Published : 01 Jun 2015 09:29 AM
Last Updated : 01 Jun 2015 09:29 AM
பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கையில் எனக்குப் பிடித்திருந்த ஒரே அம்சம், அதன் கல்வி மற்றும் அறிவியல் பற்றிய பார்வைதான்.
40 பக்க அறிக்கையில் அது கல்விக்கும் அறிவியலுக்கும் 5 பக்கங்கள் ஒதுக்கியிருந்தது. என்ன செய்யப்போகிறோம் என்பதைச் சற்று விரிவாகவே சொல்லியிருந்தது. குறிப்பாக, கல்வியைப் பொறுத்த அளவில். மூட நம்பிக்கைகள், வன்முறை வெறுப்பு போன்றவற்றிலிருந்து விடுபட்டுச் சிந்திக்க வேண்டிய தேவையை அது அறிவுறுத்தியிருந்தது.
நமது நாட்டின் சொத்து அதன் இளைஞர்களும் குழந்தை களும்தான். அவர்களுக்குத் தடையற்ற, தரமான, அதிகச் செலவெடுக்காத கல்வி மிகவும் அவசியம் என்ற தெளிவு அறிக்கையில் இருந்தது. தொழில்கல்வியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற உறுதிகொண்டிருக்கிறோம் என்றும் பாஜக அறிவித்திருந்தது. அதற்காக இணையத்தின் மூலம் படிப்பதற்கான வசதிகளை உருவாக்குவோம் என்று அறிக்கை கூறியது. இதேபோல, வறுமையை ஒழிக்க, நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையே உள்ள வேற்றுமையை அழிக்க, உணவு உற்பத்தியைப் பெருக்க, நோய்களின் தாக்கத்தைக் குறைக்க அறிவியலைப் பயன்படுத்துவோம்; இளைஞர்களை அறிவியல் பக்கம் திருப்புவோம்; உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்குவோம் என்றெல்லாம் தேர்தல் அறிக்கை சொன்னது.
ஒரு வருடத்தில் நடந்தது என்ன? ஸ்மிருதி இரானிக்கும் கல்வித் துறை வல்லுநர்களுக்கும் இடையே அடிக்கடி நடைபெறும் கத்திச் சண்டைகளைப் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இரானி கல்வித் துறையை மேம்படுத்தக் கேட்ட பணம் பட்ஜெட்டில் கிடைக்கவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாக்குகின்றன. கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இந்த வருடம் சென்ற வருடத்தைவிட சுமார் ரூ. 13,700 கோடி குறைந்துவிட்டது. அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு 22% குறைப்பு; மதிய உணவுத் திட்டத்துக்கு 16.5% குறைப்பு; இடை நிலைக் கல்வித் திட்டத்துக்கு 29% குறைப்பு என்றால், உயர்நிலைக் கல்வித் திட்டத்துக்கு 48% குறைப்பு. சசி தரூர் தனது கட்டுரை ஒன்றில் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு அமைச்சகம் கேட்ட தொகை ரூ. 50,000 கோடி; கிடைத்ததோ ரூ. 22,000 கோடி என்று குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் கல்வி நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்பதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. பக்கத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்குச் சென்று எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியரிடம் நான்கு வரிகள் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் எழுதச் சொல்லுங்கள். எளிய கணக்குகளைக் கொடுத்து விடை கேளுங்கள். அறிவியலிலும் சமூகவியலிலும் எளிய கேள்விகளைக் கேளுங்கள். 60% சதவீதத்தினர் தேற மாட்டார்கள். இது காலம் காலமாகப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கச் செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் எப்படிப் படிக்கிறார்கள், ஆசிரியர்கள் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பவற்றைப் பற்றி கண்டுகொள்ள வேண்டிய தேவையில்லை என்ற எண்ணத்தோடு அரசுகள் தொடர்ந்து இயங்கியதன் விளைவு. பல வருடங்களாகத் தொடர்ந்துவரும் வியாதியை ஒரு வருடத்தில் குணம் செய்துவிடலாம் என்று நினைப்பது முட்டாள்தனம். ஆனால், குணம் செய்ய முயற்சிகள் செய்யப்படுகின்றனவா என்பது அர்த்தமுள்ள கேள்வி.
மனிதவள மேம்பாட்டுத் துறையின் வலைதளத்தில் முயற்சி களுக்கான எந்தத் தடமும் கிடைக்கவில்லை. இதேபோல, பள்ளிகளில் தொழிற்கல்வியைத் துவங்குவதற்கும் தொழிற் கல்விக் கூடங்களை அமைப்பதற்குமான வழிமுறைகள் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. அவற்றுக்கான வேலைகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. உயர் கல்வியைப் பொறுத்தவரையில், மத்தியப் பல்கலைக் கழகங்களைச் சீர் செய்ய வேண்டும் (அவை கட்டாயம் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உண்மை) என்ற சாக்கில், அவற்றின் உரிமைகளைப் பறித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது. இது உண்மையானால், மத்திய அரசு பல்கலைக்கழகங்களிலும் மாநிலப் பல்கலைக்கழகங்களைப் போல ஆமாம் சாமிகள் மிக விரைவில் பெருகிவிடுவார்கள்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மன்றத்தின் தலைமை இயக்குநர் பதவி ஓய்வுபெற்று ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும், இன்று வரை நிரந்தரத் தலைமை இயக்குநர் நியமிக்கப்படவில்லை. மேலும், ஆய்வு மன்றத்தின் கீழ் 39 ஆய்வுக் கூடங்கள் இயங்குகின்றன. இவற்றில் 12 ஆய்வுக் கூடங்களுக்கு இயக்குநர்கள் இல்லை. இதே போன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் தலைவர் இல்லாமல் செயல்படுகிறது. இந்திய ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் இன்று அந்த நிறுவனத்தை இயக்குகிறார். இது அரசு அறிவியலாளர்கள் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. எனவே, இந்திய ஆராய்ச்சியாளர்களில் 40% வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் நமக்கு எந்த வியப்பையும் தராது.
இவற்றுக்கெல்லாம் இடையில் சின்ன ஆறுதல், ஆறு மாநிலங்களில் மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (தமிழகத்தில் மதுரையில்) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பான கள சோதனைகளுக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டிருக்கும் அனுமதி போன்றவற்றைச் சொல்லலாம். மொத்தத்தில் உடைத்துச் சொல்ல வேண்டும் என்றால், கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் அரசின் சாதனைகளைத் தேடத்தான் வேண்டியிருக்கிறது!
- பி.ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர்
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT