்பாளை யம், எலவமலை, சுண்டப்பட்டி, கோட்டத்துறை உள்ளிட்ட இடங் களில் கற்பதுக்கை, கற்குவை, கல்வட்டம், கல்திட்டை, குத்துக்கல், முதுமக்கள் தாழி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. அவை, அந்தச் சமூகத்தினரின் கல்லறைகள். அவர்கள், இறந்தவர்களின் உடலுடன் ஆபரணங்கள், மண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள் ஆகிய வற்றையும் வைத்து அடக்கம் செய்திருக்கிறார்கள். விருமாண்டம் பாளையம், கொடிவேரி, சிறுமுகை ஆகிய இடங்களில் குறுவாள், அம்புகள், கத்திகள் கிடைத்தன.
ஆற்றங்கரைகளில் நெல் மற்றும் சிறுதானியங்களை பயிரிட்டனர். ரத்தினக் கல் மணிகள், சூதுபவள மணிகள், பச்சை நிற மரகத மணிகளில் ஆபரணங்களை செய் தனர். சிவப்பு நிற சூதுபவள மணிகள் குஜராத்தில் மட்டுமே கிடைப்பவை. இதன்மூலம் அவர்கள் மோயாறு, பவானி வழியாக குஜராத் வரை பயணித்து வணிகம் செய்ததை அறிய முடிகிறது.
கீழ்பவானி அருகே நல்லூர் பகுதியில் கிடைத்த ‘ஐநூற்றுவர்’ கல்வெட்டுகளும் இதை உறுதி செய்கின்றன. எலவமலை, சின்ன மோளப்பாளையம், கொடிவேரி, குமரிக்கல்பாளையம், லிங்காபுரம், நிச்சாம்பாளையம் ஆகிய இடங் களில் இரும்பு உருக்காலை இருந்ததற்கான தரவுகள் கிடைத்தன. சுமார் 1,300 சென்டிகிரேட் வெப்பம் மூலம் இரும்பை உருக்கும் தொழில் நுட்பத்தை அன்றே அவர்கள் கையாண்டிருக்கிறார்கள்” என்றார்.
மேற்கண்ட தரவுகள், பவானி ஆற்றங்கரைச் சமூகம் அன்றே வளர்ச்சி அடைந்திருந்ததை உறுதி செய்கின்றன. ஆனால், அவர்கள் ஆற்றை அழிக்கவில்லை. புனிதமாக வழிபட்டார்கள்.
மண்பாண்டம்
இன்றைய சமூகம் செய்வது என்ன?
அதேநேரம், இன்றைய சமூகம் ஆற்றை எப்படி எல்லாம் நாசப்படுத்துகிறது என்பதை ஓர் அறிவியல் ஆய்வு மூலம் பார்ப்போம்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்காக ஓய்வு பெற்ற விலங்கியல் துறை பேராசிரியர் நாகராஜன் மற்றும் அவரது மாணவர் சிவராஜா ஆகியோர் பவானி ஆற்றின் நுண்ணுயிரிகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பேராசிரியர் நாகராஜன் கூறும்போது, “ஆற்று நீரில் அதிகபட்சமாக 50 எம்.பி.என். (100 மில்லிக்கு) அளவுக்கு ‘ஃபீக்கல் கோலிபார்ம்’ நுண்ணுயிரிகள் இருக்கலாம். ஆனால், பவானி ஆற்றில் நாங்கள் நடத்திய ஆய் வில், பவானி சாகர் அணையில் 310; ஜம்பை மற்றும் கூடுதுறையில் 130; சத்தியமங்கலத்தில் 110, அரியப்பம்பாளையத்தில் 70; தள வாய்பேட்டையில் 68; அத்தாணியில் 100 எம்.பி.என். அளவுக்கு ‘ஃபீக்கல் கோலிபார்ம்’ நுண்ணுயிரிகள் இருந்தன. இந்தத் தண்ணீரை குடிக்கவே முடியாது” என்றார்.
‘ஃபீக்கல் கோலிபார்ம்’ என்றால் என்ன? மனித மலத்தில் மட்டுமே உருவாகும் நுண்ணுயிர் கிருமி அது!
ஒருபக்கம் பவானி ஆறு காவிரியுடன் சங்கமிக்கும் இடத்தை புனித தலமாக மக்கள் வழிபடுகி றார்கள். இன்னொரு பக்கம் மலத்தை கலக்கிறார்கள்.
வைராபாளையத்தில் ஈரோடு நகராட்சியே ஆற்றங்கரையில் குப்பைகளைக் கொட்டுகிறது. நதிப்படுகை எங்கும் ஆற்றின் ‘வயிற்றைக் கிழித்து’ மணல் அள்ளுகிறார்கள். ரத்தக் கண்ணீர் வடிக்கிறாள் பவானி. நமக்கு உயிர் தந்தது ஆறு; உணவு தந்தது ஆறு; உணர்வு தந்தது ஆறு; நாகரிகம் தந்தது ஆறு; நம்பிக்கை தந்தது ஆறு. அந்த ஆற்றின் கண்ணீர் என்பது மனித சமூகத்தின் மீதான - அறிவியலுக்கு அப்பாற்பட்ட சாபம். நமது சந்ததியினருக்கு வேண்டாம் அந்த சாபம். இனியாவது பவானியைக் காப்போம் வாருங்கள்!
(பவானி பயணம் நிறைவடைந்தது)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT