Published : 03 Jun 2015 11:47 AM
Last Updated : 03 Jun 2015 11:47 AM
வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை தாண்டும் போது, தண்ணீரை வெள்ளியங்கால் வாய்க்காலில் வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மதகுகள் முறையாக பராமரிக்கப்படாததால், அவற்றில் சில பழுதடைந்த சில மதகுகள் வழியாக தண்ணீர் எந்நேரமும் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
கான்சாகிப் வாய்க்கால்
வீராணத்தின் தெற்குமுனையிலிருந்து புறப் படும் வெள்ளியங்கால் வாய்க்கால், சற்று தொலைவைக் கடந்ததும் கான்சாகிப் வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. இது, முந்தைய காலத்தில் பெரம்பலூர், அரியலூர் பகுதிகளை பரங்கிப்பேட்டை எஃகு தொழிற்சாலைகளுடன் இணைக்கும் நீர்வழிச் சாலையாகவும் பயன் பாட்டில் இருந்திருக்கிறது.
ஆண்டுக்கு 7 முறை நிரம்ப வேண்டும்
மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்து, தென்மேற்கு பருவமழையும் சரியான பருவத்தில் தொடங்கினால் மேட்டூர் அணையி லிருந்து ஜூன் 12-ல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு மேட்டூர் அணையிலிருந்து கல்லணைக்கு வரும் தண்ணீரில் 10 சதவீதத்தை கீழணைக்கு வழங்க வேண்டும் என்பது அரசு ஆணை. இவ்வாறு கீழணைக்கு வழங்கப்படும் தண்ணீர் ஜூன் 20 அல்லது ஜூன் 22-ம் தேதி வாக்கில் அணைக்கரையிலுள்ள கீழணையை வந்தடையும். கீழணையில் 9 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததும் வடக்கு ராஜன், தெற்கு ராஜன், வடவாறு ஆகிய 3 பிரதான வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படும்.
வீராணத்திலிருந்து ஜூலை முதல் வாரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். வீராணம் ஏரியின் ஆயக்கட்டில் முழுமையாக சாகுபடி செய்ய வேண்டுமெனில் ஆண்டுக்கு 7 முறை வீராணம் நிரம்ப வேண்டும். ஆனால், இரண்டு முறைகூட முழுமையாக நிரம்புவதில்லை என்பதால் ஒருபோக விவசாயமே இங்கு தள்ளாடுகிறது.
வீராணம் திட்ட எதிர்ப்புப் போராட்டங்கள்
வீராணத்திலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு, வீராணம் ஏரிப் பாசன விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல் கட்டமாக, 09-10-04 அன்று வீராணம் ஏரியின் முகப்புப் பகுதியான பூதங்குடியில் உண்ணாவிரதம் இருந்து கைதாயினர்.
ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக இருந்ததால், 14-04-05 தமிழ் புத்தாண்டு அன்று காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் வீராணம் திட்டத்தைக் கைவிடக் கோரி தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைக் காட்டியதுடன், கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலமும் நடத்தினர். பின்னர், வீராணத்திலிருந்து சென்னைக்கு எடுத்துச் செல்லப்படும் தண்ணீருக்கு ராயல்டி கேட்டு 17-10-2007 அன்று ஏரிக் கரையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
அதைத் தொடர்ந்தும், வீராணம் திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும், 20-09-2014 அன்று சென்னையை நோக்கிய தனது சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது வீராணம் ஏரித் தண்ணீர். தொடர்ந்து, 04-10-2014 அன்று முதல் நாளொன்றுக்கு 48 கன அடி வீதம் சென்னை குடிநீருக் காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இப்போது, தண்ணீர் திறப்பு 77 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு ஏன்?
வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வீர. இளங்கீரன், ‘‘சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதை எதிர்க்கவில்லை. ஆனால், சென்னைக்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக எங்களது உரிமைகள் மறுக் கப்படுவதைத்தான் எதிர்க்கிறோம். விவசாயத்துக் காக எப்போது வேண்டுமானாலும் விவசாயிகள் வீராணம் தண்ணீரைத் திறக்கலாம் என்றிருந்த நிலையில், தற்போது, ஏரியில் உள்ள அனைத்து மதகு திறப்புகளுக்கும் கூண்டு அமைத்து பூட்டு போட்டு பூட்டிவிட்டனர். இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
‘விவசாயத்துக்கு பயன்படுத்தியதுபோக உபரி தண்ணீரைத்தான் சென்னைக்குக் கொண்டு செல்லப்போவதாகவும், அதுவும் விவசாயம் இல்லாத ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலங்களில் மட்டும்தான்’ என்று அப்போது அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித் தனர். ஆனால், சென்னைக்குப் பயன்படுத்தியதுபோக மிஞ்சியது தான் விவசாயத்துக்கு என்ற நிலை மையை உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள். பின்னாளில், சென்னை குடிநீருக்காகத்தான் வீராணம் ஏரி என்ற சூழலை உருவாக்கி விடுவார் களோ என்று அஞ்சுகிறோம்’’ என்றார் இளங்கீரன்.
குடிநீருக்கே முன்னுரிமை: அதிகாரிகள்
பொதுப்பணித் துறை அதிகாரிகளோ, ‘‘தண்ணீர் பங்கிட்டில் குடிநீருக்குத்தான் முன்னு ரிமை என்று, 2000-ல் மத்திய அரசு தண்ணீர் கொள்கையை மாற்றிவிட்டது.
சென்னை மக்களின் குடிநீருக்காக தண்ணீர் கொண்டு செல்வதற்கு சிறப்பு கவனம் எடுப்பது உண்மைதான். ஆனால், அதற்காக பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை சிறிதும் குறைக்கவில்லை. விவசாயிகள் தங்கள் இஷ்டம்போல் தண்ணீரைத் திறந்துவிட்டு வீணடிக்கிறார்கள் என்பதால்தான் மதகு திறப்புகளுக்கு கூண்டு அமைத்துள்ளோம்’’ என்றனர்.
வி.கண்ணன் - வீர.இளங்கீரன்
வீராணம் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்கு என்ன தீர்வு?
காவிரிப் பாசன விவசாயிகள்- விளைபொருள் உற்பத்தியாளர்கள் பதுகாப்பு சங்கத் தலைவர் வி. கண்ணன், ‘‘ஆங்கிலேய பொறியாளர்களுக்கு இருந்த தொலைநோக்குச் சிந்தனை, அவர்களுக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்களுக்கு இல்லை. எனவேதான், கொள்ளிடத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 15- 25 டிஎம்சி வரை வீணாக கடலில் கலக்கிறது.
2005-ல் கர்நாடகாவில் கனமழை பெய்து அணைகள் நிரம்பியதால் காவிரியில் ஒரே நாளில் மூன்று லட்சம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டது அம்மாநில அரசு. அந்த ஆண்டு மட்டும் 205 டிஎம்சி தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலுக்குப் போனது. இதுபோல், ஆண்டுதோறும் தண்ணீர் வீணாவதைத் தடுத்தாலே வீராணம் பாசனம் மட்டுமின்றி, காவிரி டெல்டா விவசாயமும் செழிக்கும்.
இதற்காக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேலணையிலிருந்து நொச்சியம், கூகூர், திருமழப்பாடி, ஏலாக்குறிச்சி, காமரசவள்ளி, கோடாரி கருப்பூர், ஆகிய 6 இடங்களில் தலா 2 டிஎம்சி தண்ணீரை தேக்கும் அளவில் கதவணைகள் கட்ட வேண்டும். இதன்மூலம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டமும் மேம்படும்’’ என்றார் கண்ணன்.
- பயணிப்போம்..
தலைநகர் சென்னைக்கு தண்ணீர் கொடை வழங்கும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT