Published : 30 May 2014 12:00 AM
Last Updated : 30 May 2014 12:00 AM
தென் அமெரிக்கக் கண்டத்தில் இரு தீவுகளைக் கொண்ட நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு. இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்கப் பழங்குடியினர் வசித்தனர். ஐரோப்பியர்களின் ஆதிக்கத் துக்குள் இந்த நாடு வந்தபோது, இங்கு வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க, சீன, போர்த்துக்கீசிய, இந்திய நாடுகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர்.
1820-களில் இந்தியர்களை ஏமாற்றி வெளிநாட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்வது பெரும் தொழிலாக இருந்தது. மக்களும் பிழைப்புக்காக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற தவிப்பில் இருந்தனர். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகள், மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றனர். இந்தியர்களை அடிமைத் தொழிலாளர்களாக விற்பனை செய்யும் தொழிலை பிரான்ஸும் இங்கிலாந்தும் போட்டி போட்டுச் செய்தன. மொரீஷியஸ் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இவ்வாறு இந்தியர்கள் விற்கப்பட்டனர்.
டிரினிடாட் நாட்டுக்கான முதல் கப்பலாக பாதல் ரசாக் எனும் கப்பல் கல்கத்தாவில் இருந்து பிப்ரவரி 6-ல் கிளம்பியது. அது டிரினிடாட் நாட்டுக்கு வந்து சேர்ந்த நாள் இன்று.
முதல் குழுவில் 227 பேர் வந்து இறங்கினர். மூன்று வருட ஒப்பந்தம் என்று பேசப்பட்டாலும் எந்த உரிமையும் இல்லாமல் உழைக்க வேண்டிவந்தது. ஒப்பந்தக் காலத் துக்குள் பெரும்பாலோர் உயிரைவிடும் அளவுக்கு வேலைப்பளு கடுமையாக இருந்தது. இவ்வாறு அங்கு சென்ற தொழிலாளர்கள்தான் கரும்புத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், பெரும் சாலைப் பணிகள், ரயில்பாதைகளை அமைத்தனர். அந்த நாட்டில் இந்தியர் கள் வந்த நூற்றாண்டு நாள், 1945-ல் கடைப்பிடிக்கப் பட்டது. அதற்கு காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் இந்தியாவிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.
தற்போது பல்வேறு நாடுகளிலிருந்து அடிமைத் தொழிலாளர்களாக வந்தவர்களின் வம்சாவளியினர் தான் அங்கு பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் மத்தியிலிருந்து வளர்ந்த தலைவர்கள் பிரதமராகவும் வரக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 1990 முதல் இந்தியர்கள் வந்துசேர்ந்த நாள் அந்த நாட்டின் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT