Published : 30 Jun 2015 09:34 AM
Last Updated : 30 Jun 2015 09:34 AM
இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது எனக்கு 25 வயது. என் வயதொத்தவர்கள் அந்தக் கொடுமைகளை நேரில் பார்த்தவர்கள். அதன் ஊடாக அரசியல் உணர்வு பெற்றவர்கள். அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படும்போது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை 21 மாத காலம் அனுபவித்தவர்கள். எங்களின் உருவாக்கத்தில் நிச்சயம் இந்த அனுபவம் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
“ஏ.டி.எம் ஜபல்பூர் எதிர் சுக்லா” எனும் வழக்கு இன்னும் நினைவிலிருந்து அழியவில்லை. தலைமை நீதிபதி ஏ.என் ரே, பி.என். பகவதி, எச்.ஆர்.கன்னா, ஒய்.வி. சந்திரசூட், எம்.எச்.பெக் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு ஒன்றின் முன், “நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் ஒரு குடிமகன் அரசியல் சட்டம் வழங்கும் எந்த உரிமையையும் கோர இயலாது” என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. “உயிர் வாழும் உரிமைகூடக் கிடையாதா?” என நீதியரசர் எச்.ஆர்.கன்னா இடைமறித்தபோது, அட்டர்னி ஜெனரல் நிரேன் டே, “ஆம், உயிர்வாழும் உரிமையும்கூடத்தான்” என இறுகிய குரலில் பதிலளித்ததையும், அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் உரிமை குடிமக்களுக்குக் கிடையாது என ஆணையிட்டதையும் இப்போது நினைத்தாலும் உடல் பதறுகிறது.
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். வேறென்ன சொல்வது? எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது, எங்கே குடிசைகளை அமைத்துக்கொள்வது என அனைத்து உரிமைகளிலும் அரசு கைவைத்தது. அரசில் எந்தப் பொறுப்பும் வகிக்காத இந்திராவின் இளைய மகன் சஞ்சயின் நேரடி மேற்பார்வையில் எளிய மக்களுக்குக் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. குடிசைகள் இடிக்கப்பட்டு ஏராளமானோர் விரட்டப்பட்டனர்.
அந்த 21 மாத காலத்தில் இந்தியாவில் இரட்டை நெருக்கடி நிலைகள் செயல்பட்டன என்பதைப் பலரும் மறந்திருப்பார்கள். ஏற்கெனவே, 1971 டிசம்பர் 3-லிருந்து இங்கு இந்திய பாக். யுத்தத்தை முன்னிட்டு ‘வெளிநாட்டு ஆக்ரமிப்பு' எனக் காரணம் காட்டி அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை அமலில் இருந்தபோதே ‘உள்நாட்டு அமைதியின்மை' எனக் காரணம் சொல்லி ஜூன் 25, 1975-ல் இந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.
ஹிட்லரின் முழக்கங்கள் எந்தத் தயக்கமும் இன்றி இங்கே மறு அரங்கேற்றம் செய்யப்பட்டன. இங்கே கோயபல்ஸுகள் இல்லை. ஆனால், டி.கே. பரூவாக்கள் இருந்தனர். அவர்கள் “இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா!” என முழக்கமிட்டனர். பத்திரிகைகள் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டன. ஜெயப்பிரகாசரின் நெருங்கிய நண் பரும் இந்திராவைக் கடுமையாக எதிர்த்துவந்தவருமான ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தத் தணிக்கையைக் கண்டித்து, 1975 ஜூன் 28-ம் தேதி இதழின் தலையங்கத்துக்கான இடத்தை வெற்றிடமாக விட்டிருந்தது.
பழிவாங்கிய ‘நாய்கள்’
இத்தனை கொடுமைகள் அரங்கேறியபோதும், முக்கியத் தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோதும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை என்பது குறித்து, “ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை” என அத்தனை எகத்தாளமாகக் கூறினார் இந்திரா. ஆனால், அந்தக் குரைக்காத நாய்கள்தான் 1977 மார்ச்சில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரைக் கடித்துக் குதறின. வானளாவிய அதிகாரம் எனக் கொக்கரித்தவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
நெருக்கடி நிலைக் கால அனுபவத்தின் ஊடாக அடிப்படை உரிமைகள், அரசியல் சட்டத்தின் ஆட்சி முதலான பிரக்ஞை களை மக்கள் பெற்றனர். பல துறைகளிலும் இதன் தாக்கங்கள் வெளிப்பட்டன. இலக்கியத் துறையில் ஏற்பட்ட ஒன்று இங்கே குறிப்பிடத் தக்கது.
‘மணிக்கொடி’ காலந்தொட்டு இங்கே சிற்றிதழ்கள் நவீன இலக்கிய வளர்ச்சிக்கு எத்தனையோ பங்களிப்புகளைச் செய்திருந்தபோதும், அரசியலை அவை தீண்டத் தகாததாகவே விலக்கி வைத்திருந்தன. அந்த வரிசையில் 70-களின் மத்தியில் வந்துகொண்டிருந்த ஒரு சிற்றிதழ்தான் ‘பிரக்ஞை'. அதுவும் அரசியல் பேசினால் இலக்கியத் தரம் தாழ்ந்துவிடும் என்கிற நிலையுடன் வெளிவந்துகொண்டிருந்தபோதுதான் நெருக்கடி நிலை அறிவிப்பு வந்தது. தொடர்ந்த மனித உரிமை மீறல்கள் ‘பிரக்ஞை' ஆசிரியர் குழுவுக்குள் ஒரு விவாதத்தை ஏற்படுத்தின. இத்தனை உரிமை மீறல்களுக்கு மத்தியில் நாம் தூய இலக்கியம் பேசிக்கொண்டிருக்க இயலுமா என்பதுதான் கேள்வி. விவாதம் முடிந்து சில மாத இடைவெளிக்குப் பின் இதழ் வந்தபோது அதன் அட்டைப் படத்தில் மாஓ இடம்பெற்றிருந்தார்.
புதிய தத்துவங்கள்
தொடர்ந்து சிறுபத்திரிகைகளின் மத்தியில் ‘படிகள்', ‘பரிமாணம்', ‘இலக்கிய வெளிவட்டம்', ‘மார்க்சீயம் இன்று', ‘நிகழ்', ‘நிறப்பிரிகை' என அரசியலைப் புறக்கணிக்காத, புதிய தத்துவங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய போக்கு ஒன்று உருவானது.
1977 மார்ச் 21 அன்று நெருக்கடி நிலை நீக்கப்பட்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி தொடங்கியபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சி சொல்லி மாளாது. அடுத்த சிலமாதங்களில் பிரதமர் மொரார்ஜி தஞ்சை வந்தார். ராஜப்பா நகரில் உள்ள போலீஸ் கிரவுன்டில் பொதுக் கூட்டம். மொழிபெயர்ப்பதற்கு குமரி அனந்தன்.
அப்போது நான் ஒரு இளம் கல்லூரி ஆசிரியன். விடுமுறை எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் முன்னதாகவே முதல் வரிசையில் காத்திருந்தேன்.
குண்டு துளைக்காத கண்ணாடிகள் எல்லாம் பொருத்தப் படாத எளிய மேடை. பெரிய போலீஸ் பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏதும் இல்லை. மேடையிலிருந்து சுமார் 30 அடி தூரத்தில் ஒரு கயிறு மட்டும் கட்டப்பட்டு அதற்கு அப்பால் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.
மேடை ஏறிய மொரார்ஜி, அதிகாரி ஒருவரைக் கூப்பிட்டு அந்தக் கயிற்றைக் காட்டி ஏதோ சொன்னார். அடுத்த நிமிடம் அந்தக் கயிறும் அவிழ்க்கப்பட்டது. மொரார்ஜி எங்களை நோக்கி அருகே வருமாறு சைகை செய்தார். திபுதிபுவென ஓடி மேடை அருகே அமர்ந்துகொண்டோம். மொரார்ஜி ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். அனந்தன் அதை அழகு தமிழில் மொழிபெயர்த்தார்.
- அ.மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு : professormarx@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT