Published : 19 May 2015 08:20 AM
Last Updated : 19 May 2015 08:20 AM
பத்மா டீச்சருக்கு அப்போது வயது 22 அல்லது 23 இருக்கலாம். கல்யாணம் ஆன புதிது; வேலைக்கும் சேர்ந்த புதிது. டீச்சர் எப்போதுமே சாதாரண நூல் சேலையில் வருவார். டீச்சர் வந்ததும் நாங்கள் தரையிலிருந்து எழுந்து நின்று இரு கைகளையும் கூப்பி ‘வணக்கம்’ என ஒரே சீராகச் சொல்லுவோம். டீச்சர் எங்கள் அருகில் வந்து தலையைத் தடவி, கையைத் தொட்டு “உட்காரு” என்பார். முகம் கழுவாத, குளிக்காத மாணவர்கள் அருகே சென்று விசாரிப்பார்.
மகாத்மாவை அறிமுகப்படுத்தியவர்
அப்போது எங்கள் ஊரில் ஒரு தொடக்கப் பள்ளி மட்டும்தான் இருந்தது. ‘L' வடிவக் கட்டிடம். ஒரே நீண்ட அறை. இடையில் தடுப்புச் சுவர் இல்லை. முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அமர வேண்டிய இடம், சுண்ணாம்புக் கட்டியால் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும். வகுப்புகளுள் ஏ, பி பிரிவுகள் கிடையாது. ஒரு வகுப்பில் 30 - 40 பேர்கள். 10 மணிக்குப் பாடம் ஆரம்பமாகிவிட்டால் மீன்கடை சந்தை தோற்றுப்போகும்.
இந்தச் சந்தடியிலும் பத்மா டீச்சர் பாடம் நடத்திய விதம், மாணவர்களிடம் பழகிய முறை, சாதி, மதம், பண அந்தஸ்து பார்க்காமல் அன்பு காட்டிய குணமெல்லாம் இப்போது எனக்குத் தொன்மமாகத்தான் நிழலாடுகிறது. இதெல்லாம் நடந்து 60 வருஷங்கள் - ஒரு சுழற்சியாண்டு - முடிந்துவிட்டது.
மகாத்மா கொல்லப்பட்ட ஆறாவது வருஷத்தில் அவரை எங்களுக்கு டீச்சர் அறிமுகப்படுத்தினார். மகாத்மாவின் பெயரை மிகவும் பக்தியுடன் உச்சரித்தார். அப்போது மகாத்மாவை எங்கள் சொந்தத் தாத்தாவாக நினைத்தோம். பாடத்துடன் அவர் சொன்ன குட்டிக் கதைகள், பாட்டுகள், நாட்டு நடப்புச் செய்திகள் என எல்லாவற்றையும் தாண்டி, அவர் கருணையுடன் மாணவர்களை அணுகினார். அவர் கையில் பிரம்பு இல்லை; கையை நீட்டினால் அது அரவணைப்புக்கு. பத்மா டீச்சரின் தந்தை விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி என்பதெல்லாம் பிற்காலத்தில் நான் அறிந்துகொண்டேன்.
பத்மா டீச்சர் பாடம் நடத்தியபோது முதல் வகுப்புக்கு அச்சுப் புத்தகம் வரவில்லை. டீச்சர் அன்றன்றைக்கு என்ன பாடம் எனத் திட்டமிட்டுச் சொல்வார். மகாத்மா பற்றி பாடிய பாடல்கள்கூட அவரே உருவாக்கியவைதான். அந்த அளவுக்குப் படைப்பூக்கம் திகழும் இடமாக தொடக்கப் பள்ளிகள் இருந்தன.
இது கர்மம், தர்மம்
பிற்காலத்தில் ஒருமுறை தற்செயலாக பத்மா டீச்சரைக் கண்டபோது அவர் என் கையைப் பிடித்துக்கொண்டார். “காலேஜியிலா - பேராசிரியரா - டேய் முந்தின ஜென்மத்துல செய்த புண்ணியம்டா. இந்த வேல கிடச்சிருக்கு. சம்பளத்துக் கென்று வேலை செய்யாதே; இது தர்மம்; கர்மமாகச் செய்” என்றார். அப்போது அவர் அறுபதைக் கடந்துவிட்டிருந்தார்.
யோசித்துப் பார்த்தால், அந்தக் கால ஆசிரியர்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருந்தார்கள். மாணவனை அடிப்பது என்பது அப்போது கட்டாயமாக இருந்தாலும் அவர் களிடம் அடிப்படையான சிரத்தை இருந்தது; அர்ப்பணிப்பு இருந்தது. அப்போது, முதல் வகுப்புக்கும் இரண்டாம் வகுப்புக்கும் பகல் ஒரு மணி வரைதான் பள்ளிக்கூடம். அடுத்த நாள் படிக்க வேண்டிய பாடங்களும் குறைவு. ஒருவகையில் 7 வயதிலிருந்துதான் முழு நேரப் பள்ளி ஆரம்பமானது. 10 வயதுக்குப் பிறகுதான் ஆங்கிலப் படிப்பு. தாளில் பென்சிலால் எழுதிப் படிப்பது 8 வயதில். அப்போது என்னுடன் படித்தவர்களில் ஒருவர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் மூத்த ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றுள்ளார். இரண்டு பேர் ஆங்கிலப் பேராசிரியர்கள். பெரும்பாலும் யாரும் சோடைபோகவில்லை. அரசுப் பள்ளியில் படித்துதான் அவர்கள் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்.
வரதட்சணையைவிடக் கொடியது
இன்றைய சமூகம் ஒவ்வொரு துறையின் மீதும் நம்பிக்கை இழந்துகொண்டே வருகிறது. இன்னும் நம்புவதற்குரிய துறை கல்வித் துறை. சமீப காலமாக இதன்மேல் உள்ள மதிப்பீடு குறைந்துவருகிறது. இது அறிவுசார்ந்த துறை என்ற எண்ணம் பொதுமக்களுக்கும் இல்லாமல் ஆகிவருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் என் நண்பரின் பேத்தியை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ப்பதற்கு விவரம் கேட்க அவர் சென்றபோது, இனாம் பணம் ஒரு லட்சம் என்று சொல்லியிருக்கிறார்கள். நண்பரோ, “என் மகளுக்கு வரதட்சணைகூட அவ்வளவு கொடுக்கவில்லையே; இந்தப் பள்ளி வேண்டாம்” என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
விதைநெற்கள்
ஒருவரின் மொத்தக் கல்வி வாழ்க்கையில் தொடக்கப் பள்ளிக் காலம் முக்கியம் என்பது எந்த அளவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது தெரியவில்லை. ஒரு நாட்டின் கல்வித் தரத்தை மதிப்பிடுவது இ.ஆ.ப., பொறியியல், மருத்துவப் படிப்புகள் அல்ல. தொடக்கப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும்தான், நாட்டின் மொத்தக் கல்வித் தரத்தின் கடைக்கால்!
இதனால்தான் தொடக்கப் பள்ளி மாணவர்களை விதைநெல் என்றார் ராஜாஜி. அப்படியானால், தொடக்கப் பள்ளியை நாற்றங்கால் என்று கூறலாம். இந்தக் காலில் நல்ல தரமான பயிர் இருந்தால் மட்டுமே நாற்றைப் பிடுங்கி அடுத்த வயலில் நட முடியும். நாற்றுகள் தரமாயிருந்தால்தான் விளைச்சல் பெருகும்.
நான்கு கருத்துகள்
ஐ.நா. சபை, எதிர்காலக் கல்வி நிலை பற்றி ஆராய ஒரு குழு அமைத்தது. அக்குழு, கல்வியின் குறிக்கோள் என்று நான்கு விஷயங்களை 1993-ல் பரிந்துரை செய்தது.
1. ஒரு செயலைச் செய்வதற்குக் கற்றல், 2. சுயத்தை இழக்காது இருக்கக் கற்றல் , 3. சேர்ந்து வாழக் கற்றல், 4. ஒன்றை அறிந்துகொள்வதற்காகக் கற்றல்.
இந்த நான்கு விஷயங்களையும் அடக்கிய பாடத்திட்டம் இப்போது இருக்கிறதா? சுயத்தை இழக்காமல் இருக்கவும், சேர்ந்து வாழக் கற்பதுமான பயிற்சி கொடுக்கப்படுகிறதா? சுயம் இழக்காமல் இருத்தல், சேர்ந்து வாழ்தல் போன்ற விஷயங்களை அறம்/ ஒழுக்கம்/ தர்மம் என்று சொல்லி, பாடத்திட்டத்தில் அவற்றுக்குரிய இடம் புறக்கணிக்கப்பட்டது கல்வி முழுக்க முழுக்க வணிகமயமானதன் விளைவு. மனப் பாடம் செய்து ஒப்புவித்தல் முறைதான் இன்று பெரும்பாலான சுயநிதி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ளது. மாணவர்களின் படைப்பாற்றலுக்கோ/ சுயத்தை அறிந்துகொள்வதற்கோ தற்போதைய கல்வி முறையில் இடமில்லாதது மட்டுமல்ல, இவை முளையிலே கிள்ளி எறியவும் படுகின்றன.
யஷ்பால் குழு
1992-ல் பேராசிரியர் யஷ்பால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் சுமையைக் குறைக்க அக்குழு ஆலோசனை செய்தது. இந்தக் குழு, 1992-ல் தொடங்கி 7 ஆண்டுகள் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பித்தது.
யஷ்பால் குழு அறிக்கையில் பின்வரும் பரிந்துரைகள் செய்யப்பட்டன. பள்ளிப் பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் அனுபவம் வாய்ந்த பள்ளி ஆசிரியரே முதலிடம் வகிக்க வேண்டும். இதில் பேராசிரியர்கள், அறிஞர்கள் ஆலோசகராக இருக்கலாம். மாணவர்கள் வீட்டிலிருந்து பாடப் புத்தகங்களைச் சுமந்துகொண்டு பள்ளிக்கு வரும் கஷ்டத்தைத் தீர்க்க யோசிக்கலாம். பாடப் புத்தகங்களைப் பள்ளியிலே வைத்து, பாடம் நடக்கும்போது மாணவர்களுக்கு விநியோகிக்கலாம். தொடக்கப் பள்ளிக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. இடைநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்குப் பொதுஅறிவு வீட்டுப்பாடம் கொடுக்கலாம். 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:30 என இருக்க வேண்டும்.
யஷ்பால் குழு அறிக்கை முறையாகச் செயல்படுத்தப் படுகிறதா என்பதற்கு அமைக்கப்பட்ட தமிழகக் கல்விக் குழுவும் ஒரு அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையின் பரிந்துரைகள் இவை. பள்ளியில் கலைத்திட்ட மையம் நிரந்தரமாய்ச் செயல்பட வேண்டும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 பாடம் மட்டுமே நடத்த வேண்டும், தொடக்கப் பள்ளியின் கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்து ஒரு பாடநூலை நடத்த வேண்டும்; அகமதிப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்; பள்ளி ஆய்வாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்; ஆசிரியருக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 நாட்கள் புத்தொளிப் பயிற்சி அளிக்க வேண்டும்.
இந்தத் திட்டங்களெல்லாம் அரசுப் பள்ளியில் மட்டுமே செயல்படுத்த முடியும், செல்லுபடியாகும் என்பது எல்லோருக் கும் தெரியும். முக்கியமாக சுயநிதிப் பள்ளிகள் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாது என்பதும் நமக்குத் தெரியும்.
கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, “நம் மக்களுக்கு இப்போது பித்தம் தெளிந்துகொண்டுவருகிறது. கல்வியைவிட குழந்தையின் மனநிலையை, ஆரோக்கியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அரசுப் பள்ளியை விரும்புவதற்கு இது ஒரு காரணம்” என்றார்.
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,
‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT