Published : 16 Jun 2015 10:15 AM
Last Updated : 16 Jun 2015 10:15 AM

ஒரு நதியின் வாக்குமூலம்: பவானியைக் காக்க உணர்வுடன் திரண்ட மக்கள்!

தென்னிந்தியாவில் ஆற்றைக் காக்க நடைபெற்ற முதல் போராட்டம், 1963-ல் கேரளத்தின் சாலி ஆற்றங்கரையில் நடைபெற்றது.

கோழிக்கோடு மாவட்டம், வாழக்காடு பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்ட பிர்லா நிறுவனத்தின் ரேயான் நைலான் ஆலைக் கழிவுகளால் சாலியாறு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மீன்கள் செத்தழிந்தன.

அப்துல் ரகுமான் என்பவர் தலைமையில் அப்பகுதி மீனவர் சமூக மக்கள், தொழிற்சாலைக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடினர். தொழிற் சாலைக் கழிவுகளால் அப்துல் ரகுமானுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. 1999, ஜனவரி 10-ம் தேதி போராட்டக் களத்திலேயே அவர் உயிரிழந்தார். அதன் பிறகு, மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இறுதியில் ஆலை மூடப்பட்டது.

முதல் முறையாக களங்கப்பட்ட பவானி

பவானியைக் காக்க மேட்டுப்பாளை யத்தில் நடைபெற்ற போராட்டம்தான், தமிழகத்தில் ஆற்றைக் காக்க நடைபெற்ற முதல் போராட்டம். சுமார் 10 ஆண்டுகள் தன்னெழுச்சியாக- உணர்வுப்பூர்வமாக மக்கள் நடத்திய போராட்டங்கள் அவை.

1960-ல் தொழில் வளர்ச்சி தொடங்கிய காலகட்டம். அப்போது, கோவை பகுதியில் பருத்தி நூலிழைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோவையில் அப்போதுதான் மில்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. இதனால், பருத்தி நூலிழைத் தட்டுப்பாட்டை போக்க மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பவானி ஆற்றின் கரையில் ரேயான் செயற்கை பட்டு இழை உற்பத்திக்காக ‘சவுத் இந்தியா விஸ்கோஸ்’ என்ற பெயரில் சுமார் 300 ஏக்கரில் மிகப் பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டது. 1980-களில் இந்தத் தொழிற்சாலையை வட இந்தியாவைச் சேர்ந்த வேறொரு நிறுவனம் விலைக்கு வாங்கியது.

அவர்கள், உற்பத்தியை அதிகரிக்க அசுரத்தனமான- இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், 1990-களில் ஆலையிலிருந்து ஏராளமான ரசாயனக் கழிவுநீர் பவானி ஆற்றில் கலந்தது. எத்தனையோ தசாப்தங்களாக சுத்தமான தண்ணீர் மட்டுமே ஓடிய பவானி, முதல் முறையாக களங்கப்பட்டது அப்போது

தான். அதன் படுகையில் விஷம் ஏறியது. மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தன. பவானி சாகர் அணை தண்ணீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரைக் குடித்த மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகினர்.

தொடங்கியது மக்கள் போராட்டம்

1992-ல் சிறுமுகையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுதந்திரம், முதல் முறையாக இந்தச் சீர்கேட்டை எல்லாம் விளக்கி மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார். தொடர்ந்து, டி.டி.அரங்கசாமி தலைமையில் மேட்டுப்பாளையம் ‘பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்புக் குழு’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தக் குழு, ஆலைக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது. பசுமைப் போராளிகளான மருத்துவர் ஜீவானந்தம், சத்திய சுந்தரி, தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் போராட்டங்களை முன்னெடுக்க, அரசியல் பிரமுகர்கள் ரமணி, மு.கண் ணப்பன், கீதானந்தம், சுப்புலட்சுமி ஜெகதீசன், பி.எஸ்.ராமலிங்கம்,கே.சுப்பராயன், ஆர்.டி.மாரியப்பன் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

ஈரோட்டிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறுமுகை வரை சைக்கிள் பேரணி நடத்தி உண்ணாவிரதம் இருந்தனர். 1994-ல் விஸ்கோஸ் மற்றும் அந்தப் பகுதியிலிருந்த 3 சாய ஆலைகளுக்கு எதிராக நடந்த முழு அடைப்பு காரண மாக மேட்டுப்பாளையம், திருப்பூர், சத்தியமங்கலம் நகரங்கள் ஸ்தம்பித்தன.

இது, சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. மேட்டுப்பாளையம், அவினாசி, கோவை மேற்கு, கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். தொடர்ந்து, “மாசுக் கட்டுப்பாடு வாரியச் சட்டப் பிரிவு 33 (அ) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து, அந்தத் தொழிற்சாலைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அதன் தொழிலதிபர்களுக்கு அறிவுறுத்தப்படும். இனி அங்கு அந்தத் தொழிற்சாலைகள் இயங்காமல் இருக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கும்” என்று அப்போதைய தொழில் துறை அமைச்சர் பதில் அளித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை

ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படாததால் 1995, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 50 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

1996-ல் கோவை நகரம் அவினாசி சாலையில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை ஒடுக்க போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். உச்சபட்ச மாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. பத்திரிகையாளர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

தொடர் போராட்டங்களின் விளைவாக 8.5.1998 அன்று தமிழக அரசு ‘‘தமிழகத்தில் ஆற்றங்கரையிலிருந்து 5 கிலோமீட்டருக்குள் தொழிற்சாலை அமைக்கக் கூடாது” என்று தடை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அரசாணையை (எண்: 127) வெளியிட்டது. தமிழகத்தில் இன்று ஓரளவேனும் ஆறுகள் தப்பிப் பிழைத்து இருக்கின்றன எனில், அதற்கு பவானிக்காக மக்கள் நடத்திய போராட்டங்களும், அதன் விளைவாக வெளியிடப்பட்ட அரசாணையும்தான் காரணம்.

அதைத் தொடர்ந்து, 1999-ம் ஆண்டு விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டது. ஆற்றைக் காக்க மக்கள் நடத்திய உணர்வுப்பூர்வ போராட்டம் வென்றது. ஆனால், அன்றைக்கு இருந்த உணர்வு இன்றைக்கும் மக்களிடம் இருக்கிறதா?

(பாய்வாள் பவானி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x