Published : 24 May 2015 11:19 AM
Last Updated : 24 May 2015 11:19 AM
திருட்டு டிவிடிக்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகளைத் தொடுத்ததோடல்லாமல், இன்று வரை போராடிவரும் மதுரை மாடர்ன் சினிமாஸ் உரிமையாளர் எஸ். ஜெகநாதன் பேசியதிலிருந்து…
திரைப்படங்களைத் தயாரிப்பவர்களுக்குத் திரையரங்குகள், வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றின் வாயிலாகக் கணிசமான வருவாய் கிடைக்கும். இதில் வெளிநாட்டு உரிமையைப் பெறுவோர் வழியாகத்தான் திருட்டு டிவிடிகள் அதிகமாக வெளியாகின்றன. படத்தின் காட்சிகளை ‘ஹார்ட் டிஸ்க்’ மூலம் பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதால், டிஜிட்டல் தொழில் நுட்பத்திலேயே திருட்டு டிவிடிகளையும் வெளியிட்டுவிடுகின்றனர். ஒருசில இடங்களில் திரையரங்க உரிமையாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, திருட்டு டிவிடிகளைத் தயாரிக்கிறார்கள்.
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் மட்டுமின்றி, உடனடியாக லாபம் கிடைப்பதால் தமிழகத்தில் திருட்டு சிடி தயாரிப்பு இன்று குடிசைத் தொழில்போலச் செய்யப்படுகிறது. மிகுந்த தரத்துடன், ஒரு நிமிடத்தில் 25 டிவிடிகளைத் தயாரிக்கும் வகையிலான இயந்திரங்கள்கூட அவர்களிடம் உள்ளன. மதுரையில் தொழில் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், சுமார் 2,000 பேர் வரை திருட்டு டிவிடி தயாரிப்புத் தொழிலில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இங்கு தயாரிக்கப்படும் டிவிடிகள் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன. சென்னையை அடுத்த படியாக கோவை, சேலம் ஆகிய இடங்களிலும் திருட்டு டிவிடி தயாரிப்போர் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் புரளும் தொழில் இது.
இதுபற்றி நீதிமன்றங்கள், காவல் துறையிடம் புகார் அளித்ததால், திருட்டு டிவிடி மாஃபியா 2 ஆண்டுகளுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை வைத்து எங்களைச் சிக்க வைக்க முயன்றனர். ஆனால், போலீஸார் உண்மையைக் கண்டறிந்து அந்தக் கும்பலைக் கைதுசெய்தனர். அதன்பின் அந்தக் கும்பலிடமிருந்து பலமுறை எங்களுக்குக் கொலைமிரட்டல் வந்துள்ளது. ஆனாலும், நாங்கள் அசர மாட்டோம். நீதிமன்றங்கள் எத்தனை உத்தரவுகளைப் போட்டாலும், காவல் துறையினர் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
- அ. வேலுச்சாமி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT