Published : 10 Jun 2015 09:39 AM
Last Updated : 10 Jun 2015 09:39 AM
பவானியின் முக்கிய நீர் ஆதாரமான புல்வெளிக் காடுகளுக்கு, ஆங்கிலேயர் காலத்திலேயே ஆபத்து தொடங்கி விட்டது. மலைச் சரிவுகளிலும் வனங்களிலும் பல கி.மீ. தொலைவுக்கு அப்போது புல்வெளிக் காடுகள் பரந்து வளர்ந்திருந்தன. ஆங்கிலேயர்களுக்கு அதுபோன்ற காடுகள் புதியவை.
அவற்றின் இயற்கையான உயிர்ச் சூழலை புரிந்து கொள்ளாத அவர்கள், அவற்றை தேவையில்லாத நிலப் பரப்பு (Waste Land) என்று குறிப் பிட்டனர். மேலும், அவை கால்நடை மேய்ச்சலுக்காக உள்ளூர் மக்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களிடையே ஒரு கருத்து இருந்தது. இதனால், புல்வெளிக் காடுகளை அழித்து பலன் தரும் (!) மரங்களை நடலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, நூற்றுக்கணக்கான சதுர கி.மீ. பரப்பளவில் புல்வெளிக் காடுகள் அழிக்கப்பட்டன. அங்கு ஆஸ்தி ரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட சீகை (வேட்டல்), கற்பூரம் (யூகலிப்டஸ்), ஐரோப்பியாவை பூர்வீகமாகக் கொண்ட பைன் ஆகிய மரங்கள் நடப்பட்டன. இவை தவிர ஆங்கிலேயர்களின் வீடுகளில் வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஈப்பதோரியம், லேண்டினா கேமிரா உள்ளிட்ட அலங்கார மலர் தாவரங்களும் காடுகளில் பரவின. விதைப் பரவுதல் மூலம் விரைவாக காடு முழுவதும் ஆக்கிரமிக்கும் அவை, தாங்கள் வளரும் பகுதியில் பிற மரங்களையும் தாவரங்களையும் வளர அனுமதிக்காது. இதனால், நமது நாட்டு மரங்களும் தாவரங்களும் அழிந்து, வன உயிரினங்களின் உயிர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டன.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சமீப காலம் வரை நமது வனத் துறையும் இந்த பல்லுயிர் சீரழிவைப் புரிந்து கொள்ளாததுதான் சோகம். நமது வனத் துறை அந்த அந்நிய மரங்கள் நடும் திட்டத்தை தீவிரமாகச் செயல் படுத்தியது. தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 1988-ம் ஆண்டு மட்டும் சுமார் 11,000 ஹெக் டேரில் புல்வெளிக் காடுகள் அழிக்கப் பட்டு மேற்கண்ட அந்நிய மரங்கள் நடப்பட்டன. கடந்த 1990-களின் இறுதிவரை இந்த நிலை நீடித்தது. புல்வெளிக் காடுகளின் அழிப்பால் சுமார் 30 ஆண்டுகளில் பவானிக்கான நீர் வரத்து வெகுவாகக் குறைந்துபோனது.
அதன்பின்பே பல்வேறு ஆராய்ச்சி யாளர்கள் இந்த மரங்கள் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதையும், புல்வெளிக் காடுகளின் அழிப்பால் ஆறு களின் நீர் ஆதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பதையும் ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டினர். சுதாரித்துக் கொண்ட வனத் துறை, தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு, பசுமையாக்கும் திட்டம் மற்றும் மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் லட்சக் கணக்கான ரூபாய் செலவில் இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனாலும், அவற்றை முழுமையாக அழிக்க இயலவில்லை. இதனால், இன்றுவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாமல் தவிக்கிறது வனத் துறை.
பவானியில் மட்டுமே உயிர் வாழும் அரிய மீன்
நீலகிரியின் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களில் அவலாஞ் சியும் ஒன்று. ஆங்கிலத்தில் அவலாஞ்சி என்றால் பனிச் சரிவு என்று பொருள். 1840-களில் இங்கு அடிக்கடி நிலச் சரிவு ஏற்பட்டது. அதனால், ஆங்கிலேயர்கள் குளிர் பிரதேசமான இந்தப் பகுதிக்கு அவலாஞ்சி என்று பெயர் வைத்துவிட்டனர். அவலாஞ் சியின் பவானி ஆற்றுத் தண்ணீருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.ஆங்கிலே யர்களுக்கு பிடித்த மீன் உணவுகளில் ஒன்று டிரவுட் (Trout) நன்னீர் மீன். அவை, இங்கிலாந்து மற்றும் ஐரோப் பாவின் பனி சூழ்ந்த குளிர் பிரதேச நீர்நிலைகளில் மட்டுமே உயிர் வாழ்கின்றன.
இங்கே ஆங்கிலேயர்கள் தங்கள் உணவுத் தேவைக்காக அந்த மீனை இமயமலை, சிம்லா, அவலாஞ்சி உள்ளிட்ட நீர்நிலைகளில் இனப் பெருக்கம் செய்ய முயற்சித்தனர். ஆனால், இமயம் உட்பட எங்கும் உயிர் பிழைக்காத அந்த மீன்கள் ஆச்சர்யமாக அவலாஞ்சியின் பவானியில் மட்டும் பெருகி வளர்ந்தன. பவானியின் பல்லுயிர் செறிவுத் தன்மைக்கு இது ஓர் உதாரணம். இன்றும் அவலாஞ்சியில் அந்த மீன் பண்ணை இருக்கிறது. அங்கு டிரவுட் இன மீன் குஞ்சுகள் இனப் பெருக்கம் செய்யப்பட்டு அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணைகளில் விடப்படுகின்றன. ஆனால், இந்த மீன்கள் விற்பனைக்கு இல்லை.
படங்கள்: சுதா
மின் உற்பத்தியில் பவானியின் பங்கு
நீலகிரி மாவட்டத்தின் மின் தேவையை நிறைவு செய்வதில் பவானி ஆற்றின் பங்கு முக்கியமானது. இங்கு ஆண்டு முழுவதும் பவானி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் மின் உற்பத்தியும் தடை இல்லாமல் நடைபெறுகிறது.
இந்த வனப் பகுதியில் மட்டும் பவானி ஆற்றின் குறுக்கே 15 சிறு அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. நீலகிரி வனத்தில் உச்சியில் இருந்து கீழ் நோக்கிப் பாயும் பவானி ஆற்றின் நீரைப் பயன்படுத்தி இந்த அணைக் கட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீலகிரியின் கிழக்குப் பகுதியில் முக் குருத்தி, பைக்காரா, சண்டிநல்லா, கிளன் மோர்கன், கிளன்மோர்கன் ஃபோர்பே, மரவக்கண்டி, மோயாறு ஃபோர்பே ஆகிய ஏழு அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. நீலகிரியின் மேற்குப் பகுதியில் மேல்பவானி, பார்சன் பள்ளத்தாக்கு, போர்த்திமண்டு, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா ஃபோர்பே, பேகும்பஹல்லா, பில்லூர் ஆகிய எட்டு அணைக் கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அணைக் கட்டுகளில் இருக்கும் நீர் இருப்பை வைத்து சராசரியாக 372.84 மில்லியன் யூனிட் மின்சாரம் (2015, ஜூன் 2 கணக்கின்படி) உற்பத்தி செய்ய முடியும்.
(பாய்வாள் பவானி)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT