Last Updated : 19 Jun, 2015 08:59 AM

 

Published : 19 Jun 2015 08:59 AM
Last Updated : 19 Jun 2015 08:59 AM

யார் இந்த லலித் மோடி?

உத்தரப் பிரதேசத்தின் பேகமாபாத் எனும் சிறு நகரில் வாழ்ந்த குஜர்மால் மோடி என்னும் வணிகர் செய்த பணிகளால் அந்த ஊர் செழித்தது. அவரது பணிகளைப் பாராட்டி அவர் ஊருக்கு ‘மோடி நகர்’ என்று பெயர் வைத்தது பிரிட்டிஷ் அரசு. அவருக்கு ‘ராஜா பகதூர்’ பட்டமும் அளித்தது. இந்த குஜர்மால் மோடியின் பரம்பரையில் வந்தவர்தான் இன்றைய சர்ச்சை நாயகன் லலித் குமார் மோடி. ஆனால், தாத்தாவுக்கு இருக்கும் நற்பெயர் இவருக்கு இல்லை!

1963 நவம்பர் 29-ல் பிறந்த லலித் மோடி, சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார். இளம் வயதிலிருந்தே விளையாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. நைனிடாலில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்த அவர், அங்கு படிப்பை முடிக்கவில்லை. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வில்தான் கவனம் செலுத்தினார். அமெரிக்காவின் டர்ஹாம் நகரில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.

இளம் வயதிலேயே பலவிதமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர் லலித் மோடி. கல்லூரிக் காலத்திலேயே போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டார். ஆயுதம் வைத்திருந்ததாகவும் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.

ஒருவழியாக இந்தியா திரும்பியதும் அப்பாவின் நிறுவனத்தில் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். நடத்தை அப்படி இப்படி இருந்தாலும், வியாபார நுணுக்கங்களில் கில்லாடி இந்த மோடி. விரைவிலேயே மோடி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் பதவிக்கு உயர்ந்தார். 1992-ல் முன்னணிப் புகையிலை நிறுவனமான ‘காட்ஃபிரே பிலிப்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

1990-களில் சேட்டிலைட் சேனல்கள் இந்தியாவில் வளர்ச்சிபெறத் தொடங்கிய நேரத்தில் அவரது பார்வை அதன் மீது விழுந்தது. புகழ்பெற்ற ‘வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன், 1993-ல் அவரது ‘மோடி என்டெர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது. டிஸ்னி நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஒளிபரப்பத் தொடங்கியது அவரது நிறுவனம்.

லலித் மோடியைப் பொறுத்தவரை, வணிகம் என்று வந்துவிட்டால் எந்த விஷயமும் ‘புராடக்ட்’தான். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளைத் தந்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில், வயது வந்தவர்களுக்குக் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் எண்ணமும் அவருக்கு வந்தது. ‘எஃப்’ டிவி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘ஃபேஷன் டிவி’நிகழ்ச்சிகளைப் பத்தாண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றார்.

அதன் பின்னர், இளம் வயதிலிருந்தே தனக்குப் பிடித்தமான விளையாட்டுப் போட்டிகள் பக்கம் அவரது கவனம் திரும்பியது. இ.எஸ்.பி.என். சேனலுடன் பத்தாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 975 மில்லியன் டாலர்கள். கிரிக்கெட் வாரியங்களில் உறுப்பினராகும் முயற்சிகளில் இறங்கினார்.

2004-ல் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் சேர்ந்தார். விரைவில் அதன் தலைவரானார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்குள் (பி.சி.சி.ஐ.) நுழைய இது உதவியது. விரைவிலேயே அதன் துணைத் தலைவரானார். மூன்றே ஆண்டுகளில் பி.சி.சி.ஐ-யின் வருமானத்தை ஏழு மடங்கு உயர்த்திக்காட்டினார்.

ஐ.பி.எல். எனும் பெருந்தொழில்

கிரிக்கெட்டில் 20 ஓவர் போட்டிகள் பணம் கொழிக்கும் மரம் என்பதைப் பலரும் கண்டுகொள்ளவில்லை. இந்திய வாரியத்துக்கும் இது முதலில் தெரியவில்லை. அசல் வணிக மூளையான லலித் மோடியும் இதைச் சரியாக அடையாளம் காணவில்லை. ஜீ குழுமம் இதை அடையாளம் கண்டது. 20 ஓவர் போட்டித் தொடரை இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) என்னும் பெயரில் அது தொடங்கியது. கபில் தேவின் மூலம் இந்தத் தொடர் ஒழுங்குசெய்யப்பட்டது. பல சர்வதேச ஆட்டக்காரர்களும் இதில் இடம்பெற்றார்கள். இது ஜீ தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதைக் கண்ட வாரியம் பல்லைக் கடிக்க ஆரம்பித்தது. ஐ.சி.எல்லில் ஆடும் ஆட்டக்காரர்களுக்கு இந்திய அணியில் ஆடத் தடை விதித்தது. பிற வாரியங்களையும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

கடைசியில், தானே ஒரு லீக் போட்டியைத் தொடங்கியது. வாரியத்தின் கட்டுப்பாட்டில் நடப்பு ஆட்டக்காரர்கள் அனைவரும் இருப்பதாலும் பிற வாரியங்களின் ஒத்துழைப்பும் கிடைத்ததாலும் இந்தத் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றது. வாரியத்தின் பணபலமும் அதிகார பலமும் ஐ.சி.எல்லை முடக்கி ஓரங்கட்டியது.

ஐ.பி.எல்லை உருவாக்கி வளர்த்ததில் லலித் மோடியின் பங்கு முக்கியமானது. ஐ.சி.எல்லைக் காப்பி அடித்தாலும் ஐ.பி.எல்லுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியது அதன் பொறுப்பாளராக இருந்த லலித் மோடிதான்.

ஐ.பி.எல்லின் வருமானத்தில் கவனம் செலுத்திய அளவுக்கு அதைக் கறைபடாத அமைப்பாக வைத்துக்கொள்வதில் மோடி ஆர்வம் காட்டவில்லை. 2009-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டிகளின்போது ஆஸ்திரேலிய முன்னணி வீரர் உட்பட 27 வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. ஐ.சி.சி-யின் ஊழல் தடுப்புப் பிரிவைப் பயன்படுத்தி முறைகேடுகளைத் தடுக்கும் வாய்ப்பு இருந்தும் லலித் மோடி அதைப் புறக்கணித்தது தெரியவந்தது. இப்போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்கியதிலும் முறைகேடு நடந்திருக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸுடனான ஒப்பந்தத்தில் சுமார் ரூ. 500 கோடி முறைகேடு நடந்திருப்பதகச் சொல்லப்படுகிறது.

2010 ஜூலையில் அருண் ஜேட்லி, ஜோதிராதித்யா சிந்தியாவைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை பி.சி.சி.ஐ. அமைத்தது. ஜூலை, 2013-ல் 134 பக்க அறிக்கையை அக்குழு அளித்தது. அதில் ஊழல், முறைகேடு, பி.சி.சி.ஐ-க்கு அவப்பெயர் தேடித் தரும் வகையில் நடந்துகொண்டது உட்பட மோடி மீது 8 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 2013 செப்டம்பர் 25-ல், அரை மணி நேரத்துக்கும் குறைவாக நடந்த சிறப்புப் பொதுக்கூட்டத்தில் பி.சி.சி.ஐ. லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதித்தது.

ஐ.பி.எல். போட்டிகளில் புதிதாகச் சேர்க்கப்பட இருந்த கொச்சி ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்கள் தொடர்பாக ட்விட்டரில் லலித் மோடி எழுதியதுதான் அவரது சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில், சசி தரூர், சுனந்தா புஷ்கர் போன்ற பெயர்கள் அடிபட்டன. இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியை சசி தரூர் இழந்தார்.

லலித் மோடி மீது அமலாக்கத் துறை 16 வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறது. அத்தனையும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான வழக்குகள். மொத்தம் ரூ. 1,700 கோடி அபராதம் விதிக்க அமலாக்கத் துறை முடிவுசெய்திருக்கிறது.

சில குற்றச்சாட்டுக்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் லெவன் அணி ஏலத்தில் முறைகேடு செய்த லலித் மோடி, ஒளிபரப்பு மற்றும் இணைய உரிமையிலும் முறைகேட்டில் ஈடுபட்டார். தொலைக்காட்சி உரிமையில் மட்டும் சுமார் ரூ. 500 கோடி (80 மில்லியன் டாலர்) ஈடுபட்டிருக்கிறார்.

மொரீஷியஸைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் ரூ. 5,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை, அந்நிறுவனத்திடமிருந்து ஒரு பைசா கூட முன்பணமாகப் பெற்றுக்கொள்ளாமல் அனுமதித் திருக்கிறார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவின் மகனுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு, லண்டனில் தலைமறைவாக இருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் நிறுவனம் ரூ11.63 கோடி கொடுத்திருப்பது தொடர்பாகவும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்திவருகிறது.

2010 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை, (3-வது ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்து, முடியும் வரை) மும்பையில் உள்ள ஃபோர் சீஸன்ஸ் ஓட்டலில் வசுந்தரா ராஜே, சசி தரூர், ராஜிவ் சுக்லா, சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் குஷால் போன்றோர் தங்கியதற்கான செலவு மட்டும் ரூ. 1.56 கோடி. ஆனால், இந்தத் தொகையைச் செலுத்த பி.சி.சி.ஐ. மறுத்துவிட்டது. இத்தனையையும் சுமந்தபடி புன்சிரிப்புடன் உலகைச் சுற்றிவரும் இவருக்குத்தான் ‘மனிதாபிமான’ அடிப்படையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்திருக்கிறார்.

வெ.சந்திரமோகன்,

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x