Published : 18 Jun 2015 09:42 AM
Last Updated : 18 Jun 2015 09:42 AM

ஒரு நதியின் வாக்குமூலம்: சுத்திகரித்தாலும் சாக்கடை தண்ணீரைத்தான் குடிக்கிறோம்!

காவிரியில், கர்நாடக மாநிலம் சாக்கடை நீரை கலப்பதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரியில் கழிவுநீர் கலப்பதற்கு, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. விவசாய அமைப்புகள் போராட்டங்கள் நடத்துகின்றன.

ஆனால், மேட்டுப்பாளையத்திலும் சத்தியமங்கலத்திலும் சுமார் 45 இடங் களில் உள்ளாட்சி நிர்வாகங்களே நகரின் மொத்த சாக்கடை கழிவையும் சுத்திகரிப்பு செய்யாமல் பவானி ஆற்றில் நேரடியாக விடுகின்றன. இதற்காக யார் மேல் வழக்கு தொடர்வது? எந்த அரசியல் கட்சித் தலைவர்கள் இதை கண்டித்திருக்கிறார்கள்?

கழிவுநீர் எங்கே செல்கிறது?

மேட்டுப்பாளையம் நகரில் 13,941 குடும்பங்களில் கழிப்பறையைப் பயன் படுத்துகின்றனர். 3,463 குடும்பங்களுக்கு கழிப்பறை இல்லை. நகரிலுள்ள பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 369. இவற்றில் 56 கழிப்பறைகள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளன.

மேட்டுப்பாளையம் பவானி ஆறு கதவணையில் தேங்கியுள்ள கழிவுநீர். | படம்: ஜெ.மனோகரன்

கழிப்பறை இல்லாதவர்கள் பெரும் பாலும் பவானிக் கரையோரம் திறந்தவெளியையே பயன்படுத்தி வருகின்றனர். நகரில் புதை சாக்கடை கிடையாது. அனைத்து மலக்கழிவு களும் கழிவுத் தொட்டிகளின் வழியாக நிலத்தடியில் கசிந்தும், இதர கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாகவும் பவானி ஆற்றில் கலக்கின்றன. இந்த வகையில் நகரின் மையப் பகுதியில் இருக்கும் சீரங்கன் ஓடை, சிக்கதாசம்பாளையம் - உப்புப்பள்ளம், ஊமப்பாளையம், சத்தியமூர்த்தி நகர், ஊட்டி ரயில் பாலம் பகுதி, பழைய சந்தை திடல் உட்பட சுமார் 15 பகுதிகளில் ஓடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 5.8 மில்லியன் லிட்டர் கழிவுநீர் பவானி ஆற்றில் விடப்படுகிறது. இன்னொரு பக்கம், மேலே இருக்கும் குன்னூர், அரவங்காடு, வெலிங்டன் ஆகிய ஊர்களிலும் எவ்வித கழிவுநீர் மேலாண்மை திட்டங்களும் இல்லை. அந்த ஊர்களின் கழிவுநீரையும் கல்லாறு வழியாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில்தான் விடுகிறார்கள்.

கேள்விக்குறியான சுகாதாரமான குடிநீர்

மேட்டுப்பாளையத்தின் ஒரே குடிநீர் ஆதாரம் மேற்கண்ட கழிவுகள் நேரடியாக கலக்கும் பவானி ஆறு மட்டும்தான். பவானி ஆற்றிலிருந்து நேரடி யாக தண்ணீரை எடுத்து சுத்திகரித்து விநியோகிக்கிறார்கள். அந்த வகையில் நகரில் மொத்தம் 15,450 குடும்பங்கள் தனி நபர் வீட்டுக் குழாய் இணைப்பு மூலமும், 2,560 குடும்பங்கள் பொதுக் குழாய் மூலமும் குடிநீர் பெறுகின்றனர். ஆனால், அந்தக் குடிநீர் சுகாதாரமானது தானா என்பதுதான் கேள்விக்குறி.

பவானி ஆற்றுக்கு கழிவுநீர் செல்லும் சீரங்கன் ஓடை. | படம்: ஜெ.மனோகரன்

இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி சுகாதாரக் குழு உறுப்பினர் ஒய்.எம்.ஹபிபுல்லா கூறும்போது, “கடந்தாண்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கரட்டுமேடு சமயபுரம் இடையே கதவணை நீர் மின் திட்டம் கட்டப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக சுமார் 6 கி.மீ. தொலை வுக்கு ஆற்றுத் தண்ணீரைத் தேக்கி வைக்கிறார்கள். இந்தத் திட்டம் வருவதற்கு முன்பாகவாவது ஆற்றில் கலக்கும் கழிவுகள் அனைத்தும் அதன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். ஆனால், தற்போது 6 கி.மீ. தொலைவுக்கு குப்பை, கூளங்களுடன் சாக்கடையாக ஆறு தேங்கி நிற்கிறது. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றில்தான் சாமண்ணா நீரேற்று நிலையம் மூலம் குடிநீருக்காக தண்ணீரை ஆற்றிலிருந்து எடுக்கிறார்கள். அதை என்னதான் சுத்திகரித்து கொடுத்தாலும் நாங்கள் எல்லோரும் சாக்கடை தண்ணீரை குடிக் கிறோம் என்பதே உண்மை. எனவே, பவானி ஆற்றிலிருந்து குடிநீருக்காக சாமண்ணா நீரேற்று நிலையம் பகுதி யில் தண்ணீரை எடுக்கக் கூடாது. மாறாக, ஓரளவு ஆறு தூய்மையாக ஓடும் நெல் லித்துறை - விளாமரத்தூர் பகுதியில் தண்ணீரை எடுக்க வேண்டும். இதுதொடர் பாக கடந்த ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.

எங்கே இருக்கிறோம் நாம்?

உலகளவில் சுகாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் தர வரிசையில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 79 மில்லியன் நகர்ப்புற குடும்பங்களில் 17 மில்லியன் குடும்பங்களுக்கு கழிப்பறை இல்லை. தமிழகத்தில் மொத்தமுள்ள 5.9 மில்லியன் குடும்பங்களில் 2.106 மில்லியன் குடும்பங்களுக்கு கழிப்பறை இல்லை. இந்திய நகரங்களில் 50%-க்கும் அதிகமான கழிவுநீர் அறிவியல்பூர்வமாக சேகரிக்கப்படுவது இல்லை.

முதல் தர மற்றும் இரண்டாம் தர நகரங்களில் நாள் ஒன்றுக்கு 38,254.82 மில்லியன் லிட்டர் கழிவுநீரில் 11,787.38 மில்லியன் லிட்டர் கழிவு நீர் (30%) மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. 70% கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் விடப்படுகிறது. 30% மக்களுக்கு முழுமையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2008-ம் ஆண்டு நாட்டின் 423 நகரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு நகரங்களை தர வரிசைப்படுத்தியது. இதில் எந்த ஒரு நகரமும் சுகாதாரமான நகரம் என்று வரையறுக்கப்படவில்லை. இதன் அடிப்படையில் தேசிய நகர்ப்புற சுகாதார கொள்கை வரையறுக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிரதான அம்சம்-ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பதே. ஆனால், இந்தியாவில் அப்படி எந்த ஒரு திட்டத்தையும் அரசுகள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை.

தேசிய நகர்ப்புற சுகாதார கொள்கை வரையறுக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிரதான அம்சம்-ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பதே. ஆனால், இந்தியாவில் அப்படி எந்த ஒரு திட்டத்தையும் அரசுகள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை.

(பாய்வாள் பவானி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x