Published : 26 May 2015 08:56 AM
Last Updated : 26 May 2015 08:56 AM
சாதாரண மக்களிடமிருந்தும் உப்பு வணிகர்களிடமிருந்தும் உப்பு அந்நியமான கதை!
அப்போது கழுதைகள்தான் உப்பைச் சுமந்துகொண்டு தெருத்தெருவாக வரும். உப்பு வாங்கக் கடைக்குப் போக வேண்டாம். அந்த உப்புக் கழுதைகளை இப்போது காணமுடிவதில்லை. கன்னாரத் தெருக்களையே (பித்தளைப் பாத்திரம் செய்வோரின் தெரு) காண முடியாது. கொல்லுப்பட்டறை தேடிப்போனாலும் தென்படாது. வண்டியில்லை. எனவே, மாடும் இல்லை. நெல் குத்துவதில்லை. எனவே உரல் இல்லை, உலக்கையும் இல்லை. வளர்ச்சியின் வேகம் இவற்றை அடித்துச்செல்வது வழக்கம்தானே! ஆனால், உப்புக் கழுதைகளின் கதையே வேறு!
உப்புத் தொழிலும் நசிந்துபோய் இப்போதோ அப்போதோ என்றுதான் இருந்தது. கருணைக் கொலையாக 2006-ல் ஒரு சட்டம் செய்தார்கள். பிறகு 2011-ல் சில விதிகளை வகுத்தார்கள். விளைந்துவரும் உப்பை அப்படியே மனிதர்கள் உண்பதற்கு விற்கக் கூடாது என்று தடை. கடைத்தெருவில் இருந்த உப்பை ஒரு மாவட்ட அதிகாரி பறிமுதல் செய்ததாகச் சில ஆண்டுகளுக்கு முன் செய்தி வந்தது. உற்பத்தி செய்யக் கூடாது, விற்கக் கூடாது, விற்பனைக்கு வைத்திருக்கக் கூடாது, வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது என்று ஆங்கிலேயர்கள் ஆட்சியில் உப்புக்குத் தடை இருந்தது நினைவுக்கு வந்தது. எளியவர்களையும் விடுதலை இயக்கத்துக்கு ஈர்த்த முதல் போராட்டம் இந்தத் தடையை உடைப்பதற்கான உப்புச் சத்தியாக்கிரகம்தான். சாதாரண உப்பு நாட்டின் சுயமரியாதைப் பிரச்சினையானது. பிரச்சார உத்தியாக அந்தப் போரை மீண்டும் நிகழ்த்திக் காட்டுபவர்கள்தான் தற்போதைய தடைச் சட்டத்தையும் உருவாக்கினார்கள்.
வெளிப்படையான வெள்ளையர்கள்
அப்போது உப்புக்கு வரி உண்டு. பெரும் பகுதி உப்பளத்துக்கு அரசுக்கு வாரமோ ரொக்கக் குத்தகையோ தர வேண்டும். உப்பில் ஒரு கருப்புச் சந்தை உருவாகும் நிலை. அதைச் சமாளிக்கத்தான் அன்றைய ஆங்கில அரசின் உப்புச் சட்டம். மக்களின் உடல்நலனில் அரசுக்குப் பிறந்திருக்கும் அக்கறையே தற்போதைய சட்டத்துக்குக் காரணம். விளைந்த உப்பை விளைந்தவாறே உண்பதால் நமக்கு அயோடின் சோகை வரும் என்பது அறிவியல். இப்போது உப்புக் கழுதைகளை உப்போடு சேர்த்துப் பறிமுதல் செய்யலாம். அது அறிவியல் அடிப்படையில், நுகர்வோரின் நலனுக்காகச் செய்வதாக இருக்கும். அறிவியலை மறுக்க முடியுமா? அதன் அடிப்படையில் சட்டம் செய்ய அரசுக்கு இருக்கும் கடமையைத்தான் மறுக்க முடியுமா?
உப்புக் கழுதைகளும் உப்புச் செட்டியாரும்
“உப்பு, உப்பு. உப்பு வாங்கலியோ உப்பு” என்று கூவிக்கொண்டு முன்னும் பின்னுமாக இரண்டு கழுதைகளை உப்புச் செட்டியார் ஓட்டிக்கொண்டுவருவார். முன்னால் வரும் கழுதை உப்பைச் சுமந்து வரும். பின்னால் வருவது பண்டமாற்றாக வாங்கும் நெல்லைச் சுமந்து வரும். மரக்கால் நெல்லுக்கு இவ்வளவு உப்பு என்று அளந்து கொட்டுவார். அடை மாங்காய், மோர் மிளகாய் என்று கோடையில் உப்புக்குச் செலவு இருக்கும். வாங்கிய உப்பு முதலில் உப்புப் பானைக்கோ சாடிக்கோ போகும். அதிலிருந்து கசாலையின் உப்பு மரவைக்கு. உப்பு மரவை, பக்கவாட்டில் சுற்றும் மூடியோடு வட்டமாக மரத்தில் செதுக்கப்பட்டிருக்கும். அதுவும் இப்போது தொலைந்துவிட்டது.
தனியாகத் தொலையவில்லை
உப்புக் கழுதைகள் தனியாகத் தொலையவில்லை. ஆப்பைக்கூடு, அம்மி, குளவி, ஆட்டுக்கல், திருகை, வெளிச்சத்துக்காக திண்ணைச் சுவரில் மாட்டிவைக்கும் சுவரொட்டி விளக்கு, பொழுது குந்தும் நேரத்தில் தேடும் விளக்குத்தண்டுகள், ஆனைக்குவளை, அரைக்குவளை, அண்டா, வெண்ணெய்க் குண்டான் என்று எல்லாமே தொலைந்துவிட்டன. பாரவண்டியும், சவாரி வண்டியும்தான் காலமென்ற மணலில் புதைந்துவிட்டனவே!
கூடைக்கும் முறத்துக்கும் பனை அகணியால் தலை கட்டப்போவதில்லை. கீழத் தஞ்சையின் ஈடில்லாப் பெருமையான உம்பளச்சேரி மாடு மறைந்து சீமைப் பசு வந்துவிட்டது. “உம்பளச்சேரி மாட்டுப் பாலைக் குடித்தவளாக்கும்!” என்று தி. ஜானகிராமனின் கதா பாத்திரம்போல் யாரும் இனிமேல் பீற்றிக்கொள்ள வழியே இல்லை. கிழக்கே உள்ள அத்தனை கிராமங்களின் மாடுகளுக்கும் ஒண்டியாகவே லாடம் தைத்துக்கொண்டிருந்த எங்கள் ஊர் ராவுத்தர் போல் ஒருவரை இனிமேல் பார்க்க முடியாது. தொலைந்துபோன அந்தக் காலத்தின் சரியான அடையாளங்காட்டி உப்புக் கழுதைகளே. அவற்றுக்குச் சற்று முன்போ பின்போ மற்றவையும் தொலைந்துவிட்டன.
“அம்மி பொளியலியா, அம்மி” என்று கூவிக்கொண்டு கல் உளியும் சுத்தியலுமாக இனிமேல் யாரும் வர மாட்டார்கள். “ஈயம் பூசலியா, ஈயம்” என்று எந்தத் தம்பதியும் இனி வர மாட்டார்கள். “கூடைக்குத் தலை கட்டலியா” என்று அகணியும் வாங்கரிவாளுமாக தெருக்களில் ஒரு பெண்ணும் வர மாட்டார். “மாட்டுக்குக் கொம்பு சீவலியா, கொம்பு” என்று ஈச்ச ஓலையில் அறை அறையாகத் தடுத்துச் செய்த பையோடு கூவிக்கொண்டு ஒருவர் வர மாட்டார். வண்டி மாடுகளே அற்றுப்போன பிறகு யார்தான் “தலைக் கயிறு வாங்கலியா, தலைக் கயிறு” என்று கூவிக்கொண்டு வருவார்கள்? தொழில் வளர்ச்சியில், பொருளாதார மாற்றத்தில் இவையெல்லாம் மாறத்தான் வேண்டும். சாதிக்கும் தொழிலுக்கும் சமுதாயம் போட்டுவைத்திருந்த முடிச்சு தளர்ந்து அவிழ்ந்தது. மாற்றுத் தொழிலுக்கான சுதந்திரம் கிடைத்தது! கூடவே, கைத்தொழில்களும் சட்டம் உந்தாமலேயே செத்துவிட்டன.
சட்டத்தை உடைக்கும் விளையாட்டு
உப்பைக் காரணமாக வைத்து அரசாங்கமும் மக்களும் ஒருவரை ஒருவர் சாமர்த்தியம் செய்வதாக ஒரு விளையாட்டு இருந்தது. உப்புக் கோடு என்று பெயர். ஆற்று மணலில் விளையாடுவோம். நீண்ட செவ்வகத்தின் நடுவில் நெட்டுவாக்காக கோடு கிழித்து, பிறகு குறுக்குக் கோடுகளைக் கிழித்து எதிரும் புதிருமான தட்டுக்களாகத் தடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு குறுக்குக் கோட்டிலும் ஒருவர் கைகளை விரித்து நின்றுகொள்வார். யாரும் கடந்துபோகாமல் தட்டை அவர் கட்டவேண்டும். அவர் தொட்டுவிட்டால் நுழைந்தவர் ஆட்டம் இழப்பார். நுழையும் குழுவினர் காலை நீட்டிக் கோட்டில் வைத்துக்கொண்டு “தண்ணி, தண்ணி, தண்ணி” என்று கத்துவார்கள். தட்டைக் கட்டுபவர் தண்ணீர் தருவதற்குப் போக வேண்டும். அப்போது மறுபக்கத்தில் உள்ளே நுழைந்துவிடுவார்கள். இப்படியே, வலமும் இடமுமாக இழுத்து, ஏமாற்றி, எல்லாத் தட்டுக்களையும் கடந்து செவ்வகத்தின் மறு முனையில் வெளியேறிவிடுவார்கள். அப்போது, “உப்பு போய்ச் சேர்ந்துவிட்டது” என்று வெற்றியைக் கொண்டாடுவார்கள். சுங்கச் சாவடியில் சிக்காமல் உப்பு வந்து சேர்ந்துவிட்டது என்பதன் குறியீடு. சட்டமறுப்பு எடுத்துக்கொண்ட விளையாட்டு வடிவம்.
தை மாத அறுவடையில் வீட்டுக்கு வரும் நெல்லின் முதல் செலவாக உப்பு வாங்குவது வழக்கம். உப்பு விளைவதுபோல் நெல் விளைய வேண்டும்! சித்திரை வருடப் பிறப்புக்கு வாங்கும் சாமான்களின் ரோக்காவில் உப்புக்கு முதலிடம். இப்போது நெல்லுக்கு உப்பு வாங்க முடியாது. கால மாற்றத்தில், கலாச்சார வழக்கம் நின்றுபோகாமல் வேறு வடிவங்களில் தொடரும். ஆனால், புது நெல்லின் முதல் செலவாக உப்பு வாங்கும் வழக்கம் எடுத்துக்கொண்ட மாற்று வடிவம் எதுவும் தென்படவில்லை.
உப்பளத்திலிருந்து அப்படியே வரும் உப்புக்கு அப்பாவிச் சமுதாயம் ‘கல் உப்பு’ என்று ஒரு புதுப் பெயரைக் கொடுத்தது. இரண்டு விஷயங்கள் இருந்தால், சராசரிச் சிந்தனை ஒன்றை மற்றதன் மேலாகவோ கீழாகவோ வைத்துவிடும். கல் உப்பு அப்படி மேசை உப்புக்குக் கீழே வந்துவிட்டது. சட்டத்தில் அது ‘சாதாரண உப்பு’; வைத்திருக்கக் கூடாதது, விற்கக் கூடாதது. அது ‘சாதாரண’ மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால் காந்தி அதை விடுதலைப் போரின் ஆயுதமாக வைத்துக்கொண்டார். கூசாமல் அந்த ‘சாதாரண’த்தைக் காரணம் காட்டியே அதைத் தடை செய்கிறது சுதந்திர இந்தியாவின் சட்டம்.
- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT