Published : 10 May 2015 11:52 AM
Last Updated : 10 May 2015 11:52 AM
இனி, ரசிகர்கள் நிம்மதியாகத் தூங்கலாம். பாலிவுட் நிம்மதியாகத் தன் கலைச் சேவையைத் தொடரலாம். ஏழைகள் நடைபாதையில் தூங்கலாமா, வேண்டாமா என்னும் விவாதத்தை ஊடகங்கள் மேற்கொள்ளலாம். நடைபாதையில் ஏழைகள் தூங்க யார் காரணம் என்னும் சங்கடமான கேள்விகளை அரசை நோக்கி இனி யாரும் எழுப்ப வேண்டாம். நடைபாதையில் கார் ஓட்டலாமா என்ற அற்பத்தனமான கேள்விகளையும் எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. எத்தனை நெருக்கடி வந்தாலும் சட்டப்படி ஒரு விஷயத்தைக் கையாள வேண்டும் என்று நினைத்த முன்னாள் கான்ஸ்டபிளின் அசட்டுத்தனத்தைப் பற்றி இனி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. சல்மான் கான் மீதான தண்டனையை நிறுத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட நெருப்பில் புடம் போடப்பட்ட இந்தத் தங்கம், இனி தன் கலைச் சேவையைத் தடையின்றித் தொடரலாம்.
குடித்துவிட்டு கார் ஓட்டி, நடைபாதையில் வண்டி ஏற்றி, ஒருவர் உயிரிழக்கவும் நால்வர் படுகாயமடையவும் காரணமான ஒருவருக்கு எதிராகத் தண்டனை வழங்கப்பட்டால் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுவதில் என்ன ஆச்சரியம்? கார் ஓட்டியதாகச் சொல்லப்படுபவர் சாதாரண மனிதரா? கோடிக் கணக்கான மக்களின் மனம் கவர்ந்த நாயகன் அல்லவா? கோடிக் கணக்கான மதிப்புள்ள முதலீடுகள் அவரை நம்பிச் செய்யப்பட்டுள்ளன அல்லவா? சாதாரண மனிதருக்கான நீதிதான் இவருக்குமா?
ரசிகர்கள் பொங்குகிறார்கள். நடிகர்கள் கண் கலங்கு கிறார்கள். நடிகைகள் கண்ணீர் உகுக்கிறார்கள். பொறுப் பற்ற பத்திரிகைகளோ குற்றமும் தண்டனையும் பற்றித் தலையங்கங்கள் எழுதுகின்றன. அழகே உருவான நடிகைகள் அழுவதைப் பார்த்த பிறகுமா உங்கள் மனம் கசியவில்லை? சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராகச் சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் குரல் கொடுக்கும் ஆமீர் கானே சல்மானைச் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறார். அவரைவிடப் பெரிய மனிதாபி மானியா நீங்கள்? என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்?
ரசிகர்கள் குமுறுகிறார்கள். இப்படித்தான் சஞ்சய் தத்தையும் நீங்கள் வாட்டி எடுத்தீர்கள் என்று வெதும்புகிறார்கள். துப்பாக்கிகளை வைத்துக் கலவரம் செய்யலாம் என்பது தெரியாத சஞ்சயின் குழந்தை மனதைப் புரிந்துகொள்ள முடியாத உங்கள் வறண்ட இதயத்தைக் கண்டு அவர்கள் விரக்தி அடைகிறார்கள். எங்கள் நாயகர்கள், நாயகிகள், தலைவர்கள், தலைவிகள் பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் விடுதலை பெறும்வரை நாங்கள் ஓய மாட்டோம். ஃபேஸ்புக்கையும் ட்விட்டரையும் அலற அடிப்போம். அலகு குத்திக் காவடி தூக்குவோம். தற்கொலைகூடச் செய்துகொள்வோம்.
ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். குற்றம் செய்தவனை நடுத்தெருவில் கல்லால் அடித்துக் கொல்லுங்கள் என்று கோஷம் போட்டீர்களே, முச்சந்தியில் நிற்கவைத்துச் சுட்டுக் கொல்லும்படி ஆவேசப்பட்டீர்களே என்றெல்லாம் நீங்கள் கேட்பது அவர்கள் காதுகளில் விழாமல் இல்லை. உங்கள் அப்பாவித்தனத்தைக் கண்டு சிரிப்பதா, அழுவதா என்று அவர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள். ஒரு விஷயம் குற்றமா, இல்லையா என்பது அதைச் செய்தவரைப் பொறுத்தது. கோடிக் கணக்கான மக்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களையும் தெருவில் போகிறவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க உங்களுக்கு எப்படி மனம் வருகிறது என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.
இப்போது இருக்கும் விழிப்புணர்வு தமிழகத்தில் அந்தக் காலத்தில் இல்லை. கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை நினைக்கும்போது இன்றைய ரசிகர்களின் நெஞ்சம் பதைக்கிறது. நீதி மன்றத்தில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வந்தது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். புகழேணியின் உச்சியில் இருந்த அவரது தொழிலே நசிந்துவிட்டது. வாழ்க்கையே சிதைந்துவிட்டது.
பாகவதர் மட்டும் இந்தக் காலத்தில் பிறந்திருந்தால் இன்றைய ரசிகர்கள் அவரைச் சட்டத்தின் கரங்கள் தீண்டக்கூடிய சாதாரண மனிதனாகப் பார்த்திருப்பார்களா? திரைத் துறையினரும் அவரைச் சிறைக்குச் செல்ல அனுமதித்திருப்பார்களா? அவரது மார்க்கெட் சரியவிட்டிருப்பார்களா? சல்மான் கானுக்காகக் கண்னீர் வடிப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். அந்தக் காலத்து ரசிகர்கள் எத்தனை பொறுப்பற்றவர்கள் எனபதைச் சொல்வார்கள். முடிவை நீதிமன்றத்திடம் விட்டு ஒதுங்கிக்கொண்ட நன்றி கெட்ட ஜென்மங்கள் என்று தலையில் அடித்துக்கொள்வார்கள். மக்களை மகிழ்விப்பதற் காகவும் உய்விப்பதற்காகவும் அல்லும் பகலும் உழைக்கும் நட்சத்திரங்களுக்கும் தலைவர்களுக்கும் ஒன்று என்றால் திரண்டு வர வேண்டாமா?
இன்னும் பிரச்சினை முடியவில்லை. இடைக்காலத் தீர்ப்புதான் வந்திருக்கிறது. ஆனால், சல்மான் பாய், கவலைப்படாதீர்கள். மக்கள் உங்கள் பக்கம். உங்களைச் சிறைக்கு அனுப்ப முயலும் இந்தச் சட்டத்தை அவர்கள் மனமார வெறுக்கிறார்கள். இந்த ஜனநாயகத்தின் விவஸ்தை கெட்ட தன்மையை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சட்டத்தின் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நட்சத்திர நீதியே இறுதியில் வெல்லும். அந்த வெற்றியைக் காணும்வரை அவர்கள் ஓய மாட்டார்கள்.
அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT