Published : 21 May 2014 11:42 AM
Last Updated : 21 May 2014 11:42 AM

புதிய நம்பிக்கை உதயமாகியுள்ளது

“மதிப்புக்குரிய அத்வானி அவர்களே! தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களே! மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களே, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே, நீங்கள் அனைவரும் ஏகமனதாக எனக்குப் புதிய பொறுப்பை அளித்துள்ளீர்கள். அதற்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக, என்னை ஆசீர்வதித்த அத்வானி அவர்களுக்கும் ராஜ்நாத் அவர்களுக்கும் நன்றி.

நான் இத்தருணத்தில் அடல் (வாஜ்பாய்) அவர்களை நினைவுகூர்கிறேன். அவரது உடல்நலன் சீராக இருந்திருந்தால் அவர் இன்று இங்கு இருந்திருப்பார். அவரது வருகையால் இந்நிகழ்ச்சி முழுமை அடைந்திருக்கும். இருப்பினும் அவரது ஆசி நம்முடன் இருக்கிறது. இனிமேலும் இருக்கும்.

பதவி முக்கியமல்ல

நாம் இப்போது ஜனநாயகத்தின் கோயிலில் இருக்கிறோம். நாம் அனைவரும் புனிதமாகப் பணியாற்றுவோம்... மக்கள் நலன் முக்கியமே தவிர, பதவி அல்ல. பணியும் பொறுப்பும் மிகப் பெரியவை. நீங்கள் எனக்கு அளித்துள்ள இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

என் வாழ்நாளில் நான் எப்போதுமே பதவிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. பதவியைவிட என் பார்வையில் பொறுப்புகளே முக்கியத்துவம் வாய்ந்தவை.

நாம் அனைவரும் நமக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்ற நம்மையே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். செப்டம்பர் 13, 2013 அன்று, பா.ஜ.க. நாடாளுமன்றக் குழு எனக்கு ஒரு புதிய பொறுப்பை அளித்தது. செப்டம்பர் 15-ல் எனது பணியை முழுவீச்சில் தொடங்கினேன். நான் எதிர்கொண்ட அந்தப் பரீட்சை மே-10, 2014-ல் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தபோது முடிந்தது. எனது கட்சித் தலைவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அகமதாபாத் செல்லும் முன்னர் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றேன். அவர் அப்போது என்னிடம் கேட்டார்: “உங்களுக்கு ஓய்வு வேண்டாமா. நீங்கள் சோர்வாக இல்லையா?” என்று. ஆனால், நான் அவரை உடனடியாகக் காண விருப்பம் தெரிவித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பின் கடமையை நிறைவேற்றிவிட்டேன், அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றேன்.

என் கட்சித் தலைவரிடம் செப்டம்பர் 13 முதல் மே 10 வரை நான் ஆற்றிய கடமைகுறித்து, பண்படுத்தப்பட்ட ஒரு வீரனைப் போல் விளக்கினேன். எனது பொறுப்புகளைச் சிறப்பாகச் செயல்படுத்தியதாகக் கூறினேன். எனது பிரச்சாரப் பயணத்தில் கோஷி நகரில் நடைபெறவிருந்த ஒரே ஒரு பிரச்சாரம் மட்டுமே தடைபட்டது. அதுவும், மாநில பா.ஜ.க. தலைவரின் திடீர் மரணத்தாலேயே தடைபட்டது.

ஒரு நம்பிக்கையான, பொறுப்பான தொண்டனாக நான் உங்களிடம் அறிக்கை அளிக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பணியைக் கட்சித் தொண்டனாக சிறப்பாகச் செய்துவிட்டேன் என்றேன்.

நான் முதல்வரான பிறகே முதல்முறையாக முதல்வர் அறையைப் பார்த்தேன். இன்றும் அதே நிலைதான். இன்று தான் நான் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளு மன்றத்தின் மத்திய மண்டபத்தைக் காண்கிறேன்.

இத்தருணத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனை வருக்கும் தலைவணங்குகிறேன். நாட்டின் அரசியல் சாசனத்தை இயற்றியவர்களுக்குத் தலைவணங்குகிறேன். இந்த உலகம், ஜனநாயகத்தின் அளப்பரிய சக்தியைக் கண்டு கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தின் வெற்றி

என்னை சர்வதேசத் தலைவர்கள் தொடர்புகொண்டு வாழ்த்தியபோது, இந்தியாவில் உள்ள கோடிக் கணக்கான வாக்காளர்கள் பற்றி எடுத்துரைத்தேன். அவர்கள் ஆச்சர்யப் பட்டனர்.

அரசியல் சாசனத்தின் சக்தியால்தான், ஏழைக் குடும் பத்தைச் சேர்ந்த ஒரு ஏழை இந்த இடத்தில் இப்போது நிற்க முடிகிறது. ஒரு சாதாரண நபர் பிரதமர் ஆகியிருப்பது ஜனநாயகத் தேர்தல் முறையின் அடையாளம். பா.ஜ.க-வின் வெற்றியையும் மற்றவர்களின் தோல்வியையும் இன்னொரு தருணத்தில் விவாதிக்கலாம். மக்கள், ஜனநாயகக் கட்டமைப்பால் தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என நம்புகின்றனர். ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.

அரசு என்பது ஏழை மக்களைப் பற்றிச் சிந்திப்பதாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் அவர்களுக்காகவே இயங்க வேண்டும். எனவே, புதிய அரசு ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. கோடிக் கணக் கான இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. தங்கள் சுயமரியாதைக்காகவும், நன்மதிப்புக்காகவும் போராடும் தாய்மார்கள், மகள்களுக்காக இந்த அரசு இருக்கிறது. கிராமவாசிகள், விவசாயிகள், தலித் மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள் அனைவரது தேவைகளையும் பூர்த்திசெய்யும் பொறுப்பு இந்த அரசிடம் இப்போது உள்ளது. இதுதான் நம் தலையாய பொறுப்பு.

பிரச்சாரத்தின்போது, இந்திய தேசத்தின் புதிய முகங்களைப் பார்த்தேன். தன் உடம்பில் ஒற்றை ஆடை மட்டுமே கொண்ட நபர்கூட தனது கைகளில் பா.ஜ.க. கொடி வைத்திருப்பதைப் பார்த்தேன். இந்த மக்கள் நமது அரசைப் புதிய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் எதிர்நோக்கியுள்ள னர். இனி அவர்கள் கனவை நனவாக்குவதே நமது கனவு.

கருணையல்ல, கடமை!

அத்வானி அவர்கள் பேசியபோது “இந்த முறை மக்களவைத் தேர்தலின் பொறுப்புகளை ஏற்று பா.ஜ.க-வுக்குக் கருணைசெய்திருக்கிறார் மோடி” என்றார். அத்வானிஜி, நீங்கள் மீண்டும் இந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள். (மோடியின் குரல் கம்மி, கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பிக்கிறது.)

ஒரு மகன் தனது தாய்க்குச் செய்யும் பணிவிடையை அவருக்குச் செய்யும் கருணை எனக் கூற முடியாது. தாய்க்குப் பணிவிடை செய்யக் கடமைப்பட்டவர் மகன். எனவே, எனது தாயான இந்தக் கட்சிக்கு நான் கருணை செய்ததாகக் கூற முடியாது.

கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த பல்வேறு அரசுகளும் அவர்கள் வழியில் நாட்டுக்குப் பல்வேறு நன்மைகள் செய் திருக்கின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்கள் தொடரும். நாங்களும் நாட்டுக்கு நன்மை செய்வோம். மக்கள் அவநம்பிக்கை கொள்ளக் கூடாது.

பல்வேறு ஊடகங்களிலும் தேர்தல் முடிவுகள்குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நான் தொலைக்காட்சிகளையோ, வேறு எந்த ஊடகங்களையோ பார்க்கவில்லை. மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பு நம்பிக்கையால் விளைந்தது. இதை நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன்.

சாமான்ய மனிதனிடம் ஒரு புதிய நம்பிக்கை உதயமாகி யுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளின் குறிப்பிடத் தக்க சிறப்பே இதுதான்.

தேர்தல் முடிவு தொங்கு நாடாளுமன்றமாக அமைந்திருந் தால் மக்கள் முந்தைய ஆட்சிக்கு எதிராகத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக அமைந்திருக்கும். ஆனால், பா.ஜ.க-வுக்கு அறுதிப் பெரும்பான்மை அளித்து அவர்கள் தங்களது நம்பிக்கைக்கு வாக்களித்திருக்கின்றனர். அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்ற நான் முழுமையாகப் பாடுபடுவேன். அவநம்பிக்கைக்கு எந்த வகையிலும் இடம் கொடுக்கக் கூடாது. அவநம்பிக்கையால் எதுவும் நடக்கப்போவதில்லை.

இது புதிய நம்பிக்கைக்கும் வலிமைக்குமான நேரமாகும். இந்த அரசின் தாரக மந்திரம், அனைவருடனும் இருந்து அனைவரையும் வளரச் செய்வதே ஆகும்.

காலம் கனிந்துவிட்டது

பொறுப்புகளை நிறைவேற்றும் காலம் கனிந்துவிட்டது. 2019-ம் ஆண்டு எனது அரசு ஆற்றிய பணிகள்குறித்த அறிக்கையைக் கட்சிக்கும் நாட்டுக்கும் அளிப்பேன். எனது அரசு ஏழைகளின் அரசு. அவர்களுக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

இந்த தேசத்துக்காக உயிர் துறக்கும் அதிர்ஷ்டம் நமக்குக் கிடைக்கவில்லை. சுதந்திர இந்தியாவில் பிறந்த நாம் அனைவரும் நம் தேச நலனுக்காக எப்படி வாழ வேண்டும் என்றே சிந்திக்க வேண்டும். நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், நம் உடலின் ஒவ்வொரு அங்கமும் இத்தேசத்தின் 125 கோடி மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும். இதுவே நம் கனவாக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால், தேசம் வளர்ச்சி காணும்.

நான் இயற்கையாகவே நன்னம்பிக்கை கொண்ட நபர். எனது மரபணுவிலேயே நன்னம்பிக்கை இருக்கிறது. ஏமாற்றங்கள் என்னை நெருங்குவதில்லை. இத்தருணத்தில், எனது கல்லூரி நாட்களில் நான் பேசியதை நினைவுகூர்கிறேன். இந்தக் கண்ணாடிக் கோப்பையைப் பாருங்கள். இதைப் பார்ப்பவர்களில் சிலர், இதில் பாதியளவு தண்ணீர் இருக்கிறது என்பர். இன்னும் சிலர், பாதியளவு வெறும் கோப்பை என்பார்கள். ஆனால், நான் பாதியளவு தண்ணீரும், பாதியளவு காற்றும் இருக்கிறது என்பேன். எனது சிந்தனை எப்போதும் இப்படி ஆக்கபூர்வமானதாகவே இருக்கும். ஆக்கபூர்வமான பாதையில் செல்லும்போது, நமது சிந்தனை நன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நம்பிக்கையுடையவர்களாலேயே இந்தியாவில் நம்பிக்கையை விதைக்க முடியும்.

அனைவரது வாழ்விலும் துன்பம் நேரும்.

2001-ல் குஜராத்தை நிலநடுக்கம் தாக்கியபோது திரும்பிய பக்கமெல்லாம் பேரழிவின் தடங்களே இருந்தன. உலகமே, குஜராத் இனி மீண்டெழ முடியாது என்றே நினைத்தது. ஆனால் குஜராத், தனது சொந்தக் காலில் மீண்டும் நின்றது. எனவே, அவநம்பிக்கையை விட்டொழியுங்கள்.

ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு எப்படி முன்னேறாமல் போகும்? இந்த தேசத்தில் உள்ள 125 கோடி மக்களும் ஒரு அடி எடுத்து வைத்தாலும் நாடு 125 கோடி அடிகள் முன்னேறிச் சென்றுவிடுமே!

உலகில் எந்த ஒரு நாட்டிலாவது ஆறு பருவகாலங்கள் இருக்கின்றனவா? நமது நாடு செழிப்பானது. நமது நாடு முழுவதும் இயற்கை வளங்கள் நிறைந்திருக்கின்றன. நமது நாடு ஆசீர்வதிக்கப்பட்டது. நம் மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பேரும் புகழும் பெறுகின்றனர். அவர்களுக்கு நம் நாட்டிலேயே வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

அனைவருக்கும் வளர்ச்சி

அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் மேன்மை என இந்தத் தேர்தலில் நாம் இரண்டு விஷயங்களை வலியுறுத்தியிருந்தோம். இந்தத் தேர்தல், நம்பிக்கையை உருவகப்படுத்தியுள்ளது. என்னுடன் திறன் வாய்ந்த

எம்.பி-க்கள் இருக்கின்றனர். மூத்த தலைவர்கள் எப்போதும் எனக்கு ஆலோசனை வழங்குவார்கள். இதன் மூலம், எனக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்றுவேன் என நம்புகிறேன். 2019-ல் உங்களைச் சந்திக்கும்போது என் பணி குறித்த அறிக்கையை அளிப்பேன். கடின உழைப்பு மூலம், முழு முயற்சியுடன் குறிக்கோளை அடைவேன்.

வரவிருக்கும், 2015-16-ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த ஆண்டாகும். இந்த ஆண்டு பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவாகும். அவரே, சைரவேதி மந்திரத்தைத் தந்தார். கடின உழைப்பையும் தியாகத்தையும் அவர் எப்போதும் போதித்தார். அவர் போதனைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை எப்படிக் கொண்டாடுவது என்பதையும் கட்சி சிந்தித்துச் செயல்படுத்த வேண்டும்.

கதியற்றவர்களுக்குத் தொண்டுசெய்வதை அவர் எப் போதும் வலியுறுத்தியிருக்கிறார். எனவேதான், நமது அரசு ஏழை மக்களுக்கானது என்று நான் கூறுகிறேன்.

உலக அரங்கில், இந்தியத் தேர்தலும் தேர்தல் முடிவுகளும் ஆக்கபூர்வமாகப் பார்க்கப்படுகிறது. கோடிக் கணக்கான மக்கள் வாக்களித்து ஒருவரைப் பிரதமராக்கியிருக்கின்றனர் என்பதைவிட, கோடிக் கணக்கான மக்கள் தெளிவான சிந்தனை

யோடு தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள் என்ற செய்தி யையே உலக நாடுகள் பலவும் பரவலாகப் பேசுகின்றன.

இந்தத் தேர்தல் முடிவுகள் உலக நாடுகளை இந்திய ஜனநாயகம், பாரம்பரியம் மற்றும் செயல்திறன் வசம் ஈர்க்கும். இந்தியக் குடிமக்கள் மத்தியில் உதயமான நம்பிக்கை, உலக அளவில் உள்ள மனிதநேய ஆர்வலர்கள் மத்தியிலும் பரவியுள்ளது. இது நல்லதொரு அடையாளம்.

மூத்த தலைவர்களே காரணம்

சகோதர, சகோதரிகளே! தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை உரித்தாக்குகிறேன். நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் என்றால், அதற்குக் கட்சியின் மூத்த தலைவர்களே காரணம். அவர்களே எனக்கு இந்த அடையாளத்தை அளித்துள்ளனர். நமக்கு இன்று கிடைக்கப்பெற்றுள்ள அனைத்தும், ஐந்து தலைமுறைகளாக நமக்கு முந்தையவர்கள் செய்த தியாகத் தின் பலன். ஜனசங்கம்பற்றி மக்களுக்குச் சரியான விழிப்புணர்வு இல்லை. அதை ஒரு கலாச்சார அமைப் பாகவே மக்கள் பார்க்கின்றனர். தேசிய நலனுக்காகத் தலைமுறை தலைமுறையாகத் தியாகம் செய்தவர்களுக்குத் தலைவணங்குகிறேன்.

இந்த வெற்றி கோடிக் கணக்கான தொண்டர்களால் கிடைத்த வெற்றி. பா.ஜ.க-வில் அனைவருமே கட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள். இதுதான் இக்கட்சியின் பலமும்கூட.

நீங்கள் எனக்கு புதிய பொறுப்பை அளித்திருக்கிறீர்கள். அத்வானி அவர்கள் என்னை ஆசீர்வதித்துள்ளார். நீங்கள் அனைவரும் என் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள் ளீர்கள். இது ஒருபோதும் பொய்த்துவிடாது. மீண்டும் அனை வருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”

- மே 20,2014 அன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நரேந்திர மோடி ஆற்றிய முதல் உரையின் முழு வடிவம்

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x