Last Updated : 15 May, 2015 09:09 AM

 

Published : 15 May 2015 09:09 AM
Last Updated : 15 May 2015 09:09 AM

அறிவோம் நம் மொழியை: மழையின் பாடல் கேட்கிறதா?

மழையால் உருவான சொற்கள், வழக்குகள்தான் எத்தனையெத்தனை!

வானம் மழைக்கு ஆயத்தமாகியிருக்கிறது என்பதையே ‘வானம் இருட்டிக்கொண்டுவருகிறது’, ‘வானம் மூடியிருக்கிறது’, ‘வானம் கம்மியிருக்கிறது’, ‘வானம் கம்மலாக இருக்கிறது’ என்றெல்லாம் விதவிதமாகச் சொல்வோ மல்லவா! இவற்றில், ‘இருட்டிக்கொண்டுவருகிறது’ என்று சொன்னால் உடனே மழை வரும் என்று பொருள்.

‘வானம் வெளிவாங்கியிருக்கிறது’ என்றால் மேகங்கள் மூடி, மழை பெய்துகொண்டிருந்த வானத்தில் ஆங்காங்கே மேகங்கள் விலகி நீல வானம் தெரிகிறது என்றும், மழை விட்டிருக்கிறது என்றும் பொருள். வெளிவாங்கிய வானத்தில், அந்த இடைவெளியில் இரவில் ஆங்காங்கே விண்மீன்கள் தெரியும் அழகைத்தான்,

‘பட்டுக் கருநீலப் புடவை

பதித்த நல்வயிரம்

நட்டநடு நிசியில் - தெரியும்

நக் ஷத்திரங்களடீ’

என்று பாரதி பாடினாரோ?

‘வானம் வெக்காளித்திருக்கிறது’ என்றால் மேகங்கள் நகர்ந்து மழை விட்டிருக்கிறது என்றும், ‘வானம் கீழ்மாறுகிறது’ என்றால் வானத்தின் அடியில் மேகங்கள் திரண்டு இடியும் மின்னலுமாக வருகின்றன, மழை பெய்யக்கூடும் என்றும் பொருள்.

மழை விட்ட பிறகு வானத்தில் காற்றடித்த மணல் பரப்பைப் போலவோ, சிறுசிறு அலைகளாகவோ மேகப் பரப்பு தெரியுமே அதை ‘வானம் மணல் கொழித்திருக்கிறது’ என்று சொல்வதுண்டு.

மேகங்கள் அடுக்கடுக்காகக் கோபுரம்போல் திரண்டிருப்பதைப் பார்த்திருப்போம். தொடுவானத்துக்குச் சற்று மேலே தொடங்கி வான் முகடுவரை உயர்ந்திருக்கும். இதை, ‘வானத்தில் கோபுரம் கட்டியிருக்கிறது’ என்பார்கள்.

(மழைத் தமிழ் தொடரும்)

வட்டாரச் சொல் அறிவோம்!

வாசகர் அரிஸ்டார்கஸ் நம்முடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து சிறு பகுதி:

ஒரு காலை ‘ட' போல் மடித்து மறுகாலின் முட்டியில் தாங்குமாறு வைத்து அமரும் நிலையை ‘அட்டணக்கால்' என்கிறோம். கரிசல் வட்டாரத்தில், ‘அட்ணங்கால்', ‘ரெட்ணங் கால்', ‘அட்டளங்கால்' என்றும், நாஞ்சில் வட்டாரத்தில் ‘நட்டணக்கால்' என்றும் இதற்குப் பல பெயர்கள் உண்டு. ‘சம்மணம்' (சப்பணம்) போன்று ஓர் அமரும் நிலையாக மட்டும் அட்டணக்காலை நாம் பார்ப்பதில்லை. நம் சமூகத்தில், சில சூழல்களில் ஒருவரின் மதிப்பு, கவுரவம், பணபலம், அதிகாரம், செருக்கு முதலியவற்றின் அடையாளமாகவும் ‘அட்டணக்கால்' இருக்கிறது. ஜெயமோகன் எழுதிய ‘நிலம்' சிறுகதையில், ‘அட்டணக்கால்' கவுரவத்தின் அடையாளமாகப் பின்வருமாறு வரும்:

‘காட்டு வேலை ஏன் செய்றே? நீ மகாராணியாக்கும்… நாக்காலியிலே அட்டணக்கால் போட்டுட்டு ஒக்காரு…’

அவள் சிரித்து ‘ஆமா… அட்டணக்கால் போடுறாங்க… மானம்பாத்த பூமியிலே அது ஒண்ணுதான் கொற.’

சிறுவர்கள் தரையில் ‘அட்டணக்கால்' போட்டு வரிசையாக உட்கார்ந்திருக்க, ஒவ்வொரு காலாக எண்ணி ‘அட்டணக்கா புட்டணக்கா அடுக்கி வச்ச மாதுளங்கா…’ எனப் பாடிக்கொண்டே ஆட்டத்துக்கு ஆள் பிரிக்கும் சிறுவர் விளையாட்டொன்றை கி. ராஜநாராயணன் குறிப்பிடுகிறார். ‘அட்டணக்கால்' என்ற சொல், இன்று அருகிவிட்டது. இன்றைய தலைமுறை இதனை ‘கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கான்' என்கிறது.

வாசகர்கள் உங்கள் வட்டாரத்தின் தனிச்சிறப்பு மிக்க சொற்களையும் வழக்குகளையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x