Published : 29 May 2014 07:00 AM
Last Updated : 29 May 2014 07:00 AM
வீட்டில் உட்கார்ந்தபடிக்கு மாநகராட்சி சொத்து வரி செலுத்துவதிலிருந்து மனசுக்குப் பிடித்த புத்தகம் வாங்குவது வரை செய்வதற்கு இணையத்தைவிட வசதி வேறு ஏது? ஈ-காமர்ஸ் என்ற மின்வர்த்தகம் இதுவே.
மின்வணிகத்தைப் பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம் - ‘வணிகரோடு வணிகர்’நடத்தும் வியாபாரம் (பிசினஸ் டு பிசினஸ் - B2B), ‘வியாபாரியோடு வாடிக்கையாளர்’வரவுசெலவு (பிசினஸ் டு கஸ்டமர் B2C), மற்றும் வரி செலுத்துதல் போன்ற ‘அரசுக்கும் மக்களுக்கும்’ இடையிலான பணப் போக்குவரத்து (கவர்ன்மெண்ட் டு சிடிசன் G2C) ஆகியவை இவை.
இணையத் துணிக் கடையில் இணைய சேலைகள்
இணையத்தில் துணி வாங்க, துணிக்கடைக்கான இணையதளம் முதலில் தேவை. இது சுயசேவைக் கடை. வாடிக்கையாளரே எளிதாகக் கடையின் விற்பனைப் பொருள்கள் எவை, என்ன விலை என்றெல்லாம் பார்க்க வசதி வேண்டும். தேவையான மேல்விவரத்தையும் இணையம் மூலமே பெறவும், பொருளைத் தெரிவுசெய்யவும் ஏற்பாடு செய்துதர வேண்டும். இணையம் மூலமே விலைக்கான தொகையைச் செலுத்த வேண்டும். வாங்கிய பொருள் வீட்டுக்கு வந்துசேர விலாசம் பதியவும், வாங்கிய பொருளில் பழுது இருந்தால் புகார்செய்து மாற்று கேட்கவும் வாடிக்கையாளருக்கு இயல வேண்டும்.
வலைப்பரப்பு நிறுவனங்கள்
இணையதளம் தொடங்க கடைக்காரர்கள் ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். தேவைப்பட்டபடி தளத்தை எழுப்பி, வலைப்பரப்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் (web hosting service providers) இதற்கென்றே இருக்கிறார்கள். வர்த்தகம் நடக்கிற இடம் என்பதால் சகல பாதுகாப்போடும் வாடிக்கையாளர்கள் பொருள் வாங்க வசதி செய்துதருவது இவர்களே.
இணையத் துணிக் கடையில் தென்படும் வகைவகையான புடவை நிழற்படங்களில் ஒன்றை ‘மௌஸ்’ கொண்டு சொடுக்கியதும், திரையில் அதன் விலை விவரம் தென்படும். இதற்குப் பின்னணியில், கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றனவோ அவற்றுக்கெல்லாம் தகுந்த அடையாள எண் கொடுத்து விலைப் பட்டியல் தயாரிப்பது நடைபெற்றிருக்கும். விலை மாறும்போதோ அல்லது புதிய துணி வகைகள் விற்பனைக்கு வரும்போதோ விலைப்பட்டியல் திருத்தப்படும். பட்டியலைத் தயாரித்து மாற்றுவது கடைக்காரரின் வேலை. அதை நிர்வகித்து, பொருளுக்கு ஏற்ற விலையைக் காட்சிப்படுத்துவது இணையதள சேவை நிறுவனத்தின் பணி.
கடைவண்டி, இணைய கல்லா
நேரடி வியாபாரத்தில், வாடிக்கையாளர் சேலை, வேட்டி, சட்டை என்று பொருட்களைத் தேர்வுசெய்தபடி கடைக்குள் சுற்றிவரலாம். அப்போது அவர் தேர்வுசெய்து வைத்திருக்கும் பொருட்களைப் பத்திரமாக மற்றவர்களின் தேர்வுப் பொருட்களோடு கலக்காமல் ஒரு சிறிய தள்ளுவண்டியில் (ஷாப்பிங் கார்ட்) வைத்துத் தள்ளிக்கொண்டு போவது மேலைநாட்டு வாடிக்கை. இணையக் கடையில் மென்பொருளால் உருவாக்கப்பட்ட ‘கடைவண்டி’ நாம் தேர்ந்தெடுத்தவற்றையெல்லாம் பத்திரமாக வைக்கும். எதையாவது ‘அப்புறம் வாங்கலாம்’ என்று திரும்ப எடுத்து வைத்தாலும் அதை நினைவு வைத்துக்கொண்டு அடுத்த முறை இணையக் கடைக்குப் போனதும் ஞாபகப்படுத்தவும் கூடும்.
பொருள் வாங்கியதும் கல்லாவில் காசு கொடுத்துவிட்டு வெளியேற வேண்டியதுதான். ‘பணம் செலுத்த’ எனத் திரையில் சிறு சதுரமோ, வட்டமோ தென்படும். அங்கே சொடுக்கினால், பண்டம் வாங்கிய தொகைக்கு உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகக் கடைக்கு இணையப் பணமாற்றம் செய்யலாம். அல்லது கடன் அட்டை எண்ணைப் பதியலாம். இந்த நடவடிக்கை பாதுகாப்பாக இருக்க, உங்கள் கடன் அட்டையை விசா அல்லது மாஸ்டர் கார்ட் போன்ற அட்டை வழங்கும் நிறுவனத்தின் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். கூடவே, உங்கள் கைபேசி எண்ணும் பதிவாகியிருக்க வேண்டும்.
கடன் அட்டை வழங்கிய நிறுவனம், உங்கள் கைபேசிக்கு உடனே ஆறு அல்லது எட்டு இலக்கத் தற்காலிகக் கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) அனுப்புவார்கள், ஒரு நிமிடத்துக்குள் அதை நீங்கள் கம்ப்யூட்டர் திரையில் சரியாகப் பதிய வேண்டும். ஒரே ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல் அது. உங்கள் கடன் அட்டையை வைத்து வேறு யாராவது கள்ளத்தனம் செய்வது சிரமம். ‘ஒன் டைம் பாஸ்வேர்ட்’ உங்கள் கைபேசிக்குத்தானே வரும்!
இணையக் கடையிலிருந்து கைக்கு…
அட்டை வழங்கிய நிறுவனம் உங்கள் அட்டை அசலா, இந்தக் கடையில் பொருள் வாங்க உங்களுக்கு அனுமதிக்கப்பட கடன் தொகை மீதம் இருக்கிறதா என்றெல்லாம் பரிசோதித்து, எல்லாம் சரியாக இருந்தால், பொருளுக்கு விலையை அட்டை மூலம் செலுத்த அனுமதிக்கும், திரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தினத்தில் பொருள் கைக்கு வந்துசேரும்.
இந்த நடவடிக்கையில் முக்கியமான அம்சம், உங்களுக்குத் துணி விற்ற இணையக் கடைக்கு, அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூலம் பொருள் வாங்கிய அடுத்த நாளே பணம் வரவாகிவிடும். அதை வழங்குவது, உங்களுக்கு கடன் அட்டை கொடுத்த உங்கள் வங்கி. மாதம் பிறந்து, உங்கள் வங்கியில் பணம் செலுத்துவதன் மூலம் கடன் அட்டை நிலுவையைத் தீர்த்துவிடலாம்.
மின்வணிகப் பேட்டை
ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு போனால் ஸ்கூட்டர், கார் உதிரிப் பாகங்கள் தேர்ந்தெடுத்து வாங்க அவற்றை விற்கும் அநேக கடைகள் உண்டல்லவா? அதே போல் மின்வணிகத்தை வசதியாகச் செய்யவும் அமைப்புகள் உண்டு. இவை தலைவாசல்கள் எனப்படும். ஆங்கிலத்தில் போர்ட்டல். கணினித் திரை (மானிட்டர்) விற்கிற கடைகள், மெமரி போர்ட் விற்கும் கடைகள், விசைப்பலகை (கீ போர்ட்) விற்கிற கடைகள் இப்படி ‘கணிப்பொறி’ என்ற ஒரே வகையைச் சார்ந்த கடைகளெல்லாம் பங்குபெறும் கணினித் தலைவாசலில், மிக்சி, கிரைண்டரோ, தலைப்பாகட்டி பிரியாணியோ விற்கும் ஒரு கடையும் இருக்காது, இந்த மாதிரியான தலைவாசல் ‘செங்குத்துத் தலைவாசல்’ (வெர்டிக்கல் போர்ட்டல்) எனப்படும்.
தொலைக்காட்சிப் பெட்டி பழுதுபார்த்தல், கணினி பழுதுபார்த்தல், மின்னணு கேமரா பழுதுபார்த்தல், குளிர்சாதன இயந்திரத்தைப் பழுதுபார்த்தல் என்று இதுபோன்ற எந்த இயந்திரத்தையாவது பழுதுபார்க்கும் கடைகள் அடங்கிய தலைவாசல் ‘கிடைமட்டத் தலைவாசல்’ (ஹரிஸாண்ட்டல் போர்ட்டல்) எனப்படும்.
பார்த்துக்கொண்டே இருங்கள்... இன்னும் இரண்டே வருடத்தில் ‘சைவச் சாப்பாடு’ போர்ட்டலில், ஒரு ஹோட்டலின் இணையக் கடையில் இட்லி, அடுத்த கடையில் குழிப் பணியாரம், மூன்றாம் கடையில் நவதானிய தோசை என்று ஆர்டர் செய்து திருப்தியாகச் சாப்பிடலாம். விலையைப் பற்றி இப்போதே கவலை எதற்கு?
இரா. முருகன், எழுத்தாளர், தொடர்புக்கு: eramurukan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT